திருப்பரங்குன்றத் திருவுலா
கணபதி வாழ்த்து
திருப்பரங்குன்றத் திருவுலா பாடத் தொடங்குவதற்கு முன் இறை
வாழ்த்தாக விநாயகப் பெருமானைப் பணிந்து,போற்றி அவரிடம் ஆசி
வழங்க வேண்டுகிறார் ஆசிரியர்.
முருகனின் அண்ணனே! இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழில்
முகிழ்ந்து எடுத்த நல்முத்துபோன்றவனே! உன்னை விரும்பி வணங்கும்
அடியவர் அன்போடும், பக்தியோடும் அர்ச்சனை செய்கின்ற
அருகம்புல்லை ஏற்று மகிழ்ந்து, அவர்கள் வேண்டும் வரங்களை
அருள்பவனே! உனது அன்புத் தம்பியாகிய திருப்பரங்குன்றத்தில்
அமர்ந்து அருள் புரியும் முருகன் மீது பாடப்படும் திருவுலா நூலாம்
பிரபந்தத்தைக் கண்ணால் நோக்கி வாழ்த்துக் கூறு.காதால் கேட்டு
ஞான வாழ்த்து கூறு.உனது ஆசியால் முருகன் புகழ் உயரட்டும்.
உனது அருள் நூலைக் காக்கட்டும். நூலின் புகழை உயர்த்தட்டும்.
விளக்கம்
1. முருகனின் முன்னவனே .... மூவருக்கும் முன்னவன் முருகன். அந்த
முருகனுக்கும் முன்னவன் என்பதால் விநாயகப் பெருமானுக்கு
வாழ்த்தும் தகுதி உயர்ந்தோங்கி நிற்கிறது.
2. முத்தமிழ் முத்தே ........ மூன்று தமிழாலும் போற்றப்படும் முத்தானவர்
கணபதி. அதனால் முத்தமிழ் நூலாகிய இந்நூலை வாழ்த்தும்
பெருமையை அவர் பெறுகிறார்.
கண்டுகேட்டுக் கா ....... கண்ணால் காணல் என்பது ஒரு வகையான
தீக்கை ஆகும். சீடனான ஆன்மாவால் எழுதப்படும் இந்நூல்
விநாயகரின் நோக்கால் வளரவேண்டும் என்பதும்,
முருகன் புகழ் பாடும் இந்நூல் விக்னங்களைப் போக்கும் அவரது கண்
நோக்கால் புகழ் பெறட்டும் என்பதும் கருத்து.
கேட்டல் கணபதியின் புலமைக்குப்புத்துயிர் .மஹா பாரதத்தைக்
கேட்டவர் நொடியில் ஏட்டினில் உரு தந்தவர். அப்படிப்பட்ட செவியில்
இந்நூல் பட்டாலே, தொட்டாலே போதும், காப்பும்,வாழ்த்தும் அருளாய்
மலரும் என்பதும் உட்பொருள்.
வாழ்த்து. 2.
ஞானக் கொழுந்தே! ஞாயிற்றின் பேரொளியே!
மோனக் கமண்டலக் காவிரி, --------- தானமூர்த்தி
வானமகள் கூனனிலாக் கொண்டவன் கொண்டவன்,
தேனமுதுத் தீந்தமிழை வாழ்த்து.
பொருள்
ஞான = பர,அபர ஞானங்களின் , தனிக்கொழுந்தே = நிகரற்றுத் தனி
ஆகவும்,இளமையிலேயே மோன நிலைபெற்றும் விளங்குபவனே!
ஞாயிற்றின் = மூவேழ் உலகத்திலும் சுடரொளியாய் விளங்கும் ஆதவனின்
பேரொளியே! = பெருமை மிக்க ஒளிபோல் ஒளி வீசி அறியாமை அகற்றும்
ஞான ஒளியே! மோனக்கமண்டலம் = மோன,முது முனிவராகிய
அகத்தியரின் கமண்டலத்தில் சிவனருளால் வந்து தங்கிய
காவிரி = காவிரி ஆற்று நீரைக் காக உருவெடுத்துத் தட்டிவிட்டதால்
தானமூர்த்தி = சோழ நாட்டிற்கு வளமெல்லாம் வழங்கிய தான மூர்த்தியே!
வானமகள் = விண்ணுலக வேந்தன் இந்திரன் மகளான கூனனிலா = ஒடிந்த
மூன்றாம் பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய தெய்வயானையை
கொண்டவன் = வெற்றிப்பரிசாகக் கொண்டு மணந்த மாமுருகனை
கொண்டவுலா = தலைவனாகக் கொண்டு பாடப்பெறும் இந்த உலாவாகிய
தேனமுத = இனிமையும், அழியாத தன்மையும் கொண்ட தேன் அமுதமாம்
தீந்தமிழை = சொல்லாலும்,பொருளாலும் நறுஞ்சுவை மிக்க முத்தமிழ்
நூலை, வாழ்த்து = வளம் பெற்றும், நித்யத்வம் பெற்றும், உலகெலாம்
பரவியும் வாழ்க என்றும், பாட்டுடைத் தலைவன் பெருமை ஓங்குக
என்றும் வாழ்த்தி அருளி, இந்நூலை இயற்றிய கவிஞனையும் வாழ்த்தி
அருள் புரியுமாறு வேண்டுகிறார் ஆசிரியர்.
விளக்கம்
ஞானம் ... பொதுவாக இதனை அறிவு என்று பொருள் கொண்ட போதிலும்,
சைவாகமங்களாகிய சிவா ஞானமே ஞானம் என்று சொல்லப்படும்.
"உயர் ஞானம் இரண்டாம் " என்று உரைக்கும் சிவப்பிரகாசம்.
அது பரம் என்ற உயர் ஞானமும்,அபரம் என்ற கீழ் ஞானமும் ஆகும்.
இவ்விரண்டையும் அளிக்க வல்லவர் கணபதி.
மோனக்கமண்டலக்காவிரி ....... சிவன் ஆணையை ஏற்றுத் தென்னாடு
புறப்பட்ட அகத்திய மாமுனிவர் வழியில் நீர் பருகுவதற்காக நீர் வேண்ட,
இறைவனோ காவிரி ஆற்றை அவரோடு போகச் சொல்கிறார்.முனிவரிடம்
இருந்து வெளியேறும் வழியை இறைவனிடம் காவிரி கேட்டாள் . வழியில்
உனக்கு அந்த வாய்ப்பு அமையும் என்று சொல்லி முனிவரின் கையில்
உள்ள கமண்டலத்தில் தங்குமாறும் ஆணை பிறப்பிக்கிறார்.முனிவர்
தென்னாட்டில் சீகாழி என்ற தலத்தின்கண் வரும்பொழுது, இந்திரனது
வேண்டுகோளுக்கு இரங்கி விநாயகப் பெருமான் முனிவர் மாலைக்
கடனுக்காக நிலத்தில் வைத்த கமண்டலத்தைத் தட்டி விடுகிறார்.
அங்கே காவிரி பெருக்கெடுத்து ஓடுகிறது.தட்டியது விநாயகர் என
அறிந்து முனிவரும் போற்றக் காவிரியும் வாழ்த்த அந்நாடும் வளம்
பெறுகிறது.(விரிவு கந்த புராணத்தில் காண்க.)
வானமகள் கூனனிலாக் கொண்டவன் ..... சூரபன்மனை அழித்த முருகப்
பெருமானுக்கு இந்திரன் தன் மகளாகிய தேவயானையைப் போரின்
வெற்றிப் பரிசாக அளிக்கிறான். அதனை முருகனும் ஏற்று அவளை
மணக்கிறான்.
கூனல் = குறைவுபட்ட . நிலா = நிலவு ..மூன்றாம் பிறைச்சந்திரன்
பிறை நிலவுபோன்ற நெற்றியை உடைய தேவயானை .. உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி.
திருப்பரங்குன்றத் திருவுலா
முருகன் பெருமை
( ஒன்று முதல் இருபத்தேழு கண்ணிகள் முருகன் பெருமை பேசுவன )
பொருள்
பூவினை விரும்பி, வட்டமிட்டு அதனில் அமர்ந்த வண்டினங்கள்
மகிழ்வுடன் சுவைக்கும் புத்தம் புதிய உணவான நல்ல தேனாய்
விளங்குபவனே!
பாடலைத் தேடி வரும் சந்த வண்ணங்கள் போற்றுகின்ற புகழாய்
விளங்குபவனே!
தேவர்கள் தேடித்தேடி அடைகின்றவரும், பிறைநிலவைச் சூடியவரும்
ஆகிய சிவபெருமான் அடியவர்களுக்கு அவர்களை நாடித் தாய்போல்
காட்டும் அன்பாக விளங்குபவனே!
அரசாளும் ஆட்சி முறை தழுவி, அறம் போற்றாத அரக்கர்களை
அழித்தலே நீதி எனக்கொண்டு, இந்திரனுக்காகப் போரிட்டு ச்
சூரபன்மாதியர்களை அழித்து, அறவழி விளங்குபவனே!
வானத்தில் சிறகடித்துப் பயிலும் விண்மீன்கள் சரவணப் பொய்கையில்
தவழ்ந்த குழந்தைகளை வந்து, காத்துப் பாலூட்டிச் சீராட்டி
வளர்த்ததால் வானளாவிய புகழ் பெரும் வித்தகமாய் விளங்குபவனே!
கார்த்திகைக் கூட்ட விண்மீன்கள் அறுவரும், கண்ணைப்போல் காத்து
வளர்த்ததால் கார்த்திகேயனாய் விளங்குபவனே!
விண்ணக வேந்தன் திருமகளாம் தேவயானையைப் போர்ப்பரிசாக
அளித்தகாலை , அவளை மணந்து, அவளோடு இசையாய்த் தெள்ளு
தமிழ்ப்பாட்டாய் மகிழ்ந்து விளங்குபவனே!
இனிய தமிழ்க்காதலைச் சுவைக்க விரும்பிய ஆவலினாலே ,
வள்ளிமலையில் வாழும் குறமகள் வள்ளியைத் தேடிச்சென்று, அவளின்
காதலுக்காக அவள் பின்னால் சுற்றிச்சுற்றி வந்து, மரமாக, முதியவனாக
வேடம் போட்டு, நொந்த மனமுடைய காதல் பித்தனாகி, அண்ணன்
யானை உதவியால் மகிழ்வுற்ற காதல் மனத்தனாய் விளங்குபவனே!
இறப்பும், பிறப்பும் அற்று என்றும் அழியாத புண்ணிய மூர்த்தியாய்
விளங்குபவனே!
தனது அருட்பார்வையினாலே அருள்கெழுமிய கண் அருளாலே
மூவேழ் உலகங்களையும், மிக மிக நுண்ணிய உயிர்களையும் காத்து
வளர்க்கின்ற பேரருளாய் விளங்குபவனே!
பற்றற்ற முனிவர்களும். முத்தான்மாக்களும், உன்னையே நினைந்து
உருகும் அடியவர்களும் உன்னையே தனது மனத்திலே தேக்கி
வைத்திருப்பதால் அவர்களுக்கு ஆனந்தமாயும்,அமுதமாயும்
விளங்குபவனே!
சொல். மனம்,எண்ணம், ஆகியவற்றில் தூய்மை கொண்ட
மாமுனிவர்களும்,அடியவர்களும் அடைகின்ற நற்கதியாய்
விளங்குபவனே!
பிறப்பு,இறப்பு என்னும் பெருந்துயரை நல்கும் உலகியல் பற்றை
நீக்கி, ஆசைகளை அகற்றி, ஆன்ற தலைவனாய் வந்து காட்சி கொடுத்துக்
காக்கும் கடவுளாய் விளங்குபவனே!
எப்பொழுதும் தூற்றிக் கொண்டேயிருந்த சூரபன்மனை அருள்
நோக்கமுடன் பார்த்து, மாமயில் ஊர்தியாகவும், கொடிச்சேவலாகவும்
ஆக்கி, அரும்பதம் அளித்தவனே!
மாற்றானையும் அடியவனாய் ஏற்றுக்கொண்டு,அவனுக்கு ஆசானாகி
அவனுக்குக் கர்மவினைகளை விளக்குபவனே!
உலகோரைத் துன்புறுத்தும் நோயாகிய பிறவித் துயர் நோயை அகற்றும்
அருமருந்தாய் விளங்குபவனே!
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய உயர் பொருளாய்
விளங்குபவனே!
ஆய்ந்து, விரிவாகி விரிந்து, தந்தைக்கே உபதேசிக்கும் பெரும்
ஆசானாய் விளங்குபவனே!
தன்னை வணங்கி வேண்டும் அடியார்களின் துயரத்தைக் களைய
துயர் வந்த வழி அதன் மூலம், அதன் வீர்யம் போன்றவற்றை ஆய்ந்து,
அவர்களது துன்பம் நீங்கவும், நீங்கிய பிறகு நல்லன வழங்கியும்,
வாழ்த்தியும் அருள் பாலிக்கும் கருணைக்கடவுளாய் விளங்குபவனே!
பழனி மலையில் ஆண்டிக்கோலத்துடன் நின்று அற்புதங்கள் பலப்பல
புரிந்து உலகைக் காப்பவனே!
திருப்பரங்குன்றத்திலே இந்திரன் மகளை மணந்து, தானும் அரசனாக
நின்று விளங்குபவனே!
வள்ளி மலையிலே வேடனாகிக் கோலம் கொண்டுக் குற வள்ளியை
மணம் புரிந்த மாமுருகா!
உலகத்தில் ஆணவம்,கன்மம், மாயை போன்ற வினைகளில் சிக்கித்
தவிக்கும் ஆன்மாக்களைக் காப்பாற்ற ஆறுமுக ஆசானாகி
அடியவர் மனத்தை ஆசாபாசங்களில் சிக்காமல் மாற்றி, நல்வழிப்
படுத்தும் சுவாமிநாத குருவே!
தேவ சேனைகளுக்குத் தலைவனாக நின்று போர் புரிந்து, அரக்கர்களை
அழித்து, வெற்றி வாகை சூடிய முருகனுக்கு,வெற்றி வாகை சூடிய
முருகனுக்குத் தன்மகளைப் பரிசாகக் கொடுக்க நினைந்த இந்திரன்
தேன் சொரியும் மலர்கள் நிறைந்த திருப்பரங்குன்றமதில் கருங்கூந்தலும்
வேல் போன்ற கண்ணையும் உடைய தெய்வயானையை ஏற்குமாறு
வேண்டினான்;இந்திரன் மகளை மனையறமாகக் கொண்டு
விளங்குபவனே!
முற்றும் துறந்த முதலாக விளங்கும் முருகன் சீர்மை உடைய
தெய்வயானையைப் பற்றின்றி ஏற்றான்; பற்றாக ஏற்றான்; பற்று
உற்றதால் நற்றவ நாயகனாய் விளங்குபவனே!
என்றெல்லாம் போற்றியதோடு மாமதுரை உலா செல்ல முருகனை
முதல்வனாக்கி அழைக்கிறார்கள்.
உலாப்பயணம் மேற்கொள்ளவருமாறு முருகனை வேண்டி அழைத்தல்
( 28 . முதல் 82 ஆவது கண்ணி முடிய)
நெற்றிக்கண் .....தொடங்கி, ஏகனவன் ...முடிய.
பொருள்
மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் தருமிக்காக இறைவன் பாடிக்கொடுத்த
"கொங்கு தேர் " எனத்தொடங்கும் பாடலிலே குற்றம் கண்டுரைத்த
நக்கீரனிடம் சினந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைக் காட்டிட,
"நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் , குற்றம் குற்றமே" என்றுரைத்த
நக்கீரனை,நெற்றிப்பொறி பொசுக்கிட, அஞ்சிய அப்புலவனைச் சரவணப்
பொய்கையில் மூழ்கி எழச்சொல்கிறார் இறைவன். திருப்பரங்குன்றத்தில்
அப்பொய்கையில் நின்றபடியே குன்றக்கடவுளாகிய முருகன் மீது
"திருமுருகாற்றுப்படை" என்னும் நூலைப் பாடுகிறார் நக்கீரர்.
அவர்பாடிய ஆற்றுப்படை நூலின் தலைவனே!
அரக்கர்களின் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்களின்
துயர் போக்கப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று, சூரன் முதலிய
அரக்கர்களை அழித்து விண்ணவர்களின் வெற்றிக்கு முதற்காரணன்
ஆகிய முருகா!
விண்ணுலகம் மட்டுமல்லாது மண்ணுலகையும் காத்த முதல்வனே!
போர்ப்பரிசாக விண்ணுலக மன்னன் இந்திரன் மகளாகிய ஒளி
விளக்கன்ன தேவயானையை நன்னாளில் மணந்தவனே!
என்று போற்றிய நான்முகனும், திருமாலும், இந்திரனும், முனிவர்களும்
மூவர்க்கும் முதல்வனே! தாங்கள் அழகுமிகு வீதிகள் காணவும்,
அடியவர்களுக்கு நல்ல குளிர்ச்சி மிக்க அருள்பாலிப்பு புரியவும்,
உலகிற்கு நீதிகளை நேராகவே வழங்கவும் உலா செல்லவேண்டும்.
மாமதுரை மாணிக்க வீதிகளின் அழகு
ஆதி முதல் சிவபெருமான் மாமலைகளால் சூழப்பட்ட மதுரை
மாநகர வீதிகளிலே முதல் முதலாக உலா சென்ற பொழுது பேரானந்தம்
அடைந்தான். அதே வீதிகளில் தாங்களும் உலா செல்ல இருக்கிறீர்கள்
அந்த அழகு ....
வண்டுகள் ரீங்கார இசை பாடவும், மாங்குயில்கள் மயக்கும் குரலால்
கூவவும், பாடலின் இசைபோன்ற இனிமையை அங்கு உணரலாம்.
தென்றலின் மனம் மயக்கும் காற்று, பாண்டிநாட்டுத் தெம்மாங்குப்
பாடல், தென்னகத்தின் பண்பாடு ஒலிக்கும் தென்னாட்டுப் பாடல்
இவைகளை அங்குக் கேட்கலாம்.
அழகு மிளிரும் நந்தவனங்கள் ; அங்கே நவரத்தினங்களாய் மலர்ந்துள்ள
மல்லிகை, செண்பகமலர், முறுவல் காட்டும் முல்லைமலர், முத்து போன்ற
இதழை உடைய பிச்சிப்பூ, கொல்லை கள் எல்லாம் நிரம்பி வழியும்
கனகாம்பரமலர்,
மருத வயல்களிலோ அல்லி, நீரில் படர்ந்த குவளை,வயல்மலர்,
தாமரை மலர்கள் ஆகிய இம்மலர்க்கூட்டங்கள் நடத்தும் விழாவையும்
காணலாம்.
அடுத்த அழகு மரங்களின் அணிவகுப்பு; நீண்டு தொங்கும்
குலைகளைக் கொண்ட இலைகள் ஆட்டும் வாழை மரங்கள்,
நிலத்தின் அழகை மேலும் கூட்டும் பாக்கு மரங்கள்,காற்றினிலே
அசைந்தாடும் தென்னை மரங்கள், ஏட்டினை உருவாகும் ஓலைகளை
வழங்கும் பனைமரங்கள், ஈச்சம் பழக்குலைகளைக் கொண்ட ஈச்ச
மரங்கள், இவைகளால் உருவான சோலைகள் பலப்பல.
அச்சோலைகளிலோ கூவுகின்ற குயில் இணைகள், அகவும் தோகை
விரிக்கும் மயில்களின் வண்ணங்கள், மரத்திற்கு மரம் தாவிப் பறக்கும்
கிளிகள், காதலைச் சீண்டும் புறாக்கூட்டங்கள், வருத்தமே இல்லாது
உடலும்,உள்ளமும் வெண்மையாய் விளங்கும் அன்னப்பறவைகள்,
இவைகள் எல்லாம் மகிழ்ச்சிக்குரல் எழுப்பும் காட்சியைக் காணலாம்.
சோலையைச் சார்ந்த சாலைகளில் மாலை நேரத்தில் வீடு
திரும்பும் மாட்டுமந்தைகள் அசைபோட்டபடி நடக்கையில், அவைகளின்
கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் இசைமயமான ஒலி ஒருபுறம்;
ஆட்டுக்குக்கூட்டமெல்லாம் அம்மே அம்மே என்று அன்று மென்குரல்
எழுப்பியவாறு துள்ளி ஓடும் அழகைக் காணலாம்.
அப்படியே ஊருக்குள் சென்றால் மாமுருகன் வீதியுலா வருகிறார் "
என்றே நாட்டு மக்களெல்லாம் மகிழ்ச்சியோடு தத்தம் வீட்டு வாயில்களில்
நீர் தெளித்துக் கூட்டிக் கோலம் இடும் அழகும், வாயில் திண்ணைகளில்
கோலத்தின் நடுவே,உயர்ந்த குத்து விளக்கினை வைத்து, அதற்குப்
பொட்டுவைத்துப் பூமாலைகள் சாத்தி,எண்ணெயும் திரியும் போட்டு,
வளைக்கரங்களால் ஏற்றி வரவேற்கத் தெருவெல்லாம் வண்ண வண்ணக்
கோலமிடுவார்கள்;பட்டுப்பாவாடைகளும்,புடவைகளும் சல சலக்கக்
கைவளையல்களும் , காற்சிலம்புகளும்,சதங்கைகளும் ஒலியெழுப்பவும்,
காதுத் தோடுகள் அசைந்தாட, இடுப்பு ஒட்டியாணம் கிண்கிணி ஒலி
கூட்ட, அத்தெருவெல்லாம் வடிவேலை வரவேற்கும் பாடல்கள், ஆடல்கள்
எல்லாம் கண்ணையும் கருத்தையும் கவரும்.
மதுரை மாநகர ஆடவர்கள் வரவேற்பு நிகழ்வாகத் தெரு அரங்கிலே
மற்போர் புரிவார்கள்;விற்போர் புரிவார்கள்; அவர்கள் நடுவே முருகன்
பெயரைப் போற்றக்கூடிய நூல்களைக் கற்று எடுத்துச் சொல்வோரையும்
அங்கு காணலாம். இவைகளை எல்லாம் கண்டு களித்தபடி நிற்கின்ற
கூட்டத்தாரும் உண்டு.
வாட்போர் புரியும் வீர இளைஞர்கள்; ஒருவரது வாள் மற்றவரால்
வீழ்த்தப்பட்டதும், அஞ்சாத அவ்விளைஞர் மலைபோன்ற தனது
புயத்தால் பொன்போல் போற்றக்கூடிய மற்போர் புரிந்து வெற்றி
காண்பதும் காணலாம்.
புன்னகையை இளைஞர்களின் உயிராகக் கைக்கொண்ட
இளம்பெண்கள் ; அப்பெண்களின் சுருண்ட கூந்தல் காற்றில் பறந்து,
வா! வா! என்றழைப்பதுபோல் கற்பனை செய்து கொண்ட இளைஞர்கள்
அவர்கள் பின்னால் சுற்றிச்சுற்றி வந்து காதல் மொழிகளைப்
பேசி இரங்கும் காட்சியையும் காணலாம்.
இதற்கு மாறாக, பக்தி மேம்பாட்டினாலே முக்தி அடையவேண்டும்"
என்ற எண்ணத்துடன் பற்றற்று விளங்கும் பரசிவனாரை,அவரது
அஞ்செழுத்து ஆகிய "நமசிவய" என்னும் அழியாத திருமந்திரத்தை
உபதேசிக்கும் மாமுனிவர், காடுசூழ்ந்த தனிமலையில் தவம் புரியும்
சான்றோர்கள், உலகமக்களின் வினைகளைப் போக்கிப் பாச
மலங்களை வேரறுத்துக் காப்பதற்காக , உன்னையே பரமசிவமாகக்
கருதி உன்னை மனத்தால் பணிந்து போற்றும் மொழிகளையும்
கேட்கலாம்.
உயிர்களைக் காத்திடவே உலா புறப்படுக .
பக்திச்சன்றோர்கள், அடியார்கள். நாரணன், நான்முகன், முனிவர்கள்,
இந்திரன், சேர சோழ பாண்டிய மன்னர்கள், ஒருங்கு கூடி,
ஞானபண்டிதனாகிய திருப்பரங்குன்ற மாமுருகனை வணங்கிப்
போற்றி, ஆசானிடம் சீடர் பேசுவதுபோல் பணிவுடன் வாய் பொத்திக்
கூறினர்,
மாமுருகா! அழகு மயில் வாகனனே! மூவேழ் உலகங்களையும்
காக்கும் மூவர்க்கும் முதல்வனே! மகிழ்வைத் தரும் உலாப்போகும்
பயணத்திற்கு எழுந்தருள்க! மாதவனே! என்று போற்றி அழைக்கும்
எழுச்சி மிக்க அழைப்பொலி அன்போடும். பணிவோடும் விண்ணப்பமாக
வெளிவந்ததும், அவ்வேண்டுகோளின் மெல்லொலி எங்கும் பரவின.
அவ்வுலாவைக் காணவும்,பங்கேற்கவும் நல்ல அழகான தேர்கள்,
நலத்தைத் தனது தலைவன் போல் வழங்கும் அழகுமயில், குன்றுபோன்ற
யானைப்படை,பல்லக்குகள், குதிரைப்படைகள் இவைகளுடன் மகிழ்வு
மிக்கதாகிய உலா பவனியில் கலந்து செல்ல வகை வகையான
பரிவாரங்கள், வந்து ஒருங்கே கூடின.
செல்லவேண்டும் நல்லுலா : செல்லவேண்டும் நல்ல பவனி;
வல்ல முருகன் நல்லுலா செல்வோம்" என்ற பக்தியொலி எங்கும்
பரவின.
மெல்லிய இதழால் இனிய சுவைமிகு அன்பைப் பரிமாறும்
தேவயானை, குளிர்ந்த கருணைக் கண்பார்வையால் மகிழ்வும், காதலும்
தந்து, உன்னை ஆட்கொண்ட பக்தியும்,பணிவும் மிகுந்த செயலாலே
உன் உடலில் ஒரு பங்காகி, இசையாகி, உன் பக்கத்தில் அமரும்
பெண்ணாகவும் ஆனவள்;தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த கவிதைபோல்
உன்னைத் சார்ந்தாள். தமிழ்ச்சங்கக் கவிதைகள் உன்னைத் சார்வது
போல் அம்மையும் உன்னைச்சார்ந்தாள்.உனது உடலாக உயிராக
ஒன்றிவிட்ட உயர்வள்ளி நாயகியின் தலைவ! நல்லுலா காண இதுவே
நல்ல நேரம்.
இளங்காலைக் குளிர்போன்று புத்துணர்ச்சி நல்கும் புன்னகை
கொண்ட விண்மகளுடன் மண் மீது நல்லுலா வருக.
புதிய மனம்; புதிய ஆடை; அழகு மேனி மேலும் அழகு பெற
நல்லணிகள்; அணிந்துகொண்டு புறப்படு.
பாவாலும், பண்ணாலும் பெரும்பேறு பெற்று விளங்கும் மூவர்
அருளிய தேவாரத் தீந்தமிழ் போலவே தேவாரம் போற்றும் சிவ
பெருமானின் மகனான உனது உலாவும் உலகோரால் போற்றப்பட்டுப்
புலவர்களால் பாடப்படட்டும். மூவேழ் உலகங்களும் உலாவைக் கண்டு
போற்றி, வணங்கி, வாழ்த்திப் பேசட்டும்.
ஏழிசைபோல் மெல்லொலி எழுப்பும் மேகலை அணிந்த விண்மகளாம்
தேவயானையுடன் ஒன்றுபட்டு எழுந்தருள்க.
என்று அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பணிவோடு ,
வேண்டியதும் மாமுருகன் அதற்குச் சம்மதமாகப் புன்னகை பூத்தான்.
திருமஞ்சனம்
( 83 ஆம் கண்ணி முதல்,93 ஆம் கண்ணி முடிய. "மென்முறுவல் "எனத்
தொடங்கி, "தேவயானை" முடிய.)
மென்மையாகிய புன்முறுவலுடன் முன்னதாகச் சீரடி வைக்க,
மின்னலன்ன இடை கொண்ட தேவயானை முருகனைப் பின்தொடர்ந்து
வர, இருவரும் தேவமகளின் பொன்மாளிகை சென்றனர்; அங்கு
அலங்கரிக்கப்பட்ட பொன் இருக்கையில் புன்னகையோடு அமர்ந்து
தன்முன் நிற்கும் பூவாகிய தேவயானையின் அன்பாலும்,அழகாலும்
பூரிப்பினை அடைந்த புண்ணியக் கடவுளாகிய முருகன், அவளையும்
அகிலத்தையும் காத்தளிக்கும் கந்தபிரான் நீராட அமர்ந்தார்.
கங்கையின் புனித நீர், வற்றாது ஊத்துக்கண் உடைய சரவணப்
பொய்கை நீர்,மறைகள் ஓதிப் பூஜிக்கப்பட்ட கலச நீர், நறுமணம்
கொண்டு விளங்கும் பன்னீர், நனைந்து விழுதாக அரைக்கப்பட்ட
சந்தனக்குழம்பு, நெய் , தயிர், பால், நல்ல தூய்மை கொண்ட கோஜலம் ,
கோமயம், ஆகிய பஞ்சகவ்யம், போன்ற புனிதங்களால் நீராடியபின்,
உடலெல்லாம் நறுமணச் சந்தனக்காப்பும் அணிந்து மகிழ்ந்தார்.
நீராட்டு முடிந்ததும், தூய்மையின் வடிவமாகவும்,அழியாத தோற்றம்
கொண்ட இறைவனாகவும்,விளங்கும் தனது கணவனை,எம்பிராட்டி
தேவசேனா தேவியார் நீண்ட அழகிய இருக்கையில் அமர்வித்தார்.
சீராட்டும் தனது மனைவியின் பூஜையை ஏற்கும் அமைப்பில்
சத் உருவமாய் விளங்கும் அந்த ஆசனத்தில் அமர்ந்தார் ;பத்மாசனத்தில்
அமர்ந்தபடி, இரு கைகளும் சின்முத்திரையோடு விளங்க, அந்த நல்ல
நேரத்தில் தேவயானை அவரை வணங்கி,அர்ச்சித்து, மலர்மாலை சாத்தி,
முறையோடு தூப,தீபங்கள் காட்டி வழிபட்டாள். ஆரத்தி எடுத்தும்,
திருஷ்டி கழித்தும் மங்கலச் சடங்குகளும் ஆற்றினாள் .
ஆடை, அணிகலன்கள் அணிதல்
(94 ஆம் கண்ணி முதல் 113 ஆம் கண்ணி முடிய. "தாபத " எனத்
தொடங்கி, மேற்கொண்டான்" என்பது முடிய.)
எவ்விதப் பற்றும் இல்லாத ஆண்டியாய் ஒரே ஆடையாய்க்
கோவணம் மட்டுமே அணிந்து விளங்கும் ஏகாங்கி, மென்முறுவலுடன்
மிகுந்த விருப்பத்தைக் கண்ணிலே கொண்டவன்போல் அணிவகைகள்,
பட்டாடை, பொன்னாடை, பூப்போன்ற மெல்லிய ஆடைகள், புத்தம்
புதியதாய் அன்று வந்த ஆடை போன்றவற்றை விருப்பமுடன்
தொட்டனன்.
எட்டுத் திசைகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட சந்தனம், பச்சைக்
கற்பூரம், கஸ்தூரி, போன்ற நறுமணப் பொருட்களை ஆய்ந்து, அவற்றுள்
மேலோங்கிய நறுமணம் கொண்டவற்றை முருகன் மேனியெல்லாம் பூசி,
மகிழ்ந்த தேவயானை,அவருக்கு அணிகலன்களை எல்லாம் அன்போடு
அணிவித்து மகிழ்ந்தாள்.
கழுத்துச் சங்கிலிகளை கழுத்திலும், கேயூரம் என்னும் தோள்வளை
அணியைத் தோள்களிலும், சூட்டினாள்; அவைகள் பற்றே இல்லாத
மண்ணைப் பற்றிக் கொள்ளும் நண்டுபோல இறைவன் உடலில்
ஒட்டாது உறவு கொண்டன.
அழகிய காதுகளில் ஆதவன் போல் ஒளிவீசும் முத்துத் தோடுகளையும்,
சங்கிலி அணிந்த அழகிய கழுத்தினில் குளிர்ச்சியைத் தரும் செம்பவள
மாலைகளையும், அணிவித்தாள்.
நான்மறை ஒதுவதில் புகழ் கொண்ட சுவாமிநாதர் மார்பினிலே பூணூல்
ஓம்காரத்தை நினைவு படுத்துமாறு பரந்துபட்ட மார்பினிலே தவழ்ந்தது.
ஓங்காரப் பொருள் அறியாத அரி,அயன்,சிவன் என்னும் மூவர் முன்
விளக்கம் அளித்த செம்மை வாய்ந்த நல்வாயினை உடையவர்; தந்தையாம்
சிவபெருமான் போற்றவும் அடக்கமாய் அருகில் நின்ற பவ்வியத் தோற்றம்.
மான் மகளான வள்ளியை நாடிச் சென்ற காலத்தில் அணிந்த வேட
உருவத்திற்கு ஏற்ற செவ்வாடையை இன்றும் அணிந்தார்.
கருணை கொண்ட புன்சிரிப்பும், கூர்மையான மூக்கும், கருணை
பொழியும் மலர்போன்ற கண்களையும் கொண்டு விளங்கினார்.
சூரனை அழிக்கும் குமரன் தோன்றிடச் செஞ்சுடர்ச் சிவனவன்
தோற்றுவித்த நெற்றிக்கண் பொறியிலே தோன்றிய தனக்கும் அதே
நெற்றிச் செஞ்சுடர்க் கண்ணையும் பெற்று விளங்கும் பாங்கு கொண்டு
உலகம் காக்கும் நோக்கும்,
தந்தையைப் போல் மேனியெல்லாம் பூசிய வெண்ணீறும்,
வானத்து நிலவின் பிறைபோன்ற நெற்றியில், இடப்பட்ட வெண்ணிலா
போன்ற வட்ட வடிவப் பொட்டழகும்,
மண்ணகத்தில் துயர் அகற்றிடும்; விண்ணகத்தில் சோர்வு
அகற்றிடும்; பெண்ணின் மனம் குளிருமாறு இரக்கமும் கருணையும்
கொண்டதாகிய கிரீடத்தைத் தலையில் சூடியும்,
கூவுகின்ற சேவலைக் கொடியாகவும், கோலமயிலை ஊர்தியாகவும்
கொண்டும்,
கோலமயில் போன்ற தேவயானை ஓடிவந்து வழியனுப்பி வைக்கவும்,
மதுரை மாநகரை நோக்கி மாப்பயணம் புறப்பட்டான். பேருலா
புறப்பட்டான்.
உலா புறப்படல்
( 114 ஆம் கண்ணி முதல் 132 ஆம் கண்ணி முடிய. "ஓம் முருகா" எனத்
தொடங்கி,"சூழ்ந்தனர்" என்பது முடிய.)
ஓம் முருகா! ஓம் முருகா! என்று போற்றியபடி முருகனின்
அடியார் கூட்டம் ஆர்வக் கூச்சலும், ஆட்டமும் கொண்டு முன்னே
செல்லவும்,
பிரணவப் பொருள் தெரியாமல் சிறைப்பட்டு, இறையருளால்
வெளிவந்து, குமாரனிடம் உபதேசம் பெற்ற நான்முகன், அவ்வேதத்தை
முறையோடு ஓதி முருகனிடம் சான்று பெறுவதற்காகத் தானே
முன் வரிசையில் செல்ல,
இலக்குமியைத் தாங்கும் மணிமார்பிலே இருகரமும் கூப்பியபடி
அடுத்ததாகத் திருமால் செல்ல,
வற்றாத சங்க பதும நிதிகளின் கடலான நிதித் தலைவன்
குபேரன் அடுத்துப் பயணிக்க,
இந்திரனும், எண்ணற்ற தேவர்களும் கந்த வேளைப் போற்றியபடியே
மாலயனைப் பின் தொடர்ந்து செல்ல,
பைந்தமிழ் நாடான பாண்டிய நாட்டின் மன்னனான பாண்டியனும்,
திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீர மாமுனிவரும், ஆற்றின் நடைபோல்
சங்கக் கவிதைகள் பாடிய மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர்களும்
பின் தொடர்ந்தனர்,
வானம் போன்ற கருணை கொண்ட ஆறுமுக ஞான குருவின்
பேருருவைப் பேருலாவைக் காணவந்தார் எல்லாம் வானத்துச்
சூரிய ஒளியைத் தொட்டபடியே செல்லும் சக்கரத்தின் நிழல் போலவும்,
பிரதிபிம்பம் போலவும்,வேலவனின் ஞான ஒளியை விட்டுவிடாது
பற்றியபடியே பின் தொடர்ந்தனர்.
கந்தன் காலடி காட்டும் உலாப் பயணக் காட்சியைக் காணவந்த
கூட்டம் மே ட்டு நிலத்திலிருந்து பள்ளத்திற்குப் பாய முற்படும் வேகம்
போல் விவேகத்துடன் ஓடினர்.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவன் தன்னைக்
காப்பதற்காக வரும் கையை எதிர் நோக்கிக் காத்திருப்பதுபோல்
வாட்டமும், நலிவும், துன்புறும் நாட்டு மக்கள் முருகனது கருணை
வேண்டிப் பின்னரே ஓடினர்.
உலாவைக் காணவந்த மறவர் கூட்டம் முருகன் புகழைப் பாடினர்;
அதனையே அவன் காலடியில் பரிசாகச் சாத்தினர்;
அன்பு மேலீட்டாலும், துன்ப வெளிப்பட்டாலும் அவர்கள் சிந்திய
கண்ணீரே முருகனுக்கு அபிடேகம் ஆயிற்று.
தூய்மை மிக்கதாகிய பாடலும் ஆடலும் அன்புடை மறவர்கள் உலாவைச் சூழ்ந்து நின்று படைத்தனர்.
பேதை
( 133 ஆம் கண்ணி முதல் 158 ஆம் கண்ணி முடிய. போக்கும்," எனத்
தொடங்கி "போதினில் " என்பது முடிய.)
இறப்பும் பிறப்பும் இல்லாத நித்தியமாய் விளங்கும் புண்ணியனே!
என்றழைத்து ஏக்கத்தோடு பார்த்துப் பார்வையிலேயே தனது மன
நோயை மாற்றும் மகோன்னதப்புன்னகைக்காக நோக்கும் அந்தப்
பருவம் தொடாத பச்சிளம் பேதை, கெஞ்சும் குரலில் கந்தனே!
ஊக்கத்தால் உன்னை நோக்கி ஓடிவரும் இந்தப் பேதைப் பெண்ணைக்
காக்க உனது பாதுகாப்பு வீரர்களை உதறிவிட்டு ஓடி வா!
கன்னூஞ்சல் ஆடலாம்; கண்பொத்தி விளையாடலாம்; விந்தையாக
அடியவர்கள் ஆடும் வெறியாட்டு விளையாட்டில் அருள்பாலிக்கும்
வேலவனே! என்னோடு விளையாட வா! வா!
எட்டாத இளமைப் பருவம் கொண்ட என்னோடு, உன்னைக்கண்டும்
நேரே வந்து காண வெட்கமுற்று அன்னையின் முந்தானைக்குள்
ஒளிந்து நிற்கும் இந்த பேதைப் பெண்ணோடு விளையாட ஒடி வா!
ஆண்மை மிக்க அழகு பொலியும் ஆறுமுக! உன்னை அடையும்
எவ்வுயர்வும் பக்தியும், என்னிடம் இல்லை;ஆயினும் எதோ தோன்றிவிட்ட
அன்பினால் அழைக்கிறேன். ஒடி வா!
உன்னை அடைய, உன் பாதங்களைக் கண்டு அர்ச்சிக்க,
அல்லும் பகலும் அலைபவர் பற்பலர்; உண்ணாதும் உறங்காதும்
மௌனவிரதம் மேற்கொண்டும் நிலமெல்லாம் நடந்தும், உயர்ந்த
மலைகளின் மீது ஏறியும், பாமாலைகள் பாடியும், காவடி எடுத்தும்,
உடலெல்லாம் அலகு குத்திக் கொண்டு பெரும் காவடி சுமந்தும்,
தேவ தேவனாகிய உன்னைக் காணவும், உன்னருள் பெறவும்,
ஆவல் மேலிடத் தேடுகின்றனர்.
சேவற்கொடியோனே! மென்மை மிக்கதளிர் மாவிலை போன்ற
இதழ் கொண்ட இப்பேதைப் பெண் உன்னை அடைய த் தவமோ ,
பூசையோ புரியவில்லை.ஆயினும், இவ்வுலகில் பிறந்து, மெல்லிய
யௌவனப் பருவத்தைத் தொடுவதற்கு வீசும் காற்றொலிபோல் உள்ள
பேதை ஆகிய எனக்கோ .
காதல் என்றால் தெரியாது; ஆண் பெண் பேதம் தெரியாது;
நாதன், நாதம் நாதாந்தம் போன்ற தத்துவங்களும் தெரியாது;
கருணை கொண்டு ஏழை எளியவர்களுக்கு உதவுதல், ஞானம்
நன்கறிய கல்வி கற்றல்,மறை ஓதுதல் போன்றவைகளே வாழ்வின்
தகுதிமிக்க குளிர்ச்சி என்றும் அறியாத சிற்றறிவு உடைய
தன்மையினால் பற்ற வேண்டியதையும்,பற்றக்கூடாததையும் அறியாத
பேதை நான். ஆதலினால்
மறை மூர்த்தியான வேலவனே! உன்னோடு ஆடவும்,பாடவும்
ஆசைகொண்டு புத்தி மயக்கம் அடைய உன்னை நோக்கி ஒடி
வருகிறேன். என்னை விட்டு விட்டுப் போகாதே!
பெரும் திருப்பரங்குன்ற மலையில் அமர்ந்துள்ள பேரொளியே !
போகாதே! போகாதே! என்றோடிவரும் இளம் பெண் குழவி;
இடுப்பிலே பொன் அரைஞாண் மின்னிட ஓடிவரும், அப்பேதையை
அவளின் மெல்லிய பாதங்கள் ஒடி வருவதால் நோகுமே" என்றும்,
அவளது அறியா மன விருப்பத்தைத் தடுப்பவள் போன்றும்,\
அந்த பேதையை மான்போன்ற விழி கொண்ட நற்றாய் தூக்கிட,
அவளது இடுப்பிலே அமர்ந்து கொண்டது அக்குழந்தை.
தனது தவபலத்தால் ஞாயிற்றையே தனது ஞானக்கண்ணாகத்
தானமாக,வரமாக விரும்பி வீண் ஆசை கொண்ட முனிவன்போல்
அப்பேதைப் பெண்ணும் ஆண்டியான ஆண்டவன் மீது பற்றுற்று
மீண்டும்,மீண்டும் என்னோடு ஆட வா !" என்று ஆசையால்
கூச்சலிட்டபடியே, கூண்டைவிட்டுத் தப்பிக்க முயலும் பூவை போலவே
அத்தாயின் இடுப்பிலிருந்து இறங்கிடத் தத்தளிக்கும் நேரத்தில்,
பெதும்பை
(159 ஆம் கண்ணி முதல் 189 ஆம் கண்ணி முடிய. "பாவை" எனத்
தொடங்கி "காண்பேன் நான்" என்பது முடிய.)
முன்பிருந்தே பழகியவன் போன்றும், ஆடலும், பாடலும் தமது பண்பு
என்ற மனம் தாவுகின்ற பழமை ஆட்டங்களை அசைபோட்டபடியும்,
காணும் காட்சிகள் எல்லாம் தமக்காகவே படைக்கப்பட்டவை என்றும்,
மனத்திலே கொண்ட ஒரு அழகி, கலைந்து கலைந்து செல்லும் மேகம்
போலவும், மாண்பிலும் நடையிலும், சுவையிலும் மாறும் காப்பிய
இலக்கணம் போல், இளந்தளிர் மேனியும் அழகும்,வனப்பும் கொண்டு
மாறி மாறி அழகு கூடிவரும் அழகு தேவதை, கோங்கு மலரின் மொட்டு
போன்று அரும்பி யௌவனத்தைப் பறை சாற்றும் சற்றே வெளிவந்து
எட்டிப்பார்க்கும் மென்முலை கொண்டவள், அதே எழில் கோலம்
கொண்ட தமது தோழியர் புடைசூழ வந்தவள், அழகுமிக்க நீண்ட கமுக
மரம் போன்ற நீண்ட கரங்களும், சூரனாம் அரக்கனை அழித்த
பெருமை மிக்க வேலாயுதமும், மேகங்கள் தொலைத்துவிட்ட குற்றமில்லாத
கருணையும்,குளிர்ச்சியும் கொண்ட அன்பு பொழிகின்ற கூர்மையான
விழிகளும், திருமாலை வென்ற பேரரக்கன் ஆகிய தாரகனையும்,
அவனது மாயமாகிய கிரௌஞ்ச மலையையும் வீழ்த்தியதாலே
மகிழ்வடைந்த உலகோரின் போற்றுதலுக்கு நிலைக்களனான அழகிய
மார்பும், சேவலாக நின்று முருகன் புகழ் பாடும், சூரனின் மறு
உருவான தேர்க்கொடியும், நிறைந்த புகழைக் கொண்ட தேவயானை
மகிழ்ந்து மார்பிலே புரளுமாறு கழுத்திலே சூட்டிய செண்பக மாலையும்,
வானத்தில் பவனி வரும் சூரியனைப்போலத் தெய்வீகப் பேரொளியும்,
அழகுமிகுந்த அவனது மாட்சிமைச் சிறப்புக்களையெல்லாம் கண்ணாரக்
கண்டாள்.
கண் கண்ட காட்சியில் கருத்தையும், மனத்தையும் பறிகொடுத்த
அந்தப் பெதும்பைப் பெண் " மூவேழ் உலகிலே கந்தனைக் காணக்
கண் கோடி வேண்டும்; கண்டபிறகோ காணும் பொருட்கள் எல்லாம்
இவனுக்கு நிகராமோ? அழகு மிகுந்த இவனுக்கு நிகரான அழகனும்
உண்டோ? ஈர்க்கும் இறை முருகன் அழகே அழகு." என்று கூறிக்
கொண்டே மேகம் நிறைந்த வானத்தைத் தொடத் துடிக்கும்
இளம்பருவம் போல, அவளும் தனது தூய மனத்திலே நிற்கின்ற
நித்திலனை நானும் தொடுவேன்" என்று அடம்பிடித்தாள்; ஊர்வலம்
செல்கின்ற அண்ணலின் தேர்முன் நின்று ஆடினாள்; பாடினாள்,
அண்ணலே! என்னோடு பொன்னூஞ்சல் ஆட வாருங்கள்! விரைவாக
ஒடி மறைந்து வெளிப்பட்டு ஆட்டும் ஆட்டம் ஆட வாருங்கள்!
மண்ணிலே மணிகளை ஒளித்து வைத்துவிட்டுத் தேடும் ஆட்டம்;
கண்ணும் கண்ணும் கலந்து பேசும் ஆட்டம் ஆட வாருங்கள்!
வானம் வரைக் குதித்து எழும்பி,எழும்பிக் குதித்து ஆட்டும் ஆட்டம்
ஆட வாருங்கள்! இவ்விளையாட்டிற்காக என்னை நாடி வருவீர்களா
முருகா!
என்னைத் தேடி வரும் இனிய முத்தமிழ் முருகனைக் கண்டேன்;
இனிக்கும் உதடுகளைச் சுவைத்திடவே ஆசை கொண்டேன்;
இவைகளை எல்லாம் எண்ணி எண்ணி வாடிப்போன என் உள்ளத்தை,
வருத்தத்தை, வாழ்நாள் வீண் நாள் ஆயிற்றே என்று துன்புற்ற எனது
மனம் மகிழ்ச்சி அடையவே வந்தது ஈடு இணையற்ற எம் தலைவன்
நல்லுலா . அதனைக் கண்டேன்; அன்பைக்கண்டது என் மனம்.
மூட்டி மறைந்துள்ள எனது பருவம்போல் மூட்டி மறைத்து வைத்த
எனது உள்ளக்காதலும், வெளிப்பட்டது. எனது இந்த மாற்றத்தைக்
கண்டு நான் பேருவகை உற்றேன்.அதை எண்ணி எண்ணி நான்
மகிழ்வுற்றேன். அம்முருகன் மீது நான் அன்பு கொண்டேன்; அந்நினைவு
அச்செயல் எனக்கு இன்பத்தைத் தந்தது.
மன்னவனே! மூவர்க்கும் முன்னவனே! தொன்மை வாய்ந்த மறைக்குப்
பொருள் சொன்னவனே! என்னவனே! நீ எங்கும் சென்றுவிடாதே.
நீ எங்கு சென்றாலும் நான் உனது பொன்னடிகளைப் போற்றிடவும்
பணிந்திடவும், உன்னை அணைந்து ஆனந்தம் அடைந்திடவும்,
உன்னைக் காற்றுபோல் பின் தொடர்ந்து வருவேன்.
என்று அரற்றியபடியே ஊற்றெடுத்த கண்ணீர் வழிந்தோட,
ஆன்மாக்களை ஆட்டுவிக்கும் விளையாட்டின் ஆனந்த உருவமாகிய
ஆறுமுகன் அழகிலும்,செயலிலும் மனதைப் பறி கொடுத்த அழகிய
பெதும்பையானவள் உலா வழி உருண்டு,புரண்டு ஒடி வர,
அப்பெதும்பையின் வாடுகின்ற உள்ளத்தையோ செயலையோ
காணாத கருணை மிகுந்த இனிக்கும் திருவுலா நகர்ந்தது.
திரு உலாவைக் காணாது.தவித்த பெதும்பை இன்று என்கண்
கண்டது மாட்சியை; அதே மாட்சிமை பொருந்திய முருகனை
அடைந்தே தீருவேன் என்றே ஒடி வந்தாள் ........
மங்கை
(190 ஆம் கண்ணி முதல் 194 ஆம் கண்ணி முடிய.என்றாள் " எனத்
தொடங்கி வந்தானே" என்பது முடிய. 307 ஆம் கண்ணியில் மங்கை
நிறைவுறும்.)
இந்நிலையில் எழிலே உருவான மங்கை ஒருத்தி, மனத்திலே
கொண்ட காதலினால் கற்பனையாய்க் கண்ட அன்றில் பறவையிடம்
பேசிக்கொண்டே வந்தாள்
. அருமை மிகு அன்றில் பறவையே! அளவுகடந்த கருணை கொண்ட
குன்றத்துக் குமரனைத் திகழ்கின்ற தூய்மை மிகு மலர்கள் நிறைந்து
விளங்கும் சோலையில் தேடினேன்; துழாவித் துழாவித் தேடினேன்;
இளம் களிறு போன்ற அவனை ஒளிந்திருக்கும் எனது மனமெல்லாம்
தேடினேன்; அவனோ
விழாவின் தலைவனாக வேந்தனாக, இதோ இந்த உலாவில்
வருகிறானாமே!
என் மனத்தில் உலவுபவன் உலாவாக வருகிறான்! அவனைக் கண்டு
என் காதலைச் சொல்லப்போகிறேன். என்று பேசியபடியே உலாவில்
புகுந்து கண்ணாரக் கந்தனைக் கண்டு களிக்கிறாள்.
தசாங்கம்
1. நாமம்
(195 ஆம் கண்ணி முதல் 203 ஆம் கண்ணி முடிய ,"சேந்தனை" எனத் தொடங்கி," கனிநாமம் "என்பது முடிய
திருச்செந்தூரில் அருள்புரியும் செம்மை மிகுந்த சேந்தன்; கந்தன்;
திருச்செங்கோட்டில் அடியவர்களை வசீகரிக்கும் காந்தன்; வள்ளியை
மணம் புரிந்துகொள்ள வேடனாகி ,விருத்தனாகி விரும்பி மணந்தவன்;
புள்ளி கொண்ட மயிலை ஊர்தியாகக் கொண்டவன்;
அவனை அடைந்து அருகே சென்று அப்படியே அணைக்கத்
துடிக்கின்ற உள்ளத்தைக் கொண்ட தேவயானையின் தேன்பொங்கும்
கொங்கைகளைச் சுவைக்க விரும்புபவன்;
உய்யும் வழி உரைக்கும் வேத முதலாகிய ஓங்காரத்தின் பொருளை
அறியாது வேண்டிய தந்தை ஆகிய சிவபிரானுக்கு ஆசானாகி
உரைத்தவன்; குற்றமற்ற பேரொளி கொண்டவன்;
பெறற்கரிய பிறவியைப் பெற்றபின், பிறப்பு,இறப்பு என்னும்
தூசுகளை அழித்து,நீக்கி, ஏக்கத்தால் தவிக்கும் ஆன்மாக்களைக்
காத்துக் காப்பவன்;
அவனே குமரன்; அதுவே அழகும் அறிவும் மிகுந்த அவனது
திருப்பெயர் ஆகும்.
2.நாடு .
(204 ஆம் கண்ணி தொடங்கி 222 ஆம் கண்ணி முடிய.)
ஊக்கத்துடன் தண் தமிழ் நாட்டின் தாலாட்டுப் பாடலை மனத்திலே
கொண்டு,அதில் மயங்கிய மங்கை, அவளோ
கழுத்திலே அணிந்த நீண்ட ஆரத்தால், அவ்வடம் மார்பகங்களை
அழுத்தும் தன்மை
யாழ் போன்று இசைக்கும் மென்குரல்,
நன்கு வளமுடன் மலர்ந்த தாமரை மலர் போன்ற முகம்,
குவளைமலர் போன்ற கண்கள்,
பிறை நிலவு போன்ற காதுத் தோடுகள்,
நல்ல அழகிய நெற்றி,
கொங்குதேர் வாழ்க்கை" என இறைவன் பாடிய சங்கத் தமிழ்ப்
பாடலை நினைவுறுத்தும் வண்டுசூழ்ந்த நறுமணக் கூந்தல்,
பனை நுங்கு போன்ற உதடுகள்,
மென்மை மிகுந்த புன்முறுவல்,
தங்கமும் மணியும் இழைத்து ஆக்கிய அழகுக் கரங்கள்,
இல்லை என்றே தேடப்படும் சிற்றிடை,
இதுவரை யாரும் கல்லாத காம நுணுக்கத்தை விளக்கும்,
கடுமையான மனமாகிய சிறை,
காணவேண்டும் என்று தவிக்கவைக்கும் பேரல்குல்,
வெது வெதுப்பைக் கொடுத்து, காதல் நினைவை வளர்க்கும்,
மன்மதனின் இருபடைகள் ஆன அழகு தொடைகள்,
தொட்டாலும், பட்டாலும் பரம சுகத்தை நல்கும் இனிய கால்கள்,
கொண்ட மங்கைக்கோ மலையிலே தோன்றும் தென்றலும்,
அழகிய பறவைகளும் , நீலவண்ண வானும், தீயால் சுற்றப்படும்
சூரியனும்,நிலவும், கருத்த மேகமும், நல்ல வளங்களும், நீர்
அருவிகளும், ஆசையே இல்லாத தவ முனிவரின் தவப்பற்றும்,
உழைப்பும், உள்ளமெல்லாம் மகிழ்வும், ஆகிய இவைகள் வாழ்வின்
ஒரு கூறாகவும்,வாழச் சோறாகவும், சுவையைத் தருகின்ற சீராகவும்
கொண்ட மங்கையின் மனத்திலே வெற்றி அடைய முடியாத போராக
அமைந்த நிலையிலும் பெண்மனத்தில் நிலையாக வாழ்கின்ற
தூய்மை மிகுந்தவனே! மன்றத்திலும்,உலாவிலும் மின்னுகின்ற காந்தி
உடைய பொன் அணிகளை அணிந்த முருகனே!
நாடும் நல்லடியார் உள்ளமே உனது நாடாகும்.
ஊர்
(223 ஆம் கண்ணி தொடங்கி 228 ஆம் கண்ணி முடிய)
வாடும் பயிர்கள் போன்ற ஆன்மாக்கள் தமது வாட்டம் போக்க,
நாடும் நல்ல பதிகள் எல்லாம் முருகா! நின்னூர் ஆகும்.
செழிப்புமிக்க காடுகளும்,வளம் மிக்க கழனிகளும். பசுமைச்
சோலைகளும், நல்ல மரங்களும், அங்கே உதிர்கின்ற கனிகளும்,
வயல் நிறைந்த நெல்விளைச்சலும், உழவுத்தொழிலும் , உழைப்போரின்
உள்ளமெல்லாம் நிறைந்த ஊக்கஉணர்வும், எங்கும் எடுக்கப்படும்
எழிலார்ந்த விழாக்களும்,எல்லாவற்றிற்கும் மேலாக உனது பேரருளும்,
பெற்று விளங்குகின்ற சீர்மையும் செம்மையும் உடைய ஊரே
உனது ஊராகும்.
யானைகள் கொண்டு போரடிக்கும் பொங்கும் நஞ்செய் வயல்களின்
களம் கொண்ட செழிப்பூர்;
யானைப்படை கொண்டு பகைவர்களை அழிக்கும் வீரம் பொங்கும்
போர்க்களம் கொண்ட செருக்குடைய செந்தூர் நின்னூர்.
அழகு மயிலும், சேவலும் "அரோகரா" முருகனுக்கு அரோகரா"
என்று கூவி வணங்கிப் போற்றும் ஒளிமிகுந்த செந்தூர் நின்னூர்.
ஆறு
(229 ஆம் கண்ணி தொடங்கி, 234 ஆம் கண்ணி முடிய)
மதகணையில் ஓடிவரும் ஆற்று நீரிலே அணி அணியாகத் துள்ளும்
மீன்கள்; வெய்யிலின் ஒளியிலே வில்போல் துள்ளும் அம்மீன்கள் மீது
நீரின் மென்மையான புள்ளித் தூவலால் அழகும் குளிர்ச்சியும்
பளிச்சிடும் பேராறு.
ஆற்றின் உள்ளமெல்லாம் மகிழ்வுக்காட்சி.
வயலிலே உழவுப்பணி செய்யும் மள்ளர்கள், மனம் நெகிழ்ந்து
பாடுகிறார்கள்; அப்பாட்டின் இசை, சொல்லாக்கம் அழகிய தமிழ்,
ஆன பலவற்றை நன்கே சுவைக்கிறார்கள் சான்றோர்கள்.
வற்றாத வைகை ஆறாம் நற்றாயின் பொன்மய அலைக்கரங்களால்
ஆசியும்,வளமும் பெற்ற அத்திருப்பரங்குன்றம் பேறும் பெறுகிறது.
அத்திருப்பரங்குன்றமும் நின் மலை அல்லவா!
மலை
(235 ஆம் கண்ணி தொடங்கி, 251 ஆம் கண்ணி முடிய))
எந்த நாடும் நின்னாடே. எந்த ஊரும் நின்னூரே. எந்த நாளும்
உன்னருள் பெற்றால் நன்னாளே ஆகும்.
ஏந்தலே! குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்
அன்றோ!
நீ நிற்கும் மலையைக் கண்ணாலே கண்டாலே பிறவிக்கன்மம்
தொலையும் ;
உலகோர் குறை தீர்க்க, ஞானச்சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க,
அரக்கர்களை அழிக்கவந்த அக்கண் பொறி அழற்பிழம்பாய் மாறியது.
ஏற்க இயலாமல் அக்கினிதேவன் அஞ்சிடக் கங்கையவள் கலங்கிட
அது சென்றடைந்த இடமோ ஒரு பொய்கை. சரவணப்பொய்கை .
ஐந்து முகத்தோடு அதோமுகம் தந்து எம்பிரான் விடுத்த ஆறு
பொறிகள் ஆறு குழந்தையாகி, அப்பொய்கையில் ஆறுகுழந்தைகளாய்
ஆறுமலரில் அணைந்தன.
கார்த்திகை விண்மீன்கள் அறுவரும் விரைந்து வந்து அவைகளைச்
சீராட்டிப் பாலூட்டி வளர்த்தனர்.
தனயனைக் காணவந்த சிவபெருமான் உமையம்மையிடம்
ஞானப்பால் ஊட்டச்சொல்ல அன்னையோ அமுத ஞானப்பால்
கொடுத்து,அன்போடு ஆறு குழந்தைகளையும் ஆரத் தழுவினாள் .
ஆறுகுழந்தைகளும் ஓருருவாய் ஆறுமுகமாய்க் காட்சி அளித்தன.
ஆடிப்பாடி விளையாடிய ஆறுமுகன் ஆணவச் சூரனை அழிக்க
ஆயத்தமான மலை; போர்த்திறன் பூண்டவன் நின்ற மலை;
அம்மலை செந்தூர் கந்தமாதனம் ; பரங்குன்றப்பெரு மலை;
ஆக மலைகள் எல்லாம் நின் போர்த்திறன் கண்ட மலைகள் தாமோ!
பெரும் ஒலியுடன் விழுகின்ற பேரருவிகள் சூழ்ந்து விளங்கும்
மலை உன் மலை.
தேவயானை என்ற தென்றல் ஆவலோடும், ஆசையோடும், உனது
பன்னிரண்டு தோள்களையும் தழுவிய நீலமலை உன் மலையே.
பாவலர்கள் பைந்தமிழிலே உன்னோடு சேர்த்துப் போற்றுகின்ற
சிறப்புமிக்க மலை.
பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமான், மகனைக் காணவேண்டும்
என்று உருகும் நெஞ்சத்தை உடைய பார்வதி அம்மையுடன் வந்து,
சரவணத்தில் மகனைக் கண்டு மகிழ்ந்தபொழுது அன்னை
அணைத்ததால் ஆறுமுகமான மைந்தனைக் கண்டு மகிழ்ந்த தந்தை
"உலகம் சிறப்படைய இன்றுமுதல் மலை இருக்கும் இடமெல்லாம்
உன் இடமாம். உன் பெயரே மலைகளுக்கும் நிலைக்கும்"என்ற
புகழைப்பெற்ற மலை .
வளத்திலும், வாழ்விலும் குறைபாடு அடைந்தவர்கள் உன் மலையேறி
வந்து உன்னைப் போற்றினால் அவர்கள் வாழ்வு உயரும்; தென்றல் வீசும்;
அம்மலைகளை வரிசைப்படுத்தினால் சுவாமிமலை, செந்தூர் மலை,
அழகுப்பழனி மலை , வள்ளிமலை, சினம் தணிந்த தணிகை மலை,
பழமுதிர் சோலைமலை .
இவையனைத்தும் உயரிய உன் புகழ் பாடும் மலைகளாம் .
இப்படி மலைகளால் கவரப்பட்டு அதன் மீது அமர்ந்தவனே!
ஊர்தி
(252 ஆம் கண்ணி முதல் 260 ஆம் கண்ணி முடிய)
நீலப்புள்ளிகள் அழகுற அமைந்த தோகை கொண்ட மாமயில்
உன் ஊர்தியாமே.
உலகத்தின் நல்லொழுக்க மேன்மை போல வளர்ந்து, காலத்தின்
கட்டளைத் தண்டுகளது ஆணையால்,வெளிப்பாடாகவும்,
உள்நுணுக்கமாகவும், பற்றிய ஊர்தியோ? அன்புடன் பெற்றதால்
அனுபவிக்கும் ஆனந்த ஊர்தியோ? இம்மயில் ஊர்தி!
போரிட்ட சூரன் போரிலே கற்ற ஞானமோ? பணிவோ?
உன்னுடன் இணைந்து புகழ் பெறும் ஆசையோ? இம்மயில் ஊர்தி!
நாரத மாமுனிவன் கற்ற வேதத்தை முறைப்படிச் சொல்லாமல்
தவறான உச்சரிப்புடன் ஓதி வேள்வி புரிந்தார்; அவ்வேள்வியிலிருந்து
தோன்றிய து, ஓர் ஆடு. தவற்றின் அடிப்படையில் தோன்றிய அவ்வாடும்,
அரக்கர்போல் தாறுமாறாக ஓடியது. நாடுகளையும்,நகர்களையும்
முட்டி மோதி அழித்தது. எட்டுத் திசைகளும் சுற்றி வந்த அவ்வாடு
படுத்திய நாசத்தால் வெகுண்ட பலரும் அதனை அடக்க முற்பட்டு,
அதனிடம் தோல்வியுற்றனர். முடிவில் தன்னைத் தோற்றுவித்த
நாரதரைத் தாக்கத் துரத்திக் கொண்டு வந்தது. அஞ்சி முருகனை
அடைக்கலம் புகுந்தார் முனிவர். முருகன் ஆணையேற்று வீரவாகு
அவ்வாட்டை அடக்கினார். அடங்கிய அந்த ஆட்டினை அனைவருடைய
வேண்டுகோளை ஏற்று முருகன் ஊர்தியாகக் கொண்டார்.
அந்தத் துட்ட ஆடும் உன் ஊர்தி அல்லவா!
இவைகளைத் தவிர பெரிய யானையும் உன் ஊர்தியாமே!
படை
(261 ஆம் கண்ணி முதல் 276 ஆம் கண்ணி முடிய)
மாமுருகா! முற்றும் பற்றற்ற மூத்தவன், மூவர்க்கும் முதல்வன்,
ஆலமரத்தடியில் அமர்ந்து ஞானிகளுக்கு உபதேசம் செய்யும்
சொற்கடவுள், உமையம்மைக்கும், நந்தி தேவருக்கும் , சனகாதி
முனிவர்களுக்கும் உபதேசித்த சைவ ஆகம மறைகள் போற்றத்
தகுந்தவை. அந்த உபதேச ஆணையைத் தாங்கித் தன்னைப்படைத்தவன்
இட்ட ஆணையைத் தலைமேற்கொண்டு அரக்கர்களை அழிக்கப்
புறப்பட்ட முருகா! மாயக் கிரௌஞ்ச மலையையும், அதனோடு
இயைந்து தீயன புரிந்த தாரகனையும் அழித்தாய் வேற்படையால்.
கன்மமாம் மாயா மலத்தைக் கட்டறுத்தாய் வேற்படையால்.
அரக்கர்களோடு போர் புரிந்த காலத்தில் அவர்களது மார்பெல்லாம்
மாலையாகத் தோன்றுமாறு அம்புப் படைகளை விட்டழித்த வேலவா!
சூரனின் தம்பியான சிங்கமுகன் கன்ம மலத்தின் கூட்டாளி.
அவனை அழிக்கப் போர் புரிகையில், சிவக்குழந்தையே! வேலைத்தவிர
வேறெதுவும் வீசத் தெரியாதோ? உனக்கு, என்று ஏளனமாகப் பேசிய
சிங்கமுகனைக் குலிசப்படைகொண்டு வீழ்த்தியவனே!
நிறைந்த நீரும் புகழும் கொண்ட கங்கையைச் சடையில்
அணிந்த சிவபெருமானது இளங்குழந்தையோடு போராற்ற மிகுந்த
மகிழ்வுற்று வந்தான் சூரன்; அவன் மனத்தை மென்மையாய் ஆக்கினான்
முருகன். மகிழ்ந்த சூரன் முருகனைப் போற்றினான். அக்கருணை
சற்று நேரத்தில் முருகனால் நீக்கப்பட்டதும், பழைய ஆணவத்தில்
ஆர்ப்பாட்டம் செய்து நேரே நின்று போரிட்டான் சூரன்.
நேர்மையான முறையில் போரிட இயலாத சூரன் மாயப்போரைத்
தொட்டான். பல்வேறு உருவில், பலவேறு நிலைகளில், பல்வேறு
படைகளுடன் போரிட்டுத் தோற்கும் தறுவாயில் கடலின் நடுவே
மிகப்பெரிய மாமரமாய் நின்றான். ஆணவத்தின் வெளிப்பாடான
அந்தச் சூரனைத் தனது வேற்படையால் இரு கூறாக ஆக்கினான்
மாமுருகன். இறவா வரம் பெற்ற அவனை, அன்புப் பார்வையால்,
மயிலாகவும், சேவலாகவும் தன்னோடு வைத்துக் கொண்டான்.
வாகனமாகவும், கொடியாகவும் அரக்கனை மாற்றியது உனது
வேற்படை தானே!
முரசு
(277 ஆம் கண்ணி முதல் 287 ஆம் கண்ணி முடிய)
அரக்கர்களால் துன்புற்ற இந்திரன் முதலிய தேவர்கள் ,
இன்பத்தின் சுவையாளர்கள் கொண்ட பெருந்துயர் மாறவும்,
பெரும் அரக்கனான சூரனை அழிக்கவும், முருகன் கைக்
கொண்ட வேலாயுதத்தை வணங்கிய வீரவாகு மூவுலகும் வியக்குமாறு
கொட்டியது உன் வெற்றி முரசல்லவா!
முத்துக்கள் விளைகின்ற கடற்கரைச் செந்தூரிலே தலைவனாம்
அரசன் ஆறுமுகன் " நாளையே அரக்கர் மீது படையெடுப்போம்"
என்ற ஆணையை, அகிலமும் கேட்கும் வகையில் பறை
சாற்றினானே வீரவாகு. சூரனையே அஞ்சி நடுங்க வைத்த வீரத்தின்
பெரும் முரசு அல்லவா!
சூரனின் இளவலாகிய தாரகனையும்,கிரௌஞ்ச மாமலையையும்
சங்கரித்துக் கொட்டிய சீர்மை மிக்க முரசும் உன் புகழல்லவா!
போரிலே வென்ற உனக்குப் பரிசாக இந்திரன் தன்மகளைக்
கொடுக்கநினைந்து திருப்பரங்குன்றத்திலே தேவயானைத் திருமண
நாளன்று கொட்டிய மா மண முரசு;அது மகிழ்ச்சி முரசு.
உனது கோயில்களெல்லாம் உன் அடியவர்கள் பக்தியோடு
அடித்து எழுப்பும் அதிரொலி அன்பு முரசு.
வள்ளிமலையிலே கோலம் கொண்ட வள்ளியம்மையை மணக்க
விரும்பிச் சென்ற காலை, பெண்ணின் நிலைகண்டு அஞ்சிய குறவர்கள்
வெறியாட்டு ஆடல் ஆடி வேலனை அழைக்கும் நிகழ்வில் அடித்தார்களே
அணி அணியாக ஆடல் முரசு.
ஆயிரம் ஆயிரமாய் ஆண்டவனே! நின் பெருமையைப் பாட்டால்
வடித்துப் பாவலர்கள் பாமாலையைச் சூட்டி மகிழ்ந்த மாலை முரசு.
ஊரெல்லாம் அருளோடு காப்பவனே! என்று உனது புகழ் பரப்பும்
முரசு.
கருணையில் கார்மேகம் போன்றவனே! என்று கார்மேகம் போற்றும்
இடியாம் இயற்கை முரசு.
தார்
(288 ஆம் கண்ணி முதல் 293 ஆம் கண்ணி முடிய)
செம்மை வாய்ந்த மலையெல்லாம் வீற்றிருந்து அடியவர் காக்கும்,
ஆரமுது போன்றவனே! செவ்வரளி போன்றதோ உன் செவ்வாய்?
சொல்லால் கவிஞர்கள் பாடிய செஞ்சொல் மாலை ஏற்றதால்
மகிழ்வில் செவ்வாய் ஆனாயோ?
செவ்வாய் என்ற அங்காரகன் போற்றும் சொல் மாலை கொண்டவனே!
செவ்வரளி மாலை காண்பது செவ்வாய்க் கிழமையாமோ!
செந்தேன் சூழ்ந்த செவ்வந்தி மலரை வியாழனில் அணிவாயோ!
பாதம் முதல் உச்சி வரை அழகிய மேனியெல்லாம் பட்டு போன்ற
பச்சை மலர் சூடி மகிழ்வாயோ!
தலை மாலையும் பச்சையாய் அணிவதே உன் விருப்பமோ!
உன் கழுத்திலே மின்னுகின்ற வெற்றி மாலையை இந்திரன் மகள்
தேவயானை அணிவித்தாளோ!
மற்றும் வள்ளியிடம் கற்ற காதல் பாடத்தில் வெற்றிபெற்று உன்
கழுத்தில் சூட்டப்பட்ட மாலை மீது அவ்வளவு பற்றோ?
கொடி
( 294 ஆம் கண்ணி முதல் 299 ஆம் கண்ணி முடிய)
சேவலைக் கொடியாகக் கொண்டவனே! ஆன்மாக்களின் பிறவிக்
கன்ம மலத்தைக் கொடிச்சேவல் கூவியே போக்கிடுமோ!
உனது தேர்; அதில் பறக்கும் கொடி, கோடிக்கணக்கான
அரக்கர்களை அஞ்சவைத்து, அடிபணிய வைக்குமாமே !
போருக்குப் புறப்பட்ட உனது தேரிலே அக்கினியே கொடியாய்ப்
பறந்தான்; உன் தேர்க்கொடியைத் தேரைக் கண்டு, ஆறுமுகன்
வந்துவிட்டார்" அழிந்தோம் நாம்" என்று அஞ்சி அண்டங்கள் எல்லாம்
தாண்டி ஓடினார்களே!
வீரமும், பராக்கிரமும் பெற்ற வேலவனே! போற்றினோம் உன்னை.
மாபுகழ் கொண்ட வேலவன் கொடியே வாழ்க நீ.
மாண்புமிக்க புகழையும்,உலகெல்லாம் நிலைத்து
நிற்கும் ஆற்றலையும் பெற்றுத் திகழும் முருகனே!
தசாங்கமாய் வீர விளைவுகளைப் பெற்று உயர்ந்தவனே!
உடலெல்லாம் மாசு நீக்கும் திருநீற்றை அணிந்தவனே!
நெற்றிக்கண்ணின் மாசில்லாத பேரொளியால் உலக உயிர்களைக்
கருமையும்,கருணையும் கொண்ட மேகம்போல் காப்பதில்
ஆன்மாக்களை விட்டு ஒருபோதும் நீங்காத நித்தியனே!
உன் ஊரே என் ஊராகும்; உன் பெயரே என் நெஞ்சம் முழுதும்
வியாபித்திருக்கிறது. உன் மீது கொண்ட காதலால் உலகத்தோரால்
பித்து ; அதுவும் முற்றிய பைத்தியம், என்றே பெயர் பெற்றேன்.
முல்லைமலர்போல் முறுவல் கொண்டவனே! உன் உலாவைப்
பற்றிடவே பற்றோடு ஒடி வருகிறேன்" என்று வரும் மங்கையை,
முற்றாத முக்திப் பற்று, கொள்ளாத முத்தான்மாவை மலைவாசம்
பற்றியது;சிவப்பேறு விட்டு விலகியதுபோல நீளுலாவும் விட்டு விட்டு
விலகி நெடுந்தூரம் சென்றுவிட்டது.
விட்டு விடாத கடும் பற்றுக் கொண்ட அவளும் பின்னே ஓடினாள்
மடந்தை
(308 ஆம் கண்ணி முதல் 335 ஆம் கண்ணி முடிய)
பற்றிய பற்றினை விட்டு விடாத மூர்க்கத் தனமான மனமும்,
பைஞ்சோலைகளிலே மனம் விரும்பிப் பந்தாடும் இயல்பும்,கொண்ட
அழகே உருவான மடந்தை உலாவைக் கண்டு ஓடோடி வந்தாள்.
மனத்தைக் கவர்ந்து தன்பக்கம் இழுக்கக் கூடிய, சிற்றாற்றின்
சலசலப்பு போன்ற சந்த நடையி
கொண்ட கண்ணை உடையவள்; கண்கொள்ளாக் காட்சியாகக்
காண்போரைக் கவர்ந்திழுக்கும் மார்பகம் கொண்டவள்; மன்மதனுக்குத்
துணையாகி ஆண்மக்களது மனத்தைக் கலைப்பவள்; கருமையும்,
குளிர்வும், நறுமணமும் கொண்ட மேகம் போன்ற குழலை உடையவள்;
நறுமணம் கொண்டு ஒளிரும் நல்ல மலர்போன்ற செம்மேனி உடையவள்;
அறத்தைக் கூறும் தமிழ்க்கவிதை தடம் புரண்டு இன்பியல் பயணம்
செய்வது போன்ற நடையினை உடையவள்;மலைச்சாரலில் தூவும்
மழைத் தூறல்போல் வெளிவரும் அழகிய குளிர்ந்த புன்முறுவலினால்
முனிவரின் கடுந்தவத்தையும் மாற்றுபவள்; மாறிவந்து அவள்
மேனியெல்லாம் பூத்துக் குலுங்கும் யௌவனத்தின் போர்ப்படைவாள்;
அந்த அழகு மடந்தை உலாவின் பின் ஓடி வந்தாள் .
தனது தாய் அந்தச் சிற்றம்பல நாதனாம் சிவபெருமானின்
தோத்திரங்களைப் பாராயணம் செய்தபொழுது, தானும் உடனிருந்து
சொல்லியும், கேட்டும் வளர்ந்த அவள், சிவனின் மகனாகிய முருகன்
புகழைக் கேட்டு அவன் மீது பற்றுற்றாள்; அதுவே காதலாக மாறியது.
இன்றோ பவனிவரும் அவன் உலாவின் பின் ஓடி வந்து தனது
மனக்காதலை தனது நெஞ்சத்தை அவனது சேவடியில் சமர்ப்பித்தாள்.
சேயோனே! திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெம்மானே!
இறப்பும்,பிறப்பும் இல்லாத நித்தியமாம் ஆக்கக் கடவுளே! ஆறுமுகா!
ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களின் உருவம் கொண்டு
உலக ஆன்மாக்களைத் துன்புறுத்திய சூரன்,சிங்கமுகன், தாரகன் என்ற
மூவரையும் அழித்த அழிவே இல்லாத முதல்வனே!பைந்தமிழ்
போன்றவனே! உன் மீது காதல் கொண்டு அன்பு கொண்டு உன்னையே
அடையத் துடிக்கும் இந்தப்பெண்ணைப் பார்! பற்றுக் கோடின்றி
அங்குமிங்கும் தாவிடும் இந்த மென்கொடிக்கு நீயே பற்றாவாய்;
அலையும் மனத்தை நின் அன்பு ஒன்றே அணைக்கவல்லது.எனக்கு
வழியும்,வாழ்வும் நீயே அல்லவா! நிம்மதி அளிக்கும் நின் கரம்
என்னைப் பற்றட்டும் . நிம்மதியை எனக்கு அளிக்க மென்முறுவல்
காட்டுக. நித்தியனே! பத்தியால் உன்னைப் பலகாலும் பணிபவள் நான்.
நின் மார்பிலே அழகாக வாடாமல் நறுமணத்தோடு மின்னும் மாலையை
என் கழுத்தில் நீ அளி . அதுவே எனக்கு வாழ்வும் அளிக்கும்;
ஆன்றோர்களுக்கு முத்தி அளிக்கும் மாலையல்லவா அது. அடியவர்
பற்பலர் விரும்பும் அம்மாலையே இன்று மாலைக்குள் கோலமகளான
வள்ளியம்மை சீராய்ச் சிறப்பாய் பண்பாய் அளிக்கும் மாலையாக
எனக்களிப்பாய். வேலவனே! வெட்கத்தை வெறும் குப்பையாக்கிவிட்டு,
நாணத்தை, அச்சத்தை, நல்ல பயிர்ப்பை, என் மனத்தை விட்டு
விரட்டி அடித்துவிட்டு வேலவனே! வேண்டுகின்றேன். என்னை ஆட்டிப்
படைக்கும் ஆசை முன்னே அழைத்துவர,உனது மாலைக்குள் நான்
ஒளிந்துகொண்டேன். மாலைக்குள் மாலை தா மாலை தா! என்று
கத்திக் கொண்டே மலைபோன்ற முலைகள் அசைந்தாட, நில்!
போகாதே! என அத்தாய் தடுத்தபடிப் பின்வர, தாயாகிய முருகனைக்
கன்றுபோல் மன்றாடிக் கொண்டு ஓடி வரும் பொன்னாடைத்
துகள்களால் பொலியும் பூப் போன்ற மடந்தையைப் பாராதே
மாமதுரை என்னும் அழகுச் சோலை மடந்தையைக் காணவே
கந்தனுலா போயிற்று.
அரிவை
(306 ஆம் கண்ணி முதல் 327 ஆம் கண்ணி முடிய.)
அழகே உருவான, தெய்வயானை தேனொழுகும் தெள்ளு தமிழால்
தாலாட்டாவும்,உண்மை வழிவந்த நற்புலவர்கள் மெய்க்கீர்த்தி மேன்மை
கொண்டு பாடவும், உலகத்து மாந்தர்களுக்கு உய்யும் வழி காட்டும்,
காட்சி அருளும் அவ்வுலாக் காட்சியைக் காண்கின்ற மாட்சிமை
போயிற்றோ? என்று அரற்றிக் கொண்டே
உருண்டு திரண்ட மேனி, நீண்ட மேகம் போன்ற, கருங்கூந்தல்,
மன்மதனின் ஆட்சிச் செங்கோல் போன்ற யௌவனம், கண்டதே காட்சி,
வாழ்தலே உண்டு களிக்க, கூற்றுவன் போல மாய்த்துவிடும் மனம்,
நண்டுவளை போன்ற அல்குல் பரப்பு, வெளியே விடு" " வெளியே விடு "
என,முண்டியடிக்கும் மார்பகங்கள், போர் புரிய, உண்டுபோல் தோன்றி,
இல்லையாக மறையும், ஒல்லிய இடை , தேடாத அமுதம், தேடி
அடைந்துவிட்டாலும் அமுதம், நாடமுடியாத பாதுகாப்பு, நாடிவிட்டாலோ
கூடலே முழுத்தொழில், ஆழ்ந்த மயக்கமில்லாத பேரறிவு, வானத்தில்
பறக்கும் உயர் கனவு வாழ்வு இவ்வளவும் ஒருங்கே கொண்ட
அழகான அரிவை உலா இடையே புகுந்தாள்.
நாதனே! உன்மீது கொண்ட காதலினால் தவிக்கும், எனக்கு
காவிரிக் கரையிலே வளர்ந்துள்ள மாமரத்தின் கனிபோன்ற உனது
காலடிகளிலே காதல் அடைக்கலம் தருவாய்! சொர்க்கத்தின் குளிர்ச்சி
கொண்ட உன் பாதமே எனக்கு முத்தியும்,மோகமும் நல்கும்.
நாளெல்லாம் பாண்டிய நாடு கண்டு களிக்கும் இந்த
நல்லுலாவை நானும் கண்டுவிட்டேன். பெரிய இந்த மாநிலத்தில்
செல்கின்ற அழகும்,தொன்மை வாய்ந்த அழகும், கண்ணாரக் கண்டேன்;
திரும்பவும் கண்டேன்; கண்டு, எண்ணமெல்லாம் இனிமை கொண்டேன்.
உன்னையே நாளெல்லாம் கனவில் கண்டு, என் மனத்தை உன்னிடம்
ஒப்புவித்தேன்; அம்மனத்தை அருள் கொண்டு ஏற்றிடுவாய்.
உன் மீதே மாறாத காதல் கொண்டிட்ட இந்த அபலைப் பெண்ணான
அரிவையோடு இணைந்திடுவாய்! நல்ல மணம் மிக்க உனது
கழுத்து மாலையை நாராக வற்றிவிட்ட இப்பெண்ணிற்குச் சூட்டிடுவாய்.
நீண்ட புலம்பலுடன் ஓடிவரும் வில்போன்ற புருவமும்,நிலவன்ன
முகமும் கொண்ட அவ்வழகியைப் பாராமல், அவளது வாட்டம்
போக்காமலும்,
எந்த நிலையிலும் தன் பணியை, வழியை மாற்றாமல் செல்லும்
ஞாயிறு போல,எட்டுத் திசைகளும் தனது அன்பாலும், அருளாலும்,
இன்பம் நல்கும் ஆறுமுகன் , அவனது உலா, தொன்மையும்,தூய்மையும்
தாங்கியபடித் தன் கதியில் சென்றிடவே ..........
தெரிவை
தன்னைக் காண்பவர்கள் பக்கம் சாராது, அவர்களைத் தன்பக்கம்
மாற்றுகின்ற மையல் கொண்ட மற்றொருத்தி உலா நாயகனைக்
கண்டு ஓடோடி வந்தாள்.
ஆறாது, நெஞ்சினுள்ளே ஆசைகளையும், காதலையும் மறைத்துவைத்து
வாழும் அழகே உருவான தெரிவை அவள்.
மனமும் வாயும் நினைக்கும் எண்ணத்தை வெளியில் கூறாத
வாய்க்குள்ளேயே பிதற்றும் குணத்தாள்; வாடி வதங்காத வலிமை மிக்க
மென்முலை, அவளைப் படாத பாடு படுத்திடவே,
"சேயோனே! வானத்தில் பறக்கும் செங்கால் நாரைகளின்
வரிசையை எண்ணி எண்ணி ஆராய்ந்த படியே அவை நூறு இருக்கும்,
ஆயிரம் இருக்கும் , என்று எண்ணிக்கொண்டே உனது பெயரையும்
உச்சரித்துக் கொண்டே,போற்றிக்கொண்டே நேரத்தைப் போக்குபவள்;
உன்மீது கொண்ட காதலால் நாள் முழுவதும் உன்னையே எண்ணிக்
கொண்டு நேரம் போக்குபவள்.
எனது மனத்திலே வித்திட்டு மரமாகி வளர்ந்துவிட்ட ஏக்கங்கள்
அதை எப்படி எடுத்துச் சொல்ல முடியும்?
விதை விதைத்து,நாற்று நட்டு, வளர்ந்த பயிர் அறுவடைக்கும் வந்து
விட்டது. ஆனால் அத்துடன் இணைந்து தோன்றிய என் ஏக்கம் மட்டும்
விடிவு பெறவில்லை.
நான் பட்ட மரமாகிப் பட்ட துயர்; காதல் மோகத்தில் என் இதழை
நானே கடித்துக் கொண்டு குருதி வழிய நான் பட்ட துயர். அந்தோ!
என்னென்பேன்!
என்மன எண்ணங்களை வெளிப்படுத்தி உன்னோடு ஒட்டி உறவாட
நான் அனுப்பிய தூதுகள் என் காதலை ஏற்க வேண்டுகோள்;
இல்லற மாண்பு வழங்கிட மன்றாடிப் பாதம் பணிந்தனுப்பிய
வேண்டுகோள்; மேகம்,பறவை, நெஞ்சு எனப் பலப்பல தூதுகள்.
மனத்திலே மூண்டுவிட்ட பெண்மனக் குமுறலை,மோகத்தை
ஏற்காது, "நானோ ஆண்டி ; என்மனத்தில் ஏது காதல்? என்று
நாகரிகமாக மறுத்துவிட்ட அமைதியே உருவான ஆணழகனே !
தெரிவை
(328 ஆம் கண்ணி முதல் 362 ஆம் கண்ணி முடிய)
பிறைநிலா போன்ற நெற்றியும், அதில் வில்போன்ற புருவமும்,
மான்போல மருண்ட பார்வை கொண்ட குவளைக் கண்களும்,
செவ்வேள் முருகனின் வீரம் மிக்க புகழை எப்பொழுதும் ஜெபிக்கும்
செவ்வாயும், ஒன்றோடொன்று மோதி, நிறுத்தாது போரிட்ட படி
பணிவு கலந்த ஒற்றுமையாகி இல்லாத செவ்விடை பாரத்தைத்
தாங்க மறுத்து, சீரிடையின் பாரத்தால் ஒருபுறம் சற்றே சாய்ந்து
முகம் தாழ்த்திய இன்பியல் கொங்கைகளும்,மெல்லிய நடையைப்
பார்த்தபின் தன் நடையை விட்டுவிடும் அழகிய மான் போற்றும்
நடையுடைய பாதங்களும், மேகத்தின் உள்ளம் நிறைந்த குளிர்ச்சியும்,
கருமையும் நிறைந்த கூந்தலழகும்,அக்கூந்தலிலே சூட்டியுள்ள மலரில்
குடிகொண்ட வண்டும், "என் கண்ணில் இருப்பதால் அவன் கண்ணாளன்"
என்று பறை சாற்றிக் கந்தனைக் கொண்ட கண்ணிரண்டும்,
ஆசைப்பெட்டகமாய் முருகனை மறைத்து வைத்திருக்கும் குறுகிய
மனமும் கொண்ட அழகுப் பெண்ணே தெரிவை.
உலாவின் இடையே புகுந்த அவள், எங்கே போகிறாய்! என்று
கேட்கும் தென்றலிடம் திருப்பரங்குன்றத்தான் எனக்கு முன் வாரான்;
மன்றலிலே வந்து என்னை அணைக்கமாட்டான் ; அவனைக் காண
வந்தேன்" என்று சொல்லிப் புலம்புகிறாள்.
முருகன் மீது கொண்ட ஆசையால் பசலை நோய் தாக்குதலுக்கு
உள்ளானேன்; ஊரார் வேறு பழி தூற்றுகிறார்கள்; அழகும் கேட்டது;
பேரும் கேட்டது; உடலும் கெட, நான் நாராகித் துரும்பாய் இளைத்தேன்.
கூர்மையான மலர் அம்புகளைக் கொண்டு மாட்சிமை இல்லாத
மன்மதன் என்னைத் துன்புறுத்துகிறான்; மனத்தாலும், உடலாலும்
சீரழிந்துபோன இந்தப் பெண்ணின் மீது கருணை காட்டு!
மகிழ்கின்ற மாற்றம் அளி!மாலை சூட்டி மாண்பினை அளி!
மன்னவனே! மா முருகா! என்று பிதற்றியபடிச் சாலை என்றும் பாராது
ஓடிவரும் தெரிவையை ஒரு பொருட்டாகவும் நினையாமல்,
தன்வழியே செல்லும் முருகன்.
" உமது மணமாலை உள்ளம் கவர்ந்த வள்ளிக்கா? வண்டுகள்
மொய்க்கும் குழல் கொண்ட தேவயானைக்கா? இதோ ஓடிவரும் இந்தப்
புள்ளிமான் கூட்டத்திற்கா? என்று கள்ளத்தனமான சிந்தனை கொண்ட
நாரதன் கேட்பதுபோல் பார்க்க,
அதையறிந்த முருகன், நான்குமறைகளைத் தாமாகவே கருதுபவன்;
சாத்திரச்சிறப்புக்களுக்கு முதலிடம் கொடுப்பவன் ; தனது நெறியைச்
சீர்மையைக் காதலிலே வள்ளிமலையிலே காட்டியவன்; உலாவிலே
ஓடோடிவரும் பேதையார் பிதற்றிவரும் காதல் மொழி கேட்டு
மனம் மாறாமல்,மோனநிலை கொண்ட மூவர்க்கும் முதல்வனான
சிவபெருமானின் வழியைப் பின்பற்றி மௌன குருவானான்.
பேரிளம்பெண்
(362 ஆம் கண்ணி முதல் 437 ஆம் கண்ணி முடிய)
எழிலுடைய முருகனே! "வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன்;"
என்று உரக்கக் கூச்சலிட்டபடியே உலாவின் உள் நுழைந்தாள்
பேரிளம்பெண்.
உன் நினைவால் வாடுகின்ற எனக்குக் காலைப்பொழுதோ
கருணையோடு உதவுகிறது; ஆனால் இந்த மாலைப்பொழுதோ
அப்பப்பா! மனத்தைப் படாத பாடு படுத்துகிறது? என் மீது
கருணையே இல்லாமல் தென்றல்,இளவேனில், மலர்களின் நறுமணம்
போன்றவற்றால் என்னைத் துன்புறுத்துகிறது.
பாலைநிலம்போல வறண்டுவிட்ட என் மனத்திலே அழகான நினைவு
கொண்ட உன் முகத்தை,மென்முறுவலைச் சோலையாகப் பசுமையாக
உருவாக்கிய மலர்வில் மன்மதன் ஒருபுறம்; வெறுக்கத்தக்க வெண்ணிலவு
ஒருபுறம்; என்னை ஏளனமாகப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கின்றன.
உள்ளமெல்லாம் என்னைப் பழிவாங்கும் அவைகள் என்னை அலர்
தூற்றுகின்றன.
உன்மேல் கொண்ட காதலால் நான் அனுப்பிய தூதெல்லாம்
தூய முனிவர்கள் உன்முன் வந்து போற்றும் தோத்திரங்கள்,
பாடல்கள் போற்றல்களின் முன்னே தூசாகிப் போய்விட்டதோ?
தூயவனே! தேவதேவனே! உன்னைக்காண, உன் அழகு முகத்தைக்
காண, உலாவில் பவனிவரும் தோற்றம் காண ஓடோடி வந்தேன்.
உன்னைத் தேடி அலைபவர்கள் காலம் காலமாய்த் தேடி
அலைந்தாலும், பாடினாலும், ஆடினாலும், உன்னைக்காணாது
வாடிவீழ்ந்தாலும்.கூடாத செயலாயிற்றே உன்னைக் காணுதல்.
அப்படியிருக்க, இந்தப் பேதைப் பேரிளம்பெண் முன் தோன்றுவாயோ?
பிரணவப் பொருள் தெரியாமல் விழித்த நான்முகனுக்கு, நான்கு
வேதங்களும், நற்சுருதிகளும் உபதேசித்து, ஆசானாய் விளங்கியவனே!
அன்னை தந்த வேலாயுதத்தால் மாயமாகிய கிரௌஞ்ச மலையையும்,
தாரகனையும் வீழ்த்திய பெருமை கொண்டவனே!
உன் பெருமையை உயர்வாகவும், உன்மீது தூய்மையான பக்தியையும்
உள்ளத்திலே உண்மையாய்க் கொள்ளாதவர்கள் உன் பக்கம் சார்தல்
என்பது நடக்கும் செயலாமோ? அவர்தம் வாழ்வும் சிறக்குமோ?
தலைவனே! உன்மீது அளவுக்கு அதிகமாக ஆசை கொண்டுவிட்டேன்;
எனது ஆசையை நல்ல காதல் என்பதா? பேதைமை என்று இகழ்வதா?
என்னைப்பெற்றெடுத்த நற்றாயோ என்காதல் அறிந்து என்னைச்
சுட்டெரிக்கிறாள்; உன்மீது கொண்ட மாயக்காதலினாலே தாயின்
அன்பை, ஆதரவை அறியாது, அவளைச் சோகத்தில் நிறுத்திவிட்டு
நாயகனே! உன்னை அடைய நோன்பு எடுத்து நிற்கிறேன்;
உன் உலா வருகிறது என்றதும் உன்னைக் காணும் ஆசைக்
காதலால் உன்முகம் காண ஓடோடி வந்துள்ளேன்.
கூர்விழி கொண்ட அவள் புலம்பியபடி நாடி, வாடி நிற்க,
சிற்றம்பலத்தில் ஆடுகின்ற பரமசிவத்தின் அடியையும், முடியையும்
தேடி அலைந்து திரிந்து காணமுடியாத நான்முகனும், திருமாலும்
கூடிப் போற்றிய திருப்பரங்குன்றத்திலே.
சிவனோடு வாதிட்டு இகழ்ந்த குற்றத்தினால் தீநோய் உற்ற நக்கீரன்
திருப்பரங்குன்ற மாமுருகனைத் திருமுருகாற்றுப்படை என்னும்
உயரிய நற்றமிழால் ஆற்றுப்படை பாடிப் போற்றி, முருகன் அருளால்
மூன்று குற்றங்களும், தீநோயும் மாறிட, முக்கண்ணனும் வாழ்த்திட
அற்புதங்கள் நடத்திய அற்புதனே!
பிறவி இருளில் சிக்கித் தவிக்கின்ற ஆன்மாக்கள்,பிறவி அறுக்கும்
சிவப்பேற்றை அடைய.அச்சிவனை விடாது பற்றிக்கொள்ள, ஒரே வழி
பந்தபாசங்கள் நீங்கிப் பற்றற்று விளங்குதல் ஆகும்.
முனிவர்களோ பற்றினை அறவே விட்டொழிப்பதற்கு அச்சிவபிரானிடம்
பற்று கொள்வதற்கு,நீண்ட தவம் புரிவார்கள்.
இவற்றையெல்லாம் மனதில் கொள்ளாத நான் அருவியாகிய ஆசை
பொழிகின்ற, பிறைநிலவு ஜொலிக்கின்ற ஆசையெனும் ஆர்வம் கொண்ட
ஆழ்மனத்தைப் பாழ்மனத்தைக் கொண்ட நான்,தெம்மாங்கு பாடியும்,
பசுமை வாய்ந்த காதலில் பேரன்பு வைத்தும்,சுற்றித் திரியும் காதல்
பறவையான பேரிளம்பெண் ஆனேன்.
மிக உயர்ந்த பசுமை மிக்க பாக்கு மரத்தின் மீது, ஆசையுற்று
அதனைக் கட்டித்தழுவ விரும்பிய பசுமைவயலில் விளைந்த நெற்கதிர்
கொண்ட ஆசை போல, சுந்தரனே! நானும் உனது தோளைப் பற்றி
அணைக்க ஆசைப்பட்டேன்;
உனது தோள்களோ உன்னைப்போற்றித் தவம் இயற்றி, மூச்சடக்கி,
மோன நிலை சார்ந்து, ஆற்றவேண்டிய அனைத்து நெறிகளும்
முறைப்படி ஆற்றுகின்ற பெருந்தவ முனிவர்களுக்கே கிட்டாத
உன் தோள்களைத் தழுவ ஆசைப்பட்டேன்.
உன்னையே அடைய வேண்டும் என்பதற்காகக் "கந்தர் கலிவெண்பா"
பாராயணம் செய்தேன்; ஆனால் நற்பண்பும், நல்லடக்கமும் கற்கவில்லை.
மூவேழ் உலகங்களும், அண்டகூடங்களும் நிறைந்து வாழும் மக்களின்
உள்ளங்களை எல்லாம் சொந்தம் கொண்டும், வானத்திலிருந்து பாதாளம்
வரை ஆட்சிச் சொல்லாக "சரவணபவ" என்னும் ஆறெழுத்து
மந்திரத்தை ஆட்சி மொழியாக்கி, ஏகனாக, எல்லாம் தான் ஒருவனேயாக
உயர்ந்த மோன நிலையில் , வீட்டுப் பேறு வழங்கும் நாதமாய்,நாத
ஒலியாய் ஓங்கார உருவமாய் விளங்கும் மாமுனிவனே!
உனது மாட்சிமை அறியாது, தர்மம் மீறி உன் மீது ஆசையுற்றேன்.
காட்டிலே கடுந்தவம் புரியும் முனிவரது புனிதத் தூய மனத்தை
வழி வழி போல் வாழ்த்தி வணங்காமல் இனிக்கும் தேன் மனம் என்று
தவறான எண்ணத்தால் பற்றிட முனையும் பாவிப் பெண்போல ,
நானும் முற்றிய மோனத்தவ முனிவனே! உன் மீது காதல்
கொண்டுவிட்டேன்;
நாளெல்லாம் உன் புகழுடைய பேச்சு : நாடெல்லாம் உன்னைப் போற்றி
மகிழ்தலே வாழ்க்கை; என வாழும் நான் கொண்ட காதலால் கூரிய
எனது கண்கள் உன்னைக் காணாமல் வாடின;உனது தோள் தழுவி
அனைத்து மகிழ என் மார்பகங்கள் துடித்தன; மாலையில் மோகனச்
சுந்தர முருகனாகிய உன்னைக் காணாமலும், தழுவாமலும் ஏங்கிய
அவ்விரண்டு கொங்கைகளும் சீர் குலைந்து போயின; ஒன்றோடொன்று
போரிட்டு நிலை குலைந்தன; அதனைத் தாங்க இயலாத நான்
அப்படியே படுக்கையில் குப்புற வீழ்ந்து ஒடிந்து போனேன்;
தொப்புளும், மறையின்ப இயல் உறுப்பும், அஞ்சி நொந்துபோயின;
இவற்றால் எனது இளமை சார்ந்த பாதுகாப்பும் பயனற்றுப் போயிற்று.
வேலும்,மயிலும் விரும்புகின்ற வேலவனே! உனது வேல் போன்ற
கண்ணை உடையவள் நான்;மயில் தோகை போன்ற கூந்தலை
உடையவள் நான்;அவைகளின் மீது கொண்ட விருப்பம்போல் என் மீதும்
விருப்பம் காட்டு. பொற்கிண்ணத்தில் நற்பால் அருந்து ;
எனக்கோ காதல் சுகம் வழங்கு.
பரிதவிக்கும் அடியாள் ஐந்திணைக் காதலால் நைந்து உருகிப்
போனேன்; முத்திக்கு வித்தாவது உனது முத்துக்கள் போன்ற
மோகனச் சிரிப்பே ஆகும்;உனது தாமரை போன்ற பாதங்களே
வீடுபேறு அடைய வழி காட்டும் அழியாத பொருளாகும்.
கடையும் மத்து போலச் சுழலும் மனதிற்கு மருந்தானவனே!எனக்கு
மா மண மாலை தா!
மலர்போன்ற மனம் கொண்டவள் ; மலரில் அமர்ந்துள்ள நாவுக்கரசி;
சரஸ்வதி தேவி போற்றுகின்ற புண்ணியனே! உன்னைப் போற்றுவதற்கு
எனக்கு ஒரு நா போதாது.
நேற்றைய பொழுதெல்லாம் உன்னைப் பற்றியே நீண்ட கனவு
கண்டேன்; நான்படும் வேதனைகளை மாற்றிடுவாய் மாமுருகா!
இன்றோ இதோ இந்த உலாவிலே எழிலும் அழகும் கொண்ட உனது
இனிமை வாய்ந்த முகத்தின் நீரருள் பார்வை காண்கிறேன்.
நாளையும் என் தலைவனை நான் காண்பேன்; காணப்போகிறேன்;
கூத்தாடுவேன்; மயிலும்,வேலும், கருணை மிகுந்த கந்தன் மனமும்
போற்றியபடி பரங்குன்ற மலைமீது நான் ஏறிடுவேன்;
கார்த்திகேயா! காதலித்த என்னைக் கரம் பிடித்துக் காத்திடுவாய்"
என்று வேண்டிடுவேன்.உன் காலடியில் காலமெல்லாம் வாழ்ந்திடவே
வரமருள்வாய் என்றும் வேண்டிடுவேன்.
ஆதி மூர்த்தியாய்.மூவர்க்கும் முதல்வனாய் ஆதி காரணனாய்ப்
புகழ்மிக்க திருப்பரங்குன்ற மலைமீதமர்ந்து, மேன்மை மிகுந்த
தேவயானை அம்மையின் மென்கரம் தொட்டுப் பரிவும்,பாசமும்,
கொண்டவனே! மாற்றானாகிய சூரனாம் நீலமயில், அன்னை தந்த வேல்,
போலவே நானும் உன்னோடு ஒன்றாவேன்;மணக்கோலம் கொண்ட நான்
ஒன்றிட்ட உன் புகழ் பாடுவேன்.
மா முறையே! உன்னருகே வந்திட்டேன்; உன்னோடு ஒன்றிட்டேன் .
தாய்ப்பசுவைத் தேடும் கன்றுபோல உன்னைத் தேடி நான்
வந்துள்ளேன்; உன் கருணை என்ற மடியைக் காட்டு; அருள் என்னும்
பாலை மனம் மகிழ நான் பருகுவேன்; அழியாத அமுதம் போன்றவனே!
அழகனே! போர்ப்படைத் தளபதியே!
முத்தர் நிலை அடைந்துவிட்ட மாமுனிவர்கள் சாமு சித்தர் எனப்
படுவார்கள்; அவர்களோ தங்களை மீண்டும் மலங்களின் வாசனை
பற்ற விட மாட்டார்கள்; சிவ சாயுஜ்யம் பெற்றிடவே இறைவன் புகழ்
பாடுவார்கள்;
அவர்களைப் போலவே பற்றிவிட்ட உன்னை உலகப் பற்றுக்களின்
மீது ஆசை வைத்து இழக்க மாட்டேன்.
முருகன் மீது பேராசை வைத்த பேரிளம்பெண் தனது காதலை
உரைத்தபடி உலாவின் பின் ஓடிவந்தாள். பாடி வந்தாள்;
முருகனைத் தேடி வந்தாள் .
கூட வந்த அவளது தோழி அவளைத் தடுத்து நிறுத்திக் கூட்டிச்செல்ல
முற்படுகையில் அப்படியே மயங்கி விழுந்தாள் பேரிளம்பெண்.
ஞான உலா
(438 ஆம் கண்ணி முதல் 458 ஆம் கண்ணி முடிய.)
முருகன் மீது மையலுற்ற ஏழு பருவத்தைச் சார்ந்த பெண்கள்,
புற்றிலிருந்து தோன்றும் ஈசல் போல வெளிவந்து, மனத்தைக் கொட்டி,
மனக்காதலை வெளிப்படுத்திய நிலையிலே.
தன்னேரில்லாத தலைவனின் நற்றேர் தான்,
நன்கு கற்றுணர்ந்த ஞானிகளின் மௌனத் தவத்தில் ஒளிரும்
ஞானம் போலவும்,
இறைவன் மீது பக்தி கொண்டு, உள்ளமெல்லாம் நைந்து,ஊனுருகும்,
உடலுருகும் பக்தன் போலவும் ,
தன வழியே மாறாது சென்றது.
வானத்திலிருந்து பொழியும் கார் மேக மழைபோலக் கந்தனின் கண்கள்
பொழியும் கருணையைக் கண்டவர்கள்,
ஆரமுதே! ஆறுமுகா ! ஆண்டவா! போராற்றி வெற்றி பெரும் வேலே !
செம்மை மிகுந்த பழனியில் வீற்றிருக்கும் அறத்தின் தலைவனே!
செந்தூரே! ஒலிக்கும் வலக்கரம் கொண்ட செந்தூர்க் கடல்போல ப்
போராற்றும் புதுமையே! சிவந்த பழங்கள் நிறைந்த பழமுதிர்
சோலையின் ஞானப்பழமே!
கொன்றையணிந்த செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமான்
வணங்கி, வேண்டிட,அவருக்கு மன்றத்தில் உபதேசம் அளித்த
ஞான குருவே!
குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்ட குமரா!
மாலின் மகளாகிய வள்ளியின் மீது கொண்ட காதலால் , நான்கு
மறையினும் மேலான நீ அவள் கால் தொட்டுப் பணிந்து,வேடமிட்டு,
மணந்து, திருத்தணிகையில் மணவாளக் கோலம் கொண்ட முருகா!
இம்மைக்கு அருள் வழங்க வேலாயுதமும், மறுமை வீட்டிற்கு
வழிகாட்டியருள தாளமும் அணிந்து பழனியில் வீற்றிருக்கும் முருகா!
என்றெல்லாம் போற்றி வாழ்த்தினர்.
முருகனது தாமரை போன்ற பாதங்களின் அருளாட்சி ஆயிரம்
ஆயிரம் அண்டங்களையும் அன்பினாலே ஆளும் நல்லாட்சி ஆகும்.
என்றும் போற்றினர்.
குமரனின் புகழை நாமும் சேர்ந்து போற்றுவோம்.
பலவாறு போற்றும் புகழொலியும், வானத்துத் தேவர்களின்பூ மழை
பொழிதலும், கான இசை முழக்கமும் காற்றோடு கலந்து,
இயற்கையும் போற்றி மகிழ, ஆண் அழகனாயும், ஆலவாய்க் கடவுள்
அன்புமகனாகவும் விளங்குகின்ற முருகன், அழகை அணியாகக் கொண்ட
நிலவுலகைக் கண்டு மகிழ்ந்திட உலா செல்பவனது மௌன உலா
ஞான உலா ஞானவழியே சென்றது. நன்மையும் ஞானமும் பெருகிற்று.
.
0
9
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக