வெள்ளி, 15 ஜூலை, 2016

தோற்றுவாய்

                                             தோற்றுவாய்

   எல்லாம் வல்ல பரம்பொருளின் மாக்கருணை இன்று இதோ உங்கள்முன்
அடியவனின் மனக்கருத்தைப் படைக்க வாய்ப்பினை நல்கியுள்ளது.அந்தப்
பரம்பொருளின் பொன்னார் சேவடிகளை மனமெல்லாம் நிறைத்து,இறைவன்
புகழ் பேசத் துவங்குகிறேன்.

கன்னியாகுடி ......என்னை இவ்வுலகிற்கு அர்ப்பணித்த அரும்பேரூர்.சிறிய மிகச்சிறிய
கிராமம்,விரல் விட்டு எண்ணக்கூடிய வீடுகள்.கிராம மக்கள் அவ்வளவு பேரையும்
எளிதே மனதில் நிறுத்தக் கூடிய பல்வேறு தரப்பினர்.சிறு வாய்க்கால்:சிறு குளம்:சிறு கோயில்:
சிறு பள்ளிக்கூடம்.மக்களின் மனம் மட்டும் பெரியது.அன்று தஞ்சை மாவட்டம்.இன்றோ
நாகப்பட்டினம் மாவட்டம்.சீர்காழி வட்டம்.நந்தனாருக்கு நந்தி விலகிய திருப்புன்கூர்
அருகேயும்,செலவை முத்துக்குமாரசாமியாம் முருகன் கோயில் கொண்டுள்ள
வைத்த்தீஸ்வரன் கோயில் அருகே மூன்று கல் தொலைவில் அமைந்த சிற்றூர்.
கைலாசநாதர் கோயில் .........சிறிய கோயில்.ஆயினும் அங்கு வீற்றிருக்கும் கடவுள்
பெரியவன்...மிகப் பெரியவன் ..மூவருக்கும் மூத்தவன்.எம்பிரான் திருநாமம்
கைலாச நாதர்.அம்மை  கல்யாணி,ஓம்கார விநாயகன்,என் மனமெல்லாம் ஆட்கொண்ட
முருகக்கடவுள்;அருகே வள்ளியம்மை,தெய்வயானை .தெக்ஷிணா மூர்த்தி,சண்டிகேசர்
எனக் காட்சி தரும் கருணா மூர்த்திகள் நிறைந்த கோயில்.என் தந்தையும்,அவருக்குப் பிறகு
என் அண்ணனும் காலம் காலமாய்ப் பூஜித்து வந்த கோயில்.என் பள்ளிப் பருவம் அங்கு தான்
கழிந்தது,அக்கோயிலும்,அவ்வூரும் ஆண்டவ மூர்த்திகளும் என் கண்ணினுள்ளே இன்று வரை
அழியா ஓவியத்தை நிலையாக காட்சி தருகின்றன என்பது மிகையல்ல.

எனது படைப்புகள் .....'சுப்பிரமணிய ஸப்தசதி'என்னும் கிரந்த நூலைத் தமிழ் வடிவமும்,பொருளும்,
வேள்வி செய்யும் முறைமையும் தழுவி வெளியிட்டேன்.அதன்பின்,கச்சியப்பரின் கந்தபுராணத்தை
1000..வெண்பாக்கள் வழியே,'கன்னியாகுடிக் கந்தபுராண வெண்பா'' என்று முருகன் புகழ் சேர்த்தேன்.
அடுத்து,''கன்னியாகுடி முருகன் பிள்ளைத்தமிழ்'' என்னும் சிற்றிலக்கிய நூலை வெளியிட்டேன்.
இன்றோ இறைவன் திருவருள் கூடி நிற்க,கைலாச நாதரின் பெருமைகளை ''கன்னிக்கலம்பகம் '
என்னும் பிரபந்த நூலை வெளியிட உள்ளேன்.

கலம்பகம்...... 96 வகை பிரபந்த நூல்களைச் சார்ந்த சிற்றிலக்கிய வகையே கலம்பகம் ஆகும்.
கலம்+ பகம்  எனப் பிரித்தால் இந்நூலில் 12  துறைகள் பற்றிய பாடல்களில் பாட்டுடைத் தலைவனைப்
புகழ்ந்து பாடுவது,எனப் பொருள் கொள்ளலாம்.
கலப்பு+அகம்   எனப் பிரித்தால் பல்வேறு யாப்புகளை,பாக்களை,வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா,விருத்தம்,தாழிசை,துறை,போன்ற
பல தலைப்புகளில் அந்தந்த யாப்பிலக்கண அமைப்பில் பாடுவது ,எனப் பொருள் கொள்ளலாம்.
இன்னும்,தூது,பாண் ,மறம் ,குற்றம்,பிச்சியார்,கொற்றியார்,வலைச்சியார் ,தலைவன்,பாங்கி,தலைவி,செவிலி போன்றோர் கூற்று ,போன்ற தலைப்புகளில் கலந்து பாடப்
படும் இலக்கியம் எனவும் பொருள் கொள்ளலாம்.

பாட்டுடைத்தலைவன் ......கன்னிக்  கலம்பகத்தின் பாட்டுடைத்தலைவன் கன்னியாகுடியில்
கோயில் கொண்டுள்ள கைலாச நாதக் கடவுளே ஆகும்.கன்னிச் சிவபெருமானே கைலாச நாதர்.ஆதலின் சிவனின் பெருமைகளைச் சைவநெறிப் பெருமைகளைப் பாடுவதே இந்நூலின்
விழுப்பொருளும்,கருப்பொருளை ஆகும்.

யாப்பு .......நேரிசை வெண்பா,பல் தொடை வெண்பா,நேரிசை ஆசிரியப்பா,நிலைமண்டில
ஆசிரியப்பா,கொச்சகக் கலிப்பா,கலிவிருத்தம்,ஆசிரிய விருத்தம்,கலித்துறை,கட்டளைக் கலித்துறை,
மருட்பா,வஞ்சித்தாழிசை,சந்த விருத்தம்,தொடை முரண்,வெண்கலிப்பா போன்றவற்றை
இந்நூலில் பயன் படுத்தியுள்ளேன்.

மரபு வழி சார்ந்து படைத்துள்ள இந்நூலைத் தமிழ் உலகம்,பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி .....நாவிலும்,மனத்திலும்,கற்பனை கலந்த தமிழ்க் காப்பிய அமைப்பை வற்றாது  வழங்கிய
தமிழ் முருகனுக்கு என் ஆன்மாவை நன்றிக் கடனாய்ச்  சமர்ப்பிக்கின்றேன்.என்னோடு சேர்ந்து
என் கவிதைகளை இரசித்துச் சுவைத்து,அவ்வப்பொழுது என்னை ஊக்குவித்த என் மனைவி,
எனது இரு கண்கள் (மகள்கள்)ஆகிய மூவருக்கும் இறைவன் நல்லருள் சித்திக்கட்டும்.இந்நூலை
அழகிய முறையில் அச்சிட்டுக் கொடுத்த .....................................................................................................................             நண்பருக்கு என் நன்றி.இந்நூலுக்கு  ஆய்வுரையும்,அருளுரையும் வழங்கிய சான்றோர்கள்
..........................................................................................................................................................................................................
ஆகியோர்க்கும் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

                                                               நன்றியும் வணக்கமும்


சென்னை==73                                                                                                                   அன்புள்ள

                                                                                                                                         சுவாமி.சுப்பிரமணியன்                                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக