திங்கள், 23 நவம்பர், 2015

சப்பாணிப்பருவம்--1

உதித்த கதிர்தானோ!உறங்காக் கடல்தானோ !
    உடுக்கள் ஒளிர்தானோ!நிலவது குளிர்தானோ!
உமிழ்நாக மணிதானோ!அமிழ்நீர் மலர்தானோ!
    உயர்மறைப் பொருள்தானோ !ஒன்றிட்ட கந்தா!

மதியளி குருவாமோ!விதிசிறை அரனாமோ!
     மலர்நடு பிறப்பாமோ!மறையது மொழியாமோ!
மனையது தினையாமோ!மயிலது பகையாமோ!
    மலையழி படையாமோ!மாண்புடை மாமுருகா!

நதிச்சடை நல்லருளோ!நாயகி நன்ஞானமோ!
    நலிந்தோர் வேண்டுதலோ!நல்லோர் போற்றுதலோ!
நஞ்சின் தீச்செயலோ!நங்கையர் நற்றவமோ!
      நனிதமிழ் அனுபவமோ! நலம்வளர் குகனே!
 
துதிவிரதர் தொல்கன்னித் தெய்வஞானக் குழந்தையே !
     துதியேற்றுச் சப்பாணி கொட்டி அருளே!
துதிகதிமதி தேவாள் வள்ளி  தொழுதிடும்
      தூயவனே!சப்பாணி கொட்டி அருளே.

                                    பொருள்
பிள்ளைத்தமிழின் நான்காம் பருவம் இது;ஒன்பதாம் திங்களில் அமர்ந்தபடி.இரு
கைகளையும் கொட்டிச்சிரிக்கும் குழந்தைப் பருவம்.
     இளஞ்சூரியன்,அலையொலிக் கடல்,விண்மீன்கள்,குளிர் நிலவு,நாகரத்தினம்,தாமரைமலர்,
வேதப்பொருள் ஆகியவற்றோடு ஒன்றிய கந்தனே!சூரியன் கீர்த்தி .கடல்  பணி .விண்மீன்கள் ஆபரணம்
நிலவு  கருணை.நாகரத்தினம்  உடல்தேஜஸ் .தாமரை  மனம் .வேதப்பொருள் முருகனும் வேதமும்
இரண்டறக் கலந்தமை  என விரிவாக்கிக் கொள்க .
        தந்தைக்கே உபதேசித்த குரு மதி;நான்முகனைச் சிறையிட்ட அரனான தன்மை
சரவணத்தில் மலரில் தோன்றியமை;மறையே மொழியான தன்மை;தினைப்புனம் காவல்
காத்த வள்ளியே மனையாள்;பகையாம் சூரனே ஊர்தியாம் மயிலான மென்ம;கிரௌஞ்ச
மாய மலைஅழித்த வேற்படைச் சிறப்பு;இப்படிப்பட்ட மாண்புகளைக் கொண்ட குமரனே!
       சிவபெருமானின் நல்லருளால் தோற்றம்;மலைமகள் அளித்த முலைப்பாலால்
ஞானஸ்கந்தன்;அமரரின் வேண்டுகோளால்.நல்லோர் போற்றுதலால் நச்சுமனம் கொண்டோரின் தீய செயலால் அரக்கர் அழிப்பு;மால்மகளிர் இருவர் தவமேன்மை,ஏற்றுத் திருமணம்;தமிழ் மீது கொண்ட
பற்றால் எழுந்தருளி அருள் பாலித்தல் எனக் கொண்ட குகனே!
       எப்பொழுதும் உன்னைப் போற்றிக் கொண்டே வாழும் மக்கள் நிறைந்த கன்னியாகுடியில்
எழுந்தருளியிருக்கும் தெய்வமே!ஞானக் குழந்தையே!இரு கைகளையும் கொட்டி அருள் புரிவாய்;.
நீயே கதி,எனத் துதிக்கும் மதிபோன்ர தெய்வயானை,வள்ளி தொழுதிடும் தூய முருகனே!இரு
கைகளையும் கொட்டி அருள் புரிவாய்.

                                                              விளக்கம்
விதி சிறை ....இங்கு விதி என்பது பிரமனைக் குறிக்கிறது;
நஞ்சின் தீச்செயல் ....இங்கு நஞ்சு  பண்பாகு பெயராய் அரக்கரைக் குறித்தது.







1





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக