திங்கள், 12 ஆகஸ்ட், 2019

                                 யுத்த காண்டம் 

சூரன்    அமைச்சர்களோடு   ஆய்வு


1. சிங்கத்தின்    சீற்றம்   சிறு மானோ? பங்கமெனக்
    கங்கணம்    கட்டவில்லை   காண் ,

2. வாயிலில்   வந்துநிற்கும்   வீரக்  குழந்தைக்குத்
    தீயதாம்    பரிசளிக்க த்    தீர்ப்பு.

3. மேதிமொழி   மேன்மை   மிகுவீரன்  மாண்டிட
    மோதிவிடு   போர்தனில்   மேல்.

4, துர்க்குணன்   தேவதேவர்   போற்றும் நீ  தாரணியின்
    சீர்மையோ?   நாற்படையே     போம்.

5. தருமகோபன்   பொற்கொழு  புல்வரகிற்   காற்றல்
    சிறுபடை    வென்றிடும்     செல்.

6. காலஜித்து   காலபாசம்  கட்டிடும்   கந்தனை;
    சீலத்தைக்    காட்டுவேன்   போர்.

7.சண்டன்    சமரனலி   செந்தீக்  கண்ணனும்
   பண்டுவெற்றிப்  பங்களிப்போம்   பார்.

8. பானுகோபன்   என்னை   மறந்து    பரிதவித்தாய்?
    தேனுதிர்    தார்மாலை   தா.

9. சிங்கமுகன்   சிற்றறிவுத்   தீயோரின்   சேர்க்கையால்
    வங்கமேவு    வாழ்வழி நாள்   வாழ்.

1௦.  வரபலம்   நன்மைக்கே. விண்ணவர்   துன்பம்
        அரனளி   ஆறுமுகன்   ஆம்.


                                            பொருள்

1.     அமைச்சர்களும்,சிங்கமுகன், பானுகோபன்  முதலியோரும் கூடியிருந்த
அவையிலே , ஆய்வு  நடத்தத்  தொடங்கினான்   சூரன். சான்றோர்களே!
நாம்   தேவர்களை  அடிமைப்படுத்தினோம்; துன்புற்ற   தேவர்களது  தலைவன்  இந்திரன்   சிவபெருமானிடம்   முறையிட   அவரும்,தேவர்களைக்
காக்கத்   தனது  நெற்றி க்கண்   பொறியிலிருந்து   ஒருமகனைத்  தோற்றுவித்தார். அக்குழந்தை  விளையாடும்   வயதில் நம்மை   அழித்திட
முடிவு செய்து,தாரகனையும்,  கிரௌஞ்ச  மலையையும்  அழித்தது;
அதோடு நில்லாமல்   தேவர்களை   விடுவிக்க வேண்டும்  என்ற  செய்தியை
ஒரு தூதுவன் வழியே   அனுப்பியது; வந்த   தூதன் வீரர்கள்   அழித்தான்;
நகரை  அழித்தான்;எனது  மகன்   வச்சிரவாகுவையும்  அழித்துவிட்டு  வான்
வழி  பறந்து போனான்.செந்தில்  பதியில்   அமர்ந்துள்ள   அக்குழந்தை நம்மோடபோருக்கு    ஆயத்தமாகிறது. நாம்  என்ன செய்ய வேண்டும்?
எப்டிப்  போரிட்டால் வெற்றி பெறுவோம்"என்ற  செய்தியை   ஆராயவே
இங்கு கூடியுள்ளோம்.அது   குழந்தை;அதோடு  போரிடல் சிறு மான்குட்டியோடு  சீற்றமுடைய  சிங்கம் போரிடுதல்  அழகாகாது என்பதால்
வீரக் கங்கணம்  அணிந்து  போரிடப் புறப்படவில்லை.இந்த   நிலையில்  உங்களிடம்   ஆலோசனை  கேட்டு முடிவு எடுக்க  விரும்புகிறேன்.
சொல்லுங்கள்!  என்றான்   சூரன்.

2. நம்   நாட்டு   எல்லையிலே   வந்து நின்று   போர்முரசு கொட்டும் அந்தக்
குழந்தைக்கு  நாம்   அளிக்கக் கூடிய   தோல்வி அல்லது   சாவு   என்னும்
தீய   பரிசுகள் பற்றி   எல்லோரும் நல்ல   ஆலோசனை   கூறுங்கள்" என்றும்
கூறினான்  சூரன்.
   
 3.  மேதி" என்னும் அமைச்சன்  எழுந்தான், மன்னா!  நாம்   யாரிடமும்  தோற்றது  கிடையாது.இக்குழந்தை   என்ன   மாவீரனோ?அப்படியே  இருப்பினும் போர் தொடுப்போம்;  போரிடுவோம்; வெற்றி பெறுவோம்.
என்றான்.
4.   துர்க்குணன்   என்னும்   அமைச்சன்  எழுந்து வணங்கி, மாமன்னா!
ஒரு   குழந்தை   வீரனை   அழிக்கப் போர்க்களத்திற்கு   நீ செல்லுதல்
பெருமை   ஆகாது;  நமது   நாற்படைகளையும்   தள பதிகள்   தலைமையில்
அனுப்பு.வெற்றி  தானே   வந்து சேரும்."என்றான்.

5.  தருமகோபன்" என்னும் அமைச்சர்  எழுந்துநின்று  வணங்கியபடி, மன்னா!
 பொன்னால்  உருவாக்கப்பட்ட  கொழு கொண்ட  கலப்பையினால் வரகு.கம்பு  போன்ற  சிறு தானியநிலங்களை   உழுதல்  சரியாகுமோ?
நிகரில்லாத   குழந்தையோடு   போரிடுதல்  உனக்குப் பெருமை   தராது.
ஆதலின்  படைகளையும், தளபதிகளையும்  அனுப்பிப்   போரிட்டு  வெற்றி பெறுவாய்" என்று மொழிந்தான்.

6 . காலஜித்து" என்னும்   சூரனின்   மகன்   எழுந்தான்.  தந்தையே!  போரிட
என்னை   அனுப்புங்கள்.என்  கையில்   கால பாசத்தால்   அந்தக்  கந்தனைக்
கட்டி  இழுத்து வருவேன்;என்  போர்த்திறனை   அப்பொழுது   உணர்வீர்கள்"
என்றான் .

7. சண்டன், அனலி. அக்னிக்கண்ணன்   ஆகிய   மூவரும் தனித்தனியே  சூள்
உரைத்தனர்;  எங்களை    அனுப்புங்கள்   தந்தையே! எங்களது   வீரவிளைச்சலை  நேரில் காண்பீர்கள்" என்றனர்.

8.  சூரனின்  மகன்  பானு கோபன்  எழுந்தான். தந்தையே!தாரகன்   மாண்ட
காலத்தே   என்னை மறந்து விட்டீர்கள்;தூதனின்   அக்கிரமத்தை  அடக்க
என்னை   அழைத்திருக்க வேண்டும்.அப்பொழுதும்   என்னை மறந்துவிட்டீர்கள். இன்று   போர்க்களத்திற்கு   என்னை   அனுப்புங்கள்;
போர்வெற்றித்   தார்மாலை  அணிவித்து   என்னைப்   போர்க்களம் அனுப்புக.
அதன்பின்  பாருங்கள். வெற்றி நம்மைத் தேடி   வந்து நிற்கும்.என்றான்.

9.  சூரனின்   தம்பி    சிங்கமுகன்   எழுந்தான்; அண்ணா! இதுவரை  ஆலோசனை  வழங்கியவர்கள்  அனைவருமே  உன்னைத்   தீய வழியில் செல்ல  வைக்கிறார்கள்.அது   துன்பத்திலேயே   முடியும்;இறைவன்   உனக்கு
அளித்த அழியாப் பேருடல்   யாக்கை   இந்த   யுகத்தோடு முடிகிறது.இதனை
இறைவனே   உன்னிடம் சொன்னதை   நீ மறந்து விட்டாய். வாழ்வழியும்  நாள்
நெருங்குகையில் இத்தீயவர்கள்  சேர்க்கையால் மேலும் மேலும்  பல தீங்குகளைப்  புரிந்து அழியாதே.நீ  வாழ்வாங்கு   வாழ வேண்டும்.

1௦.   இறைவன்  உனக்களித்த   வரங்கள்   நன்மையை   வளர்ப்பதற்கே.
அதை விடுத்து  விண்ணவர்களைச்  சிறையிலிட்டாய்.  அத்துன்பத்தை   மாற்ற அச்சிவபெருமான்  தனது   நெற்றிக் கண்  பொறி வழியே குமாரனைத்
தோற்றுவித்தார்.அக்குமரனே   இப்பொழுது   போருக்கு   வந்துள்ளான்.
இதையெல்லாம்   அறிந்த   நீ உனது    தீய செயலை   மாற்றிக்   கொள்ளாமல்
அக்குமரனோடு  போரிட்டால்  அழிந்து போவாய்"என்று  அண்ணனைத் தொழுதபடிக் கூறினான்.


                                                 விளக்கம்
போம் ...........................போதும்" என்பதன்  இடைக்குறை
பொற்கொழு ............அன்மொழித்தொகை
சிறுபடை......................பண்புத்தொகை
உதிர் தார்மாலை ....வினைத்தொகை


         தருமகோபன் " என்னும் குறட்பாவில்   பிறிது  மொழிதல்  அணி  பயில்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக