வெள்ளி, 15 மே, 2020



                                         6. 3.  ததீசி 


1.       அஞ்சியோர்    வந்துகூடச்       செஞ்சிவன்    போற்றாத 
          வஞ்சவேள்வி;   வந்தது     மாடு.

2.       மதிக்காத    மன்னவன்      மாத்தலை     வீழும்,
          நதியணிந்தான்     நாமமே    வாழ்த்து.

3.       முதல்வேள்வி   நிற்பினும்,    மூர்க்கன்    துவக்கம்;
          முதல்தவிர்த்துக்   கூடினர்    சான்று.

4.       தகைசால்     ததீசி      தருமநெறி   காட்டப் 
          பகைமனம்   மாறாத   பேச்சு.

5.       ஓடுசாம்பல்   ஆடுகாடு   தீ,மழு,மான்  நாடுபாம்பு,
          மாட்டூர்தி        மற்றிவனோ    பீடு?

6.       ஏனப்பல்     யானைப்     புலித்தோல்     திகம்பரம் 
          கூன்நிலா    கொட்டுநீர்க்     கூற்று!

7.       நீலகண்டன்     சூலப்     படையமர்    ஆலத்தடி 
          சீலஹவிஸ்      சிந்தனை     நீக்கு.

8.       வீறு பூச்சு      ஊழிமகிழ்     தாருகா  வெற்றியுலா 
          ஏறுமறம்      ஆண்டகை   நாடு.

9.       செருக்கழி,    செம்பொர்ச்    சிறப்போ   இயற்கை;
          அருங்கருணை    ஆண்டவன்    போற்று.

10.     உயிர்காத்தல்     பாவநீக்கம்     தேவமுனி    ஞானம் 
          பயில்பண்பு      பேராசான்    வாக்கு.


                                             பொருள் 

1.   சிவனைப்   பகைவனாகக்   கருதிய   தக்கன் ,  சிவனை   அழைக்காமல் 
மதிக்காமல், அவிர்ப்பலி   அளிக்காமல்  ஒரு வேள்வி   நடத்த  விரும்பி,
இறைவனைத்    தவிர   எல்லோரையும்    அழைக்கிறான். தக்கனுக்கு  அஞ்சிய   அனைவரும்  கூடுகிறார்கள்.நான்முகன்   பலமுறை   கூறியும்   கேளாத   தக்கன்   வேள்வியைப்  பற்றிச்   சிவனிடம்   சொன்ன   காலை 
நந்தி   வருவான்"  நீ  போ!  என அனுப்பிவிட்டார். இந்நிலையில்   தக்கனுக்கு 
அஞ்சியோர்   அங்கே   குழுமினர்;  வேள்வியைத்    துவக்கினார்;நான்முகன்.
திருமால், இந்திரன்  முதலான தேவர்களும்,முனிவர்களும்  அமர்ந்திருந்தனர்.
அப்பொழுது   வேள்விச்சாலைக்குள்    நந்தி தேவர்   நுழைந்தார், தக்கனது 
வீரர்கள்    தடுத்தபோதிலும்,  அவர்களைப்   புறம்  தள்ளிவிட்டு  உள்ளே  வந்த   அவர், "இந்த   வேள்வியில்   இறைவன்   சிவபிரானுக்கு   அளிக்க வேண்டிய ஹவிர்பாகத்தைக் முறைப்படி    அளிக்கவேண்டும்"  என்றார்.  தக்கனோ 
"அவனுக்கு     அவிர்ப்பலி   அளிக்க மாட்டேன் " எனச்   செருக்குடன் கூறுகிறான்.

2.     வெகுண்டெழுந்த   நந்தி தேவர், " பரம்பொருளான  சிவபெருமானுக்கு 
அவிர்ப்பலி   அளிக்காத  இவ்வேள்வி   அழியும்; வேள்வி  ஆற்றுபவனுடைய தலை வெட்டப்படும்"  சிவனே   பரம்பொருள்"  அவனை   இகழ்வோர்  அழிவார்கள்"  எனச்சாபம்   இட்டுவிட்டு  அகல்கிறார்.அச்சத்திற்கு    உள்ளான 
அனைவரும்  வெளியேறுகிறார்கள்; வேள்வி   தடைப்   படுகிறது.

3.    வேள்வி    தடைப்பட்ட   போதிலும், தக்கன்   அதற்காக   மனம்   கலங்காமல்  மீண்டும்  ஒரு  வேள்வியைத்   தொடங்க   ஆயத்தமாகிறான்.
பாதுகாப்பான   கோட்டை   கொத்தளங்கள்  அமைத்துச்   சுற்றிலும் பாதுகாப்பு அரண்  எடுக்கிறான்,  மூவேழ்   உலகிலும்   உள்ள முனிவர்களை,அந்தணர்களை, விண்ணுலகத்  தேவர்களை, நாகர்களை 
எல்லாம்   அழைக்கிறான். சிவபெருமானை   மட்டும்,அவன்  மகளை   மட்டும் 
அழைக்கவேயில்லை. பிரம்மயாகத்தில்   கலந்து   கொண்ட    அனைவரும் இந்த வேள்விக்கும்  வருகின்றனர். திருமால்,இலக்குமி,நான்முகன், கலைமகள்,இந்திரன்,அக்கினி,யமன், குபேரன் சூரியன், சந்திரன்  போன்ற 
பலரும்   வேள்விச்சாலையில்   கூடுகின்றனர்.எல்லோரும்   நன்கு  உபசரிக்கப்  படுகின்றனர்,


4.    அவ்வேள்விக்   கூட்டத்திற்கு "ததீசி"  என்ற மாமுனிவரும்  வந்துள்ளார்.
தக்கன்   சிவனுக்கு   அழைப்பில்லை;அவிர்ப்பலி   இல்லை" என்றதும் தக்கனோடு வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார்.  சிவனே   பரம்பொருள் 
அவனை   அழைக்காத  இவ்வேள்வி   பயனற்றது; சிறப்பு மிக்கவன்  சிவன்;
என்றெல்லாம்   அறநெறிகளை  எடுத்துக்  கூறுகிறார்  ததீசி.  அதனை ஏற்காத   தக்கன்  சிவனைப்பற்றியும், அவனது   ஆபரணங்கள், உடைகள்,பற்றியும்  பேசுகிறான்.

5.   சிவன்  கழுத்திலே   ஆமை  ஒட்டு  மாலையை   அணிந்துள்ளான்;
உடலெங்கும்   சாம்பலைப்  பூசியுள்ளான்;அவன்   ஆனந்த   நடனம்  ஆடுகின்ற  இடம்   சுடுகாடு   ஆகும்;அவன்  கையிலே   நெருப்பையும்,
மழுவென்னும்  கோடரியையும் மானையும் தாங்கியுள்ளான்;  பாம்பு   வேறு அவன் உடலெல்லாம்   ஊறுகிறது; அதையும்   அணியாகக்  கரத்தில் கொண்டுள்ளான்; அவனது   வாகனம்   காளை  மாடு; இப்படி எதிலும்   தாழ்ந்த பொருட்களை அணிந்து காட்சி   அளிப்பவனுக்குப்  பெருமை   எப்படி வரும்?அவனைப்   போற்ற மாட்டேன். என்கிறான்   தக்கன்,

6.   பன்றியின்   பல்லை   மாலையாக   அணிந்திருக்கிறான்;யானையின் குருதி கசியும்   பசுந்தோலைப்   போர்வை போல்  போர்த்திக் கொண்டு விளங்குகிறான்;   அதேபோல்  புலித் தோலை   இடையில்    ஆடையாக  உடுத்துக் கொண்டிருக்கிறான்;ஆடையே    அணியாது   உலகத்தையே   ஆடை எனக்கூறிக்கொண்டு  நிர்வாணமாகத் திரிகிறான்;தலையிலே  உடைந்துபோன  கீற்றை,  மூன்றாம்   பிறைச்   சந்திரனை  அணிந்துகொண்டுள்ளான்; அதே   சடையில்     கங்கை   ஆற்றைச் 
சுமந்து கொண்டு  திரிகிறான்;இவனது    செயல்கள்  உயர்ந்தவர்   செயல் போல இல்லை ,  ஆதலின்   இவனைப்   போற்றமாட்டேன்.என்றும்   தக்கன் கூறினான்.


7.     கன்னங்கரேர் என்ற   கருப்பு  வண்ணத்தில்   கழுத்தைக்  கொண்டவன்;
சூலம்"  என்னும்   படையைத்   தாங்கி   விளங்குபவன்;அழகாய்   அவன் அமர்ந்துள்ள   இடம்,  ஆலமரத்தடி ; இப்படி   இழிவான  தோற்றமும், செயலும் கொண்ட   சிவனுக்கு   ஒருபோதும்   அவிர்ப்பலி   அளிக்க   மாட்டேன்" என்று தக்கன் கூறினான்.


.8.   ஆணவத்   தக்கனின்  வீண் மொழிக்குத்    ததீசி   முனிவர்  தக்க  வடையை  நல்குகிறார்.
       கூர்மாவதாரத்தில்   உலகு   காத்த  திருமால்   தானே   உயர்ந்தவன்  என்றும்,தானே   முழுமுதற்கடவுள்   என்றும்  எண்ணி   எல்லோரையும்,
அடக்கி    ஆள   முற்பட்ட   காலத்தில் சிவபெருமான்  கூர்மத்தை   அழித்து,வெற்றியின்   சின்னமாக  அதன்   ஓட்டை   மாலையாக  அணிந்து கொண்டார். வெற்றிச்சின்னம் அது.
    அழித்த   பகைவர்களின்   சாம்பல்  அதுவே   அவருக்கு  வெற்றின்  விபூதி ஆகும்.
    மஹா  சங்காரம்   முடிந்து   உலகமே   ஓய்ந்துவிட்ட  நேரம்  ஊழிக்காலம்
அப்பொழுது  அவர்   ஆடும்   ஆட்டம் ; சுடுகாட்டில்  நடக்கும். அதுவும் ஒருவித
வெற்றி   அனுபவமே   ஆகும்.
     தாருகா    வனத்து    முனிவர்கள்   தீய  நோக்கத்த்தோடு, தீய  மந்திரங்களைக்   கூறியபடி   வேள்வி  செய்து   உலக   உயிர்களைத்   தம் வசப்படுத்த  முன்றனர். அவர்களது   தீய  நோக்கத்தை   அழிக்கத் 
திருமாலும்,  அவரும் அங்கு சென்றனர்;அழகே   உருவான  ஆணழகராக இறைவனும், அழகு மோகினியாக   மாலும், சென்று முனிவர்களையும்,முனி
பத்தினிகளையும்   மயக்கி, இன்பநுகர்விற்கு     ஏங்க   வைத்து மீள்கின்றனர்.
நன்னிலை   அடைந்த   தாருகா  வனத்து   முனிவர்கள் சிவபெருமானால் தமது சக்திகளை  இழந்தமைக்காக  வருந்தி, அவரை  அழிப்பதற்காகப் பல்வேறு விலங்குகளைத்  தமது   வேள்வி  வாயிலாக  உருவாக்குகின்றனர்.
    முதலில்   பெரும்   தீக்கோளம்   இறைவன்   மீது   ஏவப்பட்டது. அதனை அவர்  அப்படியே   கையில்   ஏந்தினார். அது   அவர்   கையிலேயே தங்கிவிட்டது.
     கோடரி  என்னும்   மழுவை   வீசினர்; அதையும்  கையில்  படையாக  ஏற்றார்.
     மானை   அனுப்பினார்;  அத்தனையும்   வகையில்  அன்போடு  ஏற்றார்.
   பாம்பை   அனுப்பினார்; அதனைத்    தன  உடலெல்லாம்  தழுவ  விட்டார்.
கையிலும்   ஏந்தினார்.
       இன்னும்   தாக்க வந்த   புலியைக்   கொன்று அதன்   தோலைத்  தனது
ஆடையாக   உடுத்துக் கொண்டார்.வெற்றி உலா  வந்த   சிவனின்   பெருமைகள்  அவை.
         அற க்கடவுள்   தர்ம தேவதை   இறைவனை   வணங்கித்   தான்   எப்போதும் உம்முடனேயே   இருக்கவேண்டும்" என்று  வரம் கேட்க,இறைவனோ இனி   நீயே   என்   ஊர்தி; என்னைத்தாங்கி  நீ நிற்க
அறத்தைத்   தாங்கி   நான்   விளங்குவேன்"  என்கிறார்   இறைவன். காளை
அறத்தின் சின்னம்.
            இத்துணை  சிறப்புகள்   வாய்ந்த   சிவனை   வழிபட்டு   உயர்வடைக.

9.     வராக   அவதாரத்தில்   பூமியைக்   காத்து   மீட்டு வந்த   வராகத்திற்குக்
கர்வம்   வந்தது;  தானே   தலைவன்   என்ற எண்ணம்   வந்தது;  அதனால் உலகோரைத்   துன்புறுத்தத்  தொடங்கியது; அதனை   அடக்கி, வெற்றி பெற்று உலகைக்   காத்தார்   சிவன். அவ்வெற்றியின்   பரிசாகத் தனது
மார்பிலே   அப்பன்றியின்   பற்களை   ஆரமாக்கி   அணிந்துகொண்டுள்ளார்.
         கயாசுரனைக்   காசியிலே   அழித்த   காலத்தில், அவனது   உடலைக் கிழித்து, அக்கயத்தின்    தோலைப்   போர்வைபோல்  போர்த்திக் கொண்டார்.
இதுவும்   ஒரு   வெற்றி ச்சிறப்புதான்.
     எல்லாம்   ஒன்றே   என்னும்  தத்துவக்   கோட்பாட்டின்படி,  இவ்வுலகையே   ஆடையாக   அணிவதைப்போல்  இவ்வாடையும்   அணியாமல்  நிர்வாண  கோலத்தில் காட்சி   தருவது   இறைவனின்  உயரிய  பண்பாகும்.அது
இயற்கை   அமைப்பும்   ஆகும்.
       தனது   அழகைக்   கலைகளை   இழந்து, அழகற்ற  உருவத்தில்   வாடி  வதங்கி வந்து    தாள்   பணிந்த   நிலவுக்கு,சந்திரனுக்கு,   அவனது   கலைகள்
வளரவும்,தேயவும்   வழிகாட்டி, அதன்   சிறப்பாகக்   கருணையை   வெளிப்படுத்தும் வகையில்   மூன்றாம்   பிறைச்   சந்திரனைத்    தனது
தலையில்   சூட்டிக் கொண்டு"   சந்திர  மௌளி "  ஆக   விளங்குவது  அவரது
கருணைக்குச்    சான்றாகும்.
   சிறந்து கருணை   மறவனாக    விளங்கும்   சிவனடி   போற்றி   உயர்வடைவாய்"! என்றுததீசி   கூறினார்.

10.     அமுதம்   வேண்டிப்   பாற்கடலைத்    தேவர்களும்,அரக்கர்களும்
இணை ந்து     கடைந்த  பொழுது, மத்தாக    மேருமலையும்,  நாணாக
வாசுகி   என்னும்  கொடிய   நாகத்தையும்  அமைத்துக் கொண்டனர்
நெடுங்காலம்   கடைந்ததால்   துயருற்ற   வாசுகி, தனது   கொடிய நஞ்சை
"ஆலகால   விடத் தை"   கக்கியது;  அதன்    தாக்கத்தை   ஏற்றுக்   கொள்ள  முடியாத  தேவர்களும்,அரக்கர்களும்   ஒடி  ஒளிந்தனர். உலகையே   அழிக்கும்   அளவிற்கு   விஷம்  பரவியது. உலக   ஆன்மாக்களைக்  காக்க வேண்டி   இறைவனாகிய   சிவபெருமான்  ஆலகால   நஞ்சை   அப்படியே பருகினார்.  அது   தொண்டையை   அடைந்ததும்   அதை   அப்படியே  தடுத்து நிறுத்தினார்.  நஞ்சின்   நிறம் , அவர்   கழு த்தில்     பற்றியது. அவர்   "நீலகண்டன்"   ஆனார்.
          உலக   உயிர்களைக்   காக்கும்   கடவுள்   இறுதிக்காலத்தில்   அவற்றை   அழிக்கவும்   வேண்டும். அந்த   அளவு  அழித்தல்  தொழிலும்  புரியும் சிவன்
முச்சூலத்தைத்      தாங்கியுள்ளார்.  கொடுமையையும், கொடுமை -யாளர்களையும்   அழிக்கவும்   அதனைப்  பயன்படுத்துவார்.
           ஆன்ம   இருளை,  அறியாமையைப்  போக்க  ஆன்மாக்களுக்கு   ஞானம்
அளிப்பதும்   அவர் பணி ,  விண்ணவர் ,முனிவர், போன்றோருக்கு   ஞானத்தை உபதேசிக்கும்  தெக்ஷிணா மூர்த்தி   அவர்,  அவர்   அமரும்   இடம்
ஆலமரத்தடி  ஆகும்.
      எல்லோருக்கும்,  ஏன் ?  உனக்கும்   கூட  அறிவை  அளித்தவர்   அவர்தான்.  ஆதலின்   அவரைப்போற்று;  வணங்கு; அவருக்கும்     அவிர்ப்பலி    அளி ;
என்று   ததீசி   முனிவர்   தக்கனுக்கு, இறைவன்   பெருமையை  எடுத்துரைத்தார்.


                                                            விளக்கம்

1.   மாடு                                     =   நந்தி தேவர்
2.   நதியணிந்தோன்            =   சிவபெருமான்
3.   முதல்                                    =   முதல்வன், சிவன்
4.   தருமநெறி                          =   சிவப்பெருமை
5.   பீடு                                         =   பெருமை ,உயர்ந்தவன்
6.   திகம்பரன்                          =   திசைகளையே  ஆடையாகக் கொண்டவன்
7.   சீல   ஹவிஸ்                      =   தகுதி மிக்க  நெய்ச்  சோறு
8.   தாருகா                                 =   தாருகா வனம்
9.   இயற்கை                             =   இயல்பான   தோற்றம்
10. பேராசான்                           =   சிவபெருமான்

                                                     இலக்கணம்

முதல் .................................................ஆகுபெயர்
தீ,மழு,மான்,  .............................     உம்மைத் தொகை
செம்போர் .......................................பண்புட்தொகை
?





 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக