14. இரவுக்குறி .
பகற்பொழுதில் தோழி குறிப்பிட்ட புனச்சோலையிடத்தில் தலைவியோடு,
கலந்து,இன்பம் அனுபவித்த தலைமகன், தோழியால் பகல்குறி
விலக்கப்பட்ட பின், தோழியால் வலியுறுத்தப்பட்ட திருமணம் புரிதல் ஒரு
முறை;அதனை ஏற்காத தலைவன், அதனால் இற்செறிக்கப்பட்ட தலைவி...
இந்நிலையில் தலைவன் தோழியை நாடி, இரவில் தலைவியைச் சந்திக்க
வாய்ப்பு வேண்டுவான்; இவ்விரவுக்குறி முப்பது மூன்று துறைகளைக்
கொண்டது.
14. 1. இரவுக்குறி வேண்டல்.
கொளு .
இரவில் புணரும் இனிமை நினைந்து,
பெருமுலைப் பாங்கியிடம் பரிவு வேண்டியது.
பொருள் ;-- இரவினில் கூடும் புணர்வின் இனிமை நினைந்து,
பெருத்த மார்பகத்தை உடைய தோழியிடம் உதவிட இரக்கம் காட்டுமாறு
வேண்டியது.
பாடல் --146.
தேவர் அரக்கர் தமக்கும் மருந்து தமிழமுது;
காவல் கடிவேல்; கருமேகத் தணிகைக் குன்றுடையான்
நாவலூர் அருவி மரங்கள் சொல்கிளி நிறைந்தூரின் ,
மேவிடம் மேன்மை விருந்தினன் ; மன்னிருள் மின்னிடையே!
பொருள்.
தேவர்களைக் காத்து, வெஞ்சிறை மீட்டுப் பகைவர்களான அரக்கர்களை
அழித்துக் காத்ததால் மருந்தானான்;
அரக்கர்களை அழித்தாலும் அவர்களுக்கு கருணை புரிந்ததால் மருந்தும்
ஆனான்.
இனிமைவாய்ந்த தமிழ்மொழிக்கோ அமுதம் ஆனான்; அவனது
காவல் சிறப்பினைப் பாதுகாப்பது அவன் கரத்தில் உள்ள வீரமிக்க வேல்
ஆகும்.கருணையை மேகம்போல் வழங்கும் முருகன் தணிகை என்னும்
குன்றிலே அமர்ந்தவன்;கருமேகங்கள் தங்கி மழையைப் பொழியும்
தணிகைக் குன்றிலே வீற்றிருப்பவன்.
அக்குன்றிலே உள்ள நல்ல சிற்றூர்; அருவிகளும், வளமான மரங்களும்,
நம்மோடு உரையாடும் கிளிகளும் நிறைந்து, வளத்தைப்பெருக்கும் நல்ல
ஊர்; உமது சிற்றூர்; இவ்வூருக்கு மதிப்புமிகு விருந்தினன் ஆக நான்
வந்துள்ளேன்; இருளிலும் மின்னும் சிறிதாய்இடை கொண்ட தோழியே! என்னை ஏற்று, உனது தலைவியிடம் என்னைப்பற்றிச் சொல்வாயா? என்று
தோழியிடம் தலைவன் வேண்டினான்.
விளக்கம்;--- மருந்து = நோய் தீர்ப்பது ;தேவர்களின் நோய் [அரக்கர் செயல்]
அரக்கர்களின் நோய் = தீமை மாறி நல்லடி சேர்தல் .
2 கருமேகம் = மழைபொழிய விரும்பும் நிலை; கருணை பொழிய விரும்பும்
குன்றத்தான்
3 . சொல்கிளி = மழலையாய்ப் பேசும் கிளி .
மெய்ப்பாடு -------- பெருமிதம்.
பயன் ------------ இரவுக்குறி நேர்வித்தல் .
14.2. வழி அருமை கூறி மறுத்தல் .
கொளு .
இரவு வருதல் விரும்பி உரைத்திட ,
அருமை வழியுரைத்து மறுத்தாள் பாங்கி.
பொருள்;--- இரவுக்குறி வருதலைக் கேட்ட தலைவனிடம், தோழி.
செல்ல முடியா வழிநிலைமை விளக்கி, உரைத்தது.
பாடல்--147.
முள்ளொடு கல்லும், முனைமுறி சில்லும் முளைப்பூண்டுமே
செல்வழி சீறும் காற்று, நிலாமழை, நிறைபள்ளமும் ,
வல்லிருள் வழிக்குகை, வடிவேலன் தணிகைச் சிற்றூர்
இல்லாத பற்றினால் வழுக்கிடும் ; நல்லவ ! நாடாதே .
பொருள் .
தலைவ ! வடிவேலனின் திருத்தணிகை மலையிலே அமைந்த மிகு
உயரத்தில் உள்ள எம்மூருக்குச் செல்லும் வழியெங்கும் முட்செடிகள்
காலில் குத்தும்;வழிநிறைந்த கற்களும்,முனை முறிந்துபோன சிறு சிறு
சில்லும் காலைக் கடிக்கும்; பாதையில் முளைத்துள்ள முள்ளுள்ள
செடிகளின் இலைகள் காலில் பட்டால் அரிக்கும்; மேலும் வழியெங்கும்
மழைக்காற்று சீறும் ; விடாது மழை கொட்டிக்கொண்டே இருக்கும்;
அந்த நீர் தேங்கிப் பாரிய பள்ளங்கள் உருவாகிக் கீழே விழவைக்கும்;
கடும் இருட்டில் செல்வதால் வழி குகைக்குள் செல்வதுபோல் இருக்கும்;
நடப்போர் கால்கள் பற்று இல்லாது நடந்தால் வழுக்கும் பாறைகளில்
வழுக்கி விழுந்திடுவோம்; இப்படிப்பட்ட வழியில் நல்ல தலைவனே!
இங்கு வராதே! என்று தடுத்து நிறுத்தினாள் தலைவனைத் தோழி.
விளக்கம்;-- 1 . சில்லும் = சிறு சிறு உடைந்த கற்கள் .
2 . பூண்டு = ஒருவகைச்செடி .
3 . பற்று = பிடிப்பு.
4.நிலாமழை = நில்லா என்பதன் இடைக்குறை நிலா.
மெய்ப்பாடு ------- இளிவரல் .
பயன் ---------------இரவுக்குறி மறுத்தல் .
14.3. நின்று நெஞ்சுடைதல்
கொளு .
இரவுக் குறிதனை விலக்கிய பாங்கி
தரவினால் தலைவன் தன்நெஞ்சு உடைதல் .
பொருள்;-- தோழி. இரவுக்குறி இடையீட்டை எடுத்துச்சொல்லி விலக்கவும்
மனம் பொறாத தலைவன் மனமுடைந்து வருந்துதல்.
பாடல்-- 148.
பிறப்புறு மூகனைப் பைந்தமிழ் பாடவும் செய்பரமன்,
சிறப்புறு தணிகைக் குன்றின் முடிநுனித் தேனடையை
குறைக்கால் விரும்பும் வேடிக்கை நிலைபோல் , விளங்குநெஞ்சே!
சிறைக்கனி, நறவிதழ் உறவில் நானும் அழுவேனே .
பொருள்.
பிறப்பால் ஊமையாய்ப் பிறந்த குமரகுருபரனைத் தன்னருளால்
கந்தர்கலிவெண்பா" பாடவைத்த மாமுருகன், அமைதியென்னும்
சிறப்புவேண்டி அணைந்தமர்ந்த தணிகை மலைக்குன்றின் கூம்பன்ன
சிகரத்தின் உச்சியில் உருவான தேனடையை,விரும்பும் காலில்லா
ஒருவன்போல, வேடிக்கை நிலைக்கு ஆளான நெஞ்சமே!
கச்சையால் சிறைப்பட்ட மார்பகத்தையும், தேன்போலினிக்கும் இதழையும்
சுவைத்து,உறவுகொள்ள விரும்புகின்ற நானும் இயலாமையினால்
உன்னைப்போலவே அழுகிறேன்' என்று புலம்பினான்.
விளக்கம்....1 மூகன் = வாய்திறந்து பேச இயலாதவன்.
2 . முடிநுனி = மலைச்சிகரத்தின் கூம்பு முனை.
3 . குறைக்கால் = காலில்லா [சிதைந்த கால் ]
மெய்ப்பாடு ----இளிவரல்
பயன் ----------இரவுக்குறி நயப்பித்தல் .
14 .4. இரவுக்குறி நேர்தல் .
கொளு .
மலைநாடன் மனத்தளர்வு நீங்கிட, மகிழ்முகச்
சிலையாள் செவ்வழி சீர்மை ஆக்கியது.
பொருள்;--- இரவுக்குறி வேண்டி நின்ற தலைவன் அயர்வு நீங்கிடச்
சிலைபோன்ற புருவமுகமுடைய தோழி,உடன்பாடு காட்டியது.
பாடல்-149.
வள்ளியை விரும்பி வனமெலாம் வண்மை விலங்குடன்
முள்வழி சுற்றிய முருகனின் தணிகை மலையில்
செல்கரி மேல்பாய் சிங்க நடுவே, தனியனாய்
நள்ளிரா வுள்ளம் தொடவரும் தலைவ ! தொடர்கவே .
பொருள்.
வள்ளிமலையில் வாழும் வள்ளியை விரும்பிய முருகன், வேடனாகி ,
அக்காட்டில் பலகால் சுற்றி, கொடுமைமிக்க விலங்குகள் வாழும்
பகுதியிலும், அவைகளை எதிர்த்து வீழ்த்தி, முள்ளும்,கல்லும் காலைத்
துன்புறுத்தும் வழியெலாம் தாண்டிச் சென்று தினைப்புனம் காவல்
காக்கும் வள்ளியைச்சந்தித்த முருகன் வீற்றிருக்கும் தணிகை மலையின்
காட்டுப்பகுதியில் உணவுதேடிச் செல்லும் யானையை அடித்து வீழ்த்திட
அதன்மேல் பாயும் சிங்கத்தின் கொலைவெறிக்கு நடுவே, தனியனாய்,
நள்ளிரவுப்பொழுதிலே தலைவியின் உள்ளத்தைத் தொடும் எண்ணம்
மேலிட வருகின்ற தலைவனே! உனது எண்ணமும், செயலும் தொடரவே
நானும் விரும்புகிறேன்" என்று தோழி தலைவனிடம் கூறினாள் .
விளக்கம்;-- இதன்வழி இரவுக்குறிக்கு உடன்பாட்டினைத் தோழி
வழங்கிவிட்டாள் என்பது பெறப்படுகிறது.
1முள்வழி = காட்டுப்பாதை, முட்செடிகளும்,கற்பாறைகளும் நிறைந்த வழி
.2. செல்களிறு = இரைதேடி அலையும் யானை.
3. உள்ளம் தொடரும் = தலைவியோடு பழகவரும் .
மெய்ப்பாடு ----- அச்சம்.
பயன் ------- இரவுக்குறி நேர்தல் .
14. 5. உட்கோள் வினாதல் .
கொளு .
இரவுக்குறி விலக்கிட உறுதுயர் உற்றவன்
உறவு வளர்ந்திடத் தோழியின் நற்சூழல் .
பொருள்;-- இரவுக்குறி வேண்டிய தலைவனின் வினாவுக்கு உரிய விடை
அளிக்காத தோழி, அவனது மனவாட்டத்தைக் கண்டு, அவனுக்கு ஒரு
நல்லவழியைக் காட்டினாள்.
பாடல்---150.
மறைவு மாயம் மறைவழி முறையழி சூரனை
நிறைவேல் நீடழி நிர்மல முருகனின் தணிகைபோல்
நிறையுறு நின்னூர் நறுமணம் நறைமலர் என்னவோ!
குறையறு கூடிடம் குணநலம் கூறுக; கோவேந்தே !
பொருள்.
போர்க்களத்திலிருந்து மறைந்து போராற்றல்; மாயஉரு எடுத்துப்போர்
புரிதல்; மறைகள் கூறிய வழிமுறைகளை மாற்றிப் போர் புரிதல் என்ற
தீயவழியைக் கைக்கொண்ட சூரபன்மனைத் தனது தாய் தந்த தவவேலால்
மீண்டும் தோன்றமுடியாது அழித்த தூய்மை வாய்ந்த முருகன் வாழும்
தணிகைமலை போன்று விளங்கும் உனது ஊரில் உள்ளவர்கள்
பூசும் நறுமணப்பொருட்கள் எத்தகையது? சூட்டிக்கொள்ளும் மலர்கள்
எத்தன்மையன ? அவர்கள் கோடி விளையாடுமிடம் எப்படி விளங்கும்?
அவர்தம் குண நலன்கள் எத்தன்மையன ? மன்னனே! எனக்கு
விளக்குவாயாக !" என்று தோழி தலைவனிடம் வேண்டினாள்.
விளக்கம் ;--- இவ்வினாவால் தலைவன் வரும் கோலத்தை அறிந்து,
அதற்கேற்பத் தலைவியைக் குறியிடம் சேர்ப்பிக்க வழிவகுக்கும்" எனத்
தோழி இரவுக்குறி உடன்பாட்டிற்கு உடன்படுகிறாள் என்பது புலனாகும்.
1 .மறைவு = நேரிடையாகப் போராற்றாது மறைந்திருந்து ஆற்றுதல்.
2 . மாயம் = அரக்கர்களுக்கே உரிய மாயச்செயல் .
3 . நறை மலர் = தேனோடு விளங்கும் மலர்.
மெய்ப்பாடு -----பெருமிதம்.
பயன் --------- உடன்பாடு குறிப்பால் உணர்த்துதல் .
14. 6. உட்கொண்டு வினாதல் .
கொளு .
தோழியின் வினாவை உணர்ந்த தலைவன்,
வாழியூர் வளமறிந்து வடிவாக மாறினான்.
பொருள்;-- தோழி கூறியதை மனம் கொண்ட தலைவன், அவளூர்
மக்கள் அணிந்துகொள்ளும் கோலத்தோடு அங்கு செல்ல முடிவுற்றான்.
பாடல்---151.
இந்திரன் முந்தைய நன்றியால் எடுத்ததாம் பொய்கையில்
வந்துதி குவளை யாறினால் பூசித்த தணிகையில்
சந்ததம் சூடுமலர் ? பந்தமாய்ச் சாந்தெது ? எந்நிலை
நந்தன மமையும்? நல்லணி உரைத்திடின் சொந்தமே.
பொருள்.
தன்னைப் போர்முனையிலும், வாழ்வமைப்பிலும் காத்த முருகனது
தணிகைத்தலத்தில் தனது நன்றிக்கடனாக இந்திரன் அமைத்த பொய்கை;
அதில் நாள் தவறாமல் வந்து மலரும் ஆறு குவளை மலர்கள்; அவைகளைக்
கொண்டு பூசனை செய்பவன் இந்திரன்.அப்படிப்பட்ட பெருமை கொண்ட
தணிகை மலையிடத்தே வாழும் உன்னுடைய தோழியர் நாளும் தலையில்
சூடும் மலர் என்னென்ன? எவ்வகைச்சாந்தினை அணிவர்? அவர்கள் ஆடும்
நந்தவனம் எத்தகைய சூழலில் அமைந்திருக்கும்? அவர்கள் அணிகின்ற
அணிகளையும் சொன்னாயாகில் நானும் அவைகளுக்கேற்ப
அணிந்துகொண்டு உறவை உறுதிப்படுத்துவேன்" என்று தலைவன்
தோழியிடம் கேட்டான்.
விளக்கம் --1. முந்தைய நன்றி = அரக்கர்களை அழித்துக் காத்தது; தன்மகளை மணந்துகொண்டது.
2 . வந்துதி = பொய்கையில் இந்திரனால் அங்கு மலரவைக்கப்பட்ட .
3 = நல்லணி = அங்குள்ளோர் அணியும் நல்லாபரணங்கள் .
மெய்ப்பாடு ----- பெருமிதம்.
பயன் ------- குறியிடம் உணர்த்துதல் .
14 .7. குறியிடம் கூறல் .
கொளு .
இரவுக் குறியிடம் இதுவெனத் தோழி
உறவுத் தலைவனிடம் உணர உரைத்தது.
பொருள்;-- இரவுக்குறியிடம் இப்படிப்பட்ட தன்மை உடையதாக இருக்கும்"
என்று தலைவனிடம் கூறியது.
பாடல்--152.
விண்ணொடு மண்தொடும் புண்ணுடல் சூரனைப் பிறரையும்
மண்தொடு மரமாய்க் காத்தவன் கால்தொடு தணிகையில் ,
கண்நிகர்க் குவளை, கருமுடி , கந்தனின் பைஞ்சாந்தம்
நண்ணி , மணிமயில் துயிலனம் ஆடும் இடக்காவே.
பொருள்.
விண்ணையும்,மண்ணையும் அளக்கும் மிகமிகப் பெரிய உருவம்;
உடலும்,மனமும் புண்ணாக விளங்கும் கொடுமை;இப்படி விளங்கும்
ஆணவக்,கன்ம,மலச் சான்றாக விளங்கிய சூரன்,சிங்கமுகன்,தாரகன்
போன்ற அரக்கர்களை அவரது கடல்போன்ற படைகளை மண்ணாகும்படி
அழித்தும், அவர்மீது கருணைகொண்டு அன்போடு ஏற்றும் உயர்ந்தவனது
பொற்பாதங்கள் அமைதிக்காக அமர்ந்த தணிகை மலையின்கண்
மங்கைகளின் கண்போன்று பூத்துக் குளிர்ப்பரப்பும் குவளை மலர்களைத்
தலையிலே சூடிக்கொண்டும், பண்ணிசைபோற்றும் தணிகைவேலன்
சேவடியை அலங்கரித்த நறுமணச்சாந்தத்தை மேனியில் பூசிக்கொண்டும்,
அழகுச்சிறகுகொண்ட மயில்களும், அன்னப்பறவைகளும் ஆடியும்
அசைந்தும் விளங்கும் சோலையே நாங்கள் விளையாடிக் களிக்கும்
இடமாகும்; " என்று குறியிடத்தைக் குறிப்பால் தலைவனுக்கு
உணர்த்தினாள் தோழி.
விளக்கம் ;-- 1 . புண்ணுடல் = பாவ வினைகளால் புண்ணாகிய மனம்;உடல்.
2 . பண்ணாளன் = தணிகை வேலன் .
3 . ஆடுமிடம் = நாங்கள் விளையாடுமிடம்; இரவுக்குறியிடம் .
மெய்ப்பாடு ----- பெருமிதம்.
பயன் ------- குறியிடம் உணர்த்துதல் .
14 . 8 . இரவுக்குறி ஏற்பித்தல் .
கொளு .
வீரத் தலைவன் வெதும்பல் கண்டு,
ஆரத் தழுவும் அரையிருள் உடன்படு .
பொருள்;-- தலைவன் படும் வேதனை கண்ட தோழி, தலைவியிடம்
இரவுக்குறிக்கு உடன்பட வலியுறுத்தினாள் .
பாடல்--153.
விண்ணகப் பெண்களும் சுவையா நாவலம் நற்கனியைப்
பண்ணுடைப் பாட்டிக் களித்தருள் வேலனின் தணிகையில் ,
பெண்ணாம் புள்வாய் தனதுவாய்த் தனிக்கனி ஊட்டிவிடும்
கண்ணரும் காட்சியால் கவலுறு காவலன் கண்டேனே .
பொருள்.
விண்ணகத்துப் பெருமைமிக்க பெண்களுக்கும் கிடைக்காத உயர்ந்த
நாவல்கனியை, மரத்தில் உலுக்கி, நடந்துபோன அவ்வைக் கிழவியை
அழைத்து, சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு
சுடாத பழமே வேண்டிய அக்கிழவியை,விழுந்த பழத்தைப் பொருக்கி
எடுத்து மண் போக ஊதுகையில் பழம் சுட்டுவிட்டதோ? என ஞானம்
காட்டி அன்போடு அளித்த வேலவேடன் வீற்றிருக்கும் தணிகை மலையில்
பறந்துவந்த பெண்பறவையைத் தன்னருகே அமரச்செய்து, அதன்
வாய்க்குள் தனது வாயில் வைத்திருந்த சுவைக்கனியை ஊட்டிவிடும்
கண் காணவேண்டிய அருமைக் காட்சியைக் கண்டு, மிகுந்த
கவலை மேலிட அயர்ந்து,நடந்துவரும் ஒரு தலைவனை நான் கண்டேன்'
என்று கூறிய தோழி, அவன் ஏன் இதற்கு இப்படி வருந்துகிறான்? நீ
அறிவாயா? எனத்தலைவியிடம் வினவினாள்.
விளக்கம்;-- தானும் இப்பறவைபோலத் தலைவியோடு இன்பம் துய்க்க
இயலவில்லையே! என வருந்தினானோ?
1 . விண்ணாடு = தேவருலகம்
2 . மண் நீக்கி = பழத்தில் ஒட்டிக்கொண்டிருந்த மண் போகுமாறு,
3 . பெண் புள் வாய் = பெண்பறவையின் வாயில் .[ "புள்ளின்வாய்க்
கீண்டானை" திருப்பாவை"]
14. 9.இரவு வரவுரைத்தல்.
கொளு .
எழிலே! இன்றிரவு வருகை உறுதி.
பொருளே! அழகிய தலைவியே தலைவன் இன்றிரவு வருவான்" என த்
தோழி தலைவியிடம் உரைத்தாள் .
பாடல்--154.
உறவில் வள்ளி நறவில் திளைத்த குறவேடன்
அறமெனும் தணிகைக் காடு ; மறவர் மருளுமிருள் ,
நிறப்புலி கரடி இரைக்கு வுறுமு கருங்காட்டில்
திறக்கரி திரிந்திட திறமை காட்டி வருவேனே
பொருள்.
வள்ளியோடு காதலுற்று உறவுற்று, இன்பத்தேனைச் சுவைத்த
வேடனாகிய வேலனது அறம் தழைக்கும் தணிகை மலைச்
சாரலில் , அங்கு வாழும் மறவர்களே அஞ்சும் நள்ளிரவிருளில்
நிறம்கொண்ட வேங்கையும், குள்ளமான கரடியும் இரைதேடிக்
காடே கலங்கும் வண்ணம் உறுமி எழுப்பும் குரலுக்கிடையே ,
இருளோடு இருளாய் இருக்கும் இடம் தெரியாத யானைகள்
திரிகின்ற அவ்விரவில் உன்னைக்காணத் தான் வருவதாகக்
கூறுகிறான் தலைவன்; தலைவியே! அவனுக்கு என்ன விடை சொல்ல?
என்று தோழி கேட்டாள் .
விளக்கம்;--- இரவுக்குறியிடத்திற்குத் தலைவன் வருவான்" என்பதை
உறுதிப் படுத்தினாள் தோழி.
1நறவில் = இன்பத்தேனில்
2 . உறுமு = ஒலியெழுப்புதல்
மெய்ப்பாடு.----- அச்சத்தைச் சார்ந்த இளிவரல்.
பயன் -------- தலைமகளை இரவுக்குறி நேர்வித்தல்.
14 . 10 . ஏதங்கூறி மறுத்தல் .
கொளு .
இரவினில் வந்தால் இடுக்கண் இலையோ?
உறவுடை மேலோன் வருதல் தவிர்க்க.
பொருள்;--- நம்மோடு வாழும் உறவினரைக் காட்டிலும் உயர்ந்தவனாகிய
தலைவன்,தன்னந்தனியே இரவில் வருதல் தீமைபயக்கும்" என நான்
அஞ்சுகிறேன்; வருவதைத் தவிர்க்கவும்" என்று தோழியிடம் தலைவி
கூறினாள் .
பாடல்----155.
தழைமழை தளிராய்த் தண்குளிர்த் தணிகைக் காவலீசன்
அழைநரர் அகம்குளிர் அருள்பொழி யருவிக் காடு
தழைப் பசி மழகரிக் கூட்டம் வேட்டை யரிக்குரலே,
வழிசெல் குழுவினர் வாரா நிலையில் வரத்தவிர்ப்பே.
பொருள்.
கனத்த மேகமானது மழையைப் பொழிய, செடிகளும், கொடிகளும்
தளிர் விட்டுத் தழைத்தும், நற்குளிர் பரவியும் விளங்கும் தணிகை மலை;
அதன்காவல் கடவுள் மாமுருகன்; அவனை நினைந்து அன்போடு அழைக்கும்
அன்பர் மனமெல்லாம் மகிழ வந்து பொழியும் அருள்போல அக்காட்டில்
பொழிந்த மழையால் பொலியும் அருவி கொண்ட காடு ; அங்கே
தழைகளின் மீது பெற்றுக்கொண்ட யானைகள் பசியோடு உண்ணமுயலும்
நேரம், அக்கூட்டதையே வேட்டையாட த் துவங்கும் சிங்கம்; அதுவோ
வெற்றிக்களிப்பில் கர்ச்சனை செய்யும் கொடுமையான அவ்வழியில்
கூட்டமாகவோ தனியாகவோ மக்கள் செல்லமாட்டார்கள்; அப்படிப்பட்ட
கொடுமையான வழியில் வள்ளலாகிய நம் தலைவனை வரச்
சொல்லுதல் முறையா? தடுத்துவிடுங்கள்; என்று தோழியிடம் தலைவி
கூறினாள் .
விளக்கம்;-- காரணம் கூறித் தலைவி இரவுக்குறியை மறுத்துவிட்டாள் .
1 . அழைநரர் = மனத்தில் தூய பக்தி கொண்டு அழைக்கும் அடியவர்கள்.
2 . அருள்மழை = உருவகம்.
3 . வேட்டையரி =வேட்டையில் மகிழ்ந்த அரி.
மெய்ப்பாடு -------- அச்சம்.
பயன் ---------- இரவுக்குறி மறுத்தல் .
14 .11. குறை நேர்தல் .
கொளு .
வருந்தும் வடிவேல் தலைவன் வாட்டம்
அறிந்து, குறைநயந்தாள் திருவுடை நங்கை .
பொருள்;-- தலைவியைச்சந்திக்க வாய்ப்பின்மையால் வருந்திய
தலைவன் மனம் மகிழ, அவனது குறையைப் போக்கும் முறையில் 'குறியிடம்
வரச்சம்மதித்தாள்.
பாடல்---156.
உற்றார் உறவினர் பெற்றோர் நடுவே தனித்துயராள்
கற்பகம் சிறையெடு தணிகை வேடன் கடன்போலச்
கற்பொழிச் சுனையுள் முழுகிய வன்று வினையாளை
நற்றவச் செய்கை எனையணை விற்கரம் வாழியவே. பொருள்.
வள்ளிமலையிலே தன்னை விரும்பிய வள்ளி, அருள்முகம் காண
வெளிவரமுடியாமல் பெற்றோர் மற்ற உறவினரால் சூழ்ந்து சிறைபோல்
பாதுகாத்த நேரத்திலே, அக்கற்பகத்தைச் சிறையெடுத்துப் போரிட்டு,
அவளது மனத்தனிமையை மாற்றிய தணிகை முருகவேடன்போல்
தணிகைமலை மீது பொழியும் சிற்றருவிச் சுனையில் நீராடிக்
கொண்டிருந்த நேரம், ஆழமான பகுதியில் மூழ்க இருந்த என்னைக்
காதவராகிய தலைவனே! என்னைக்காத்த தங்களை நீடூழி
வாழ்த்துகிறேன். என்பதால் தலைவி இரவுக்குறி ஏற்றாளாகவே
காணப்படுகிறாள்.
விளக்கம்;-- 1 . தனித்துயராள் = முருகனைக் காண இயலாமல் தனியே
அமர்ந்த துயரம் கொண்ட வள்ளி.
2 . சிறையெடுத்த = பெற்றோர் உறவினர் சூழ்ந்து இருக்கையில் வள்ளியை அவர்களிடம் இருந்து நீக்கித் தன்னோடு
இணைத்துக்கொண்ட செயல்.
3 . வினையாளை = பாவம் செய்ததால் துன்பம் அனுபவிக்கும் என்னை,
4. கற்பொழி = மலையிலிருந்து பொழியும் அருவி
மெய்ப்பாடு ------அழுகை .
பயன் ---- இரவுக்குறி நேர்தல் .
14 . 12 . குறை நேர்ந்தமை கூறல்.
கொளு .
குறையை ஏற்றாள் குலத்துதி நலமகள்;
நிறையுடை வேந்தன் அறியச் சொன்னாள் .
பொருள்;--- தலைமகனின் குறையை ஏற்றுக்கொண்டுவிட்டாள் தலைவி,"
என்று தலைவனிடம் தோழி சொன்னாள் .
பாடல்---157.
விரிபலாப் பொன்சுளை விழுதேன் துளியால் விருந்தாகப்
பரிபவத் தணிகைச் சாரலை உரியவ ! உன்செவ்வாய்
உரைத்த செய்தி நறைமலர்க் குழலிச் செவியினிலே
விரைந்து சொல்லிட வினையேன் படுதுயர் சொல்லிலையே
பொருள்.
பலாமரத்தின் பலாப்பழம் பிளவுபட, அதனுடைய இனியசுளைகளின்
மீது, உடைந்த தேனடைத்தேன் துளிதுளியாகச் சொட்டியது; அங்கு
வருவோருக்கு விருந்து பரிமாறுவதைப் போலமைந்துள்ள காட்சியைக்
கொண்ட தணிகை மலை; அம்மலைச்சாரல் நாட்டை உரிமையாகக்
கொண்ட மன்னனே! நீ கூறிய செய்தியை , உனது குறையைத் தேன்சிந்தும்
மலர்களை அணிந்த கூந்தலையுடைய தலைவியின் செவிகளில் மிக
விரைவாகச் சொல்லிட எளியேன் பட்ட துயரை எப்படிச்சொல்வது?
என்பதால் அவனது குறையை ஏற்றுக்கொண்ட தலைவி குறியிடம் வரச்
சம்மதித்துவிட்டாள் " என்பதைத் தோழி கூறுகிறாள்.
விளக்கம்;--- விரிபலா = பிளவுபட்ட பலாப்பழம்.
2 . உரியவ = உரிமைகொண்டவனே!
3 . சொல்லிலையே = பட்ட துயர் விளக்கக்கூடியது அன்று; என்பதோடு
அதைவிளக்கவும் சொல் இல்லை; இங்கு சொல்லிட
என்பதை இரு இடங்களிலும் சேர்த்துக் கொள்க.
மெய்ப்பாடு ----- பெருமிதம்.
பயன் -------- தலைமகற்குக் குறை நயந்தமை உணர்த்துதல் .
14 . 13 . வரவுணர்ந்து உரைத்தல்.
கொளு .
இளமயில் போன்ற தோழி வளக்குரலில்
தலைவன் வரவினை கலையுடன் கூறியது.
பொருள் ;--- அந்த இரவு நேரத்தில் தலைவன் குறியிடம் வந்துவிட்டான்"
என்று இளமயில் போன்ற தோழி கூறினாள் .
பாடல்---158.
வள்ளியை மணந்தபின் வந்த தணிகை வேலனவன் ,
உள்ளிய மூவர், விண்ணவர் , தமக்களி பேரருள்போல்
அள்ளவும் குறையா ஆனந்த வின்பருள் துள்ளுமிங்கே"
பள்ளுப் பாடிய மயிலால் அனைத்தும் எழுந்தனவே .
பொருள்.
வள்ளிமலையிலே வள்ளிப்பிராட்டியை மணந்த முருகன் நேராகத்
தணிகை மலைக்கே வருகிறான்; வரவேற்க வந்த மூவருக்கும்,
தேவர்களுக்கும் பேரருள் புரிகிறான். அந்தப் பேரருள்போல,
தணிகைச் சாரலில் சோலைக்காட்டில் நள்ளிரவில் நன்கு உறங்கிக்
கொண்டிருந்த மயில் கூட்டத்தில், ஒரு பெரிய மயில் தனது தோகையை
விரித்தாடியபடி, " நமக்கு இன்று இங்கே அளவிடமுடியாத மிகப்பெரிய
இன்பம் வரப்போகிறது' என்றபடிப் பாடியாடியது; அதுகேட்ட அனைத்து
மயில்களும் விழித்து,எழுந்து அவைகளும் ஆடிப்பாடின; இது என்னவோ?
விளக்கம்;-- இரவில் மயில்களின் உறக்கம் கலைந்தது; காரணம் ;
இரவுக்குறியிடம் நோக்கித் தலைவன் வந்தான்; அவனது காலடிச்சத்தம்
கேட்டு அவைகள் விழித்தன; என்பது உட்பொருள்.
1. மணந்தவுடன் = வள்ளியை நாரதர் சொல் கேட்டு, அவரே மணச்சடங்கு
செய்ய முருகன் வள்ளிமலையில் மணக்கிறான்; உடனே திருத்தணிகை
எழுந்தருள்கிறான் .
2 . உள்ளிய = மணம் முடித்துவந்த முருகனை மனமெல்லாம் நினைந்து
போற்றிய.
3 . குறையா = குறையாத இன்பத்தைத் தலைவனும்,தலைவியும் காணப்
போகிறார்கள் என்பது குறிப்பு.
மெய்ப்பாடு -------பெருமிதம்.
பயன் -------தலைமகன் வரவு உணர்த்துதல் .
14 . 14 . தாய் துயில் அறிதல்.
கொளு .
ஓலிதரும் அசைவால் உறங்கும் தாயின்
நிலையினை அறிந்த தோழி மனநிலை.
பொருள்;--- இரவுக்குறி நோக்கிச்செல்லத்தலைவியை அழைத்திட ,
இடர்பாடாக இருக்கும் நற்றாயின் துயில் நிலை பற்றி ஒலியசை
எழுப்பி முடிவு எடுத்தாள் தோழி.
பாடல்--159.
சூரனின் கோட்டை அழித்த வாகுவின் வரத்தலைவன்
தாரணித் தணிகைக் காவினில் அழகாம் மலரூசல்
வாரணம் பூரணம் அழித்தது, நாரணி மரமும் ,
சீரறச் செய்ததே' கேட்டுச் செவிசிலிர்த் தெழாத்தாயே .
பொருள்.
சூரனின் மகேந்திரக்கோட்டையைப் படைவீரர்களோடு சென்ற
வீரவாகு அழித்துப் பொடியாக்கினான்; அவ்வீரனின் தலைவன்,
மலர்மாலையணிந்த முருகன் வீற்றிருக்கும் தணிகை மலையின்
குளிர்ச்சிமிக்க சோலையிலே தலைவி ஆடுவதற்காக நாம்
அமைத்திருந்த அழகுமிகு ஊஞ்சலை,அங்குவந்த ஒரு காட்டுயானை
துதிக்கையால் இழுத்து அறுத்து,அதன் அழகைகெடுத்துவிட்டது
அத்தோடு நில்லாமல் அவ்வூஞ்சலில் ஆடுவதற்காகக் கட்டப்பட்ட '
தயிரையும் கட்டியிருந்த மரத்தையும் தன காலால் சேதப்படுத்தியது "
என்று வருத்தமாய் உரைத்த தோழியின் சொல்லைக் கேட்டுத்
தாயானவள் சிலிர்த்துச் சினத்தோடு எழுந்திருக்கவில்லை; என்றாள் தோழி.
விளக்கம் ;-- சினத்தோடு தாய் எழுந்திருந்தால் அவள் விழிநிலையில்
உள்ளாள், எழாததால் நன்கு உறங்குகிறாள். எனவுணர்ந்த தோழி,
தலைவியைக் குறியிடத்திற்குக் கூட்டிச்செல்வாள். என்பது குறிப்பு.
1 . வீரவாகு = ஒன்பது வீரர்களின் தலைவன்; முருகன் தோன்றிய காலத்தே
உடன் தோன்றிய முருகனின் இளவல்;
2 . கார்ச்சோலை = நிழலால் சூழப்பட்ட குளிர்ந்த சோலை.
3 . மலரூசல் = மலர்களால் ஆன கயிற்றால் கட்டப்பட்ட ஊஞ்சல்.
மெய்ப்பாடு ......... பெருமிதம்..
பயன்.......... இடையீடு ஆராய்தல் .
14 . 15 .துயிலெடுத்துச்சேறல் .
கொளு .
தாயின் துயிலை அறிந்து, தோழி,
மாய்துயில் நீக்கி, மகிழ்வுடன் சொன்னது.
தாய் நன்கு உறங்குகிறாள்; என்பதைஉணர்ந்த தோழி, தலைவியை
தூக்கத்திலிருந்து எழுப்பி,மகிழ்வோடு கூறினாள் .
பாடல்---160 .
விண்ணும் மண்ணும் துயருற அரக்கரை வீழ்த்தியதால்
பொன்னகம் சேர்த்தவன் தணிகை மன்னவன் ஊர்திமயில்
மின்னிடும் தோகை பண்ணிதழ் மின்னிடைப் பின்சுழலும்,
தண்குழல் ஒக்குமோ? காணலாம் கவினாம் காநாடியே .
பொருள்.
விண்ணுலகத்தையும்,மண்ணுலகத்தையும் அடிமைப்படுத்தித்
துன்புறுத்திய சினமும், பொறாமையும் கொண்ட தீய அரக்கர்களான
சூரன்,சிங்கமுகன்,தாரகன் முதலிய கொடிய அரக்கர்களிடம் இருந்து,
விடுவித்துப் போரிட்டு அவர்களை அழித்து மீட்டு, நல்வழி காட்டியவன்,
புதுமையாகிய தணிகையில் வந்து அமர்ந்தவன், மன்னவனான
மாமுருகன்; அவனது ஊர்தியோ சூரமாமயில்; மயிலின் மின்னிடும்
கண்கள்போன்ற தோகையின் வசீகரம், அழகு, இவைகள் ,
இசைபோல் இனிக்கும் இதழ் உடையவளே! மின்னும்சிற்றிடை
உடையவளே! சிற்றிடையின் பின் தொங்கும் உனது குளிர்ச்சிமிக்க
கருங்கூந்தலுக்கு ஒப்பாகுமோ?
என்று இந்த நள்ளிரவில் அழகுமிகு சோலை சென்று கணித்திடலாம் ;
வா! நாம் போவோம்" என்று வேறொரு செயலாற்றச் செல்வதைப்போல்
தலைவனைச் சந்திக்கத் தலைவியைக் குறியிடம் அழைத்துச்சென்றாள்
தோழி
விளக்கம்;-- வெகுளித்தீ = பொறாமை,சினம் போன்ற தீயகுணங்கள் கொண்ட
மனம் . உருவகம்.
2 . புதுத்தணிகை = குருகன் வந்து வீற்றிருப்பதால் புதுமை பலப்பல பெற்று
விளங்கும் தணிகை .
3 . கவின்சோலை = அழகு மிகுந்த சோலை; மயில்கள்,பறவைகள் மலர்கள்
நிறைந்த அழகு; அதில் மயில் தோகையையும் தலைவி கூந்தலையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மெய்ப்பாடு ------பெருமிதம்.
பயன் -----தலைமகளைக் குறியிடத்து உய்த்தல் .
14 . 16 . இடந்துய்த்து நீங்கல் .
கொளு .
கருங்கூந்தல் திருவை உய்த்திடம் சேர்த்தபின்,
ஒருபக்கம் நின்று தலைவியிடம் உரைத்தது.
பொருள்;---- இரவுக்குறியிடத்துக் கருங்கூந்தல் கொண்ட தலைவியைச்
சேர்த்த தோழி, ஒருபக்கம் வந்துநின்று தலைவியிடம் சொன்னாள் .
பாடல்--161.
கூந்தலின் குளிர்மணம் கூட்டிய; வாதிட்ட நக்கீரன்
வேந்தனாய்ப் போற்றிய தணிகை வேலனின் தோகையே !
மாந்தளிர் மாந்தும் மயிலின் தோகையை மனத்திருத்திக்
கூந்தல் கணிக்க ; கடிமலர் பறித்து வருவேனே .
பொருள்.
கொங்குதேர் வாழ்க்கை" என்னும் பாடலைப் பாடிய சிவபெருமானின்
பாடலில் மதுரைச்சங்கத்தே பொருள்குற்றம் இருப்பதாக
வாதிட்டு, நிறுவி, சாபமும் பெற்ற நக்கீரர் "திருமுருகாற்றுப்படை "
என்னும் நூலைப்பாடி தந்தையின் சாப நீக்கமும் பெற்றவர்;
அவரது ஆற்றுப்படை நூல் முருகனை எல்லாம் வல்ல தலைவனாகப்
போற்றுகிறது; அப்படிப்போற்றுதல் பெற்ற தணிகை வாழ் மாமுருகனின்
தோகைபோன்ற கூந்தலையுடையவளே! இச்சோலையில் மாந்தளிர்களை
உணவாக உட்கொள்ளும் மயில்களின் தோகையை நன்கு பார்த்து, அதனை
உன் மனதிலே இருத்தி , அத்தோடு உன்கூந்தலையும் ஒப்பிட்டுப் பார்த்தபடி
இங்கிருப்பாயாக. நான் சென்று, உன் கூந்தலில் சூட்ட நறுமணம் மிக்க
மலர்களைப் பறித்துக்கொண்டு வருவேன்" என்று சொல்லிய தோழி
தலைவியை அங்கேயே விட்டுவிட்டுச்சென்றாள் .
விளக்கம் ;--இரவுக்குறி இடம் தலைவியை அழைத்து வந்த தோழி, அவளை
குறுயிடத்தில் நிறுத்திவிட்டு, மலர்கள் பறித்துவருவதாகக் கூறிவிட்டுச்
செல்கிறாள்; தலைவன் வருவான்; அவர்களிடையே தான் இருக்கவேண்டாம்
என்று நினைந்துஅவர்களைத் தனியே விட்டுச்செல்கிறாள்.
1. கூட்டியதே = பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது;
நறுமணப்பொருட்களால் அளிக்கப்பட்டது. என்கிறார் நக்கீரர்.
2 . கீரன் = மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப்புலவர்; இறைவனோடு
வாதிட்டவர்;
3 . கணித்திடு = மாறாத முடிவு எடுத்தல் . கூந்தல் மயில் தோகை போன்றது.
மெய்ப்பாடு ---------பெருமிதம்.
பயன் ----- தலைமகளைகே குறியிடத்து நிறீஇ நீங்குதல்.
14 .17 . தளர்வகன்று உரைத்தல்.
கொளு .
வான்மதி முகத்தாள் வருத்தம் போக்கித்
தேனினிய சொற்கள் உரைத்து மகிழ்வித்தது.
பொருள்;-- நிலவன்ன முகத்திலே,தோன்றிய துயரைப் போக்கி,
இனியசொற்களால் அவளைத் தலைவன் மகிழ்வித்தது.
பாடல்--162.
வள்ளல் தணிகை நல்லிதழ்க் கமலம் விரிந்திடவே
துள்ளிய கயல்கள் விளக்காய்த் தூமலர் வந்ததிங்கு !
நள்ளிருள் முள்ளிடை கள்வனைத் தேடிடும் காவலன்போல்
புள்போல் முனகும் சிலம்புடன் புதுப்பூ வந்ததிங்கே .
பொருள்.
இந்த நள்ளிருளில் முட்கள் சூழ்ந்த வழியிலே, கள்வனைத் தேடும்
காவலன்போல், தன்மனத்தைக் கொள்ளைகொண்ட கள்வனைத் தேடும்
நிலையில் மெதுவாக, மிகமிக மெதுவாக இரவில்குரல் எழுப்பும் சிறுசிறு
வண்டுகள் முனகுவதைப்போல் காற்சிலம்பு மெல்ல ஒலியெழுப்ப, என்னைத்
தேடி இந்தப்புதுமலர் வந்ததே!
வள்ளலாகிய தணிகை வேலனது மலர்ச்சோலையில் தாமரை மலர்கள்
எல்லாம் குவிந்த தமது இதழ்களைத் துன்பமுடன் விரித்தபடிக் கால்
வைக்க இடம்கொடுக்க,பொய்கையில் துள்ளும் மீன்கள் எல்லாம்
விளக்குபோல் வழிகாட்ட,இந்த தூயமலர் எனைக்காண வந்ததோ!
என வருத்தத்தில் மகிழ்ந்தும் தலைவியின் அயர்வினைப் போக்கினான்
குறியிடத்து எதிர்ப்பட்ட தலைவன் தலைவியிடம் கூறினான்.
விளக்கம்;-- 1 .கமலங்கள் = தாமரைகள் ;அவைகளின் கூம்பிய இதழைக்
கம்பளம்போல் விரிக்க,
2 .கயல்கள் = மீன்கள். நீரில் துள்ளும் மீன்களின் செதில்கள் விளக்குபோல்
ஒளி காட்டின.
3 . முனகிடும் = மெல்லிய குரல் கொடுக்கும்.
மெய்ப்பாடு -----உவகை
பயன் -----கண்ட தலைமகளை மகிழ்வித்தல்.
14 . 18 .மருங்கணைதல் .
கொளு .
அன்பு மேலிட அழகுத் தலைவியைப்
பண்புடைத் தலைவன் புகழ்ந்து உரைத்தது.
பொருள்;--- அன்பு கொண்ட தலைவன் தலைவியை வெகுவாகப்
புகழ்ந்துரைத்தது.
பாடல்---163.
பரன்மலை கரம்பிடி தேவா; அழகு செந்தமிழால் !
வரமருள் வடிவே! வாய்நிறை தணிகை மொழிபோல
விரவின் மதியே ! இனிக்கும் இதழே! இடைமெலியப்
பெருத்திளம் முலையே! விருந்தே ! என்றெலாம் , போற்றினானே .
பொருள்.
திருப்பரங்குன்றில் திருமணம் முடிந்தநாள் இரவு, தன்னை மணந்து
கொண்ட தெய்வயானையை , அழகியா செந்தமிழால்
வரங்களை வாரி வழங்கும் அருட்சக்தியே! என்று உள்ளம் நிறைந்த
சொற்களால் தணிகைவேலன் போற்றிய மொழி போன்று,
தலைவனும், தலைவியை "இரவுநேரத்தில் இருளை விரட்டும் ஒளி
கூட்டும் முழுமதி போன்றவளே! சொல்லாலும்,சுவையாலும் இணைகின்ற
இனிமை இதழ் உடையவளே! முன்னரே மெலிந்த இடையை மேலும்
மெலிந்து நோவச்செய்யும் பருத்த முலைகளை உடையவளே!
மூவுலகிலும் கிடைக்காத பெரிய விருந்தானவளே! உன்னை, உன் அழகை,
வெகுவாகப்போற்றுகிறேன்" என்று புகழ்ந்தான்.
விளக்கம்;- 1 . கரம்பிடி தேவாவை = கையைத் தொட்டுத்திருமணம் செய்து
கொண்ட தெய்வயானையை. இங்கு
கரம் + பிடி தேவா , எனப்பிரித்தால் பிடி = யானை ; தேவயானையை எனவும்
கொள்ளலாம்.
2 . வாய் நிறை = வாய் நிறைந்த சொற்களால் போற்றினான்; இதையே
அடியவர்களின் வாயெல்லாம் வழியெல்லாம் நிறைந்து
விளங்கும் தணிகையான் , எனவும் கொள்ளலாம்.
3 . இடைமெலி = இடை என்றாலே மெலிந்தது; அந்த இடையை மேலும்
மெலியச்செய்யும் மார்பகங்கள்.
மெய்ப்பாடு ------ உவகை.
பயன் --------- தலைமகனைச் சார்தல்.
14 . 19. முகங்கண்டு மகிழ்தல்.
கொளு .
மலரணி மலர்முகம் மகிழளி மன்னன் ;
மகிழ்ந்த அண்ணல் மகிழ்வில் வாழ்த்தினான்.
பொருள்;--- மலர்காலைசூடிநின்ற தலைவி தலைவனை மகிழ்வித்தாள்;
மகிழ்ந்த தலைவன் மலராளை வாழ்த்திப் புகழ்ந்தான்.
பாடல் ---164.
தினைப்புனத் தேனைப் புணர்ந்து சுவைத்த தணிகையான்
வினையறு சுனையே! சுனைவாழ் அனமே ! என்றாற்போல
நனைகுளிர் மலரே ! பனைவாழ் அன்றிலே! கூன்மதியே !
முனைமுகை முலையே ! என்றெலாம் போற்றிப் புகழ்ந்தனனே .
பொருள்.
வள்ளிமலைத் தினைப்புனத்தே சென்று,வள்ளியை விரும்பிய தணிகை
மலை வேடன், அவளோடு இரண்டறக்கலந்து இன்பம் சுவைத்தபின்
வள்ளியை , பாவங்களைப் போக்கும் திருத்தணிகையில் அமைந்துள்ள
சுனை போன்று அடியவர்கள் துயர் போக்குபவளே ! நீர்ப்பொய்கையில்
வாழும் அன்னம் போன்றவளே! என்றெல்லாம் போற்றிப்புகழ்ந்தான்.
அதுபோலத்
தலைவனும், சுனை நீரில் உதித்து மகிழும் அழகுமலரே !
ஒருபோதும் இணை பிரியாத அன்றில் பறவையே!
மூன்றாம்பிறைச்சந்திரன் போன்று விளங்கும் நெற்றியை உடையவளே!
முனைக்கூர்மையாய் விளங்கும் மார்பகம் உடையவளே!
எனப்போற்றி வாழ்த்தி மகிழ்ந்தான்.
விளக்கம்;- 1 . தேனை = உருவகம் . தேன்போல் இனிக்கும் வள்ளியை.
2 . வினையறு சுனை = சுனை நீர் குளிர்ச்சி உடையது; திருத்தணிகைச்
சுனைநீரோ அடியவர்களின் பாவத்தையும் போக்கவல்லது; அதுபோலவே
வள்ளிப்பிராட்டியும் விளங்குகிறாள்.
3 . கூன முனைநிலவு = முனை ஒடிந்த நிலா ' மூன்றாம்பிறை நிலா.
மெய்ப்பாடு------உவகை
பயன் ----- நயப்புணர்த்தல் .
14 . 20 . பள்ளியிடத்து உய்த்தல் .
கொளு .
பிரியக் கருதிய பெருமலைத் தலைவன்,
அருமைப் பாங்கியொடு அரும்பள்ளி அமைக.
பொருள்;---- புணர்ந்து மகிழ்ந்த தலைவன், அவளை விட்டுப் பிரிய
எண்ணித் தலைவியிடம் நீ தோழியோடு இல்லம் சென்று நல்லுறக்கம்
கொள்க" என்றான்.
பாடல்--165.
மும்மலக் கோட்டை முதுபழி செயல்கள் வீழ்த்திட வே
செம்மலின் செயப்போர்த் தணிகைச்செவந்திப் பொழில்காவில்
அம்மவோ ! நன்மலர் ; வியப்பில் தயங்கா விரிசெய் கை
நம்மவர் கூட்டம் நாடியே நம்மில்லம் உறங்குவாயே .
பொருள்.
சூரன் முதலிய அரக்கர்களின் மும்மலக் கோட்டைகளை அழித்தும்,
அவர்களது நீண்டகாலப் பழிச்செயல்களை அழித்தும், வெற்றிப்போர்
புரிந்த செம்மலாகிய முருகன் ஆற்றிய பெருமையில் வந்தமர்ந்த
திருத்தணிகை நகர்க்கண் அமைந்துள்ள செவ்வந்திமலர்கள் நிறைந்த
பூங்காவில்,
தலைவியே! நீ உள் நுழைந்தவுடன் ஆ ..ஆ என்னே அருமை! என்ன மலர்!
என வியந்து தயங்கி நிற்காமல் விரைவாகச் செல்; அங்கு நிறைந்திருக்கும்
நமது பேராயத்தோடு சேர்ந்துகொள்! நம் இல்லத்தில் சென்று
மனமகிழ்வுடன் நன்கு உறங்குவாயாக" என்று தலைவன் தலைவியிடம்
கூறினான்.
விளக்கம்;- 1. முத்துபழி = தொன்றுதொட்டு ஆற்றிவரும் தீமைகள்
2 . அம்மவோ ! வியப்பு!
3 . தயங்கா = தயங்கி நில்லாது விரைவாக .
மெய்ப்பாடு ------பெருமிதம்.
பயன் -----------புறத்தாரறியாமைப் பிரிதல்
14. 21 . வரவு விலக்கல் .
கொளு .
தலைவியை அமளி சேர்த்துத் தோழி,
மலைநாடனை வரவு விலக்கியது .
பொருள்;--- தலைவியைத் தமது மாளிகைக்கு அனுப்பிவிட்டுத் தோழி,
தலைவனைச் சந்தித்து, இனி இரவு வருவதை நிறுத்துங்கள்" என்றது.
போட்டாள்--166.
ஊரறிந் துள்ளம் காண ஊர்ப்புறம் தணிகை வேடனை,
காரிருள் காலத்தே வாரற்க என்றுரை இகுளைபோல்
தாரிளந் தலைவியைத் தேடி வருவழி சீரெளிது
கூர்வேலால்; ஆயினும் வாரற்க தலைவனே! என்றாளே .
பொருள்.
வள்ளியின் ஊர்ப்பெயர்,செல்வழி போன்றவற்றை அறிந்த வேடன், தனது
உள்ளமாகிய வள்ளையைச் சந்திக்க சிற்றூரின், வெள்ளிவீட்டின் பின்புறம்
வந்தான் தணிகை வேடன். அவனைப் பார்த்த தோழி, இகுளை, தலைவனே!
காரிருளில் விலங்குகள் உலவும் வேளையில் வள்ளியைச்சந்திக்க
வராதீர்கள்" என்று சொன்னதைப்போல ,
தலைவியைத் தேடி வந்த தலைவனைப் பார்த்துத் தோழியானவள்
தலைவனே ! இரவில் வரும் வழி விலங்குகளும், ஆறலைக் கள்வர்களும்
உலவும் நேரம், தங்கள் கையில் உள்ள கூர்வேல் வலிமை மிக்கது ;
ஆயினும் தலைவி அஞ்சுகிறான்; இரவுக்குறி வேண்டி இனி வராதீர் !
என்றுரைத்தாள் .
விளக்கம்;-- 1 . ஊரறிந்து = வள்ளியின் ஊர், செல்வழி போன்றன அறிந்துகொண்டான் வேடன்.
2 . உள்ளம் = மனம் ;தணிகை வேலனின் மனம் குடிகொண்ட வள்ளி வீடு.
3 . சீரெளிது = வரும்வழியின் விலங்கு,கள்வர் போன்ற அச்சம் வேலால்
எளிதாகும்.
மெய்ப்பாடு ------- அச்சம்.
பயன் ------- வரவு விலக்கி வரைவு கடாதல் .
14 . 22. ஆற்றாது உரைத்தல் .
கொளு .
வரைவை வலியுறுத்திய நிறைமதித் தோழிக்கு,
பெருமலை நாடன் புலம்பி உரைத்தது.
பொருள்;--- இரவுக்குறி தவிர்த்த தோழி , தலைவனிடம் வரைவை
வலியுறுத்தினாள் . வரைவை விரும்பாத தலைமகன் இரவுக்குறி வேண்டிப்
புலம்பினான்.
பாடல் ---167.
தோகையில் தோகை இருபுறமும் ; வாகைக் கொடிமேலே,
வேகமாம் விசயத் தணிகையான் மோகனச் சோலையில்
நாகப் படத்தை விழியைச் சிற்றிடைப் பொலிவழகை த் ,
தேகமாம் முழுதும் நிறைத்த தேவியைப் பிரியேனே .
பொருள்.
ஊர்தியாகிய தோகையின்மேல் அமர்ந்து, தனது இருபக்கத்திலும்
வள்ளி,தேவயானை என்ற இருதோகைகளை அமர்த்திக்கொண்டு ,
அரக்கர்களோடு விரைவினும் விரைவாய்ப் போரிட்டு வென்று,
வாகைக்கொடியாய்ச் சேவலை மேலே பறக்கவிட்டபடிப் பவனிவரும்
தணிகை வெற்றி வீரனது, தணிகைச்சோலையில் வாழும்
பாம்புப்படமென்னும் அல்குலும், மனதை மயக்கும் கண்களும்,
சிற்றிடையும் கொண்டு விளங்கும் அழகை, உடலிலும் உயிரிலும்
கலந்து வியாபித்திருக்கும், தேவதையை,என் தேவியைப் பிரிந்து
இருப்பதோ? பாராமல் இருப்பதோ? பழகாமல் இருப்பதோ? என்று
இரவுக்குறி மறுத்த தோழியிடம் புலம்பினான் தலைவன்.
விளக்கம் ;- 1 . தோகை = மயிலூர்தி.
2 . இருதோகை = வள்ளியும், தேவாவும்.
4 . தேகமாம் = உடலும்,
மெய்ப்பாடு ---------உவகை.
பயன் = வரைவு உடன்படாமை.
14 .23 . இரக்கம் கூறி வரைவு கடாதல் .
கொளு .
தலைவன் அகன்றவழி அகலாது தடுக்கும்,
மலையிடர் மனத்துற்று மதித்தோழி வருந்தியது.
பொருள்;--- இரவுக்குறி வந்த தலைவன் அவ்விடம் விட்டகன்றபோது வழியில்
வரக்கூடிய துன்பங்களை நினைத்துப்பார்த்த தோழி, அது நினைந்து
வருந்தியது.
பாடல்--168.
பன்னிரு கரமும், மயிலும், கன்னியர் கருணையும்
பின்னிய தணிகை, பரன்மலை சேர்ந்த உடனேயே
நன்னெடும் குரலுடை பொன்குழல் கொம்பை ஊதுகவே.
மன்னனே! மனைக்கண் மணிநீர் பொழிதல் நின்றிடவே .
பொருள்.
பன்னிரண்டு கரங்களும், மயிலூர்தியும், இரண்டு மனைவியரும்,
கருணையும் இணைந்து அருட்கடவுளான தணிகைவாழ் முருகனது
திருப்பரங்குன்றத்தை நீ அடைந்தவுடன் மன்னனே! உன்னைப்பிரிந்ததால்
வருந்திக் கண்ணீர் சிந்தும் தலைவியின் கண்ணீர் நிற்கவேண்டிப்
பெருங்குரல் எழுப்பும்,ஊதுகுழலை நீ ஊர் சேர்ந்துவிட்டாய் என்பதை
உறுதிப்படுத்த ஊதிக் குரல் எழுப்புவாயாக!
அவ்வொலி கேட்டுத் தலைவி நீ உ ன்னூர் சென்றுவிட்டாய்" என
அறிந்து அழுகையை நிறுத்திவிட்டு மன அமைதி பெறுவாள்" எனத்
தோழி தலைவனிடம் வேண்டுகோள் விடுத்தாள்.
விளக்கம்;- 1.பின்னிய = பின்னிப்பிணைந்த; மனத்துள் ஒன்றிய .
2 . பரன்மலை = திருப்பரங்குன்றம் .
3 . மனைக்கண் = மனைவாழ் தலைவியின் கண் .
மெய்ப்பாடு ......... அச்சம்.
பயன் .......... வரைவு கடாதல் .
14 . 24. நிலவு வெளிப்பட வருந்துதல்.
கொளு.
தலைவன் தமக்குத் தாங்கள் தயங்கும்
தண்மதி தழைதலைத் தோழி உரைத்தது.
பொருள்;-- தலைவன் சிறைப்புறம் நிற்க, அவன் கேட்குமாறு தோழி
நாம் புறப்படும் நேரம் நிலவும் வெளிப்பட்டது; அதனால் புறப்படத்
தயங்கினோம்" என்று.
பாடல்--169.
மதியென விடுசொல் துதிக்க மறந்த ஆணவத்தான்
மதிச்சினம் மாள , மதிப்போர் வகுத்த மதித்தணிகை
மதிமுகத் தலைவி மறைகா செல்கை மதித்திருந்தும்
மதியே! வெளிப்படல் முதிய செயலோ? சொல்லுகவே !
பொருள்.
மறைகளை மதி! பண்புடைச் செயல்களை மதி! இறைவனை மதி!
ஆணவம் நீக்கு; அன்பினை மதி! விண்ணவர்களை விடுவி ! என்று
வீரவாகு வழியே தூது அனுப்பியும் பரம்பொருள் முருகனைத் துதிக்க,
மறந்த ஆணவச்சூரன் மதித்த சினமும், ஆணவமும் அழிய, மதித்திருந்த
சினமும் அழிய, புத்திசாலித்தனமான போரை எடுத்து, அழித்த நிலவன்ன
முகம்கொண்ட தணிகையான் வீற்றிருக்கும் தணிகை மலைச்சோலையில்
வாழும் மதிபோன்ற முகத்தையுடைய தலைவி, தனது தலைவனைச்
சந்திக்க , மறைந்து,யாருக்கும் தெரியாமல் பூஞ்சோலை செல்வதை நீ
அறிந்திருந்தும், வெண்ணிலவே! இப்படி தண்ணொளியை வெளிவிட்டு,
ஒளிர்முகமாய் வெளிப்படுகின்றாயே ! இது தொன்மை வாய்ந்த சான்றோர்
செயலாகுமா? சொல்வாய்? என வெளிப்பட்ட நிலவைச் சாடுகிறாள் தோழி.
விளக்கம்;--'
இப்பாடலில் " மதி" என்ற சொல் பலமுறை வந்து வேறு வேறு
பொருள் தருவதால் " சொல்பின்வருநிலை" அணியாகும்.
1. மதி = இப்பாடலில் ஏழு இடத்தில் வருகிறது.
1. மதி= மதிப்பாய். 2. அறிவு. 3. . உயரறிவு . 4. உவமை 5 . உவமை
6 . அறிந்தும், 7. நிலவே!
2 . மதிச்சினம் - உருவகம்.
3 . மதிமுகம் - உவமைத்தொகை .
மெய்ப்பாடு .......வெகுளி .
பயன் ......... இடையீடு அறிவித்தல் .
14. 25.அல்ல குறி அறிவித்தல் .
கொளு .
நல்ல தோழி அல்ல குறிப்பாடு
துள்ளலைத் தலைவனுக்கு சிறைப்புறமாய்க் கூறியது.
பொருள்;--- நல்லவளாகிய தோழி, அல்ல குறிப்பாடு நிகழ்வுகளைத்
தலைவனுக்கு, அவன் சிறைப்புறத்து இருந்தகாலை உரைத்தது.
பாடல்----170 .
ஆறுதாம் ஆயிரம் சேரும் இடமோ அருங்கடலே;
கூறுசொல் கோடியே கொள்வது தணிகைக் குன்றமர்ந்தான்
வீறுடைச் சோலைச் சுனையிலே விட்டெறி கல்கணக்கு
பேறுடைப் பெரும்பழக் கொட்டை துப்புபுள் பிழையாமே .
பொருள்.
ஆங்காங்கு தோன்றி,நாடெல்லாம் ஒடி, வளம் சேர்க்கும் ஆறுகள்
ஆயிரத்திற்கு மேற்பட்டவை; அவைகள் அனைத்தும் முடிவில் சேரும்
இடம் ஒரேயிடம்; அது அருமைமிகு கடல். அதுபோல
உலகிலே போற்றுதற்குரிய தெய்வங்கள், அவர்களின் பெயர்கள்,
அர்ச்சனைகள் எண்ண இயலாதது; ஆயினும் அத்தனைப் பெயர்களும்
ஒருவரையே சார்ந்து நிற்கின்றன. என்ன பெயர் சொன்னாலும் அது
மூல முழு முதல்வனான தணிகைக் குன்றிலே அமர்ந்திருக்கும்
முருகனையே சார்ந்தது. அப்படிப்பெருமை பெற்ற அம்மலைச்
சாரலில் அமைந்த சோலையில் வாழும் தலைவி தலைவனைச்
சந்தித்து,நன்கு பேசிட அவர்கள் காதல் வளர்ந்தது. ஒருநாள்
இரவுக்குறியிடம் வருவதாகக் கூறிய தலைவன் நள்ளிரவில் நான்
பொய்கைச்சுனையில் என்கழுத்தில் உள்ள மணிமாலையைக் கழற்றி
அதன் மணிகளை ஒவ்வொன்றாகப் போடுவேன்; பத்து வரை வீசுவேன்;
அவ்வொலி என்னுடையது என அறிந்து நீ குறியிடம் வந்துவிட வேண்டும் "
என்று கூறினான். இரவும் வந்தது; பொய்கை நீரில் மணி விழும் ஒலி கேட்டது.
தோழியோடு இரவுக்குறியிடம் வந்தாள் தலைவி; அங்கே தலைவனைக்
காணவில்லை; நீண்டநேரம் அங்கேயே இருந்துவிட்டு வீடு சென்றனர் .
நடந்தது என்னவெனில்,
சுனையின் மேல் அடர்ந்த மரக்கிளைகள்; அக்கிளையிலே அமர்ந்திருந்த
பறவையொன்று பழத்தைத் திண்றுவிட்டுக் கொட்டைகளைத் துப்பியது;
அதுவும் பத்தாகவே அமைந்தது;
இது அல்லகுறி எனப்படும்; இரவுக்குறி இடையீடு அன்றும் சொல்லப்படும்.
விளக்கம்;--
1 . கூறுசொல் = பற்பல கடவுளர்;பற்பல பெயர்கள்; கூறும் இறவர்களது பெயர்.
2 . கல் கணக்கு = எரியும் இரத்தினக்கற்களின் எண்ணிக்கை.
3 . பிழையாமே = பறவையினால் தலைவன் கூற்று பிழை ஆகிவிட்டது.
மெய்ப்பாடு ........அழுகை .
பயன் ........ அல்லகுறிப்பட்டமை தலைமகற்கு உணர்த்துதல் .
14.26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் .
கொளு .
அலைகடல் மேல்வைத்து, இரவுவரும் துயரை,
ஒலிகழல் வேந்தற்கு விலகி உரைத்தது .
பொருள்;- கடலின் உயர்வு தாழ்வுகளைக் கூறி, இரவுக்குறியில் ஏற்பட்ட
துன்பத்தை வீரக் கழலணிந்த தலைவனிடம் தோழி சொல்லியது.
பாடல் -171.
வலையான் மூத்தவன்; படையுடை இளையோன் ;அடங்காத
விலையாய் விரிகடல் விதியால் இழந்த திருவமுது.
கலையாய்க் காதல் காரிருள் பிரிவினால் கலங்குகின்ற
நிலைமை நினையாக் கடலே! நின்புகழ் நினைக்கிலேனே
பொருள் .
ஆர்ப்பரிக்கும் பாண்டிநாட்டுக் கடலிலே வலைவீசும் செம்படவனாக
வந்த சுந்தரேசக்கடவுள் . அடங்காத பெரும்சுரா மீனை அடக்கியதோடு
ஆணவக்கடலையும் அமைதிப்படுத்தினார். தென்கடலிலே நால்வகைப்
படைகளோடு இறங்கிக் ஆரவாரம் மிக்க கடலை அடக்கியதோடு,
அக்கடலை ஆண்டுவந்த அரக்கர்களையும் அழித்தார் தணிகை
இளையரான செந்தில் முருகன்.இப்படி விலைபோன விரிகடலே!
ஒருகாலத்தில் விதியினால் உன்வயிற்றில் தோன்றிய இலக்குமியை,
அமுதத்தை, நிலவையும் இழந்தது மறந்துவிட்டதா? அழகே உருவான
தலைவி தனது காதலித்த தலைவனோடு கூடியவள். அதனைத்
தொடரமுடியாமல், இரவுக்குறி தடைப்படகலங்குகின்றாள்; நீயோ
அந்த நிலைமையை உணராமல் ஆர்ப்பரிக்கிறாய்! கடலே!
உன்னை,உன்புகழைப் போற்றிட விருப்பமில்லை" என்று
தலைவியின் மனக்குமுறலைத் தலைவனிடம் கூறி வருந்தினாள்
தோழி.
விளக்கம் ;--- 1 . மூத்தோன்= தொன்மைச்சிவனார்
2 . இளையோன் = அழகானவன், பாலமுருகன் . தணிகையான்
3 . திருவமுது திரு = இலக்குமி. அமுது= அமுதம்; நிலவு.
மெய்ப்பாடு ------ அழுகை .
பயன் ---------- அல்ல குறிப்பட்டமை தலைமகற்கு உரைத்தல்.
14. 27.காமம் மிக்க கழிபடர் கிளவி .
கொளு .
ஏமம் மிக்க எழிலுடைத் தலைவி
காமம் மிக்க கழிபடர் கிளவி .
பொருள்;-- மிக்க பாதுகாப்போடு இல்லில் இருக்கும் தலைவி,
தலைவன் மீது கொண்ட காதல் மிகுதியால் கேட்கவும்,பேசவும் தகுதி
இல்லாத உயிர்களோடு தலைவி பேசுதல்.
பாடல்--172.
தினைப்புனம் வராது, தேன்மொழி பேசாக் குணமயிலோன்
நினைந்து கிளியனம் மயிலிடம் பேசு புனவள்ளி
பனைமர வன்றிலே ! பச்சிளம் தளிரே ! பார்த்ததுண்டோ ?1
வினையாள் மனத்தே விரித்த வன்புடைத் தலைவரையே !
பொருள்.
வள்ளிமலை வந்து, தன்னோடு பேசிப்பழகித் தன்னோடு காடு மலை
எல்லாம் சுற்றிவந்த முருகவேடன் ஒருநாள் முழுதும் வரவில்லையே என்று
வருந்தி,அவனை நினைந்து, தினைப்புனத்தில் பறக்கும் கிளிகளிடமும்,
சுனைவாழ் அன்னங்களிடமும் மேயும் மயிலிடமும் அவரைப்பற்றிப்
பேசினாள் ; கேள்விகள் கேட்டாள் ; அவளைப்போலவே
தலைவியும் தலைவனை ஒருநாள் காணாதபொழுது பனைமரத்தில்
கூடுகட்டி இணைந்து வாழும் அன்றில்பறவைகளே! பசுமையாக விளைந்து
இளமை ததும்பும் இளந்தளிர்ப் பச்சிலைகளே! பாவம்செய்து துன்பம்
அனுபவிக்கும் இந்த அடியாளி ன் மனத்தே ஆசையையும்,அன்பையும்
வளர்த்த அன்புகொண்ட தலைவனை எங்கேயும் பார்த்தித்தீர்களா?
கண்டாள் என்னிடம் அவரை அனுப்பி வையுங்களேன்! எனக்கூறினாள் .
விளக்கம்;- 1.பேசு புனவள்ளி = வினைத்தொகை
2. வினையாள் = தலைவனைப் பிரியும் நிலை ஏற்பட்டதால் பாவம் செய்த
தான். தலைவி .
3 . விரித்த = வளர்த்த .
14 . 28 . காப்புச்சிறை மிக்க கையறு கிளவி .
கொளு .
விந்தைச் சிறையே; சந்திக்க இயலா
முந்தை முறைமை;முனகும் தலைவி.
பொருள்;-- வீட்டைவிட்டு அகலமுடியாத நிலை; தலைவனைச் சந்திக்க
இயலாத துயரம்; தொன்றுதொட்டு வரும் வேதனை; எனத் தலைவி
வருந்திக்கூறுதல்.
பாடல்--173.
பங்குனி உத்திரப் பால்குடப் பெருநாள் ; பகலாகும்
கங்குல்; கண்ணைக் கவரும் விளக்குகள்; குகத்தணிகை ;
தங்கும் உறக்கம் தானறி தலைவன் தயங்கிடினோ
பொங்கு குரல்நாய் போகவே வழியிலை , காவினுக்கே.
பொருள்.
திருத்தணிகையிலே பங்குனித்திங்களின் உத்திரப்பெருவிழா . பால்குடம்
எடுத்துப் பேரபிஷேகம் செய்யும் நாள். ஊரெங்கும் இரவைப்பகலாக்கும்
வண்ணவண்ண விளக்குகள்; ஊரே ஒளிமயமாய் விளங்கும் திருவிழா .
இந்நிலையில் எனது வீட்டில் உள்ளவர்கள் களைப்பு காரணமாக
அங்கங்கு படுத்து உறங்கிவிட்டார்கள் ; வீடே உறங்கிவிட்ட நிலையறிந்த
தலைவன் தயங்கித்தயங்கி வருகிறான்; ஒளியில் அவனைக்கவனித்த தெரு
நாய் விடாமல் குறைக்கிறது; இன்று தலைவனைச் சந்திக்கச் செல்ல
இயலாதே; அதற்கு வழியும் இல்லை; என் செய்வேன் நான்" என்று நொந்து
கூறுகிறாள் .
விளக்கம்;- 1 .உத்திரம் = இருபத்தேழு நடசத்திரங்களில் ஒன்று; முருகனுக்கு
உகந்த நாள்.
2 . பொங்கு குரல் = விடாது மிகுந்த சத்தத்துடன் குரைத்தல் .
3 . காவினுக்கே = இரவுக்குறியிடத்திற்கு .
மெய்ப்பாடு ----- அழுகை.
பயன் ------------- யாரும் கவலைப் படாத நிலை; தலைவி தானே ஆற்றுதல்.
14. 29 . ஆறு பார்த்துற்ற அச்சக்கிளவி.
கொளு .
வரும்வழி கருமிருள் கான்யாறு கலங்கவைக்கும்
திருமக! வருதல் தவிர்க்கவே இரவுக்குறி .
பொருள்;-- தலைவனே! நள்ளிரவில் நீ வருகின்ற வழியை நினைந்து
நாங்கள் அஞ்சுகிறோம்; கருமைவாய்ந்த இருள்; காட்டாறு,
எம்மைஅச்சுறுத்தும்; அதனால் இவ்விரவில் தாங்கள் வரவேண்டாம்"
எனத் தோழி கூறினாள் .
பாடல்--174.
அருவி பொழியும் அகல்மலை இடையே பாய்ந்துவரும்
அரும்பொருள் தணிகை தருமெனத் தழைக்கும் காட்டாறு
விரும்பிக் கடக்க, வேலது தடுக்கும் , விரியிடியால்
உருவிலா வணங்கால் வருதுயர் அச்சமே ; வாராதே .
பொருள் .
அகன்ற பெரிய திருத்தணிகை மலையில் அருவிகள் பொழிகின்றன.
அவ்வருவி நீர் பாய்ந்தோடி வருகிறது; ஆத்துகாட்டாறாக மாறிப்
பல்வேறு பொருட்களை அளித்துத் தழைத்து மிக வேகமாக ஓடுகிறது;
அவ்வாற்றைத் தலைவியைச் சந்திக்கவிரும்பிய நீ அஞ்சாமல் கடந்து
வருகிறாய்; கருத்த மழைமேகங்கள் மலைமுழுதும் அச்சுறுத்தும் இடிகளை
இடிக்கிறன ; அவ்விடியின் தாக்கத்தை உன் கையில் உள்ள தடுக்கும்;
மலையின் நடுவே உருவமற்ற தேவதைகள் உலவுகின்றன; இவைகளால்
நாங்கள் அஞ்சுகிறோம்; ஆதலின் தலைவனே! இவ்விரவுக்குறிக்காகத்
தலைவியைச்சந்திக்க நீ வராதே! என்று அச்சத்தைக் காரணம் காட்டித்
தோழி தடுத்து, அதன்வழியே வரைவை வலியுறுத்தினாள் .
விளக்கம்;- 1 . தழைக்கும் = பெருவெள்ளம் தழைத்தோடும். நிறைந்தோடும்.
2 . விரும்பி = நீரோட்டம்கண்டு அஞ்சாமல் விரும்பிக் கடத்தல்; தலைவியை
விரும்பிச்செல்ல .
3 . உருவிலா = உருவமற்ற கண்ணுக்குப் புலப்படாத தெய்வங்கள்.
மெய்ப்பாடு ------ அச்சம்.
பயன் ---------- வரைவு கடாதல் .
14. தன்னுள் கையாறு எய்திடு கிளவி .
கொளு .
மின்னிடைத் தலைவி தன்னுள் துயரை
உன்னி யுணரா உயிரினம் கூறல் .
பொருள்;-- மின்னல்போன்ற இடையை உடைய தலைவி, தனது மனத்துயரை
கேட்டு உணரும் ஆற்றல் இல்லா உயிரினங்களிடம் கூறியது.
பாடல்--175.
அடியவர் காக்கும் அறுமுகத் தணிகை சார்கழியில்
நெடிமணத் தாழைப் புதரே! துடியிடை தொட்டணைந்தோன்
வடிவினை வல க்கண் நோக்கிற்றோ?வாடிடும் வடிவில்லாள்
கடிதுயர் களைய ஒருசொல் துடிப்புடன் கூறாயோ?
பொருள்.
அடியவர்களின் துன்பத்தைப்போக்கிக் காக்கின்ற ஆறுமுகக்கடவுள்
வீற்றிருக்கும் திருத்தணிகை நகரின் கடல் சார்ந்த உப்பங்கழியில்
நன்மணம் கொண்ட இதழ்களைத் தோற்றுவிக்கும் தாழைப்புதரே !
உனக்குமுன், உன்னைதுணையாகக் கொண்டு, எனது மென்னிடையைத்
தொட்டு, அணைந்து கொஞ்சி மகிழ்ந்தவன் இங்கு வந்தானா? அவனை நீ
நன்மை செய்யும் உனது வலக்கண்ணால் பார்த்தாயா?அவனைப்பிரிந்து
வாடி,வதங்கும் எனக்கு ஒரு ஆறுதல் சொல் அன்புடன் கூறமாட்டாயா?
என்று தலைவி கேட்கும் தன்மையற்ற தாழைப்புதரிடம் தனது துயரைக்
கூறினாள் .
விளக்கம் ;-- 1 . கழி = உப்பங்கழி.
2 . நெடிமணம் = நல்லமணம் .நீண்டநேரம் இருக்கும் மணம் .
3 . வலக்கண் = நல்லதையே செய்யும் கண் ;நல்லதையே பார்க்கும் கண் .
மெய்ப்பாடு -----அழுகை
பயன்---------------- அயர்வுயிர்த்தல் .
14 . 31. நிலை கண்டுரைத்தல்.
கொளு .
உன்னால் வருந்தும் மின்னிடைத் தலைவியை
மன்னா! மணந்துகொள் எனத்தோழி உரைத்தது.
பொருள்;--- உன்னைக்கண்டு.உன்னோடு பழகியதால் உன்னைப் பிரிந்து
தலைவி வருந்துகிறாள்; ஆதலின் அவளை நீ மணந்துகொள் ! என்று
தோழி வரைவு வரைவு படுத்தியது.
பாடல் ---176.
குறிஞ்சியின் முருகன் என்றுனை நினைந்து குன்றுமக்கள்
நெறிப்படு குறியை அறியார் போற்றிட மன்றலிலே
வறியார் வருத்தம் வரத்தால் களைந்திடும் தணிகையான்
வெறிமலர்க் காவின் தனிமலர் என்னாகும் ? வாழமைப்பே .
பொருள்.
இந்த மலைப்பகுதியில் தலைவியைப் பார்ப்பதற்காகத் தலைவனே!
நீ வந்து நின்றாயெனில் குறிஞ்சிநிலக்கடவுள் முருகன் தான் வந்து
நிற்கிறான்" என்று நினைந்த மலைவாழ் மக்கள் இரவுக்குறிக்காக
வந்துள்ளாய் நீ" என்பதை அறியாது போற்றுவார்கள்;
துன்பப்படுவோர் துயரம் போக்கும் அன்பர்களுக்காக வரங்களைக்
கொடுத்து துயர் நீக்கும் தணிகை மலைக்கடவுளின் நறுமணக் காவில்
தனியே நின்று வாடும் தலைவியின் நிலை என்னவாகும்? அவளது வாழ்வும்
வளமும் கூடுவது எப்படி? ஆதலின் இரவுக்குறி வாராது விரைவில்
தலைவியை வரைந்துகொள்" என்றாள் தோழி.
விளக்கம்;-- 1. நெறிப்படு குறியை = இரவுக்குறி காண வந்திருக்கிறாய்"
என்றறியாமல்
2 . வறியார் = வறுமை,துன்பம்,இல்லாமை உள்ள மக்கள்
3 . வாழமைப்பே = வாழ்த்துவங்கும் முதல் அமைப்பு.
மெய்ப்பாடு------ அச்சம்.
பயன் ---------------- வரைவு கடாதல் .
14. 32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல் .
கொளு .
கருவிழிக் காரிகை இரவில் படுதுன்பம்
பெருங்கட லோடு சேர்த்துக் கூறியது.
பொருள்;--- கருமையாகிய விழிகளைக் கொண்ட தலைவி, தலைவனைப்
பிரிந்து இரவில் தான்படும் துயரைக் கடலோடு இணைத்துக் கூறியது.
பாடல்---177.
தணிகைச் செந்தில் அணிமணி அலைகூடி ஆர்ப்பரிக்கும்
குணதிசைக் கடலே! கரைமேல் கூடிக் குதித்தெழு1ந்து,
மண்ணில் புரண்டு விரவெலாம் ஓலமிட் டுறங்கவில்லை
மணந்தவன் உன்னையும் பிரிந்து, போனது சொல்லுகவே .
பொருள்.
தணிகையில் வீற்றிருக்கும் முருகனது திருச்செந்தூர்க் கடற்கரையிலே
மணிகளையும், அணி களான சங்குகளையும் அலைகளில் இழுத்துவந்து
கரைமோதி ஆர்ப்பரிக்கும் கிழக்குக்கடலே! நீண்ட கரைமேல் தொடர்ந்து
சென்று, கூறினாய்/1 குதித்தாய்! எழுந்தாய்! மண்ணெல்லாம் புரண்டாய்!
இரவுபகலாக இவ்வாறு நிறுத்தாமல் செய்து பெரு ஓலமிடுகிறாய்! இரவிலும்
உறங்காத நிலையைப் பெற்ற கடலே! உன்னை மணந்தவன்,
உன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டானோ? என்னைப்பிரிந்து சென்ற
தலைவன் போல உன்னையும் வஞ்சித்துச் சென்றுவிட்டானோ? சொல்லுக
நீ. என்று தலைவி தனது துயரைக் கடலோடு சேர்த்துக்கூறுகிறாள்.
விளக்கம்;-- தலைவனைப் பிரிந்து வாட்டும் தலைவி தன்னிலையைக்
கடலோடு இணைத்து வருந்துகிறாள்.
மெய்ப்பாடு -----அழுகை.
பயன் ------------- அயர்வுயிர்த்தல் .
14. 33அலர் அறிவுறுத்தல் .
கொளு .
வீரமிகு தலைவ ! மனமகிழ் காதல்
உரவோர் பலரும் அறிந்தனர்; உணர்க.
பொருள்;-- தலைவனே! உனது மனமகிழ் காதலானது உலகோரால்
நன்கு அறியப்பட்டு விட்டது", எனத் தோழி கூறினாள் .
பாடல்--178.
தந்தை வணங்கிடக் குடிலைப் பொருளை உபதேசம்
சிந்தை அறியவும் செய்த தணிகைத் திருவருள்போல்
உந்தன் உயரிய காதல் உலகெலாம் அம்பலாகி
சந்தன மணமாய் அலரும் ஆனதை உணர்வாயே .
பொருள்.
பிரணவத்தின் பொருள் வேண்டித் தந்தையான சிவனார் தனது மகன்
தணிக்கைமுருகனிடம் வணங்கிக் கேட்ப, அப்பொருளை உபதேசம் செய்தார்
முருகன்; அவ்வருள் உலகெல்லாம் பரவி உலகோர் அறிந்ததைப்போல ,
தலைவனே! உன்னுடைய உளமார்ந்த காதலும், உலகம் முழுவதும்
பேசப்படும் பெரும்பொருள் ஆயிற்று; சந்தன நறுமணம் போல எங்கும்
பரவிற்று" இதை நீ அறிந்து ஆவன புரிக; எனத்தொழி தலைவனிடம் வரைவு
வேண்டிக்கூறினாள் .
விளக்கம் ;--
1 . குடிலை = பிரணவம் .
2 . உயரிய = மிக உயர்ந்த தன்மை கொண்ட அருட்காதல் .
3 . சந்தன மணமாய் = சந்தனத்தின் மணமானது தூய்மையான நறுமணத்தை எங்கும் பரப்ப க் கூடியது .
இரவுக்குறி முற்றிற்று.
15. ஒருவழித்தணத்தல்.
இரவுக்குறி கண்ட தலைவன் தோழி அறிவித்த அலரால் தலைவியை
மணந்துகொள்ளவேண்டும்; அவ்வாறு மணத்திற்கான செயலைத்
துவங்காவிட்டால், அலர் தூற்றல் அடங்கும் வரை வாராது ஓரிடத்தே
பிரிந்திருப்பான். அவ்வாறு பிரிந்து இருத்தலே ஒருவழித்தணத்தல்
எனப்படும்.
ஒருவழித்தணத்தலில் உறைதல் .
உடன்கொண்டுபோதல் ,
தோழியால் முடுக்கப்பட்டு அருங்கலம் விடுத்து,வரைந்து கோடல் ,
மூன்றும் முறையாகும்; இவற்றுள் ஒன்று இது.
இது பதின்மூன்று துறைகளை உடையது.
15. 1. அகன்று அணைவு கூறல்.
கொளு .
அலர்ப்பழி மறையத் தோழியின் வேறுவழி.
பொருள்;-- இரவுக்குறியால் தோன்றிய அலரம்பலத்தை மாற்ற
வேறுவழியைத் தோழி தலைவனுக்கு உரைத்தாள் .
பாடல்---179.
சூரன் தமக்குப் பழிபல வந்தது சூர்ச்செயலால்.
வீரன் தணிகை புகழினைப் பெற்றது போர்ச்செயலால் .
ஊரலர் மறையும் காலம் வரையில் மறைந்திடுக.
கார்குழல் கண்கள் கவலை கலையும்; அறிவழியே.
பொருள்.
தலைவனே! நமக்கு வரும் பழியும் புகழும், நம்மாலே தான்
என்பதை உணர்க. சூரபன்மனின் வீழ்ச்சிக்கும், பாவத்திற்கும் அவன்
செய்த ஆணவச்செயல்களே காரணம்; தணிகை வாழ் முருகனின்
புகழுக்கு அவன் செய்த நேரிய போரே காரணம். அதுபோல் தலைவியின்
பழிக்குக் காரணம் நீயே; அதனை நீ உணர்ந்து, ஆற்றவேண்டிய செயல்
சிறிது காலம் அலரம்பல் மறையும் வரை இவ்வூர் பக்கம் வாராதே .
அப்படி வராமல் இருந்தால் தலைவியின் கண்கள் நீரைச்சொரியாது;
கவலைகளும் மாறும் ;இதுவே தக்க வழியாகும்" என்று தோழி
தலைவனிடம் கூறினாள் .
விளக்கம் ;-- 1 .சூர்ச்செயல் = சூரனின் ஆணவம் மிக்க செயற்பாடுகள்.
2 . போர்ச்செயல் = அன்பும், ஆக்கமும் கலந்த பொற்களச் செயல்கள்.
3 . ஊரலர் == ஊராரின் மழைப்பேச்சு.
மெய்ப்பாடு -------அழுகை .
பயன் --------- அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல் .
15.2.கடலோடு வரவு கேட்டல்.
கொளு .
புணர்ந்தபின் ஒருவழித் தணத்தலில் மறைந்திட,
மணலலை மோதும் கடலிடம் கரைந்தது.
பொருள்;-- தன்னோடு இயற்கைப்புணர்வில் கலந்துற்ற தலைவன், அலரால்
ஒருவழித்தணத்தல் மேற்கொள்ள,வாடிய தலைவி, கடலிடம் கூறியது.
பாடல்--180.
உள்ளத் தணிகை ஒருநாள் பிரிந்திடப் பொறுக்காது,
வள்ளியூர்க் கடலிடம் வாட்டம் கூறிய வள்ளிபோன்று,
தள்ளலை முத்தும் பவளமும் பிறவும் கொள்கடலே !
வள்ளலும் பிரிந்தார் வருநாள் திருநாள் சொல்கடலே !
பொருள்.
தன்னோடு இணைந்து, பழகிக்காடெல்லாம் சுற்றிவந்துத் தனது
உள்ளத்தைகொள்ளைகொண்ட திருத்தணிகை முருக வேடன் ஒருநாள்
பிரிந்து சென்றிட, வருந்திப் பொறுக்க முடியாமல் அவனையே நினைந்து,
அவனைத்தேடி அலைந்து , அவன் வீற்றிருக்கும் பதியாகிய வள்ளியூர்க்
கடற்கரை சென்று, அக்கடலிடம் தன து துயரைப்பங்கு போட்டுக்கொண்டு
அலைந்து திரிந்த வள்ளியம்மை போன்று,
தலைவியும் ஒருவழித்தணத்தல் காரணமாகப் பிரிந்து சென்றுவிட்ட
தலைவனைத் தேடியலைந்து, கடற்கரை சென்று கடலைப்பார்த்து
அலைகளின் வழியே முத்தும்,பவளமும் பிறபொருட்களும் தணிகை
நாட்டிற்குக் கொண்டுவரும் கடலே! என்தலைவர் எண்ணைவிட்டுப்
பிரிந்துவிட்டார்; அவரோடு என் நலமும் பிரிந்துவிட்டது;அவ்வாறு சென்றவர்
என்று வருவேன்" என்று உன்னிடம் சொன்னாரா? அந்த நன்னாளை
என்னிடம் கூறுவாயாக" என்று கடலிடம் தனது துயரைப் பரிமாறிக்
கொண்டாள்.
விளக்கம்;-- 1 . உள்ளத்தணிகை = உள்ளமெல்லாம் நிறைந்த தணிகை வேடன்.
2. வள்ளியூர் = முருகன் வீற்றிருக்கும் பதிகளில் ஒன்று; திருநெல்வேலி அருகில் உள்ளது .
3. வள்ளல் = தன்னை விட்டுப் பிரிந்த தலைவன். தலைவன் .
மெய்ப்பாடு -----அழுகை.
பயன் ----- அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல் .
15. 3. கடலோடு புலத்தல் .
கொளு .
நிறைவளை நல்லாள் அறைகடற்குச் சொல்லியது.
பொருள் ;--- நிறைப்பொன் வளையல்கள் அணிந்த தலைவி, ஒலிக்கும்
அலைக்கடலுக்குச் சொன்னது.
பாடல்--181.
செந்தூர்த் தணிகை விந்தைப் பெருமை வளர்கடலே!
எந்தன் கைவளை இழந்து மெலிந்திடச் செய்தசேர்ப்பர்
பந்தமாய்ப் பாணர் பாடிடப் பரிசு மழைபொழிவர்
விந்தைச் செயலை விரித்தொரு வார்த்தை விளக்கிலையே !
பொருள்.
திருத்தணிகை முருகனின் சிறப்புமிகு பதியாகிய திருச்செந்தூரின்
பற்பல பெருமைகளில் ஒன்றாக விளங்கும் தொன்மைக்கடலே!
தன்னைவியந்து போற்றிப்புகழ்ந்து பாடும் பாணர்களுக்குப் பரிசுகளை
மழைபோல் வழங்கக்கூடியவரும், என்னோடு பழகி,இன்பம் அனுபவித்துப்
பின் என்னை விட்டுப் பிரிந்து சென்றதால் எனது காய் மெலிந்திடக்
கைவளையல்கள் எல்லாம் கழந்துவிழும்படிச்செய்த இக்கடற்கரை
நாட்டுத்தலைவர் செய்த செயல் பற்றி, என்னைத் துயரில் ஆழ்த்தியமை
பற்றியும் ஒருசொல் சொல்ல மறந்தாயோ? விளக்க ஒருசொல் உனக்குக்
கிடைக்கவில்லையோ! என்று தலைவன் ஒருவழித்தணத்தல் பிரிவில்
வாடிய தலைவி கூறினாள் .
விளக்கம்;--- 1 .மெலிந்திட = தலைவன் பிரிந்ததால் கைகள் மெலிந்தன;
2 . பரிசுமழை = உருவகம்.
3. வார்த்தை = சொல் ; தத்பவ வடசொல் .
15. 4. அன்னமோடு ஆய்தல் .
கொளு .
அன்னம் அன்னத்துடன் ஆய்வுரை ஆய்ந்தது .
பொருள்;- அன்னம்போன்ற தலைவி, கடற்கரை அன்னப்பறவையுடன்
ஆய்வு மேற்கொண்டாள் .
பாடல்--182.
அன்னமே! தணிகை மென்புணர் மன்னவன் கண்ணினுள்ளே,
மின்னிட முன்னவன் முகத்தைத் தேடியே இங்குவந்தேன்;
பொன்னிதழ்க் கேதகை புகலா ; புன்னையும் பூக்கவில்லை ;
அன்பே ; அகன்றார் அகல்வரோ ? வருவரோ ? சொல்வாயே !
பொருள் .
திருத்தணிகைக் கடற்கரை வாழ் அன்னமே! என்னோடு புணர்ந்து
இன்பம் அனுபவித்த தலைவன், என்னுடைய கண்ணிலும்,மனதிலும்
மின்னிக்கொண்டு இருக்க, அவனைப் பார்க்கவேண்டும்' முகம்
காணவேண்டும் என்று கடற்கரை வந்தேன்; தேடி அலைந்தேன்;
காணவில்லை; அழகாய்ப் பொன்மலரிதழ் கொண்ட தாழையைக்
கேட்டேன்; அது விடையேதும் வழங்கவில்லை; பூத்துக்குலுங்கும்
புன்னைமரத்தைக் கேட்டேன், அதுவும் மகிழ்ச்சி விடை ஏதும்
வழங்கவில்லை; அன்பின் சான்றான அன்னப்பறவையே! நம்மை
விட்டுப் பிரிந்து சென்றவர் சென்றவர் தானா? வருவாரா? என்மீது
கருணைகொண்டு சொல்வாயா? என்று தலைவனைப்பிரிந்துநின்ற
தலைவி அன்னத்திடம் கேட்டாள் .
விளக்கம் ;-- 1 .மென்புணர் = இனிமையாக உறவுகொண்ட
2 . கேதகை = தாழை.
3. அகன்றார் = நம்மைவிட்டுப்பிரிந்த தலைவர்.
15.5. நேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்.
கொளு .
கடற்றுறைத் தலைவர் திரும்பி வரும்வரைத்
தடத்தேர் சுவட்டை அழியேல் " என்றாள் .
பொருள்;--- கடற்றுறைத் தலைவன் திரும்பி வரும்வரை, அவன் சென்ற
தேர்த்தடத்தை உன் அலைக்கரங்களால் அழித்துவிடாதே; என்று தலைவி
கடலிடம் வேண்டுகோள் விடுத்தாள் .1
பாடல்-- 183.
அருண கிரியார், குருபரர் அருமைப் பேரடியார்
கருணைப் பொழிவில் கசடனை இணைத்த தணிகையான்
பொருளும், பொன்னும் குவிந்திடப் பேரொலிக் கருங்கடலே
திருநகர் கடந்தான் உறுதேர்த் தடத்தை அழிக்காதே .
பொருள்.
பொன்னும்,பொருளும், படகில் வந்து இறங்கியும், எறியும் ,குவிந்த
கடற்கரையில், எழும்பிய பேரொலியும், அலைகளின் பேரொலியும்
சேர்ந்தொலிக்கும் கருங்கடலே! அருணகிரியாருக்கும். குமரகுருபரர்க்கும்
பற்பலப் பேரடியார்களுக்கும் பொழியும் கருணைப்பொழிவில் கசடனான
என்னையும் அருள்பாலித்து இணைத்துக்கொண்ட மாமுருகனது தணிகை
நகரை விட்டுச் செல்பவனின் தேர் செல்லும் வழித்தடத்தை ஒருபோதும்
அழித்துவிடாதே! அதுவே எனது உயிர்த்துடிப்பு ஆகும்" என க்கடலிடம்
தலைவி வேண்டினாள் .
விளக்கம்;-- 1 . பேரடியார் = பேறுற்ற ,பெருமைமிக்க அடியவர்கள் .
2. கசடன் = தாழ்ந்த பயன்படாத குணம் உடையவன்;
3 . பேரொளி = சுமை தூக்குவோர், கடலலை எழுப்பும் ஒலிகள்.
4 . உறு தேர் - உரிச்சொற்றொடர் .
15.6.நீடலந்துறையில் கூடல் இழைத்தது.
கொளு .
வட்டம் கூடும் வடிவு பார்க்கும்,
கூடல் காணக் கூடியது துறையில்.
பொருள்;-- அந்த அழகிய துறையில் கண்ணை மூடிக்கொண்டு வட்டம்
போட்டு இருமுனையும் அதுவாக இணைகிறதா? எனப்பார்த்து, நன்மை
தீமைகளை முடிவு செய்தல்.
பாடல்---184.
ஆழி ஆள்வழித் தணிகை உலகெலாம் தன்வழியின்
தாழ்விலாத் தண்ணருள் தம்சுகம் தந்திட மணற்குன்றில்
ஆழியை இழைத்து, வாழிய தலைவன் வருகைக்காய்
ஊழியின் கணக்கால் கூட்டிடு நினைந்து கூட்டினாளே.
பொருள்.
ஆணைச்சக்கரத்தால் நீதியும்,நேர்மையும்கொண்டு மூவேழ்
உலகையும் தன்வழியில் தாழ்வே இல்லாமல் நிலைத்துவைக்க
நினைத்தாளும் தணிகையான் ஆட்சிக் கருணையருள்போல் ,தனது சுகம்
வளரவேண்டும்" என நினைந்த தலைவி, மணல் குன்றினிலே
அழகிய ஆழிவட்டத்தை உருவாக்கும் கோட்டினைத் துவக்கி,.
மனதிற்குள் எம் தலைவன் வாழ்க; அவன் இங்கு இப்பொழுது வர
வேண்டும்" எனநினைந்து, தெய்வங்களே! உங்களின் கணக்குப்படி
எங்களைச் சேர்த்திடுங்கள்! உங்கள் அருளால் இச்சுழியும் கூடவேண்டும்
எனவும் நினைந்து தொடங்கிய கோட்டைக் கூட்டினாள் .
விளக்கம்;--1 . ஆழி = வட்டம்; சக்கரம்;
2 . தம்சுகம் = தலைவனோடு இணைந்திருக்கும் தனது இன்பம்.
3 . ஊழி = விதி; தெய்வங்கள்; முடிவடையும் காலம் .
15. 7. சுடரொடு புலம்பல் .
கொளு .
காலை உதித்தோன் மாலை மறைய,
கோலக் குழலி நாளும் புலம்பியது .
பொருள்;--- காலையிலே தோன்றிய ஆதவன் இதோ மாலையிலே மறையப்
போகிறான்; அழகிய கூந்தலை உடைய தலைவி புலம்பிக் கூறியது.
பாடல்--185.
போர்மிகு சூழல் போரினைத் தொடுத்தான் பொதுப்பிரிவும்,
சூர்மயில் ஊர்தியாம் , சேவலோ கொடியாம் , தணிகையான்
சீரெழில் சொல்லிய வஞ்சினம் ஆர்த்தரும் ஆகிவிட்டேன்;
பேரொளி மறைவான் சூரிய! வாழ்நெறி பேசுகவே.
பொருள்.
நால்வகைப் படைகள் சூழ்ந்த போர்க்களம்; அங்கே வெற்றிநோக்கிப்
போரினைத் தொடுத்தான் தலைவன்; போரிற்பிரிதல் என்னும் பொதுத்
தன்மைப்படி, எண்ணைவிட்டுப்பிரிந்து சென்றான்; அப்பிரிவும்,
போரெடுத்த சூரனை வென்று அவனை ஆட்கொள்வதற்காக மயில்
ஊர்தியாகவும், சேவல்கொடியாகவும்,ஏற்றுக்கொண்ட திருத்தணிகை
முருகனது சீர்மைமிக்க எழிலுடைய பூஞ்சோலையில் "உன்னைவிட்டுப்
பிரியமாட்டேன்" என்று கூறிய வஞ்சின உரையையும் கேட்டதால்
நோயுற்றவளாக நான் ஆகிவிட்டேன்; பேரொளிகொண்டு புறப்பட்டு,
இதோ மாலையில் வானில் மறையப்போகும் சூரியனே! எனக்கு வழி
காட்டு; என் வாழ்வுமுறையைப் பற்றிப்பேசி நன்மை புரிய மாட்டாயா?
என்று தலைவி தனது துயரை மாதவனிடம் புலம்பினாள்.
விளக்கம் ;-- 1 . பொதுப்பிரிவு = போருக்குப்பிரிதல் என்னும் பொதுத்தன்மை.
2 . வஞ்சினம் = உன்னை ஒருபோதும் பிரிய மாட்டேன்" என்ற வஞ்சினமொழி .
3 . ஆர்த்தர் = நோயுற்றவர் .
15.8. பொழுதுகண்டு மயங்கல் .
கொளு .
மயக்க மாலை மலரக் கண்டு,
கயல்விழித் தலைவி கலக்கம் உற்றது.
பொருள்;--- மனதில் மயக்கம் தரக்கூடிய மாலைப்பொழுது
மெதுவாக வந்தது; மீனன்ன கண்கொண்ட தலைவி மிகுந்த துயரடைந்தாள் .
பாடல்;--- 186.
ஆதவன் மறைந்தான் ; காதலன் தொலைவில்; போற்றுகின்ற
நாதனாய் வேதமாய்ப் , பண்களாய் விளங்கும் தணிகையான்
சீதமாம் களபச் செம்மை மரைப்பொழில் நோக்கினவே
தீதிலா மூதுரைக் கிழவிபோல் வெண்மை அன்னங்களே .
பொருள்.
உலகை ஒளிமயமாக்கும் ஆதவன் மறைந்துவிட்டான்; மாலை நேரம்
மகிழ்வைத்தரும் தலைவனோ வெகு தொலைவில் உள்ளார்; குற்றமற்ற
நல்வாழ்விற்கு வழிவகுத்த தமிழ் மூதுரை பாடிய அவ்வைக்கிழவியின்
தலைமுடிபோல் வெளுத்த வெண்மைநிற அன்னப்பறவைகள் ,
உலகெல்லாம் போற்றுகின்ற நாதனும், மறைகளாகவும், தேவாரத்
திருப்புகழ்ப் பண்களாகவும் விளங்குகின்ற திருமுருகனது
திருத்தணிகையின் குளிர்ந்த சந்தனம்போல் மணக்கும் நறுமணம் மிக்கச்
செந்தாமரைப் பொழிலை நோக்கி, வரத்தொடங்கிவிட்டன;இந்த நேரத்தில்
தலைவனைப் பிரிந்து தனியே உள்ள என்னால் இம்மாலைக் கொடுமையை
எப்படிப் போக்க இயலும்? என மயங்கித் துயருற்றாள் தலைவி.
விளக்கம் ;-- 1. பண்களாய் = தமிழ்த்தேவாரத் திருப்புகழ்ப் பாடற்பண்கள்
2 . களபம் = நறுமணப்பொருள் சந்தனம் .
3 . மரைப்பொழில் = முதற்குறை ;
15. 9. பறவையொடு வருந்தல் .
கொளு .
பிரிவுத் துயரால் உருவிழு மெலியிடை
அரிவை பறவை மீதுறு வருத்தம்.
பொருள்;-- தலைவன் பிரிந்ததால் உடல் மெலிந்து, இடைச்சிறுத்த தலைவி
பறவைகள் மீது தன் வருத்தத்தை வகுத்தது.
பாடல்--187.
பொன்னைப் பொருளைப் போகமாம் திருவினைத் தந்தருள்வோன்
மன்னவன் தணிகை சார்கடல் உப்பங் கழியடைந்து
தின்னும் இரைதனைத் தேடியே அலையும் வண்டானமே!
பெண்மனத் துன்பம் அறியாய்? இதுவும் என்வினையே !
பொருள்.
அடியவர்க்குப் பொன்னைத் தருவான்; பொருளைத்தருவான்; போக
போக்யங்களை அருள்வான்; வற்றாத செல்வத்தை வழங்குவான்;
திருத்தணிகையில் வீற்றிருக்கும் மாமுருகன். அவனது திருநகரில்
கடல்சார் பகுதி உள்ளது; அதைச்சேர்ந்த உப்பங்கழியில் உணவு
தேடி அலைந்து,பறந்து இரை தேடும் வண்டானம் என்ற பறவையே!
உனக்கு இரைதேடுவது இன்றியமையாதது ஆகிவிட்டதோ ? இங்கே
ஒருபெண் தலைவனைப்பிரிந்து வாடிவதங்குகிறாள்" அது உன் கண்ணில்
படவில்லையா? இதுவும் நான் செய்த வினையே ஆகும்" என்று
பறவையோடு தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறாள் தலைவி.
விளக்கம் ;-- 1 போகம் = இன்பமேம்பாட்டு வகைகள் .
2 . உப்பங்கழி = கடலைச்சார்ந்து அமைந்துள்ள உப்புநீர்த்தேக்கம் .
3 . வண்டானம் = ஒருவகை நீர்ப்பறவை.
15 . 10. பங்கயத்தோடு பரிவற்று உரைத்தல் .
கொளு .
கானல் மரையே ! காதலன் நினைந்தோ!
நாணத் தலைவி நலிந்தே உரைத்தது .
பொருள்;-- கடற்கானலில் கூம்பிய தாமரை கண்டு என் காதலனை
நோக்கி வேண்டுதலோ? என்று வினவி, அவனைப்பிரிந்த துயரை அதோடு
பங்கிட்டுக் கொண்டாள் தலைவி.
பாடல்--188.
முப்புரம் அழித்த தந்தை; மும்மலம் களைந்தமகன்
திப்பியத் தணிகை திரண்ட கடல்சேர் கானலிலே
ஒப்புயர் வில்லான் ஞாயிறின் ஓய்வெடு ஒருமாலை
அப்புமேல் தாமரை கூப்பிச் சொரிநீர் விடையெனக்கே .
பொருள்.
முப்புரத்தை அழித்து உலகம் காத்தவன் தந்தையாகிய சிவபெருமான்.
தனயனோ சூரன்.சிங்கமுகன்,தாரகன் என்ற மும்மலங்களின்
அரக்கர்களை களையெடுத்து உலகைக் காத்தான்; அந்த மகனது
தூய்மையான திருத்தணிகை நகரின் கடற்பகுதியைச் சார்ந்த
கானலிலே ,
நிகரற்றவனாகிய சூரியன், மறையும் மாலைப்பொழுதில் ,
உப்பங்கழியின் நீர் மேல் நீண்ட தனது கரமாகிய கூம்பிய
மொட்டைக் கரம்போலக் கூப்பி, பூவின் உள் நிறைந்திருந்த தண்ணீர்
மூடியதால் வழிந்தோட க் கண்ணீர் விடுவதென்ன விடை கொடுத்தது
சூரியனுக்கு.
இதைக்கண்ட தலைவி தாமரை மலர் எனக்காகச் சூரியனை வேண்டிக்
கொள்கிறது; தலைவன் விரைவில் வந்துசேர வேண்டும்" என. தனது மனத்
துயரைப் பூவோடு இணைத்து ஒரு பரிவைப் பெற்றுக்கொள்கிறாள் தலைவி.
விடையெனக்கே" என்றவிடத்து , மலர் விடை கொடுத்தது சூரியனுக்கு.
ஆனால் அம்மலர் எனக்காக வேண்டிக்கொண்டது . இது பூவின் பரிவு.
விளக்கம் ;-- 1 . திப்பியம் = தூய்மை
2 . கானல் = உப்பங்கழி நீர் .
3 . ஓய்வெடு = ஓய்வெடுக்கும் சூரியன் . மாலைப்பொழுது .
15 . 11. அன்னமோடு அழிதல் .
கொளு .
இன்னல் பட்ட இரவு மனநிலை
அன்னம் கண்டு வருந்தி உரைத்தது.
பொருள்;--இரவுப்பொழுதில் தலைவன் பிரிவால் தான் படும் அவத்தையை
அன்னத்திடம் கூறியது.
பாடல்--189.
மூவரின் முதல்வன் மூவேழ் உலகமும் காத்தருளும்
சேவலம் கொடியோன் தணிகைக் கடவுள் சீர்வரத்தால்
நாவலம் தீவே உறங்கிடும் ; நானோ உறங்கவிலை ;
காவலன் செவியுரை செய்யா துறங்கும் வெள்ளன்னமே!
பொருள்.
மூவர்க்கும் முதல்வன்; இருபத்தொரு உலகங்களையும் காத்து
அருள்பவன்; சேவல் கொடியைக் கொண்டவான்; திருத்தணிகையில்
வீற்று உலகை ஆளும் பெருங்கடவுள். அவனது நல்வாழ்த்தால் ,
வரங்களால், நாவலம் தீவு என்று போற்றப்படும் இத்தீவில் வாழ்பவர்கள்
மனமகிழ்வோடு, உண்டு,களித்து உறங்குகிறார்கள்; நானோ தலைவன்
பிரிந்து சென்றுவிட்டதால் உறக்கமின்றி வாடுகிறேன்; இச்செய்தியை
அவனிடம் சென்று உரைக்கவேண்டிய செயலைச் செய்யாது இந்த
வெள்ளையன்னம் மட்டும் நன்கு உறங்குகிறது. என் துன்பத்தை
உரைப்பவர் யார்? என அன்னத்திடம் வருந்திக் கூறினாள் தலைவி.
விளக்கம் ;-- 1. மூவர் = அரி,அயன், அரன் . ஆகிய மூவர்.
2 . சீர்வரம் = நல்வாழ்வின் போக போக்யங்கள்.
3 . நாவலம் தீவு = இந்தியா மு'ழுமைக்கான பழம்பெயர்.நாவல் மரத்தீவு .
ஜம்பூத்வீபம்" என்பர் வடமொழியாளர்.
15. 12. வரவு உணர்ந்து உரைத்தல் .
கொளு .
சென்றவன் வந்ததை அறிந்தவள் சிறைப்புறமாய்
நின்றவள் நிலைமை பாங்கி விளக்கியது.
பொருள்;--- தலைவன் வந்துவிட்டான்" என்பதை அறிந்த தோழி
அவனுக்குத் தலைவி பட்ட துயரைச் சிறைப்புறமாகக் கூறியது.
பாடல்---190.
கைவளை கழல க் கருங்கண் விடுநீர்க் கடலாக
நைந்திடும் நல்லுளம்" நிலவே! உனையே வேண்டுகிறேன்,
பைந்தளிர்ப் பைங்கரத் தணிகை அருள்பெறார் போலுற்றான்
மைஞ் ஞப் பிரிதலால் விளைத்த துயரை நீசொல்வாயே !
பொருள்.
நிலவே! உன்னை நான் ஒன்று வேண்டுகிறேன். பசுமையான தளிர் போல்
குளிர்க்கரம் கொண்ட தணிகை முருகனின் அருளைப்பெறாதோர் போல
கருணை இல்லாமல் தலைவியைப் பிரிந்துசென்ற தலைவனின் செயலால்
தலைவி மெலிந்தால்; வளையல்கள் கழன்று விழுந்தன; அவளது
இருகண்களும் அழுதுஅழுது கண்ணீரைக் கடல்போல் கொட்டின; உள்ளமோ
நைந்து ,உருகித் தவித்தது. இப்படி அத்தலைவியைப் பிரிந்ததால் தோன்றிய
துன்பங்களை நிலவே! நீ தலைவனிடம் சொலவாய்! எனத்தோழி கூறினாள் .
விளக்கம் ;-- 1 . நைந்திடும் = உருகிஉருகிக் குலைந்திடும்.
2 . பைங்கரம் = குளிர்ச்சி மிக கருணைக்கரம் .
3 . மைஞ்சை = மஞ்சை என்பதன் மரூ உ .
15 . 13 . வருத்தமிகுதி கூறல்.
கொளு .
பிரிந்துவந்த தலைவனுக்குப் பாங்கி பகர்ந்தது .
பொருள்;-- ஒருவழித்தணத்தலில் பிரிந்து,இப்பொழுது வந்த
தலைவனிடத்தில் பாங்கி கூறியது.
பாடல்-- 191.
கொடிக்காய்ப் பசுமை கடித்தால் சுவையாம் கசப்புணரா க்
கடியிளம் குரங்கு அழுகிறத் தணிகை வழிநாட!
துடியிடை மடமகள் பசலை பூக்கப் படுக்கையில்
விழயெழ விம்மி மெலிவளே! விரிவின் வழியிலையே !
பொருள்.
கொடியிலே காய்த்துத் தொங்கும் பாகற்காயைப் பறித்துக் கடித்த
விளையாடும் சிறுகுரங்கு அதன் சுவை கசப்பு, என உணராமல் அதைக்
கடித்துத் தின்றிடக் கசப்பின் தாக்கம் தாம்கமுடியாமல் கத்தியபடி
இங்கும் அங்கும் தாவுகின்ற தணிகை வள நாதன் முருகனின் வழி
போற்றிநடக்கும் மலைநாடனே ! உனது பிரிவால் பசலை நோயுற்ற
தலைவி படுக்கையிலே விழுவாள்; எழுவாள்: விம்மியழுவாள்;
அப்படியே மெலிந்து மீண்டும் விழுவாள். அவளின் துயர நடவடிக்கைகளை
என்னால் கூறமுடியவில்லை; என்று தோழி தலைவனிடம் கூறினாள் .
விளக்கம் ;---1 . பசுமை = பசுமைமிக்க பாகற்காய்.
2 . கடியிளம் = உலகறிவு வளராத குட்டிக்குரங்கு
3 . விரியின் = தலைவியின் மனவளர்ச்சியை விரித்துரைக்க இயலா நிலை .
மெய்ப்பாடு -------- அச்சம்.
பயன் ----------------- வரைவு கடாதல் .
ஒருவழித்தணத்தல் முற்றிற்று.
16. உடன்போக்கு .
தலைவன் தலைவியை அவள் பெற்றோருக்குத் தெரியாத வகையில்
தன் ஊருக்கு உடன் கொண்டு செல்லுதல்.
இது ஐம்பத்தாறு துறைகள் உடையது.
16 . 1. பருவங்கூறல் .
கொளு .
பருவச் செழிப்புணர் தோழி உரைத்தது.
பொருள்;-- தலைவியின் வளர்ச்சிமிக்க பருவத்தைக்கண்ட தோழி,
அவளுடைய மேனியழகைத் தலைவனிடம் எடுத்துரைத்தது.
பாடல்--192.
இரண்டு எழில்களை இருபால் ஏற்றவன் தணிகையில்
திரண்ட முரண்ட சுரமுது நிறைந்த திருமுலை ,
மருண்ட மான்விழி, சுருண்ட கருங்குழல் இவையாவும்
நெருங்கிய நமரின் விரும்பிய நோக்கைத் தடுக்காதே .
பொருள்.
அழகுத் தெய்வங்களாய் வள்ளி,தேவசேனாவை இரண்டுபுறமும், அருட்
சக்தியாக ஏற்றவன், மாமுருகன்,; அவன் குடிகொண்டிருக்கும்
திருத்தணிகை மலைச்சாரலில் வாழும், திரண்டெழுந்த தோற்றமும்,
ஒன்றுக்கொன்று முரண்பட்டுப் போரிடும் தோற்றமும் கொண்டு விளங்கும்,
விண்ணக அமுதம் நிறைந்து காணப்படும் மார்பக அழகையும், மருள்
நோக்கப்பார்வைகொண்ட கண்களையும், சுருண்டு வான்மே கமாய்க்
கருத்த குழலையும் கண்ட எம்மைச்சார்ந்த உறவினர்கள் பெண் கேட்டும்,
தமது மகன்களுக்கு ஏற்ற வரனாயும் கணிக்கும் நோக்கத்தை யாரால்
தடுக்க இயலும்?அப்படிப்பட்ட தலைவியை விரைவில் மணந்துகொள்"
எனத் தோழி தலைவனிடம் வரைவு கடா தலை மேற்கொண்டாள் .
விளக்கம்;-- 1 . இரண்டு எழில்கள் = வள்ளி, தேவசேனா .
2. சுரமுது = விண்ணவர்களின் அமுதம்.
3 . நமர் = சுற்றத்தினர்.
மெய்ப்பாடு ----- அச்சம்.
பயன் --------------- வரைவு கடாதல் .
16.2. மகட்பேச்சுரைத்தல் .
கொளு .
தானே மொழிதனைப் படைத்துப் பாங்கி
யானையழி வேலர்க்கு அறிய உரைத்தது.
பொருள்;-- சொற்களைத் தானே புடைத்துக்கொண்டு தோழியானவள்
பணிவோடு. யானையைவீழ்த்தும் வேலை உடைய தலைவனுக்கு விளக்கி
உரைத்தது.
பாடல்--193.
வானவர் வாடிய வருத்தம் நீங்கச் சூரதாரகத்
தானவர் அழித்துக் காத்தவன் தணிகை மாமலையின்
கானப் புறாவைக் கணித்தது ஆற்றுக; காத்திருந்து
தான வணிகள் புனைந்து மணக்கப் பலருளரே.
பொருள்.
விண்ணவர் அனுபவித்த துயரைப் போக்கி, அவர்தம் வருத்தம் நீங்கவே
சூரன்,சிங்கமுகன்,தாரகன், எனும் அரக்கர்களை அழித்துக் காத்தவன்;
தணிகைமலையில் வீற்றிருக்கும் முருகன்; அவனது மழைச்சோலையில்
வாழும் தலைவி பற்றித் தலைவனே! நீ நன்கு கவனித்து நல்முடிவு
[ வரைவு, அல்லது உடன்போக்கு} எடுப்பாயாக.
காலம் நீட்டித்தால் உறவினரும்,மற்ற புதியவர்களும், மணிகளை, நகைகளை
அன்பாகக் கொடுத்தும், தலைவிக்கு அணிந்துபார்த்தும்,மகிழ்ந்தும்,
தமது வீட்டிற்கு அவளை மணப்பெண்ணாக வரித்துவிடுவார்கள்.ஆதலின்
காலதாமதம் செய்யாதே! எனத்தோழி தலைவனை வரைவிற்கு உடன்
-படுத்தினாள் .
விளக்கம் ;-- 1கானப்புறா = காட்டுப்பறவை . தலைவி .
2 . கணித்தது = வரைவு, உடன்போக்கு. எதை நீ விரும்புகிறாயோ அது.
3 . பலருளரே = தலைவியை மணக்கப் பலர் உள்ளனர்; விரைவில் வரைக.
மெய்ப்பாடு ------பெருமிதம்
பயன் --------------- வரைவு கடாதல்.
16. 3. பொன்னணி உரைத்தல் .
கொளு .
பலப்பல பரிசுகள்;பரிமளத் தலைவியை
நல்லணி அணிவார்" என்றனள் பாங்கி.
பொருள் ;-- நறுமணம் மிக்க தலைவியைப் பற்பலர்
தங்களது செல்வச்செழிப்போடு பரிசுகள்,அணிகள் ஆகியவற்றோடு வந்து
அணி பூட்டி, மகிழ்வார் " எனத்தோழி தலைவனிடம் உரைத்தாள் .
பாடல்--194.
சேவலங் கொடியோன் சீர்மிகு தணிகைச் சோலைவாழ்
பாவை காவலில் உறவினர்; பொன்னணி பூட்டுவார்கள்;
தாவுமான் தண்ணந் துறைவனே! கூவு மணச்சங்கொலி
மேவு தோய்கொடி முன்றிலில் முழங்கும் மணமுரசே .
பொருள்.
தாவி ஓடுகின்ற மான்கள் நிறைந்த குளிர்ச்சிமிக்க நீர்த்துறைத் தலைவனே!
சேவல்கொடி தாங்கிய சிறப்புமிக்க திருத்தணிகை மாமுருகன்
சோலையில் வாழ்கின்ற தலைவியை உறவினர்கள் காவல் காப்பு காட்டத்
துவங்கிவிட்டனர்; அடுத்ததாகப் பொன்னணி பூட்டுவார்கள்; அந்த மண
வீட்டிலே மணச்சங்கின் ஒலி எழும்; அலங்கரிக்கப்பட்ட அவ்வீட்டின்
முற்றத்தில் மங்களக் கொடி பறக்கும்; அதன்பின் திருமண மங்கள
முரசு ஒலிக்கும். ஆதலின் இனி நீ ஆற்றவேண்டிய ஏற்கத்தக்க
செயல்களைச் செய்வாயாக" என்று தோழி தலைவனிடம் கூறினாள் .
விளக்கம்;-- 1.பாவை = தலைவி .
2 . காவலில் = காவலைச்செய்யும் காப்புக்கட்டுதல் .
3 . முன்றில் = இல்முன் ....இலக்கணப்போலி .
மெய்ப்பாடு ------பெருமிதம்.
பயன்----------------- வரைவு கடாதல்.
16.4. அருவிலை உரைத்தல் .
கொளு .
அறிவிலான் அறிவும் அறிவற்றே விளங்கும்;
அருவிலை அரியநிலை ; தோழி உரைத்தது.
பொருள்;-- அறிவில்லாதவனின் அறிவும் அறிவற்றதாகவே விளங்கும்;
தலைவியின் அருமையைத் தலைவனுக்கு எடுத்துரைத்தாள் தோழி.
பாடல்--195.
பன்னிரு கரத்தான் தணிகைச் சேவடி எல்லைக்கண்
நண்ணிட விரும்பும் நன்மை உலகம் முழுவதுமே
கண்மணி சிற்றிடை விலையாய் எம்மவர் கொள்ளமாட்டார்;
விண்ணின் அமுத நன்முலை விலையோ? நகைப்பிடமே.
பொருள்.
பன்னிரண்டு கரங்களுடன் உலகாளும் தணிகை மாமுருகனது
சேவடியின் ஸ்பர்ச தீக்கை வேண்டி, மிக அருகில் சென்று போற்ற
விரும்பும் நன்மையை நாடும் மக்கள்,உயிரினங்கள் நிறைந்த மூவேழ்
உலகத்தையுமே விலையாகக் கொடுத்தாலும், அதுவும் தலைவியின்
சிற்றிடைக்கு மட்டுமே அதனை எம்மவர் ஏற்கமாட்டார்கள்; அதனினும்
பெருமை மிக்கது" என்பர்; நீயோ தலைவியின் அமுதம் நிறைந்துவிளங்கும்
முலைக்கு விலை கேட்கிறாய்? உன்செயல் நகைப்பிற்கே இடமாகிறது.
தலைவியின் பெரும்பெருமை அறியாதவன் ஆக உள்ளாய்! என்று தோழி
தலைவனிடம் கூறினாள் .
விளக்கம்;--- 1 . சிற்றிடை விலையாய் = சிற்றிடைக்கு மட்டும் விலையாக
2 . அமுதமுலை = அமுதம் நிரம்பியுள்ள மார்பகம்.
3. சேவடி = செம்மை வாய்ந்த பாதங்கள் .பண்புத்தொகை .
மெய்ப்பாடு -------பெருமிதம்.
பயன்------------------ தலைமகளது அருமை உணர்த்தல் .
16 . 5 . அருமை கேட்டறிதல் .
கொளு .
பெருமைமிகு தலைவியின் அருமைகேட் டழிந்தது .
பொருள்;--- தலைவியின் வானளாவிய பெருமையைக் கேட்டுத் தலைவன்
மனம் நொந்து வாடியது.
பாடல்--196.
நெஞ்சமே! அழு!அழு! நிலவைப் பற்றி மஞ்சமாக்க
பஞ்சைக் கனவுபோல் குஞ்சரி மணாளன் தணிகையில்
அஞ்சுக மென்மொழி , அஞ்சன வரிக்கண், அஞ்சாமுலை,
துஞ்சிடை மயங்கித் துளிசுகம் வேண்டிக் கெஞ்சினாயே !
பொருள் .
வள்ளியின் மணாளன் மாமுருகன் வீற்றிருக்கும் திருத்தணிகைச்
சோலையில் வாழும், இனியகிளிபோன்று மென்மொழியும், மைதீட்டிய
கண்களும், வளர்வதற்கு அஞ்சாமல் வளர்ந்து பெருத்த முலைகளும்,
அவைகளின் சுமை தாங்கமுடியாமல் வாடித் துவண்ட இடையும் கொண்ட
மங்கை மீது ஆசைப்பட்டு,மயங்கி, அவளோடு பேசிக்கொஞ்சித்
துளியேனும் இன்பம் காண மாட்டோமா? என ஏங்கிக் கெஞ்சும்
நெஞ்சமே! இனிக்காலமெல்லாம் தனியே கிடந்து அழுக ; விடாது அழுக!
வானத்தே பவனிசெல்லும் நிலவை மணமஞ்சமாக ஆக்கி வாழ
ஆசைப்பட்டுக் கனவுகண்ட பிச்சைக்காரன் போலக் காலமெல்லாம்
அழுக நீ ." என்று தலைவன் மனம் நொந்து கூறிக்கொண்டான்.
விளக்கம்;-- 1 .பஞ்சை = எதுவும் இல்லாதவன்; கிராமிய வழக்காற்றுச்சொல் .
பஞ்சை.பராரி போன்றன.
2 . குஞ்சரி = இளம்யானை போன்றவள்; வள்ளிப்பிராட்டியார்.
3 . அஞ்சுகம் = அழகிய கிளி ; சுகம் .. தத்பவ வடசொல் .
மெய்ப்பாடு-------------அழுகை
பயன் ---------------------- ஆற்றாமை நீங்குதல்.
16. 6 . தளர்வறிந்து உரைத்தல்.
கொளு .
தண்துறைத் தலைவன் தளர்வினை அறிந்து ,
கொண்டே செல்க" எனத்தோழி குறிப்புரைத்தாள் .
பொருள்;---- தலைவனின் தளர்ச்சியை உணர்ந்த தோழி , தலைவியை
அழைத்துக்கொண்டு உடன்போக்கு மேற்கொள்க " எனக்கூறினாள் .
பாடல்--197.
வள்ளிக் குன்றில் முள்ளுடை வழியினில் செலவுமேற்கொள்
கள்ளனாம் தணிகைக் குரைத்த விகுளை நல்லசொல்போல்
உள்ளம் உவப்ப உற்றவள் தழுவு மனமறிந்து,
வள்ளல் ! அள்ளிப் பருகுக. அமுதமே. என்றனளே .
பொருள்.
வள்ளிமலையில் வள்ளியை நாடி வேடனாக முருகன் சென்று
காடெல்லாம் சுற்றிய காலத்து, உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டபொழுது
வள்ளியின் மனநிலையறிந்த தோழி, தணிகை வேடனிடம் இன்றிரவு
காட்டுப்பாதையில் வள்ளியோடு உடன்போக்கு மேற்கொள்ளுங்கள்!
என்று சொல்லி அனுப்பியதைப்போல
இங்கு தோழியும், தலைவியின் மன நிலையை உணர்கிறாள் தலைவி
மனமகிழ்வோடு தனது தோழியர்களை அணைத்துக்கொள்வதும், இனிமை
தழுவிப்பேசுவதும் கண்ட தோழி தலைவனை அணைந்திட மனம் கொண்ட
நிலையைப் புரிந்துகொண்டு, தலைவனைச் சந்தித்து, அவளை
அழைத்துக்கொண்டு உடன்போக்கு மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்
கிறாள்;
விளக்கம்;-- 1 . செலவு = உடன்போக்கு
2 . இகுளை = வள்ளியின் தோழி
3 . அள்ளிப்பருகுக அமுதமே = தலைவியோடு இணைந்து இன்பம் அடைக.
16. 7 . குறிப்புரைத்தல் .
கொளு .
நறுமணக் குழலி, திருக்குறிப் புரைத்தது.
பொருள்;-- நறுமணம் கொண்ட தலைவியின் குறிப்பினைத் தோழி
தலைவனிடம் கூறியது.
பாடல்--198.
வள்ளியைப் புணரும் கள்ளனே காட்சியாம் தணிகையின்
புல்லியே பிணைந்தவள் உள்ளம் அறியேன்; கள்ளமில்லாள்
நல்லதாம் பூவையும், பாவையும் தந்தவள் நனியாடல்
மெல்லெறி பந்தொடு கிளியும் தந்தனள் மெல்லியலே .
பொருள்.
வள்ளியை மணந்து, வந்துதங்கிய இங்கு அதே காட்சியை,அருளை
வழங்கும் தணிகை முருகனின் நகரின், என்னை வந்து அணைத்துக்
கொண்டு, மகிழ்வாய்ப் பலப்பல அளித்த தலைவியின் குறிப்பைத்
தோழியாகிய நான் அறியவில்லை. கள்ளமில்லாத மனம் கொண்டவள்
அவளோடு பழகிய நாகணவாய்ப்புள்" என்னும் பறவையைக் கொடுத்தாள்
அவளோடு அன்றாடம் விளையாடிய பொம்மையை எனக்களித்தாள் ;
அவள் விளையாடும் பொன்னாலாகிய பந்தையும் கொடுத்தாள் .
அவளோடு உரையாடிக்கொண்டிருக்கும் கிளியையும் என்னிடம்
கொடுத்தாள் ;அவளது குறிப்பு என்னவோ? எனத் தோழி தலைவனிடம்
கூறினாள் .
விளக்கம்;-- தான் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ளப்போவதை
அவள் குறிப்பினால் உணர்த்தினாளோ !
1 . கள்ளனே = வேடனாக உருவெடுத்துச் சென்ற காட்சி.
2 . பூவை = நாகணவாய்ப்புள் .
3 . பாவை = பொம்மை .
மெய்ப்பாடு ---- பெருமிதம்.
பயன் --------------- உடன்போக்குணர்த்தல் .
16 . 8 . அருமை உரைத்தல் .
கொளு .
கானகக் கடுமை, தேன்மொழியின் மென்மை ,
தான்செலும் பதியின் சேய்மை உரைத்தது.
பொருள் ; --- காட்டுவழியின் கடுமையான அமைப்பும்,தேன்போன்ற
மொழியுடையாள் மென்மைத்தன்மையும் தனது ஊரின் தொலைவும்,
தலைவன் தோழியிடம் சொல்லியது.
பாடல்---199.
சூரழி காரருள் தாரணித் தணிகைப் பெருமையான்
சீரூர்ச் செல்வியே ! சிலிர்த்தே எழுந்த செருக்குமுலை
பேரிடி மின்னிடை, தளிரடி தாங்காக் கூர்க்கருங்கல்
சீறிடும் சுடுகா; சுடரொளி ; நாடிடம் சேய்மையே .
பொருள்.
சூரன்முதலிய அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காத்து, உலகையே
காத்தவனாகிய முருகன் எழுந்தருளியிருக்கும் திருத்தணிகை .
பெருமையுடைய அந்நகரில் வாழும் இளம்பெண்ணே! தோழியே!
இளமையினால் சிலிர்த்து எழுந்த செறுக்குடைய இரு முலைகளும்,
இடிகளுக்கிடையே தோன்றிமறையும் மின்னலன்ன இடையும் ,
மென்மையான பாதங்களையும் கொண்ட தலைவி, காட்டுவழியே நடக்க
மிகவும் துன்புறுவாள்; அவளது கால்களைக் கூர்மைமிக்க சிறுசிறு
கற்கள் துன்புறுத்தும்; காற்றும்,வெய்யிலும் சீறிஅடிக்கின்ற கொடுமை
மிக்க காடு; சூரிய ஒளி வேறு; நாம் சேரவேண்டிய எனது நாடோ வெகு
தொலைவில் உள்ளது.இந்த நிலையில் தலைவியோடு உடன்போக்கு
மேற்கொள்ளுதல் நலம் பயக்காது" எனவே இதனைத்தவிர்ப்போம். என்று
தோழியிடம் தலைவன் கூறினான்.
விளக்கம்;-- 1 .சிலிர்த்தே = இளமை;பருவம் சிலிர்த்து எழுகிறது.
2 . மின்னிடை = மின்னல் போன்ற இடை .
3 . சுடுகா = சுட்டுப்பொசுக்கும் காடு.
மெய்ப்பாடு ------ இளிவரல்.
பயன் -----தலைமகன் நிலைமையை உணர்த்துதல் .
16. 9. ஆதரங்கூறல் .
கொளு .
சுடுதீ காடும் அடுதீ சுரமும்,
மடுவுடைப் பொய்கையே ;மன்னனோ டேகின் .
பொருள்;-- சுட்டெரிக்கும் தீயுடைய காடும், விடாமல் எரியும்
காட்டுவழிப்பாதையும் தலைவி உன்னோடு வருவாளேயானால்
ஆழம் மிக்க பொய்கையின் குளிர்ச்சியாகவே அமையும் அவளுக்கு.
என்று தோழி தலைவனிடம் கூறினாள் .
பாடல்--200.
சுடுமண் வனமும், கடுவெயில் தடமும் குளிராகும்
நடுநிசி இருளும் அடுபசி வயிறும் ஒளிராமே ;
தொடுவெலை அருகே தூயவன் இருப்பின் தொல்சுகமே;
கடுமை கசியாக் கந்தவேள் தணிகை அருட்டுணையே .
பொருள்.
ஒருபோதும் கடுமை பாராட்டாது, விளங்கும் கந்தவேளின் தணிகையில்,
முருகனின் அருளாகத் துணையும், அடியவர் துணையாக அருளும் ஒன்றி
இருப்பதுபோல், தலைவனே! நீயும் எப்பொழுதும் தலைவி அருகேயே
இருந்து காப்பாயானால், அனல்பரப்பும் சுடுமணல் பாலைவனமும்,
கடும்வெய்யிலின் சுட்டெரிக்கும் தரையும், குளிர்ச்சி உடையதாகவே
மாறிவிடும்; நடுநிசியின் காரிருளும், பசிக்கின்ற வயிறும் ஒளிர்வுறும்;
இருளைப்போக்கும் ஒளி;பசியைப்போக்கும் உணவு. எந்தநிலையிலலும் ,
தலைவனே! நீ அவள் அருகில் இருந்தால் தீமையும் அவளுக்கு நன்மை
ஆகும்; அப்படியிருக்க, நீ இவ்வாறு கூறுவது முறையாகாது" என்று தோழி
தலைவனிடம் கூறினாள் .
விளக்கம்;-- 1. மண்வனம் = பாலைவனம்.
2 . தொடுவெலை = தொடுகின்ற எல்லையில்
3 . தூயவன் = தலைவன் .
4 . கசியா = அடியவர்மீது கடுமை துளியளவு கூடக் காட்டாமை.
16. 10 . இறந்துபாடு உரைத்தல் .
கொளு .
கார்த் தடமும் கயலும் போன்றீர் ;
வார்த்தட முலையும் மன்னனும் என்றது.
பொருள்;-- குளமும், அதில்வாழும் மீனும் போன்றவர்கள் நீயும்
எம் தலைவியும் ஆவீர்கள்;" என்று தோழி கூறினாள் .
மீன் குழந்தைப்பிரியின் இறந்துபடும்;
தலைவியும் தலைவனைவிட்டுப் பிரிந்தால் இறந்து படுவாள் .
பாடல்---201.
பவித்திரப் பொய்கை படர்மலர்த் தணிகைக் குன்றத்தானின்
அவிழிதழ் தாமரை அலர்குளம் நீயே ; அகலாது
குவிவாய் அவிந்திடாச் செங்கயல் வென்றிடும் கருங்கண்ணாள்
புவிவாழ் புனிதம்; தனியாய்க் காண்பது முறையிலையே .
பொருள்.
முனிவர்களாலும்,எழுகன்னியர்களாலும் படைக்கப்பட்ட தூய்மையான
பொய்கை. அதிலே முருகனைப் பூசிப்பதற்கென்றே மலரும் மலர்கள்.
இவைகளைக் கொண்ட திருத்தணிகைக் குன்றத்தானின் அருளாட்சி
நகரிலே , விரிந்த இதழ்களைக் கொண்ட தாமரை மலர்ந்த குளம்
போன்று விளங்குபவன் தலைவனாகிய நீ ஆவாய். அக்குழந்தை விட்டு
அகலாமல் தனது மூடித்திறக்கும் வாயை மூடாது, காற்றை இழுக்கும்,
குணம் கொண்ட செங்கண் கொண்ட மீன்கள் ; அக்கண்களை வென்றிடும்
கருமை வாய்ந்த கண்களை உடையவள்; உலகின் புனிதமாய் விளங்கும்
தலைவி; அவளைப் பிரியவும், அவளைத் தனிமைப் படுத்திப்பார்க்கவும்
நீ எண்ணுதல் முறையாகுமா? எனத்தோழி தலைவனிடம் கூறினாள் .
விளக்கம்;-- நீரைவிட்டுப் பிரிந்தால் மீன்கள் இறந்துபடும்;
உன்னை விட்டுப்பிரிந்தால் தலைவி இறந்துபடுவாள் " என்பது
பொதுக்கருத்து.
1 . பவித்திரம் = தூய்மை வாய்ந்தது .
2. குவிவாய் = [அகலாது குவிவாய் ] பெரிதாகத் திறவாமல் குவித்தபடி
திறக்கும் வாயை உடைய மீன் .
3 . அவிந்திடா = ஒரேயடியாக மூடிடாமல் , மெதுவாக வாயைத்திறந்து மூச்சு
விடுதல்.
மெய்ப்பாடு-------- பெருமிதம்.
பயன் ----------------- உடன்போக்கு வற்புறுத்தல் .
16 . 11 . கற்பு நலன் உரைத்தல்.
கொளு .
உடன்போக்குத் துணிந்த தலைவிக்குத் தோழி
உடன்பட்ட உலகின் இயல்பு கூறியது.
பொருள்;-- தலைவனோடு உடன்போக்கிற்கு த் தலைவி உடன்பட்டாள் ;
உலகியல்கூறிய தோழி தலைவிக்கு உரைத்தது.
பாடல்--202.
குருவாய்த் திருவாய் உபதேச நாதன் திருத்தணிகை
விருப்புடன் வியந்து போற்றிடும் வியனே! விரிநாட்டில்
அருநாண மன்னை போன்றே சிறந்ததாம் ; உறுதியினால்
பெருமைக் கற்புதான் நாணினும் உயர்ந்தது ;பெற்றனையே .
பொருள்.
குருவான தந்தைக்கும் குருவாய் அமர்ந்து உபதேசம் செய்த
சுவாமிநாதன் வீற்றிருக்கும் சுவாமிமலை போலவே, அமைதி காக்கத்
திருத்தணிகையிலும் அமர்ந்த முருகப்பெருமானை, அடைந்து,விருப்புற்று
வணங்கி, வாயாரப்போற்றிடும் அழகுடைப் பெண்ணே! என் தலைவியே!
பரந்துபட்ட இந்த நாட்டில் பெண்களுக்கு நாணமானது அன்னையைப்
போன்றே சிறந்தது; காப்பதும் அது. ஆயினும் உறுதியும் மாறாத நிலையம்
கொண்ட பெருமைமிகு கற்பானது நாணத்தை விட மிகவுயர்ந்ததாகும் .
அன்னை,நாணம், கற்பு இவை மூன்றில் நீயோ கற்பைத் தெரிந்தெடுத்தாய் .
வாழி நீ என வாழ்த்தி உடன்போக்கிற்கு வழிவகுத்த தலைவியைப்
பாராட்டினாள் தோழி.
விளக்கம் ;--1 .உபதேசம் = குடிலை [பிரணவம்] தந்தைக்கு உபதேசித்தார்.
2 . வியானே ! = அழகுடைய தலைவியே!
3 . உறுதியினால் = "நிறை காக்கும் காப்பே தலை " என்கிறார் வள்ளுவர்.
மெய்ப்பாடு ------ பெருமிதம்.
பயன் ---------------- தலைமகளை உடன்போக்கு நேர்வித்தல்.
16 . 12 . துணிந்தமை கூறல்.
கொளு .
வேலுடைத் தலைவன் உடன்போக்கு ஏற்றதை,
வேல்விழித் தலைவிக்குத் தோழி கூறினாள் .
பொருள்;-- தலைவன் உடன்போக்குக்கு ஒப்புக்கொண்டுவிட்டான்" என
வேல்விழித்தலைவிக்குத் தோழி சொன்னாள் .
பாடல்---203.
குன்றக குறிஞ்சிக் கோமகன் அமர்ந்தருள் தணிகையில்
தென்றல் முல்லை மருதமும் நின்றுலா குறமகளே !
மன்றலம் தலைவனோ வேங்கை கோங்கும் விரிவிசைத்து
பொன்மராப் பூவொடு புனைந்திட எண்ணம் கொண்டுளானே .
பொருள்.
குறிஞ்சி நிலக்கடவுளாகிய முருகன் அமரும் குன்றமாகிய தணிகை
மலையில், தென்றலையும், முல்லைமணத்தையும், மருத வளத்தையும்
ஒருங்கே அனுபவிக்கும் குறமகளாம் தலைவியே! உன்னை நாடிவருகின்ற
தலைவனோ உன்மலை வேங்கை மலருடன் கோங்க மலரையும்,இணைத்து
பொன்மயமாகிய மராப்பூவையும் இணைத்து மாலையாக்கிட எண்ணம்
கொண்டுள்ளான்" எனத் தோழி கூறினாள் .
விளக்கம் ;-- குறிஞ்சி நிலத்தலைவன் மாலையில் கோங்குப்பூவையும்,
மராப் பூவையும் இணைக்கவுள்ளான்" என்பதால் கோங்கும் ,மராவும்
பாலைநில மலர்கள்; அதனால் பாலைநிலத்தில் உடன்போக்கு செல்லத்
தலைவன் முடிவு செய்துவிட்டான்" என்பது பெறப்படுகிறது.
1 . வேங்கை = குறிஞ்சிநிலப்பூ
2 . கோங்கு ,மரா = பாலைநிலப்பூக்கள்
மெய்ப்பாடு ---------- பெருமிதம்.
பயன் -------------------- தலைமகன் உடன்போக்கு நேர்ந்தமை கூறல்.
16 . 13 . துணிவொடு வினாவல் .
கொளு .
தலைவன் துணிவுடன் கல்லதர் நினைந்து,
தலைவி தன்மனம் கலக்கம் கொண்டது.
பொருள்;-- கடுமையான வழிகளைக் கொண்ட சுரத்தில் சென்றிட முடிவு
செய்த தலைவனின் மனப்பாங்கால் தலைவி கலக்கமுற்றது.
பாடல்--204.
அழற்பொறி த் தணிகை கழற்கால் வணங்காத் தாழ்ந்தவர்போல்
நிழலிலை; நீரிலை ; நெறியழல்; அஞ்சம் , நரிக்கூவல்
மழுக்கல் மாசுகால் ; மதிமழி வழியாம் கானகத்து
விழைந்திடும் விருப்பு வந்ததென் வளமே ! வேந்தனுக்கே .
பொருள்.
நெற்றிக்கண் தழற்சுடரிலே தோன்றிய திருத்தணிகை முருகனை ,
அவன் சேவடியைப்போற்றி வணங்காத இழிந்தவர்கள் படும் துயர் போன்று,
நிழலில்லாத, நீரில்லாத, தீப்பிழம்பு சூழ்ந்த, அச்சம் தரும் நரியூளை
மிகுந்த ,கூர்மையான பரலைக் கற்கள் காலைத் துன்புறுத்த ,அறிவை
மயக்கும் வழிகொண்டு துன்பம் தரும் காட்டுவழியை த்
தேர்ந்தெடுத்த விருப்பு நமது தலைவனுக்கு எப்படி வந்தது? எனது
வளமை கொண்ட தோழியே சொல்வாயாக" என்று தலைவி தோழியிடம்
கேட்டாள் .
விளக்கம் ;-- 1 . அழற்பொறி = நெற்றிக்கண் தீச்சுடர்
2 . மழுக்கல் = மழு போன்ற கூர்மை முனை கொண்ட கல். உவமைத்தொகை
3 . மதி மழி = அறிவை மயக்கும் /
மெய்ப்பாடு----------அழுகை
பயன்-------------------- ஆற்றாமை நீங்குதல்.
16 . 14 . போக்கறிவித்தல் .
கொளு .
போர்வேல் தலைவன் போக்கிற்குத் துணிந்ததேன்
காரக்குழல் அறியத் தோழி உரைத்தது.
பொருள்;--- தலைவன் உடன்போக்கு மேற்கொள்ளக்காரணத்தைத்
தலைவியிடம் தோழி விரிவாகக் கூறியது.
பாடல்--205.
தணிகை மலையில் தத்துவன் போற்ற வரும்விலங்கினம்
கணித்து வஞ்சியே வஞ்சி வருவதைத் தடுத்துவிட்டாய் ;
மணியும் உலகுமே பெறினும் நம்மவர் உனைக்கொடார்;
அணியும் அழகும் வளமிலாக் கடுங்கா தேர்ந்தனனே .
பொருள்.
திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் தத்துவனாகிய முருகனைப்
போற்றி வணங்கிடக் காட்டு விலங்கினங்களும் வருவதுண்டு;
அதனை உணர்ந்த நீயோ , இரவு நேரத்தில் விலங்கினங்களுக்கு அஞ்சி,
உன்னைக்காண வரவிடாமல் தடுத்துவிட்டாய் ;நம்மவரோ பொன்னையும்,
மணியையும், உலகையுமே கொடுத்தாலும் உன்னைத் தலைவனுக்கு
மணம் முடிக்க ஏற்றுக்கொள்ள மாட்டார்; ஆதலின் நல்ல வளமும்,
அழகும் நீரும்,மக்களும் இல்லாத கடுமையான காட்டு வழியைத்
தேர்ந்தெடுத்தான் தலைவனே. என்று தோழி தலைவியிடம் கூறினாள் .
விளக்கம் ;- 1 . தத்துவன் = பிரணவத் தத்துவம் அறிந்தவன்.
2 . பெறினும் = மணச்சீராகப் பெற்றாலும்,
3 . கடுங்கா = கொடிய விலங்குகளும், கள்வர்களும் நிறைந்த காடு
மெய்ப்பாடு ------------பெருமிதம்.
பயன்-------------------- உடன்போக்கு மாட்சிமைப் படுத்தல் .
16. 15. நாணிழந்து வருந்துதல் .
கொளு .
நாணினும் சிறந்த கற்பே முதன்மை;
கானுடன் போக்கில் செல்லத் துணிந்தாள் .
பொருள்;-- நாணத்தினும் சிறந்தது கற்பேயாகும்; அதுவே முதன்மையும்கூட.
ஆதலின் தலைவனுடன் கானகம் போவேன்" என்றாள் தலைவி.
பாடல்--206.
காதலில் திளைத்த குறத்தித் தணிகைக் காவினிலே
வேதமாய் இல்லற வளமுடை நாணமே நாதன்மேல்
சாதகக் காதலால் மேதகு கற்புதான் முதன்மையே
ஏதநாண் அகல்க ; எழுமை உயர்பெண் தவிர்க்கவே.
பொருள்.
வள்ளிமலையில் காதலில் திளைத்த வள்ளிக்குறத்தி முருகனோடு
அமர்ந்த திருத்தணிகை நகர்க்காவிலே , வாழும் தலைவியின்
தொன்மையாய் இல்லற வளமாய் விளங்கியது நாணமே ஆகும்.
தலைவன் மீது காதல் கொண்டுவிட்டபின் நல்ல துணையாக மாறிவிட்ட
காதலினால் உயர்ந்த கற்பு தான் என்வாழ்வில் முதன்மை பெற்று
விளங்குகிறது. ஏதமாய் விளங்கிய நாணம் என்னை விட்டு அகலட்டும்;
என்னைப்போன்ற உயர்குலப்பெண்கள் ஏழு பிறப்பிலும் பெண்பிறவியைத்
தவிர்க்கட்டும் ;என்று வருந்தி தனக்குள்ளே கூறிக்கொண்டாள் .
விளக்கம்;-- குறத்தி = வள்ளிப்பிராட்டியார்.
2. வேதமாய் = மறைபோலத் தொன்மை வாய்ந்த இல்லற நாணம்.
3 . ஏதநாண் = துன்பம் உருவாக்கும் நாணம்.
மெய்ப்பாடு ------ பெருமிதம்.
பயன் -------------- உடன்போக்கு வலித்தல் .
16. 16 . துணிவெடுத்து உரைத்தல்.
கொளு .
செல்வத் தலைவி செல்லத் துணிந்தமை
வல்ல நாடற்குத் தோழி உரைத்தது.
பொருள்;-- தலைவி உடன்போக்கிற்கு ஒத்துக்கொண்டாள் என்று தோழி
தலைவனிடம் உரைத்தது.
பாடல்--207.
வெகுண்ட சூரன் விரியுடல் கிழித்து இரண்டாக்கிய
சுகுணன் தணிகை உகுநீர் நகுகுணம் நிறமேய்க்கும்
மிகுமென் னடிகள் தகுதீச் சுரத்தில் குளிரடைய,
மகுட பதியே! மகிழ்வால் நடந்த மலரடியே.
பொருள்.
தேவாசுரப்போரிலே சினத்துடன் கடுமையாகப் போரிட்ட சூரனின்
மாயமர உடலைத் தணிகை அருட்குணத்தான் இரண்டாகக் கிழித்த
காலை, வழிந்தோடிய குருதி வெள்ளத்தின் தகுதிமிக்கச் சிவப்பு நிறம்
போன்று விளங்கும் மிகுந்த மேன்மை கொண்ட தலைவியின் பாதங்கள்
சுரத்தின் தகுதிமிக்க அழலில், பேரழகி கற்களின் சூட்டில் நடந்து
குளிரடைந்து மகிழ்ச்சி அடையநன்னாட்டு அரசனே! அம்மலரடிகள்
விரும்புகின்றன; என்று
தோழி தலைவி உடன்போக்கிற்கு உடன்பட்டாள் " என்பதைத்
தலைவனிடம் கூறினா ள் .
விளக்கம் ;--1 .சுகுணன் = நல்லகுணம் கருணைக்குணம் கொண்டவன்.
2. தகு தீ = சுரத்தின் தகுதிமிக்க அழல்.
3 . மகுடம் = முடி .கிரீடம் .
மெய்ப்பாடு ------- பெருமிதம்
பயன் ----------------- உடன்போக்கு வற்புறுத்தல் .
16.. 17 . குறியிடம் கூறல்.
கொளு .
காரிருள் கனக மலர்க்கா குறியிடம்
சீரருள் செல்வியுடன் சென்றே உய்த்திடுக .
பொருள்;-- தலைவ ! கருமைவாய்ந்த நள்ளிருளில் பொன்மலர் பூக்கும்
மரத்தடியில் உன்மனம் கவர்ந்தாளுடன் சென்று இன்பம் துய்க்க" என்று
குறியிடம் கூறி அனுப்பினாள் தலைவனை.
பாடல்--208.
பொன்னடி போற்றியே புண்ணியம் சேர்த்திடா மண்ணினர்போல்
துன்னிடும் நள்ளிரா; செம்மலர் மின்னும் மகிழமரத்
தண்ணிழல் தணிகை க் கண்ணருள் மன்னிய தலைவனே!
விண்ணிழல் மேகமும், விழைசுகம் கூட்டும் பொங்கிருளே .
பொருள்.
திருத்தணிகை முருகனைப் போற்றி,அவனது சேவடியை நாளும் தொழுது
நல்லபுண்ணியத்தை உருவாக்கி உயர்வதற்கு முயற்சி செய்யாத இந்த
மண்ணுலகத்தவர்போன்று, உலகைச் சூழ்ந்தது நாளிரவு; இரவில் நல்லொளி
பரப்பும் பொன் போனற மலர்கள் மின்னுகின்ற மகிழமரத்தடியில்
விழுகின்ற குளிர்ச்சி மிக்க நிழல்போன்ற கண்ணருளைப் பொழியும்
தணிகையானை விரும்பிவணங்கும் தலைவனே வானத்து நிழலான
கருமேகமும் சூழ்ந்து நிற்க, இரவிருளும் சேர்ந்து விள ங்க ,தலைவியோடு
நீ கூடுகின்ற சேர்க்கையில் விரும்பும் இன்பம் மேலோங்கி நிற்கும்" எனத்
தோழி குறியிடம்கூறினா ள் .
விளக்கம்;-- 1 . மண்ணினர் = நிலவுலகத்து அடியவர்கள் .
2 . நள்ளிரா = நள்ளிரவு .
விழைசுகம் = நாடுகின்ற நல்ல இன்பம் .
மெய்ப்பாடு -------பெருமிதம்.
பயன் ----------------- குறியிடம் உணர்த்துதல் .
16. 18. அடியொடு வழி நினைந்து அவன் உளம் வாடல்.
கொளு .
குழலி தம்மொடு நீங்கத் துணிந்த
கழலணி வீரன் கனிந்து வாடியது.
பொருள்;-- மென்மைத் தலைவியுடன் உடன்போக்கு மேற்கொள்ள
முடிவுற்ற தலைவன் உள்ளம் வாடினான்.
பாடல்--209.
தனிநிலைத் துயரினை உணர்ந்த தணிகை வேடனோ
கனிகவர் செயலால் வள்ளியின் துயரறு நல்லூரின்
அனிச்ச மலரடி அழலில் கனிக்கல் பிணித்துயர்
பணித்தனன் ; நனிமை நளினத் தூயோள் நலிந்தனளே
பொருள்.
தன்னோடு பழகிய வேடனவனைக் காணாது தவிக்கும் துயரினை
உணர்ந்த வேடனாகிய தணிகை முருகன் கணியண்ண வள்ளியைக்
கவர்ந்து உடன்போக்கு மேற்கொண்ட செயலால் வள்ளியின் துயரைப்
போக்கிய முருகனது நல்லூரில் வாழும் தலைவியின் அனிச்சமலர்
போன்ற பாகங்கள் காட்டுவழியில் சூரியஒளியால் பழுத்தகனிபோல்
காட்சிதரும் பரளைக்கற்களை மிதித்து, நடந்து பெரும்துன்பத்தை
அனுபவிக்க நானே உடன்போக்கு என்னும் வழி வகுத்தேன்; அழகும்,
நளினமும் கொண்ட தூய தலைவி என்னால் நலிந்தாள்; துயருற்றாள்"
என்று தலைவன் வேதனைப்பட்டான்
விளக்கம். ;-- 1 . தனிநிலை = தலைவனைப் பிரிந்த தலைவியின் தனிமை .
2 . கனிகவர் = கனிபோன்ற வள்ளியைச் சிறையெடுத்த முருகன்.
3 . அழலில் = சூரிய வெப்பத்தில் .
மெய்ப்பாடு -------அழுகை.
பயன்------------------ நெஞ்சொடு உசாவுதல் .
16. 19 , கொண்டு சென்று உய்த்தல் .
கொளு .
அழகுத் தலைவி அற்புதக் கோலம்;
பழகிடப் பார்த்துப் பரவசம் கொள்கவே.
பொருள்;--- தலைவனே! அழகே உருவான தலைவி இதோ உன்முன்
வந்துவிட்டாள் ; அவளது அழகையும், அவளையும் பார்த்துப் பரவசம் கொள்!
என்று தோழி தலைவனிடம் இரவுக்குறிக்குத் தான் அழைத்துவந்த
தலைவியைக் கண்முன் காட்டினாள்.
பாடல்--210.
தந்தை தமக்கே குருவாம் தனயன் மனவமைதி
தந்ததால் தணிகை நகரில் தங்கச் சிலையழகி
முந்தைப் பயனால் சொந்தமாய் நிற்கிறாள், வந்தவளுடன்
சிந்தை கலந்து சிறகினை விரித்து மகிழ்வாயே !
பொருள்.
தந்தையாகிய சிவபெருமானுக்கே பிரணவோபதேசம் செய்தருளிய
ஆசானான மகன், முருகன் அரக்கரழி போரினால் மனவமைதி இழந்த
காலத்தே மனச்சினத்தைத் தணித்து அமைதி நல்கிய பதி திருத்தணிகை .
அந்நகரின் சோலையிலே தங்கச்சிலை போன்ற பேரழகி ,தலைவனே! நீ
செய்த புண்ணியத்தின் பயனாக, இறையருள் கூடியதால் உனக்குச்
சொந்தமாகி இதோ நிற்கிறாள்; அவளைப் பார்! அவளுடன் மனம்
கலந்து பேசு; வானவீதியிலே அவளோடுகூட காதல் சிறகடித்துப் பற ;
வாழ்வின் உன்னத மகிழ்வை அடைவாய்! எனத்தோழி தலைவனிடம்
இரவுக்குறிக்காக அழைத்துவந்த தலைவியை அவனுக்கு அர்ப்பணித்தாள் .
விளக்கம்;-- பேரால் உண்டான மனச் சினத்தை முருகனுக்கே ஆற்றிய நகர்
என்பதால் , உனக்கும் மனதில் உண்டான மனக்கவலையை, காதல்
கூடுமா கூடாதா என்ற மனநிலையைப் போக்கிடும்" என்ற குறிப்பும் உளது.
1 . குருவாம் = மூவேழ் உலகிற்கும், அசையும்,அசையாப் பொருள்கட்கும் ஆசானாய், விளங்குபவர்
சிவபெருமானே ஆவார். அவருக்கே ஆசானாக
விளங்கி, அவருக்கே குருவாய் உபதேசித்தவர் .
2 . முந்தைப்பயனாய் = விதிப் பயன்; இறைவன் அருள்; அதனால்
தலைவனும்,தலைவியும் சந்தித்தனர்.
3 . சிறகினை = வானவீதியில் தடை ஏதும் இல்லாமல் சிறகினை விரித்துப்
பறக்கும் இளம் உள்ளங்கள் .
மெய்ப்பாடு----------பெருமிதம்.
பயன்-------------------- தலைமகளைத் தலைமகன் உடன்படுத்தல் .
16 . 20 . ஓம்படுத்துரைத்தல் .
கொளு .
தேன்மொழித் தலைவியைக் காத்தருள் எனவேண்டல் .
பொருள்;-- தலைவியை நன்கு காத்திடுவாய்" எனத் தோழி தலைவனிடம்
வேண்டுகோள் விடுத்தல்.
பாடல்-- 211.
மாயக் கிரௌஞ்சம் தாரகன் மாளவே மனநிம்மதி
தாயாய் அருளிய தணிகைச் சாரலின் தலைவனே!
வேயுறு தோளியைச் சேயுறு குணத்தை நன்கறிந்து
தீயாய்ச் சுடாது, திறனுடன் காத்திடல் நின்கடனே .
பொருள்.
மனத்தை மயக்கும் கோட்டையாக நின்று, மக்களையும், தேவர்களையும்
துன்புறுத்திய "கிரௌஞ்சம்" என்ற கோட்டையையும் . அதன் தலைவனாகிய
சூரனின் தம்பி தாரகனையும் அழித்து, உலகிற்கு, நிம்மதி வழங்கிய ,
தாய் போன்ற கருணை கொண்டு விளங்கிய முருகன் வீற்றிருக்கும்
தணிகை மலை சார்ந்த சாரல்பகுதியை ஆளும் மலைநாடனே !
இதோ இரவுக்குறிக்காக உனது தலைவியை அழைத்து வந்துள்ளேன்;
இளம் மூங்கிலன்ன தோளைக் கொண்டவளை, இளங்குழவிபோன்ற
மனதை உடையவளை , அவளது குணத்தை நன்கறிந்து ,மென்மையாகப்
பேசு! கொட்டும் சொற்களைப் பேசாதே! அவளை நன்கு காக்கவேண்டிய
முறைப்படிக் காப்பாய்! இவையாவும் உனது கடனாகும்" என
அறிவுரையும் அளித்துத் தோழி தலைவியை அவனிடம் ஒப்புவித்தாள் .
விளக்கம்;--
1 . மாயக்கிரௌஞ்சம் = மயக்கும் தன்மைகள் கொண்ட கோட்டை;மலை .
2 . வேயுறு தோளி = இளம் மூங்கில் போன்ற மென்மையான தோளைக்
கொண்டவள்; " வேயுறு தோளிபங்கன் " என்பது
சம்பந்தர் தேவாரம்.
3 . தீயாய்ச்சுடாது = தீபோன்று சுடும் சொற்கள்; அவ்வாறு பேசாமல்,
இனிமையாய்ப் பேசு.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று " என்பார்
திருவள்ளுவர்.
மெய்ப்பாடு-------- பெருமிதம்.
பயன் ------------------ ஓம்படுத்தல் .
16 . 21. வழிப்படுத்துரைத்தல் .
கொளு .
போக்கினை மேற்கொள்ளும் தலைவியை வழிப்படுத்தி,
காக்குமூர் செல்லும் தோழி கூறியது .
பொருள்;--- தலைவனோடு செல்கின்ற தலைவியிடம் மேற்கொள்ள
வேண்டிய முறைகளை விளக்கமாகச் சொல்லிவிட்டுத் தன்னூர் நோக்கிப்
புறப்பட்டாள் தோழி.
பாடல்--- 212.
வள்ளி மலையாள் நல்லுடன் போக்குபோல் உளமுவந்து
செல்ல முனைந்திடும் தணிகைச் செல்வியே! சென்றிடுக.
நல்ல,தாய் வல்லமை ஆயமும் உன்னுடன் வந்திடாது;
முள்வழிச் சுரமும், தொல்வழிப் பதியும் உள்ளுகவே.
பொருள்.
வள்ளிமலையிலே வேடனாகிய முருகன் குறவள்ளியை விரும்பி,
அவளோடு உறவாடி, வள்ளியை ச் சிறைமீட்டு, அவளோடு உடன்போக்கு
மேற்கொள்கையில் வள்ளியடைந்த மகிழ்ச்சிபோல ,அவள் முருகனோடு
வந்து மணந்து தங்கிய தணிகை மாமலையில் வீழும் செல்வியே! நீயும்
உன் தலைவனோடு உடன்போக்கு மேற்கொள்க. நீ செல்லுங்கால்
உன்னோடு உன் அன்னை வரமாட்டாள்; உன்னைச்சுற்றியே ஆடிப்பாடும்
பேராயம் வராது; உறவினரும் வாரார்; நீமட்டுமே தலைவனோடு, காட்டின்
முள்வழியிலும் , பரளைக்கற்கள் சூழ் வழியிலும் உன்னுள்ளம் கவர்ந்த
பதியோடு செல்லவேண்டும். இவைகளை மனத்தில் கொண்டு செல்க.
என வாழ்த்தியும், அறிவுரை கூறியும் அனுப்பினாள் .
விளக்கம்;--
1 . வல்லமை ஆயம் = உனக்கு வேண்டிய அனைத்தையும் குறையாது
செய்து பணிபுரியும் தோழியர்க் கூட்டம்.
2 . முள்வழி = காட்டுவழியே செல்லும்பொழுது ஏற்படும் இன்னல்கள்;
கரடு முரடான கற்கள் நிறைந்த முட்செடிகள் நிறைந்த வழி.
3 . தொல்வழி = தொன்மை வாய்ந்த உயர்குடி மரபினர்.
மெய்ப்பாடு --------- அழுகை.
பயன் ------------------- அச்சம் தவிர்த்தல் .
16 . 22. மெல்லக்கொண்டேகல் .
கொளு .
மெல்லிதழ்ப் பஞ்சடி நல்வளைத் தலைவியை
கற்சுரக் கல்லதரில் தளர்ச்சி அகற்றியது.
பொருள்;--- மலரிதழ் போன்றும், பஞ்சுபோன்றும் மேன்மைகொண்ட
பாதங்களை உடைய தலைவியின் துயரை, அகற்றிக் கொடுமையான
காட்டுக்கல்வழியில் தலைவன் அழைத்துச்சென்றான்.
பாடல்--213.
அரக்கக் குணமகல் மயிலும் , சேவலும் கொண்டவனின்
இரக்கத் தணிகை சிறக்கும் நிறையூர் அமைவழிகள்;
புரக்கத் துணித்த புறவழிப் புதுமைக் காடுகளே .
விருப்புடை வித்தகச் சீறடி ! மெல்லவே செல்குவையே.
பொருள்.
அரக்கன் சூரனின் அரக்க குணத்தை அகற்றி, இருகூறான அவனையே
மயிலாகவும், சேவலாகவும் தன்னோடு இணைத்துக்கொண்ட முருகனின்
கருணைகொண்ட திருத்தணிகை போன்று சிறப்புடைய நல்ல கிராமங்கள்
இருபுறமும் படைக்கப்பட்ட காட்டுவழியே நாம் செல்லும் வழியாகும்.
கரடுமுரடான காடுகளைச் சீர் திருத்தி, காட்டை வளர்ப்பதற்கான
வழிகளை மேற்கொண்டு அமைக்கப்பட்ட புதுமைக்காடுகளும், நல்ல
வழிச்சாலைகளும் நிறைந்த புதிய வழி நாம் செல்லும் வழி.நான் மிகவும்
விரும்பும் அழகும்,தூய்மையும் கொண்ட சிறு சேவடி கொண்டவளே !
இக்காட்டில் மெதுவாக, மிக மெதுவாக உன் காலடிகளை வைத்து
வருவாயாக " என்று தலைவன், தலைவியின் அயர்வைப்போக்கி
அழைத்துச்சென்றான்.
விளக்கம்;--
1. அரக்கக்குணம் = ஆணவம், அழித்தல், இரக்கமின்மை போன்ற குணங்கள்
2 . இரக்கத்தணிகை = அரக்கர்கள் மீதும் கருணை காட்டிய தணிகை முருகன்.
3 . வித்தகம் = மதிப்பால் உயர்ந்தும், செல்வமென உயர்ந்தும் விளங்குவது.
மெய்ப்பாடு --------உவகை
பயன்------------------- தலைமகளை அயர்வகற்றல்
16 . 23 . அடலெடுத்து உரைத்தல் .
கொளு .
வில்வேல் வீரர் வருகுவர் என்றே
சொல்லிய தலைவிக்கு வில்லினன் உரைத்தது.
பொருள்;-- உடன்போக்கு மேற்கொண்டமையை எதிர்த்து,உறவினர்,
ஐயன்மார் வருகுவர்" என்றஞ்சிய தலைவிக்கு வீரமும்,கருணையும்
கொண்ட தலைவன் கூறியது.
பாடல்---214.
வில்லொடு வேடுவர் சுற்றிட வியன்போர்த் தணிகையான்
வள்ளியின் தந்தை வந்திட முதுமரம் ஆனதுபோல்,
நல்லவர் நாடினோ நானுமே அஞ்சுவன்; நாற்படைகள்
வல்லவர் வந்திடின் வலியவாள் வீரத்தைக் காண்பாயே .
பொருள் .
வள்ளிமலையிலே வள்ளியை நாடி தணிகை வேடன் சென்று கண்டு
பேசுங்காலை ,வள்ளியைச் சார்ந்த வேடுவர்கள் சுற்றுநின்று போராற்ற
வில்லினை வளைக்க, வேடமுருகனின் போர்த்திறத்தால் அஞ்சி ஓடி
ஒளிந்தனர்; அதேநேரம் வள்ளியின் தந்தை நம்பிராசன் வந்த
சமயங்களில் மரமாகவும்,முதியவராகவும் மாறி மறைந்தானே தவிரப்
போர்புரியவில்லை; அதுபோலவே, நானும் தலைவியின் தந்தை, முதுமக்கள்
போராட வந்தால் அஞ்சி,ஒதுங்கிச் சென்றுவிடுவேன்; அல்லாத வல்லவர்கள்
நாற்படைகளுடனும் வந்தாலும் அவர் படுபாட்டை, எனது வலிமை மிக்க
வாளின் திறத்தைத் தலைவியே! நீ நேரில் காண்பாய்"! என்று
தலைவியிடம் வீரத்தை விளக்கினான்.
விளக்கம்;--
1 . வேடுவர் = வள்ளிமலை வேடுவர்கள்.
2 . வள்ளியின் தந்தை = நம்பிராசன் .
3 . முது, மரம் = முது = முதியவர். மரம் = பசுமை மரமாக .
மெய்ப்பாடு ----- பெருமிதம்.
பயன் ---------------- தன்வலியுணர்த்தி ஆற்றுவித்தல் .
16. 24 . அயர்வு அகற்றல்.
கொளு .
துயருறு சுரத்தில் வெம்மை வழியில்
அயர்வினை அகற்றி அன்பு காட்டியது.
பொருள்;-- வெம்மைமிகுந்த துயர் தரும் காட்டுவழியில் தலைவன்
தலைவியின் அயர்வு நீக்கி அன்பு காட்டி அழைத்துச்சென்றான்.
பாடல்---215.
தக்கன் வேள்வியில் கலந்துறு அவப்பலன் காரணம்
சிக்கிச் சிறைபடு தேவர் துயர்களை தணிகைபோல்
சிக்கிய நாமும் செயல்படு காட்டினுள் சீரழிந்தோம்;
இக்கணம் வெளியில் சிக்கலான் மாளிகை அடைவோமே
பொருள்.
சிவபெருமானை அழைக்காது, அவரை அவமதிக்கும் நோக்குடன் தக்கன்
செய்த வேள்வியில் நாரணன்,இந்திரன் முதலிய தேவர்கள் கலந்து
கொண்டனர். அந்தப்பாவத்தின் காரணமாகச் சூரனிடம் சிறைப்பட்டுத்
தேவர்கள் பெருந்துயருற்றனர்; திருத்தணிகை முருகன் போரெடுத்து,
அவர்களை மீட்டான்; அவ்வருள்போல
நாமும் இக்காட்டினுள் சிக்கித் தவிப்பதில் இருந்து மீள்வோம்; சீரழிந்த
நமது துன்பமெல்லாம் நீங்கி, இப்பொழுதே காட்டைவிட்டு வெளியேறுவோம்;
நமது கண்முன்னே அருள்முருகன் சிக்கல் சிங்காரவேலன் அருள்போல்
நமது மாளிகை தெரியும்;அதை அடைவோம். நமது துயர் நீங்கிடும் . நீ
காவலியுறாதே' எனத் தலைவன் தலைவியை ஆற்றுப்படுத்தினான்.
விளக்கம்;--
1 . அவப்பலன் = செய்த பாவத்தின் பலன் [தக்கன் வேள்வியில் கலந்து
கொண்ட பாவத்தின் விளைவு சூரனின் சிறையில் தவித்தல்]
2. சீரழிந்தோம் = வெய்யில்,தீ, மழை, முட்கள், பரளைக்கற்கள் இவைகளால்
3 . சிக்கலான் மாளிகை = சிக்கலானைப் போற்றும் நமது மாளிகை.
மெய்ப்பாடு------- பெருமிதம்.
பயன் ---------------- தலைமகளை அயர்வகற்றுதல் .
16 . 25 . நெறி விலக்கிக் கூறல்.
கொளு .
காட்டிடைக் கண்டவர் கருங்குழலி உடன்வரப் ,
பூட்டிய வில்லுடன் செல்வீர! தங்கெனல்.
பொருள்;-- இவர்கள் காட்டிடையே செல்லுங்கால் அவர்களைக் கண்டவர்கள்
அழகேயுருவான பெண் உடன் வரவும், நாணும் ,வில்லும் ஏந்திய கரத்துடன்
செல்லும் தலைவனைப் பார்த்து, வீரனே! இன்று இங்கு தங்கிச் செல்க"
என்றனர்.
பாடல்--216.
தணிகை அருள்பெறார் போன்று தழைரவி மாய்ந்துபோனான்;
அணியோ அருநடை அவலம்; வழியோ அறமற்றார்
பிணிப்பால் குணமிலா விடலை வேடரின் வெம்முனையாம் ;
தனிமகன் தவிர்த்திடு ! தங்கிடு இங்கே. என்றனரே .
பொருள்.
தலைவனே! மாலை நேரம் ; திருத்தணிகை முருகனின் அருளைப்
பெறாதோர் போன்று, ஆதவனும் தனது வலிமை குன்றி மேற்கில்
மறைந்துவிட்டான். அழகே உருவான இந்தப் பெண்ணும் நீண்டதூரம்
நடந்ததால் களைத்துப்போனாள் ; நீ இனிச் செல்லும் வழியோ
தீமையைக் கொண்டவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பகுதி.
நல்ல குணமே இல்லாத செருக்குடைய விடலைகள் ஒருபுறம் சூழ்வர்;
மறுபுறம் வில்லேந்திய வேடர்கள் கூட்டத்தாருடன் போருக்கு வருவர் ;
நீயோ தனி ஒருவன்; எப்படி அவர்களுடன் போரிட்டு வெல்வாய்? ஆகவே
போகும் எண்ணத்தை மாற்றிவிடு ! இங்கேயே எம்மவருடன் தங்கிவிடு !
என்று கண்டவர்கள் கூறி அவர்களைப் போகவிடாது தடுத்தனர்.
விளக்கம் ;--
1.தழைரவி = தழைத்து ஒளி கொடுத்த சூரியன்
2 . அணியோ = அழகே உருவான தலைவியோ
3 . விடலை = வழிப்பறிக் கள்வர்கள் ; விடலை--- பாலைநில ஆண்மகன்
மெய்ப்பாடு-------- அழுகை.
பயன் ----------------- நெறி விலக்குதல் .
16. 26.கண்டவர் மகிழ்தல்.
கொளு .
சுட்டெரி காட்டில் கண்டவர் கூறல்.
பொருள்;-- செருப்புச் சுட்டெரிக்கும் காட்டு வழியில் தலைவனையும்,
தலைவியையும் கண்டவர்கள் இவ்வாறு உரைத்தனர்.
பாடல்--217.
அன்பறக் காதலர் அல்வழி இரண்டறக் கலந்தே
முன்பின் சுவைத்தே செல்லல் முறைவழி கடப்பதன்று
இன்பத் தேன்மலர் இனிதே இணைந்திரு வண்டாடல்
துன்பெதிர்த் தணிகைப் பொன்பொழில் காட்சியைக் கண்டனமே .
பொருள்.
அன்பும்,அறமும் கலந்தாற்போன்று இரண்டறக் கலந்த காதலர்
இனிமையற்ற காட்டுவழியில் சென்றனர்; செல்லுங்கால் முன் செல்லும்
தலைவியின் அழகைப் பின்னிருந்து சுவைத்தபடி செல்லும் தலைவனும்,
பின்வரும் தலைவனின் வீரம் மிக்க மேனியை எண்ணிச் சுவைத்தபடி
செல்லும் தலைவியும் இந்த காட்டுவழியை , ஊர்செல்லும் வழியைக்
கடப்பதாகத் தெரியவில்லை;
இனிக்கும் தேனைச் சுவைப்பதற்கு மலரில் இனிது அமர்ந்த இரு
வண்டுகள்,இணைந்திருந்த இரு காதல் வண்டுகள் அம்மலரைவிட்டு
அகலாமல் இணைந்தபடியே சுற்றிச்சுற்றி வருகின்ற காட்சியைத்
துன்பத்தின் மாறுபட்டு, இன்பமே புரியும் திருத்தணிகை ச்சோலையில்
பொன்மலர்கள் பூத்துக்குலுங்கும் பொழிலில் காணலாம்; அந்தக்
காட்சியை நாங்கள் இங்கே காண்கிறோம்" என்று கூறிய
தலைவன் தலைவியைக் கண்டவர்கள் வியந்துகூறினர்.
விளக்கம்;---
1. அல்வழி = நடக்க முடியாத கடுமையான வழி.
2 . முறைவழி = காட்டை விட்டு வெளியே செல்லும் வழி .
3. வண்டாடல் = ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது சுற்றும் ஆட்டம்.
மெய்ப்பாடு --------- பெருமிதம்.
பயன் ------------------- நெறி விலக்குதல்.
16.27 . வழிவிளையாடல் .
கொளு .
வெந்தழல் சுரத்தே வேலுடைத் தலைவன்,
செந்நிற மேனியுடன் விளையாடி மகிழ்ந்தது.
பொருள்;-- கடுமையான வெப்பமுற்ற வழியில் சென்றுகொண்டிருந்த
தலைவன், செந்நிறத்தலைவியுடன் விளையாடி மகிழ்ந்தது.
பாடல்--218.
கடுஞ்சுரம் கடந்து களைப்பால் வருந்தும் மனத்தையே
தடுத்தே அழைத்தது தளிர்வாய் தவழ்ந்த மொழிதானே;
அடுத்தும் அணைத்த கரங்கள் அகலுமோ எனைவிட்டே ;
தொடுத்திடு மலரே! தணிகை அருளே! ஆடுகவே.
பொருள்.
கடுமை மிக்க காட்டைக் கடந்து ,களைப்பால் வருந்தும் எனது மனத்தை
"வருத்தம் வேண்டாம்" எனத்தடுத்து அழைத்தது உனது தளிர்போன்ற
இதழுடைய வாயில் மென்மையாகத் தவழ்ந்துவரும் மொழியல்லவா!
அதோடு நில்லாமல் என்னை அணைத்த உன் கரங்கள் என்னைவிட்டு
அகன்றிடுமோ? தூய்மையாகத் தொடுக்கப்பட்ட மலர்ச்சரமே!
திருத்தணிகை முருகனருள்போல் நல்லன வழங்கும் பேரருளே !
உன் அயர்வு நீங்க நீ என்னோடு விளையாடுகவே ?" என்று
விளையாடினான்.
விளக்கம் ;--
1 . தளிர்வாய் = இளந்தளிரன்ன இதழ் கொண்ட வாய்.
2 . அகலுமோ ? = ஓ கார இடைச்சொல் வினாப்பொருளில் வந்தது.
3. தொடுத்திடு மலரே = தூய்மைமலர்களால் தொடுக்கப்பட்ட சரம் .
மெய்ப்பாடு --------உவகை .
பயன் ----------------- மகிழ்தல் .
16 . 28 . நகரணிமை கூறல் .
கொளு .
வண்டுசூழ் குழலியொடு வந்துநின்ற தலைவனிடம்
கண்டவர் கூறினார் அண்மையில் நகரென.
பொருள்;--- தலைவியோடு வருகின்ற தலைவனைக் கண்டவர்கள்
தலைவனே! நகரம் வெகு அருகில்தான் " என்று கூறினார்.
பாடல்---219.
அன்ன மென்ன நடையுடை அழகுடன் தணிகையாம்
மன்னிடும் மலையைக் கடந்து பொன்னொளிர் தடாகமும் ,
மின்னிடை மகளிர் செந்நிற மலராய் மூழ்குதலும்,
விண்ணென விரிநகர் வியனாய்த் தோன்றும் காண்குவையே.
பொருள்.
அன்னம்போல் நடைகொண்ட அழகுத் தலைவியுடன் , நமது தணிகை
மலைபோன்று விளங்கும் ஒருமலையைக் கடந்து சென்றால் ,
பொன்னலைகள் போல் ஒளிரும் பெரிய தடாகத்தைக் காணலாம்;
அத்தடாகத்தில் மின்னலென்ன இடைகொண்ட பெண்கள், செந்தாமரை
நீரினுள் மூழ்குதல்போல் முழ்கி எழுதலையும் பார்க்கலாம்; அதைத்
தாண்டியதும் விண்ணகம்போல் காட்சியளிக்கும் பரந்துபட்ட அழகு
நகரைக் காண்பாய்! என்று கண்டவர்கள் தலைவனுக்கு வழியும்
வகையும் கூறினார்கள்.
விளக்கம்;---
1.மன்னிடும் = விளங்கிடும்
2 . பொன்னொளிர் = சூரிய ஒளியில் நீரலைகள் பொன்போல் காட்சியளிக்கும்.
3. செந்நிறமலர் = செந்தாமரை மலர்.
மெய்ப்பாடு---------- பெருமிதம்.
பயன் ------------------- இடம் அணித்து என்றல்.
16. 29 . நகர் காட்டல்.
கொளு .
கொடுஞ்சுரம் கடந்த குழையணி தலைவிக்கு,
மடுவும் அகழியும் சூழ்நகர் காட்டியது.
பொருள்;-- கடுமையான காட்டுவழி தாண்டி வந்த தலைவிக்குத்
தலைவன் அகழிசூழ்ந்த நகரைக் காண்பித்தது.
பாடல்--220.
பொன்கொடி வான்தொடு வனப்பால் விண்ணகம் மண்ணகமோ!
தென்னகத் தணிகைத் தூயவன் தண்ணருள் கண்டிடவோ!
அன்புடன் அறிவிணை அறிஞர் கூடும் ஆய்வகமோ!
இன்பெழில் இளங்கா மாளிகை பொலியும் நீள்நகரே .
பொருள்.
தலைவியே! நம்நகரில் பறக்கும் பொன்மயமான கொடியைப்பார்! அது
வானைத்தொடும் அழகுச்சூழலால் விண்ணகத்தையும் , மண்ணகத்தையும்
இணைக்கும் வழிபோல் காணப்படுகிறது.
தென்னாட்டின் திருத்தணிகையின் அமர்ந்துள்ள தூயவனாகிய
முருகனின் குளிர்ச்சி மிகுந்த அருட்டன்மையைக் காண அவ்விண்ணகம்
கீழிறங்கி இந்நகருக்கு வருகிறதோ!
இந்நகரமானது அன்பும்,அறிவும் இணைந்த பேரறிஞர்கள் கூடுகின்ற
ஆய்வுச்சாலையாக விளங்குவதால் விண்ணகம் இங்கு வருகிறதோ!
என்றெல்லாம் சிந்திக்கவைக்கும் நகர் இன்பம்,அழகு, இளமை
நிலைத்த பூங்காக்களாலும் , வான்தொடும் மாளிகைகளாலும்
விளங்குவதைப் பார்! அதோ தோன்றும் அழகுடைய மிகப்பெரிய
நகரைக்காண் ! என்று கூறிய தலைவன் நகரைக்காண்பித்தான்.
விளக்கம்;--
1 . வனப்பு = படபடத்துப் பறக்கும் அழகு.
2 . தென்னகம் = தென்னாடு ;தமிழகம் .
3 . இளங்கா = இளமைச்செடிகள், வளமை மரங்கள், தளிர்கள், மலர்கள்
நிறைந்து விளங்கும் சோலை.
மெய்ப்பாடு ----------------பெருமிதம்.
பயன் --------------------------- இடங்காட்டல் .
16 .30. பதி பரிசுரைத்தல் .
கொளு .
நன்னகர் அடைந்து நலமிகு தலைவிக்கு,
பொன்னகர்ப் பெருமை விளக்கி உரைத்தது.
பொருள்;-- அந்த நல்லநகரினை அடைந்து, அந்நகரின் பெருமைகளைத்
தலைவிக்குத் தலைவன் விளக்கி உரைத்தான்.
பாடல்--- 221.
உவையே செய்மலைகள் இவையோ மலருடை நல்வாவி ;
அவையே அருநிலா அயர்வை ஆற்றும் அழகுசோலை ;
சைவத் திருமுறைக் கூடம் , சிவமகன் தணிகையான்
மைவரைக் கோயிலும்,மலர்ந்த மாநகர் மைவளையே !
பொருள்.
நகருள் வந்தடைந்த தலைவன், தலைவிக்கு அந்நகரின் சிறப்பான
இடங்களை விளக்குகிறான்.
நடுவில் அமருந்துள்ள கட்டுமானக் குன்றத்தைப் பார்; இதோ
நம்முன் காட்சி தருவது அல்லியும் தாமரையும் மலர்ந்துள்ள பொய்கை;
அதோ பார் ! வானத்து நிலா இங்கு வந்து தனது அசதியைப்
போக்கிக்கொள்ளும் உயர்மரங்களும், செடிகளும் மலர்க்கூட்டங்களும்
நிறைந்த அழகுடைய பூங்கா; சைவ நாயன்மார்கள் சிவனைப் போற்றிப்
பாடிய தேவார திருவாசகங்கள் பாடுகின்ற திருமுறைக்கூடம்; சிவ
-பெருமானின் மகனான திருத்தணிகை முருகன் வீற்றருளும் மலைக்
கோயில்; என அழகும், தொன்மையும் நிறைந்த நமது நகர் .
இதுதான் எனது இனியவளே! எனக்கூறினான்.
விளக்கம்;-- 'இப்பாடலில் இடவகைகளை மூன்றாகப்பிரிக்கும் தொன்மை
மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. சேய்மை, அண்மை , இரண்டிற்கும் நடு
என்பன அவை. இதனை உவை ,இவை, அவை என்பர். இவற்றை முறையே
வைத்துப் பாடப்பட்டுள்ளது.
1 .செய்மலைகள் = கட்டுமான மலைகள்.
2 . நல்வாவி = நல்ல குளம்.
3 . திருமுறை = நால்வர் பாடிய தேவாரத் திருவாசகங்கள். பன்னிருதிருமுறை.
மெய்ப்பாடு --------- பெருமிதம்.
பயன் --------------------- இடம் காட்டல்.
16 .31 . செவிலி தேடல்.
கொளு .
கவலை கொண்ட கருணைத் தோழியைச்
செவிலி நடந்த செய்தியை வினவியது.
பொருள்;-- உடன்போக்கு மேற்கொண்டு தலைவி பிரிந்து சென்றதால்
வாதமுற்று விளங்கிய தோழியிடம் நடந்த நிகழ்வுகளைக் கேட்டறிந்தாள்
செவிலி.
பாடல் ---222.
அசைந்த அருநடை ஊர்ந்திடும் பசுமை கூர்ந்தபார்வை,
இசையாம் பேச்சுடை நசைமகள் இலத்தில் எங்குசென்றாள் ?
வசையால் வாழ்வழி பிள்ளை நலமுற வரமளித்த
விசைமயில் தணிகை பணியும் தோழி அயர்கின்றதே !
பொருள்.
அசையும் அறுவடை கொண்ட மயில்போன்றவள், தொங்கியபடிக்
காற்றில் அசைந்தாடும் பைங்கொடி போல் மென்மையானவள், கூர்ந்து
நோக்கும் மான்போன்ற விழியுடையவள், குயிலின் குரலிசைபோல்
பேசுபவள், ஆகிய எனது ஆசைமகள் வீடெங்கும் காணவில்லையே 1
எங்கு போனாள் ? தீய செயலால் வசையுற்று,வாழ்விழந்த அருணகிரி
என்னும் மகன் நலம்பெற வரம் அளித்து வாழவைத்த விரைவாய்ச்செல்லும்
மயிள்மீது அமர்ந்த தணிகை முதல்வன் முருகனைப் பணிந்து போற்றும்
தலைவியின் தோழியே! நீயும் ஏன் வருத்தத்தில் காணப்படுகிறாய்?
என்று தோழியிடம் வினவினாள்.
விளக்கம் ;--
1 . ஊர்ந்திடும் = இங்குமங்கும் ஆடி அசைந்திடும்,
2 . நசைமகள் = விருப்பமுள்ள ஆசைமகள் .
3 . பிள்ளை = யாருமற்ற பிள்ளை ; மகன் .
மெய்ப்பாடு ---- மருட்கை.
பயன் -------------தலைமகட்கு உற்றது உணர்தல்.
16 . 32. அறத்தொடு நிற்றல் .
கொளு .
ஒளிக்குழைத் தோழி படைத்த மொழியில்
அளியுடைச் செவிலிக்கு அறத்தொடு நின்றாள்,
பொருள்;---- தலைவி பற்றிச் செவிலி வினவிய வினாக்களுக்கு, நேரிடை
விடையளிக்காமல் அறத்தொடு நின்றாள் தோழி.
பாடல்---223.
குறத்தி வென்ற குலமகன் தணிகைத் தெருவினிலே
சிறப்புறு வெற்றிவேல் சீறிடும் செவ்வழல் செங்கரத்தில்
திறத்ததாய், நிறமுடைத் தாரை விரும்பிப் பெற்றனளே
அறக்கரப் பாவை ஆடவே அகமகிழ் ஆரணங்கே .
பொருள்.
குறவள்ளியை வென்று, மணந்த நற்குலமகன் முருகன் வீற்றிருக்கும்
திருத்தணிகைத் தெருவிலே சிறப்புடைய வெற்றிவேலை, சீறும் செந்தழல்
பிடித்த கரத்தில் நல்ல தகுதி மிகாதாயும், நறுமணம் உடையதாயும், உள்ள
மலர்மாலையை ஒருத்தி விரும்பிப்பெற்றாள் ", அவள் அவளுடைய கையில்
வைத்திருந்த விளையாட்டுப் பொம்மை விளையாட அம்மாலையை
வாங்கினாள்" என நினைக்கிறேன்; ஆனால் அம்மாலையை வாங்கியதும்
அவள் மகிழ்ச்சியோடு காணப்பட்டாள் " இது மட்டுமே எனக்குத்தெரியும்,
வேறொன்றும் நானறியேன், எனச்செவிலியிடம் அறத்தொடு நின்றாள்
தோழி.
விளக்கம் ;--
1 . செவ்வழல் = செம்மைமிகு அனல் பறக்கும் போர்புரி வேல் .
2 . விரும்பி = அம்மாலையை மிகவும் விரும்பி வாங்கிக்கொண்டாள்.
3 . ஆடவே = விளையாட, பொம்மையோடு விளையாட.
மெய்ப்பாடு ------பெருமிதம்.
பயன் ---- ----------- உடன்போக்கு உணர்த்துதல் .
16. 33.கற்பு நிலைக்கு இரங்கல் .
கொளு .
பொற்புடைத் தலைவி கற்புநிலை கேட்டுச்
நற்செவிலி சொல்ல, நற்றாய் வருந்தியது.
பொருள்;--- தலைவியின் தகுதிமிக்க கற்பு வாழ்வு விரும்பலைச்
செவிலி வாயிலாக அறிந்த நற்றாய் வருந்தி வாயினாள் .
பாடல்----224.
ஆணவ மூவரை அழித்தே மாண்புறு தணிகையான்
கானலம் புனத்தே களிற்றின் கடுமை அடக்கியே ,
மான்விழி காத்தவன் மனத்தில் நிறைந்தவன் மணந்திடத்
தேன்சொல் தகுதி; பருவம் விடுத்தே அழைத்திடவே.
பொருள்.
ஆணவத்தால் பேரரக்கரான சூரன்,சிங்கமுகன்,தாரகன் ஆகிய
மூவரையும் அழித்தும்,அவர்களுக்கும் அருள்பொழிந்தும் விளங்கும்
மாண்பினப்பெற்ற திருத்தணிகை மாமுருகனது அழகுசிந்தும் சோலையில்
தினைப்புனம் காத்த காலையில் நமது தலைவியை நோக்கித் துதிக்கை
வீசிக் கடும் சினத்துடன் வந்த மதக்களிற்றை அடக்கித் தலைவியைக்
காத்தவன், மனதிலே நிறைந்தவன் அத்தலைவன்; அவனுக்கே நம்மகளை
மணம் முடித்துக் கொடுத்தலே உயர்ந்த செயலாகும்; ஆயினும்
தலைவியின் பருவம்,,வயது நோக்கின் அது தகாதது; ஆயினும்
அத்தலைவனை நமது வீட்டிற்கு மகிழ்வோடு வரவேற்பதே சிறப்பாகும்."
எனச்செவிலி நற்றாயிடம் கூறினாள் .
விளக்கம் ----
1. மூவர் = சூரன்,சிங்கமுகன், தாரகன் ஆகியோர்.
2 . கானலம் = அழகிய காட்டுதினைப்புனச்சோலை .
3 .மான்விழி = தலைவி . அன்மொழி .
மெய்ப்பாடு ------------உவகையைச் சார்ந்த அழுகை.
பயன் ------------ தலைமகளது கற்பினைப் பாராட்டி, ஆற்றாமை நீங்குதல்.
16.34.கவன்றுரைத்தல் .
கொளு .
தலைவியின் நிலைநினைந்து செவிலி கவன்றது.
பொருள் ;--- தலைவியினுடைய நிலையை அறிந்து செவிலித்தாய்
வருந்தியது.
பாடல்----225.
வந்திடும்; முத்தமே தந்திடும்; வளரா வளமுலை
முந்தியும்,பிந்தியும் முதுகில் அழுத்தியே தேய்த்தாடும்;
விந்தை! முந்தை செலும்வழிக் காட்டிலே நடந்தனையே!
கந்தவேள் தணிகைக் கருணை பெறாதோர்போல் ஆனாயே!
பொருள்.
விந்தையே! என்மகளே! அவ்விளம் வயதில் ஓடி வந்தே என்னைக்
கட்டிக்கொள்வாய்! என்கன்னத்தில் அன்பு முத்தம் பொழிவாய்; இன்னும்
வெளிவந்து எட்டிப்பாராத வளமை மிகுந்த சிறு முலையை, அப்படியே
என் முதுகில் அழுத்துவாய் ; மார்பில் படுத்துக்கொண்டு மீண்டும்
அந்தச்சிறு காம்பு என்மேனி மீது படுமாறு புரண்டு புரண்டு விழுந்து
விளையாடுவாய்; அப்படி அன்பு செலுத்திய மகளே! இன்றோ நீ அந்த
உன்மனம் கவர்ந்த செல்வனோடு சென்றுவிட்டாய்; அவன் முன்னே
நடக்க, நீ அந்தக்கடும் காட்டிலே மென்மையான கால்கள் நோவ ,
நடந்து சென்றுவிட்டாய்'
தணிகையை ஆளும் முருகப்பெருமானின் கருணை பெறாது தவிக்கும்
பாவிகளைப் போலச் சுட்டெரிக்கும், நிழலற்ற பரற்கற்கள் நிறைந்த
கொடும் வழியில் நடந்து செல்கின்றாய்! என்னே! துயர்! என்று
உடன்போக்கு மேற்கொண்ட தலைவியை நினைந்து துன்புற்றாள் .
விளக்கம்;---
1. முந்தியும்,பிந்தியும் = மார்பிலும், முதுகிலும் ;முன்னும்,பின்னும்.
2 . விந்தை = குழந்தைத் தனமாக, அன்புமீதூரப் பொழியும் விளையாட்டாக.
3 . முந்தை = உனக்கு முன்னவன்;மூத்தவன்; வழிகாட்டுபவன்; தலைவன்.
மெய்ப்பாடு ---------அழுகை.
பயன் --------------------- ஆற்றாமை நீங்குதல்.
16 . 35 . அடி நினைந்திரங்கல் .
கொளு .
வெஞ்சுரம் தலைவியின் பஞ்சு மெல்லடி,
செஞ்செவிலி நெஞ்சில் நிறுத்தி வருந்தியது.
பொருள்;-- தலைவி தலைவனோடு சென்ற கொடுமையான காட்டுவழி;
மென்மையான பாதங்கள் கொண்ட தலைவி; இதை நினைத்துப் பார்த்த
செவிலி, அயர்ந்து வருந்தினாள்.
பாடல்---226.
குருவாய் வந்தவன் குவலய முதன்மைத் தணிகையில்
மருவாம் மலரினை மறந்தே மிதித்துத் துயருறும்
திருவே! தீயெரி வழியெலாம் திரள்கல் உறுவேலாய்க்
கருமுள் கனியடி தாங்குமோ ? கண்ணீர் ; உனைநினைந்தே.
பொருள்.
தந்தையாகிய சிவபெருமானுக்கும் ஆசானாய் அமர்ந்து.உபதேசித்தவன் ;
மூவேழ் உலகிற்குமே முதல்வனாய்,ஆசானாய் விளங்கும்
முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருத்தணிகைச் சோலையில்,
அரும்பாகி, மலர்ந்த மலர்களை அறியாது மிதித்துவிட்டாலே மிகுந்த
துயருறும் தலைவியே! உடன்போக்கு மேற்கொண்ட நீ தலைவனோடு
தீ எரியும் சூரியக்கதிர் ஒளியில் விளங்கும் வழியை எப்படிக்கடப்பாய்?
நடக்கும் வழிமுழுவதும் கிடக்கும் பரளைக் கற்கள் மீது எப்படி உனது
மெல்லிய பாதத்தை வைத்து நடப்பாய் ? வேல் போலக் கூர்மையுற்ற
முட்கள் நிறைந்த வழியை உனது கனிபோல் சிவந்த மென்மைப் பாதங்கள்
எப்படிக்கடக்கும் ? இதை எண்ணி எண்ணிக் கண்ணீர் விடுகிறேன்;
உன்னை நினைந்து துன்புறுகிறேன்." என்று செவிலி தமக்குள்ளே வருந்திப்
புலம்பினாள்.
விளக்கம்;--
1. குருவாய் = ஆசானாய் அமர்ந்து பிரணவ உபதேசம் செய்தவன்.
2 . மருவாம் = அரும்பான நல் மொட்டு .
3 . திரள்கல் = பரளைக்கற்கள் .
மெய்ப்பாடு -------அழுகை .
பயன் ------------------ ஆற்றாமை நீங்குதல்.
16 . 36 . நற்றாய்க்கு உரைத்தல்.
கொளு .
இளமுலை நல்லாள் இனியதை அறிய
வளத்தாய் முன்னர்ச் செவிலி உரைத்தது.
பொருள்;-- உடன்போக்கு மேற்கொண்ட தலைவியின் நிலையை
அறிந்துகொள்ள விரும்பும் நற்றாய்க்குச் செவிலி எடுத்துரைத்தது.
பாடல்--- 227.
மாயமே உருவாம் மலைதனை வென்ற , தணிகையான்
தூய சேவடி தொழுதிடார் போன்றே, பெருந்துயரைத்
தாயின் தாங்குகை தளர்ந்தே விலகிடத் தனிமையால்
காய்ந்தே அழுதிடும் மகளின் போக்கறிவு சேர்த்ததே .
பொருள்.
மாயத்தையே தனது வலிமையாகக் கொண்ட தாரகன் உருவாக்கிய
கிரௌஞ்சம்" என்னும் மலையையும் அழித்துத் தாரகனையும் வென்ற
முருகன், திருத்தணிகையைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனது
தூய்மை மிக்க சேவடியைத் தொழாதவர்கள் படுகின்ற துயரைப்போலவே,
தாயின் அரவணைப்பில் மகிழ்வோடு இருக்கும் மகள் ,
அக்குழந்தையைத் தாங்கியிருக்கும் கையைச் சற்றே நழுவவிட்டால் ,
தாயிடமிருந்து நாம் தனிமைப் பட்டுவிட்டோம்" என்ற எண்ணத்தில்
காய்ந்த சினத்தோடு அழுத தலைவி, இன்றோ உடன்போக்கு
மேற்கொண்டு தலைவனோடு சென்றுவிட்டாள்"என்பது நமக்குப்
பெருந்துரைத் தருகிறது; என்று தலைவி வீட்டைவிட்டு வெளியேறியதை
நற்றாயிடம் எடுத்துரைத்தாள் செவிலி.
விளக்கம்;---
1. மலைதனை = கிரௌஞ்சம் என்னும் மலையை
2 . தாங்குகை = குழந்தையை அணைத்துப் பிடித்திருக்கும் கை .
3 . போக்கறிவு = தலைவனோடு உடன்போக்கு மேற்கொள்ளும் அறிவு.
மெய்ப்பாடு -----------அழுகை.
பயன் ----------------------- ஆற்றாமை நீங்குதல்.
16 . 37. நற்றாய் வருந்துதல்.
கொளு .
செவிலி சொல்ல நற்றாய் வருந்தியது.
பொருள்;--- செவிலியானவள்,நற்றாயிடம் நமது மகள் உடன் போக்கு
மேற்கொண்டாள் " என்றுரைத்ததும், நற்றாயோ மிகவும்வருந்தினாள் .
பாடல்---228.
மெல்லிசை மேவலாள் , வல்லிசை மனத்தாள் , என்மகள்தான்
வல்லவன் பின்னரே நற்றோழி , மறந்து, பெற்றவளின்
உள்ளமும் துறந்து, ஊரார் கலங்கிட, நல்லபுகழ்ப்
பள்ளுடைத் தணிகை போற்றார் துயர்ச்சுரம் போயினளே.
பொருள்.
மெல்லிய இசைபோல் பேசும் மொழியை உடையவள்; வலிமை மிக்க
மனத்தையுடையவள்; ஆகிய எனது அன்புமகள் யாரும் அறியாத புதிய
வல்லவனுடன், அவன் பின்னால் , அவளது உயிர்தோழியை மறந்தும்,
பெற்றவளாகிய என்னை,தாயுள்ளத்தை மறந்தும், நான்மட்டுமன்று, இவ்வூரே
கலங்கியழுதிட
திருப்புகழ் பாடிய அருணகிரியின் பள்ளுப்பாடலின் தலைவனாகிய
திருத்தணிகை முருகனைப் போற்றாதார் துயரம்போன்ற காட்டுவழி
சென்றுவிட்டாள்." இதை நான் எப்படி ஏற்றிடுவேன்? என்று நற்றாய்
அழுது புலம்பினாள்.
விளக்கம்;----
1 . மெல்லிசை = பண்புத்தொகை .
2 . நல்லபுகழ் = திருப்புகழ் .
3. சுரம் = காட்டு.
மெய்ப்பாடு ---------அழுகை .
பயன் ------------------ ஆற்றாமை நீங்குதல்.
16 . 38 . கிளிமொழிக்கு இரங்கல்.
கொளு .
அஞ்சுக மொழியாள் வெஞ்சுரம் சென்றிடக்
கிள்ளை கண்டு தாயின் புலம்பல்.
பொருள்;-- தலைவி,தலைவனோடு கானகம் சென்றிட, அவளைப்
பிரிந்து தவிக்கும் கிளியோடு தாய் புலம்பியது.
பாடல்--229.
வேலுடைத தணிகை நாளுடை அபயம் பெறாதோர்போல்
மாலுடைக் காட்டினில் நீள்வழி சென்றவள் எங்குதங்கும்?
ஆலிலைக் கிள்ளை அனையே! அகன்றனை; அஞ்சுவனே!
காலினால் பருந்து கவ்விடும் ; கிளிசொல் கிளர்நெஞ்சே !
பொருள்.
வேலினைக்கையிலேந்தி வீற்றிருக்கும் திருத்தணிகை வேலவனிடம்
அருளைப் பெறாதவர்கள் போல, மயக்கம் தரக்கூடிய கொடுமையான
காட்டினில் தலைவனோடு நீண்ட வழி செல்லத்துணிந்த தலைவி
எப்படிச்செல்வாள்? எங்கு தங்குவாள்? எனப்புலம்பிய நற்றாயின் சொல்லக்
கேட்ட கூண்டிலிருந்த , ஆலிலைபோல் பசுமையான வளர்ப்புக்கிளியானது
அன்னையே! நீ எங்கோ சென்றுவிட்டாயா ? உன்னைப்பிரிந்தால் நான்
அஞ்சுவேனே ! பறந்துவரும் பருந்து, காலினால் எண்ணைக்கவ்விச்சென்று
விடுமே! என்னை யார் காப்பாத்துவார்கள்? எனக் கூக்குரலிட்டு, அழுதிட
அதுகேட்டுத் தாயானவள் மேலும் வருந்தும் நிலைக்கு ஆளானாள் .
விளக்கம்;--
1 . மாலுடைக்காட்டினில் = மயங்கவைக்கும் காட்டுவழி
2 . ஆலிலை = ஆல மரத்திலைப்பச்சை
3 . கிளர்நெஞ்சே = மேலும் துயர் தரும் நெஞ்சமே!
மெய்ப்பாடு --------- அழுகை
பயன் ------------------- ஆற்றாமை நீங்குதல்.
16 . 39 . சுடரோடு இரத்தல் .
கொளு .
செஞ்சுடர் போற்றி வெஞ்சுடர் தணிக்க"
அஞ்சொல் மாதர் அன்புடன் வேண்டியது .
பொருள்;-- கொடுமையான காட்டிலே செல்லும் தலைவியின் நன்மை
வேண்டி, செவிலியும்,நற்றாயும் ஆதவனை வணங்கி கடும்வெய்யிலைக்
குறைத்து,வழிநடக்கும் ,தலைவியின் துன்பத்தைக் குறைப்பாய்"
எனப்போற்றினார்.
பாடல்---230.
செஞ்சுடர் மேலவ! செல்வழி சீரிலாச் சுரப்பாதை ;
வஞ்சியோ வாடி வதங்கிடும்; வாடா நிலைவழங்கு!
அஞ்சிடும் அடியவர் அல்லல் களையும் தணிகையான்
கஞ்சக் கரம்போல் கடுமை குறைத்தபின் ஒளிர்வாயே .
பொருள்.
செவ்வொளி மிக்க சூரியனே! எங்களை விட்டுப்பிரிந்து தலைவனோடு
செல்லும் தலைவி செல்லும் வழியோ கரடுமுரடான காட்டுப்பாதை;
எமது மகளோ வாடிவதங்கும் கொடி போன்றவள்; அவள் வாடாத
நிலையை நீ தான் வழங்கவேண்டும்; அஞ்சும் அடியவர்கள் எங்கிருந்தாலும்
அவர்தம் அச்சத்தைப் போக்கி அருள்புரியும் திருத்தணிகை முருகனது
அன்றலர்ந்த தாமரைபோல் விளங்கும் அருட்கரம்போல நீயும் உனது
ஒளிமிகுந்த சுடர்க்கரத்தை மென்மையாக்கி, ஒளித்தன்மையைக்
குறைத்து அதன்பின் ஒளிர்வாய்! அதுவே தலைவியின் துயரைப் போக்கும்"
எனச் செவிலியும், நற்றாயும் வேண்டினர்.
விளக்கம்;---
1சீரிலா = ஒழுங்கற்ற, வழி.
2 . வஞ்சியோ = தலைவியோ
3 . கஞ்சம் = தாமரைமலர்.
மெய்ப்பாடு ---------அழுகை.
பயன் .......................... ஆற்றாமை நீங்குதல்.
16. 40 . பருவம் நினைந்து கவறல் .
கொளு .
இளம்பருவத் தலைவிக்கு நற்றாய் வருந்தியது..
பொருள்;--- வளர்வடையாத சிற்றிளம் பருவத்தாள் தலைவியை
நினைந்து தாய் கவலைப்பட்டாள் .
பாடல்---231.
தழலுறு தணிகைக் கடவுள் தளிருடைச் சோலையில்
நிழலை நிலப்பேய் நினைந்தே அஞ்சிடும் மழலையவள்
அழல்வாள் தலைவன் அன்புடைப் பணிவிடை ஆற்றுவாளோ?
பழகின் வந்திடும் ? இளமைப் பருவம் வருந்திடுமே !
பொருள்.
சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியால் உருவான சுடரான
திருத்தணிகைக் கடவுளே முருகன். அவனது எழில்மிக்க சோலையில்
வாழும் தலைவி, கண்முன் தெரியும் பெரும் நிழலையே பேய்" என
நினைந்து அஞ்சி அழும் மழலைப் பருவத்தினள் ; தலைவனோடு
உடன்போக்கு மேற்கொண்டு செல்பவள், அந்த வீரம் மிக்க தலைவனுக்கு
ஏற்ற பணிவிடைகளைச் செய்யும் மன ஆற்றல் உடையவளோ? என்று
வருந்திய தாய் பழகினால் நாளடைவில் வந்திடும் " என்றாலும் இவ்விளம்
பருவத்தில் அவள் எவ்வாறு வருந்துவாள் " என்பதை நினைந்து நினைந்து
வருந்திடுவாள் நற்றாய்.
விளக்கம்;--
1 . தழலுறு = நெற்றிக்கண் தோற்றுவித்த தீச்சுடர் உருவத்தான் .
2 . நிலப்பேய் = நிலத்தில் உலவும் பேய் .
3 . இளமைப்பருவம் = மழலை மாறாத இளம்பருவம்.
மெய்ப்பாடு ---------அழுகை.
பயன் -------------------- ஆற்றாமை நீங்குதல்.
16..41 .நாடத் துணிதல் .
கொளு .
செவிலித்தாய் தலைவியை நாடிட முடிவுற்றாள் .
பொருள்;-- தலைவியைப் பிரிந்திராத செவிலி, தலைவியை நாடிச்
செல்ல முடிவுசெய்தாள் .
பாடல்---232.
சரவணம் தோன்றிய தணிகை, தன்னின் உருவறியாச்
சரமது தொடுத்துச் சமரில் தோற்ற தேவரசுரர்
புறத்தே பதுங்கிவாழ் இடமெலாம் பெண்ணைத் தேடிடுவேன்;
அருமகள் கண்டே இணைவேன்; முதுமகள் கூறினளே .
பொருள்.
நெற்றிக்கண் தோன்றிய சுடரைத் தாங்க இயலாத அக்கினியும்,
வாயுவும், சரவணப்பொய்கையில் விடுப்ப, அங்கே ஆறுமலர்களில்
ஆறுகுழந்தையாய் அவதரித்த முருகன், இளமைக்காலத்தே அவனது
ஆடல்களைத் துவக்கினான். அதன்படி மூவேழ் உலகமும் சுற்றித்
தன்னை எதிர்ப்பாரோடு போர்புரிந்து வெற்றியும் கண்டான்;
அவனது பெருமையை அறியாத தேவர்கள்,இந்திரன் தலைமையில்
போருக்கு வந்தனர்; மற்றொருபுறம் அரக்கர்களும் போர்புரிய வந்தனர்;
போர்புரிபவன் சிவன்மகன் என்பதை அறியாத ,
அனைவருடனும் இளங்குழவி கடும்போர் புரிந்து, வச்சிராயுதத்தை
இழந்து இந்திரன் ஓடினான்;எட்டு திசைக்காவலர்களும் தோற்றோடினர்;
அரக்கர்களும் அலறி ஓடினர்;இவர்கள் அனைவரும் தோற்று மீண்டும்
தலைகாட்ட முடியாது மூவேழ் உலகங்களில் எல்லாம் ஒளிந்து உயிரைக்
காத்துக்கொண்டனர்.
அப்படி அவர்கள் ஒளிந்திருந்த இடமெல்லாம் நானும் சென்று எனது
அருமை மகளைத் தேடுவேன்;தேடிக்கண்டுபிடித்து அவளோடு இணைந்து
கொள்வேன்" என்று தன்மகளான தலைவியைத் தேடிப் பின்
தொடர்ந்தாள் செவிலி.
விளக்கம்;--
1 .சரவணம் = பொய்கை ;
2 . உருவறியா = போரிடுபவன் முருகன் என அறியாத தேவர்கள்; அரக்கர்கள்.
3 . முதுமகள் = செவிலி.
மெய்ப்பாடு ---------அழுகை.
பயன் -------------------- ஆற்றாமை நீங்குதல்.
16 .42 . கொடிக்குறி பார்த்தல் .
கொளு .
சோதிடப் புட்களை நற்றாய் வேண்டியது.
பொருள் ;-- நற்றாய் சோதிடம் சொல்லும் பறவைகளை வேண்டி
வணங்குதல்.
பாடல்---233.
காகமே! கவினே ! மயிலை ஊர்தியாய்க் கொண்டவனாம்
மேகமாம் கருணைத் தணிகை மோகமாம் சோலையினில்
ஏகமாம் மலரும் வண்டும் ஏகிடக் கரைந்திடுவாய் !
தாகம் தணிநீர் தண்பலி தருவேன்; கரைகவேஎ .
பொருள் .
தமது செயல்களால் சோதிடம்போல் முன்னுரைக்கும் பறவைகளின்
செயற்பாடு அறிந்த நற்றாய், காக்கையே! அழகுக்கருமையே! மயிலைத்
தனது வாகனமாகக் கொண்டவன் , வான்மேகம்போல் கருணை
கொண்டவன்,முருகன் வீற்றிருக்கும் தணிகையின் மலர்களின்
நறுமணத்தால் மனமயக்கம் தரும் சோலையில் கலந்து, இருவரும்
ஒன்றாக இணைந்த மலரன்ன தலைவியும், வண்டன்ன தலைவனும்
மீண்டும் இங்கு வரவேண்டும்" என்று நல்லசொல்போலக்
கரைந்திடுவாய்! நீ கரைந்து அவர்களிருவரும் வந்துவிட்டால் உனக்கு
நான் தாக்கம் தீர்க்கும் தண்ணீர் வைப்பேன்; இறைவனுக்குக் கொடுக்கும்
பலியாகிய உணவுருண்டையை உனக்களிப்பேன்; நீ மீண்டும் மீண்டும்
கரைந்து அவர்கள் வருவதை எனக்குச் சொல்லிடக் கரைவாயே " என்று
காகத்திடம் நல்ல சோதிட வார்த்தை போலக் கேட்கிறாள் நற்றாய்.
விளக்கம் ;---
1 .கவினே = அழகுக்கருப்பே!
2 .மோகமே = மலர்களின் நறுமணத்தால் மயக்கம் .
3 . ஏகமாம் = இருவரும் ஒன்றான தன்மை.
4 . கரைகவேஎ = அளபெடை .நிறுத்தாது கரைக ;என்னும் பொருள் தந்தது.
மெய்ப்பாடு --------- அழுகை.
பயன் ------------------- ஆற்றாமை நீங்குதல்.
16 .43 .சோதிடங்கேட்டல் .
கொளு .
தளர்ந்த மனத்தொடு தலைவியைத் தேடுசெவிலி
நிலைத்த சோதிட வல்லாரை அணுகினாள் .
பொருள்;-- தலைவி சென்ற காட்டுவழி அவளைத் தேடிச்சென்ற செவிலி
நன்கு ஆய்ந்து கூறும் சோதிட வல்லாரிடம் சோதிடம் கேட்டாள் .
பாடல்----234.
வேடுவர் மனக்குறை உணர்ந்து, வள்ளியை மணந்த,
தோடுடைத் தணிகை இறைவன் அருளால் மனம்கொண்டோம்
பீடுடைப் பெண்மணம் நாடுவோம்" பெரியீர் ! அருள்வீரே !
காடுசெல் கன்னியும் வீடடை நிகழ்வு; கற்றவரே!
பொருள்.
வள்ளியோடு உடன்போக்கு மேற்கொண்ட முருகனோடு போரிட்டுத்
தோற்ற வேடுவர்கள் எம்குலப்பெண்ணை மணந்த பிறகல்லவோ. தாங்கள்
உங்களூர் செல்ல வேண்டும்; குலமரபை மாற்றிடலாமா? என வினவினர்.
அதுகேட்ட முருகன் அவர்தம் மனக்குறை நீங்கி மகிழ்வடைய அவர்கள்
முன்னிலையில் வள்ளியை மணந்துகொண்டார். அவ்வாறு மணந்தகொண்ட
மறையொலியைத் தோடாக அணிந்த திருத்தணிகைக் கடவுளாகிய
மாமுருகன் அருளால்,எமது மகளுக்கு மணம் முடிப்பது" என முடிவு
செய்துவிட்டோம்;மாமறை கற்றவர்களே ! பெரியோரே ! தலைவனோடு
உடன்போக்கு மேற்கொண்ட எம் பெண் தலைவனோடு மீண்டும் இங்கு வருவாளா?என்பதைக் கணித்துச் சொல்லுங்கள் கற்ற சான்றோரே ! என்று செவிலி சோதிடம் கேட்டாள் .
விளக்கம்;---
1 . மனக்குறை = வள்ளிமலை வேடர்களின் மனக்குறை. மணம் செய்யாமல் மகளை அழைத்துச் செல்லல்.
2 . பீடுடை = பெருமை மிக்கவளாகிய தலைவியின் கற்பு நெறி போற்றிய
உயர்குணம்.
3 . கன்னியும் = உம் " இறந்தது தழீஇ ய எச்சவும்மை. கன்னியும்
காளையும் வருவார்களா? எனும் பொருள்.
மெய்ப்பாடு ---------- மருட்கை.
பயன் -------------------- எதிர்காலச் செய்கை உணர்தல்.
16 . 44 . சுவடு கண்டறிதல்.
கொளு .
காட்டில் கன்னியின் காலடி காணல் .
பொருள்;---- தலைவி சென்ற கால் தடத்தைச் செவிலி கண்டு கூறியது.
பாடல்---235.
திருமிகு தணிகை பெருமை நினையார் வெறுங்கூட்டம்
கருமுள் கூர்ப்பரல் கனல்வழி காண்கிறேன் கால்சுவடு ;
இருவினை முன்னர்ப் பிறவியில் வளர்த்த மகளடி ;கருமுள்
அருகில் கள்வனின் பருவடி; என்றும் கருதுவனே .
பொருள்.
போற்றுதலுக்குரிய திருத்தணிகை மாமுருகன் பெருமையை நினையாது
வீணே காலங்கழிக்கும் வெற்றுக்கூட்டம்போல , இக்காட்டுப் பாதையில்
தீமைதரும் முட்களும், கூர்மையான பரற்கற்களும் நிறைந்த அனல்
வழியிலே கால்களின் சுவட்டைக் காண்கிறேன்; இதோ இந்த மெல்லிய
அடிச்சுவடு நான் முற்பிறவியில் செய்த பாவங்களின் காரணமாக எடுத்து
வளர்த்த என் மகளின் காலடிச்சுவடு; அதன் அருகில் அந்த என்
பெண்ணின் மனத்தைத் திருடிய கள்வனின் வலிமை மிக்க காற்சுவடு ;
இவைகளை நான் நன்கு உணர்ந்து காண்கிறேன். " என்று செவிலி
காட்டுவழியில் கண்ட காலடிச்சுவடுகளைக் கண்டு வருந்திக்கூறினாள் .
விளக்கம்;--
1 .கருமுள் = தீமை தரும் [காலுக்கு] முள்
2 . கனல்வழி = சூரிய வெப்பத்தால் தீ பறக்கும் வழி.
3 . இருவினை = வருத்தும் பாவச் செயல்கள்.
மெய்ப்பாடு -------- மருட்கை.
பயன் -------------------- எதிர்காலச் செய்கை உணர்தல்.
16 . 45 . சுவடு கண்டு இரங்கல்.
கொளு .
காட்டிடைக் காரிகைக் காலடி கண்டு,
வாட்டமுறு செவிலி வருத்தம் மேலிட்டது.
பொருள்;--- தலைவியைத் தேடிச்சென்ற செவிலித்தாய் காட்டில்
தலைவியின் காலடிச்சுவடுகளைக் கண்டு மனம் மிக வருந்தினாள்.
பாடல்---236
அணிமயில் மீதமர் தணிகை பணியார் பிணியாளர்
மணிசூழ் மலராம் தவிசு மிதித்தால் மெலிந்திடுமே ;
மணியாய்க் கொப்புளம் ; தனிச்சுடர் சுடுகல் தாங்கிடுமோ ?
குணியாய் வலிமை கொண்டதோ? கொலும்வினை என்மகளே!
பொருள்.
அழகிய மயிலை ஊர்தியாகக் கொண்டு விளங்கும் திருத்தணிகை
முருகனை வணங்கிப்போற்றி வழிபாடாதோர் பிணி,மூப்பு, சாக்காடு
என்னும் தீவினையால் அவதிப்படுவர்; அதுபோல,
மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மலர்போன்ற மெத்தையை [தவிசை]
மிதித்துவிட்டால் தலைவியின் கால் பொறுக்கமுடியாமல் வாடி வதங்கும்;
கால்களில் மணி மணியாகக் கொப்புளங்கள் தோன்றும்; இப்படிப்பட்ட
மேன்மை கொண்ட கால்கள் யாரும் நிகரில்லாது விளங்கும் சூரியனின்
சுடர் பொசுக்கவும், பரற்கற்கள் வெப்பத்தால் காலைச் சுட்டிடவும் உள்ள
காட்டில் நடந்திட இயலுமோ? தனது குணங்களில் ஒன்றான
வலிமையென்று கொண்டாட இயலுமோ?
துன்புறுத்தும் வினைகளால் இதுபோன்ற துயரை நான் உனக்குக்
கொடுத்துவிட்டேனோ! என்னால் வளர்க்கப்பட்ட மகளே! மகளே ! என்று
செவிலி புலம்பினாள் .
விளக்கம்;--
1 . தவிசு = மிதியடி; மெத்தை ;
2 . மணியாய் = மணி மணி யாய், கொப்புளங்களின் வளர்ச்சி வரிசை.
3 . தனிச்சுடர் = நிகரற்ற ஒளித்தன்மை உடையவன்.
மெய்ப்பாடு ----------- மருட்கை.
பயன் ---------------------- எதிர்காலச் செய்கை உணர்தல்.
16 . 46 . வேட்ட மாதரைக் கேட்டல்.
கொளு .
மென்மலர் கொய்யும் வேட்டுவப் பெண்டிரை,
பின்தொடர் செவிலி மகள் பற்றிக் கேட்டது.
பொருள்;---- காட்டுவழியே தலைவியைத் தேடிச்செல்லும் செவிலி,
வழியில் மலர் கொய்யும் வேடர்குலப் பெண்களிடம் தலைவி பற்றிக்
கேட்டறிந்தாள் .
பாடல்---237.
தணிகைத் தண்ணெழில் பேரருள் போலவே விளங்குகின்ற
வனிதை வடக்கு வீசிட வருந்தும் வளர்கொடியாள் ,
கனிவிலாக் காட்டினுள் காளை கரத்துணை கலந்திட்டாள்
எனையவள் பிரிந்தாள் இங்குநீ கண்டனை? பொற்றொடியே!
பொருள்.
திருத்தணிகை வீற்றருளும் முருகனது குளிர்வும், அழகும் வாய்ந்த
பெருமைமிக்க கருணையைப் போல் விளங்கும் தணிகைச்சோலைத்
தலைவி, வாடைக்காற்று வேகமாக வீசினால் கொடிபோல் வளைந்து
வருந்தும் இயல்பினள் ; ஒருநாள் காளை ஒருவன் காரத்தைப் பிடித்துக்
கொண்டு, கனிவேயில்லாத கரடுமுரடான காட்டினுள் அவனோடு கலந்து
மறைந்துவிட்டாள் ; என்னையும், வீட்டையும் பிரிந்து சென்று விட்டாள் ;
அழகிய ஆபரணங்களை அணிந்த வேடர் குலப்பெண்ணே! இங்கு நீ
அவளைப் பார்த்தாயா? என்று வேடர்குலப் பூ கொய்யும் பெண்ணிடம்
வினவினாள் செவிலி.
விளக்கம்;--
1 . வனிதை = பெண் ;; தலைவி .
2 . கனிவிலா = ஒழுங்குமுறை இல்லாத .
3 . எனையவள் = எனை - என்னை என்பதன் குறுக்கல் விகாரம்.
மெய்ப்பாடு ------------ அழுகை .
பயன் ---------------------- ஆற்றாமை நீங்குதல்.
16 . 47.புறவொடு புலத்தல் .
கொளு .
காட்டுப் புறவிடம் வாட்டம் உரைத்தது.
பொருள்;-- காட்டிலே வாழுகின்ற புறாவிடம் தனது வருத்தத்தைச் செவிலி
உரைத்தாள் .
பாடல்---238.
பன்னிரு கரத்தவன் கன்னியர் இருவர் நீங்காத
முன்னிய தணிகைப் பரமனை உன்னாக் கடையர்போல்
பண்ணிய பாவ வழிக்கு நண்ணிய தலைவனுடன்
பண்பொழில் புறவே! பற்றாய்ச் சென்றவள் தடுத்திலையே !
பொருள்.
பன்னிரண்டு கரங்களைக் கொண்டவன்; தனது இருபக்கத்திலும்
தெய்வயானை,வள்ளி,என்னும் கன்னியரை இருத்தி அவரை விட்டு
நீங்காதவன்; விரும்பிவந்து தங்கிய தணிகையின் இறைவன் முருகன்
ஆவான். அவனை நினைந்து போற்றாத கடையார்போல, யாம் செய்த
பாவவினைக்குப் பரிசாக வந்த அயலவர்,தலைவனோடு பற்றுற்று
எம் மகள் இவ்வழி தான் சென்றாள் . இசைபோல் நன்மைபொழியும்
பொழிலில் வாழும் புறவே! நீ அவளைத் தடுத்து நிறுத்த வேண்டாவா?
அவ்வாறு செய்யவில்லையே! வாழ்க நீ" என்று வாழ்த்துவதன் வழியே
தனது வருத்தத்தைச் செவிலி கூறினாள் .
விளக்கம்;--
1 . இருவர் = தெய்வயானை,வள்ளி, என்ற இரு சக்திகள்.
2 . உன்னா = நினைந்துபோற்றாத .
3 . பண்பொழில் = பண்ணிசைபோல் மகிழ்விக்கும் பொழில்.
மெய்ப்பாடு ----------- அழுகை.
பயன் --------------------- ஆற்றாமை நீங்குதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக