வெள்ளி, 12 ஜூலை, 2019

                                     சூரனது  மறுமொழியும், வீரவாகுவின்  ஆற்றலும்.


1.சிவவரம்   பெற்ற   சிறப்புடைச்  சூரன்
   நவச்சிறுவன்   நாவசை  நன்று.

2.தாரகன்   மாண்டநாளே  போரெடுத்து   வேலவன்
   சீருயிர்    மாய்த்தல்   தடை .

3. நல்லாக்கை   வல்லாட்சி    கொல்லாமல்   விட்டிடுமோ?
    நல்லநாள்    நாளை    அழி.

4.  பால்குடி    மாறாப்   பவித்திரப்   பாலகன்
     வேல்வந்து   வீழ்த்தும்   வெறி.

5.  குழந்தை  மொழிகூறிக்   குற்றுயிர்   விடாத
     விழுத்தூத!   ஒடு   விரைந்து.

6.  சினத்தால்    சிவந்த   மனத்தான்   சிவத்தை
     இகழ்ந்தாய்.  இகல்வேல்   இனி.

7.  மூவர்க்கும்    மூத்தோன்    முதல்சிவ   மூதக்னி
     தாவலில்    தோன்றிய   சேய்.

8.  வரம்பெற்ற   வாழ்க்கை   மனம்கொள்ளா    மூட!
     திறனழிந்து    தேய்வதைக்   காண்.

9.  ஆணையால்   சூழ்ந்துநின்ற   ஆயிரம்    வீரர்கள்
     சேனையை   வீழ்த்தினார்    வாகு.

1௦. நன்னகர்    பொன்மகன்   காளிமுகன் நூறுமுகன்
      விண்ணகம்  தானனுப்பி   வெல்.

                                    பொருள்

1,   வீரபாகுவின்    தூதுரையைக் கேட்ட  சூரன்,  மிகுந்த  சினமுற்றான். சிவபெருமானை   நோக்கிப்   பல்லாண்டு   தவமிருந்து    தான் பெற்ற வரங்களின்  திறன்   அறியாத   சிறுகுழந்தை, இளஞ்சிறுவன் எனக்குத் தூது அனுப்புவதா?கட்டளை   இடுவதா?நன்றாக   இருக்கிறது  சூரன்  பெருமை!
என இறுமாப்புடன்   சிரித்தான்.

2.    எனது    தம்பி   தாரகன்   இறந்துபட்ட   அன்றே   படையெடுத்து அச்சிறுவனை    அழித்திருக்க வேண்டும்;அமைச்சர்களது  அறிவுரையால்   அது நடவாமல்  போய்விட்டது.

3.     சிவபெருமானது   வரபலம்   மிக்க   அழியாத    பேருடலும்,  அண்டங்களின்  ஆட்சியும்    பெற்று   விளங்கும்   சூரன் அச்சிறுவனை    அழிக்காமல்  விடுவேனோ?  நாளையே    அழிப்பேன். என்றும்   கத்தினான்.

4.     பால்குடி    மாறாத   பச்சிளம்  பாலகன்,பரம்பொருளின்    நெற்றிக் கண்
பொறியிலே   தோன்றியவன்;  அவனது   தூய்மையான   வேல்  என்னை   அழித்து   விடும்!!!!  வீரவாகுவே!  உன்   எண்ணம் ஏளனத்திற்கு   உரியது.

5.  வீரவாகுவே!  நீ   குழந்தையின்   தூதுவன்; அதனால்   மழலையாக  உளறினாய்.  உன்னை   மன்னித்தேன்;  உயிர்  பிழைத்து  ஓடிவிடு .விரைந்து
ஓடிடுவாய் " என்றும்    கத்தினான்.

6.    சூரனது   ஆணவம்     மிக்க  சொற்களைக் கேட்டு,மிகுந்த     சினமுற்ற    வீரவாகு ,   "சூரனே!   நீ,   இகழ்ந்தது   பரம்பொருளை; அவர்   தந்த  வரத்தால்
உயர்ந்த  நீ,  இன்று   அவரையே    இகழ்ந்து விட்டாய்.  அவரது  வேலாயுதம்
விரைவில்    உன்னை   அழிக்கும்.   அது  வரையில் ஆணவத்துடன்   இன்ப,
நுகர்வுகளை   அனுபவித்துக்  கொள். என்றார்.

7.   மூவர்க்கும்   முதல்வன்;  சிவனுக்கும்   உபதேசித்த  ஞான  குரு; அச்சிவத்தின்   நெற்றிக்   கண்   பொறியிலே   உதித்த சுடர்மணி;உலகைக் காக்கும்  சுப்பிரமணியக்   கடவுள்  என்பதை   உணர்ந்து   வழிபடு. என்றும் கூறினார்.

8.   சினம்   மேலிட,  வீரவாகு   "வரம்பெற்றதால்  ஆணவம்    கொண்டு,  நலமற்ற   செயல்களைப்   புரியும் சூரனே!  உனது    ஆணவச்செயலால்
உனது   வர   வாழ்வும்,புகழும்   அழியும்   என்பதை  விரைவில்   உணர்வாய்"
என்றார்.

9.   வீரவாகுவின்   உரையை,  வேலனைப்   புகழ்ந்தும்,  தன்னை   இகழ்ந்தும்,
தனக்கு   முன்னரே,அவையோர்   அறியப்  பேசிய பேச்சால்   அளவு கடந்த
சினமுற்ற   சூரன்  வீர வாகுவைச்     சிறை பிடிக்குமாறு  வீரர்களுக்கு    ஆணை  இடுகிறான்.    தன்னைச்    சூழ்ந்துகொண்ட   ஆயிரக்கணக்கான
அரக்க   வீரர்களை  நொடியில்   அழித்தார்   வீரவாகு.

1௦.   பலரோடும்    போரிட்டபடியே   அவை   விட்டு   வெளிவந்த   வீரவாகு,
மகேந்திரபுரி   நகர்   முழுவதையும்   அழித்தார்;எதிர்த்து    வந்த  சூரனின்
மகன் "வச்சிரவாகு"  என்பவனையும்   வீழ்த்தினார்;படைத்    தளபதி  காளிமுகன்,சதமுகன்   போன்றோரும்   வீரவாகுவின்    வாளுக்கு  இரை
ஆனார்கள்.


                                                     விளக்கம்
சிவவரம்.............ஏழாம்  வேற்றுமை  உருபும் பயனும் உடன் தொக்க தொகை
சீருயிர்..................பண்புத்தொகை
மாறா ....................ஈறுகெட்ட  எதிர்மறைப் பெயரெச்சம்
குற்றுயிர் .............பண்புத்தொகை


பொன்மகன்=      சூரனின்  மகன்   "வச்சிரவாகு"
நூறு முகன்    =       சதமுகன் என்னும்  தளபதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக