வெள்ளி, 5 ஜூலை, 2019

                                   சூரன்முன்   வீரவாகு

1.  பேரழகுப்   பொன்னவைக்   காரழகுச்  சூரனின்
      வீறுடை    வாழ்வெல்லாம்    வீண்.

2.  கொள்ளி   எடுத்ததொரு   கூட்டில்  ஒளிபார்த்த
      வெள்ளிவீழ்  தூக்கணாம்  புள்.

3.  சூரன்முன்    தாழ்ந்துநிற்றல்   வீரர்  புகழ்மாற்றும்;
     பேரிருக்கை    போற்றியே   பெற்று....

4.  அவையதிர  அஞ்சி   நடுங்கிட   அஞ்சா
     தவைநுழை  விஞ்சையன்  தான்.

5.  அவைநடு  நிற்கும்   அலைசுழல்  சுறாவே!
     இவைகாண்  இரக்கம்   இலேன்.

6.  வாளால்   வலிப்பேன் ;  வலியவே  வந்தநிலைக்
     கோளாறு   கேட்டபின்  கொல்.

7.  செந்திற்   பதியோன்   செயப்புகழ்    பாடிடும்
      கந்தனது  தூதுவன்  வாகு.

8.   குழந்தை   குவலய   மன்னனுக்குக்    கூறப்
       பழங்கதை   உள்ளதாயின்   பகர்.

9.  தேவரை    விட்டிடு;   தொன்முறை    போற்றிடு;
      சேவடி    நாடியே   சேர்.

1௦. தாரகன்   மாமலை   வீழ்ந்ததை   எண்ணிடு;
       வீரவேல்    வெற்றி    உணர்.
   
                                       பொருள்

1.சயந்தன்   முதலிய  தேவர்களின்  மனவருத்தம் போக்கிய   வீரவாகு,
அங்கிருந்து  சூரனது  பேரவை  நோக்கிப் பறந்தார்.  அழகொளிரும்  அவனது
பொன்னால்  வேயப்பட்ட  மாளிகை,மாதங்கள், செல்வ வலம் மிக்க  பேரவை
எல்லாம் சூரனின்  அறமற்ற  செயல்களால்  அழியப் போவதை  எண்ணி
வருந்தியபடியே  அவையை  நோட்டமிட்டார்.

2.      தூக்கணாங்குருவி.  தான் கட்டிய  அழகான  கூட்டிற்குள்  வெளிச்சத்துக்காக  எரியும்   கொள்ளிக்கட்டையைப்   பற்றிக்கொண்டு
நுழைந்ததைப் போலச்  சூரனும்  வரத்தால்  பெற்ற பெருஞ்செல்வ  வாழ்வின்
இடையே  தேவர்களைச் சிறைபிடித்துத்  துன்பப்படுத்தல்  அவன அழிவிற்குக்   காரணம்  ஆகப்போகிறது.என்பதை  உவமையைக் கூறிப்
பொருளைக் கூறாது பெறவைப்பதால்  இப்பாடல்  பிரித்து மொழிதல் ஆக அமைகிறது.

3.      அப்பேரவையில்   எம்பெருமான் முருகனின்   தூதனாகச் சென்று,
சூரன்முன்  நிற்றல்  இறைவனுக்கு  இழுக்கை ஏற்படுத்தும்,  ஆதலின்
எம்பெருமானை வேண்டித்   தக்க  இருக்காய் பெற்றே  நுழைவோம்"என
எண்ணிய வீரவாகு.முருகனைத்   துதித்து, ஒளிமிக்க   பொன்னாசனம்
பெற்று, அதில் அமர்ந்தபடியே  சென்றார்.

4.     சூரனது  பெருபேரவையே    அஞ்சி நடுங்கு மாறும், தடுத்து  நிறுத்துவோர்
அஞ்சி  வழிவிட்டு விலகுமாறும், அஞ்சாத   வீரனைப்போல் வீரவாகு  அவைக்குள் நுழைந்து  சூரன்முன்   அமர்ந்தார்,

5.  பேரலைச்   சூழல் நடுவே  அச்சமின்றிப்  பயணிக்கும்  சுறா வைப்போல
ஆயிரக்கணக்கான  எனது  படைவீரர்கள்  நடுவே  அச்சமின்றி நுழைந்த
வீரனே!  இரக்கமற்ற  எனது  உடைவாள் உன்னை அழித்திடும்;  அதற்கு  நெடு நேரம்   ஆகாது. உணர்ந்துகொள்.  எனக் கர்ஜித்தான்  சூரன்.

6.   நீ   எதற்காக   இங்கு  வந்துள்ளாய்? என்பதை  அறிந்தபின்  உனைக் கொன்று வீழ்த்துவேன்",  இதனை   அறிந்த   நீ  வந்த செய்தியைக் கூறு !
எனச்சினத்துடன்  கத்தினான் சூரன்.

7.      செந்திப்  பதி   வாழ்   செல்வக்குமரன்   சீர் புகழ்  போற்றும் கூட்டத்தில்
யானும் ஒருவன்;  உருவானவன்;  உருவமற்றவன்;உள்ளதாய்த் தோன்றுவான்; இல்லதாய்    மாறுவான்;மூவர்க்கும்  மூத்தவன் ;   அழகும், அன்பும்  அறிவும்  அகன்ற கருணையும் கொண்டவன்;அவனைப் போற்றுதலே என்போன்றோருக்கு அன்றாடப்பணி.அவர்  அனுப்பிய தூதுவன் நான்.என் பெயர் வீரவாகு " என்று வாகு  கூறினார்.

8.   சூரன். ஏளனமாகச்  சிரித்தபடி,   ஒரு   சின்ன  குழந்தை; மழலை  மாறாத
பச்சிளங்குழந்தை; அது   பாராளும்  மன்னனாகிய  எனக்கு  அறிவுரை வழங்கப்  போகிறதா!  அப்படி  அது  என்னதான்   சொல்கிறது? நீ .சொல் .
பார்க்கலாம். "என  ஏளனப்  புன்னகை   காட்டினான்.

9.   சூரனே!  உனது  சிறையிலே   வாடும்   தேவர்களை   உடனே   விடுவிக்கவேண்டும்;  உனது   தீய  செயல்களை   அறவே   நீக்கவேண்டும்;
அறவழிச்   செயல்களைக்   கடைப்பிடிக்க வேண்டும்;   தொன்மை  முறைகளை   நெறிப்படுத்தவேண்டும்;இறைவனே   உயர்ந்தவன்   என்ற   எண்ணத்தோடு  அவனைப் பணிந்து   போற்றி   வாழ வேண்டும்.

1௦.       எல்லாம்   வல்ல   பரம்பொருள்   முருகனே   என்பதை   உணர்க; உனது தம்பி   தரகனின்    அழிவையும்,கிரௌஞ்ச  மாமலை  வீழ்ந்ததையும் கண்டவன்   நீ.   வீரமும்    வெற்றியும்   கொண்ட  முருகனைப் பணிந்து
இவைகளை ஆற்றுக.   மறுத்தால்   முருகனின்   கூர்வேல்   உனக்கு விடை
பகரும்" என்றார்   வீரவாகு.


                                                           விளக்கம்
பேரழகு ......................பண்புத்தொகை
இலேன் .......................இல்லேன்   என்பதன்  தொகுத்தல் விகாரம்.
மாமலை ,...................உரிச்சொற்றொடர்

                  "கொள்ளி   எடுத்ததொரு "    இப்பாடலில்   பயிலும் அணி
"பிறி து  மொழிதல்   அணி   ஆகும்.  தான் கூறவந்த   கருத்தை நேரே  கூறாமல்  உவமை   வாயிலாக, பிறிது  ஒன்றின்   வழியே விளக்குவது.

     இப்பாடலில் நல்ல   வாழ்வை  வரமேன்மையால்   பெற்ற  சூரபன்மன்
தேவையில்லாது   தேவர்களைச்   சிறைவைத்தான்.அதனால்   அவனும் நாடும் அழியும்   அவலம்   உண்டாகப் போகிறது   என்பதை   விளக்க   வந்த
ஆசிரியர் அதனை    அப்படியே கூறாமல் பிறிதொன்றினால்  விளக்குகிறார்.
அழகிய   இல்லமாகிய தனது  கூட்டைக்   கட்டிக் கொண்ட   தூக்கணாம்
குருவி,இல்லத்துள்    ஒளி  வேண்டும் என்று  கருதி   நெருப்புக்   கட்டையை
உள்ளே   எடுத்துச் சென்றது;  நெருப்பால்   கூடும் அழிந்தது.  அக்குருவியும்
அழிந்தது .இதன் வழியே  சூரனும்,  அவன் நாடும்   அழியும் என்பதை விளக்குவதால் இப்பாடல் பிறிது  மொழிதல் அணி   ஆயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக