ஆய்வுக்கட்டுரை
திரு ஞான சம்பந்தர்
தோற்றமும், இறையருட் பொழிவும்
எஸ். சுப்பிரமணியன்
பி.ஹெச் .டி. மாணவன்
1. தோற்றுவாய்
2. சம்பந்தர் வரலாறு
அ. தோற்றம்
ஆ. இறையருள்
இ. சிவத்தலங்கள் பயணம்
ஈ. சிவனருள் பரிசு
உ. அப்பரடிகளோடு
ஊ. பிற நாயன்மார்களுடன்
எ. அற்புதங்கள்
ஏ. பூணூல் அணிவிழா
ஐ. சைவ நெறி
ஒ. மணமும், மலரடி சேர்தலும்
3. சம்பந்தரின் தேவாரப்பாடல்கள்
4. இறையருட்பொழிவு அற்புதங் கள்
க. பொற்றாளம் பெறுதல்
ங. முத்துச்சிவிகை
ச. முத்துப்பந்தல்
ஞ. பொற்கிழி பெறுதல்
ட. படிக்காசு பெறுதல்
ண. முயலகன் நோய் தீர்த்தல்
த. கதவம் திறத்தல்
ந. விடம் நீக்கி உயிர்ப்பித்தல்
ப. வெப்பநோய் தீர்த்தல்
ம. அனல்வாதம்
ய. புனல்வாதம்
ர. எலும்பைப் பெண்ணுரு ஆக்குதல்
ல. மணமும், அடியவர்களோடு சோதியில் கலத்தலும்
5. சம்பந்தர் காலம்
6. சம்பந்தருக்குக் கோயில்
7. முடிவுரை
1. தோற்றுவாய்
உலகம் உவந்த உயர்நிலைச் சமயங்களில், இந்திய அறு வகைச் சமயங்கள் பழமையும், பண்பாடும் மிக்கவையாய் விளங்குகின்றன. சிவனைப் போற்றும் சமயம் சைவசமயம் ஆகும்.ஆசியாக் கண்டம் முழுவதும் சைவ சமயக் கருத்துக்கள் பரவி,
இருந்தாலும், இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில், சிறப்பாகத்
தமிழ் நாட்டில் சைவம் தழைத்து வளர்ந்தது, வளர்கிறது என்றே
கொள்ளலாம். சங்க காலம், சேர சோழ பாண்டியர் காலம், பல்லவர் காலம்,
களப்பிரர் காலம், பிற்காலச்சோழர் காலம், விசயநகர அரசுக்காலம்,
ஆகியவற்றுள் வளர்ந்தோங்கிய சைவசமயம் நடுநடுவே பிறசமயக்
காழ்ப்புணர்ச்சியால் நலிந்தும், சிதைந்தும் போன காலத்தில் எல்லாம்
சான்றோர் பலர் அவதரித்து அதன் புகழை நிலைநிறுத்தினர்.
அவ்வாறு அவதரித்தவர்களில் ஒருவராயும், இறையருள் நிரம்பப்
பெற்றவராயும், விளங்கிய ஞான சம்பந்தரின் சிறப்புகளை எடுத்துரைப்பதே
இவ்வாய்வுரையின் நோக்கும், இலக்கும் ஆகும்.
2. திருஞான சம்பந்தர் வரலாறு
" எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் " என்னும்
சுந்தரரின் திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலும், நம்பியாண்டார்
நம்பி, அவர்களின் "திருத்தொண்டத் தொகை திருவந்தாதி" என்னும்
நூலின் அடிப்படையிலும் எழுந்த "பெரிய புராணம்," அல்லது "திருத்
தொண்டர் புராணம்" என்னும் சேக்கிழாரின் நூலே, திருஞான
சம்பந்தரின் வரலாற்றை விரிவாக விளக்குகிறது. அதன் அடிப்படையில்
சம்பந்தரின் வரலாற்றைக் கீழ்வரும் தலைப்புகளில் காண்போம்.
அ. தோற்றம்
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் "சீர்காழி" என்னும் ஊரில்அந்தணர் குலத்தில் கவுணிய கோத்திரத்தில் தோன்றியவர் சம்பந்தர்.
அவரது தந்தை பெயர் "சிவபாத இருதயர்". "கவுணிய கோத்திரம் விளங்கச்
செப்புநெறி வழிவந்தார் சிவபாத இருதயர் என்று" (பெ.பு.1913). தாயின்
பெயர் " பகவதி " ஆகும். "பொற்புடைப் பகவதியார் எனப்போற்றும் பெயர்
உடையார்" (பெ.பு.1914) . இறையருளால் இவர்களுக்கு மகனாக அவதரித்தார் சம்பந்தர். (பிற்காலத்துப் புலவர்கள் சம்பந்தர் முருகனின்
அவதாரம் என்பதால் நானும் அவதரித்தார் என்றேன்.)
தாய்தந்தை அவருக்கு இட்ட பெயர். "ஆளுடைய பிள்ளை "
அவருடைய மூன்றாம் வயது அவரை ஞானசம்பந்தர் ஆக்கியது.
அவரது புராணத்தைப் பாடிய சேக்கிழார் "மூவாண்டில் உலகுய்ய
நிகழ்ந்ததனை மொழிகின்றேன்" என்பார்.(பெ.பு.1952)
ஆ. இறையருள்
அவரது மூன்றாம் வயதில் குளிக்கச் சென்ற தந்தையாருடன் அவரும்சென்றார். கோயில் குளக்கரையில் மகனை அமரவைத்துவிட்டு நீரில்
அமிழ்ந்து, குளிக்க முனைந்தார் சிவபாதர். நீரினுள் மூழ்கியபடி. மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். தந்தையை நீண்ட நேரமாகப்
பார்க்காத குழந்தை அழுதது. அம்மா.....அப்பா... என்றழுத குழந்தையின்
அழுகை ஒலியைக் கேட்ட சிவபெருமான் உமையம்மையுடன் தோன்றி,
அழும் குழந்தைக்கு, அன்னையின் முலைப்பாலாம் ஞானப் பாலை அன்னையைக் கொண்டே அமுதூட்டச் சொன்னார். அழுகையை நிறுத்திய
குழந்தை வாயெல்லாம் பால் வழிய நிற்க, குளித்து முடித்து வெளிவந்த
தந்தை பிள்ளையின் வாயிலிருந்து பால் வழிவதைக் கண்டு,"யார் தந்ததைக் குடித்துவிட்டு நிற்கிறாய்?" என்றதட்ட, பிள்ளை கோயில் விமானத்தைச் சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன்"என்னும் பதிகம்
பாடித் தனக்கு ஞானப்பால் ஊட்டிய இறைவனை, வானில் காலை
ஊர்தி மேல் அமர்ந்த அம்மையப்பனைக் காட்டுகிறார்." தோடுடைய செவியன் எனும் மெய்மை மொழித் திருப்பதிகம்" என்பார் சேக்கிழார்.
(பெ.பு. 1974)
ஆளுடைய பிள்ளை, இறையருள் ஞானப்பால் உண்டநாள், ஞான
சம்பந்தர்" ஆக மாறினார். சம்பந்தர் = அறிவு சேரர் ஆனார். "தனிச்சிவ ஞான
சம்பந்தர் ஆயினார்" என்பார் சேக்கிழார்.(பெ.பு. 1967)
இ. சிவத்தலங்கள் பயணம்
அன்று முதல் பல்வேறு சிவத்தலங்களுக்குச் சென்றார். தந்தையின்தோளிலே அமர்ந்தபடி அவர் பயணித்தார். "மாதவம் செய் தாதையார்
வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக்கொள்ள" என்பார் பெரியபுராண
ஆசிரியர்.(பெ.பு.2011)
இயற்கை எழிலைத் தனது தேவாரப்பாடல்களிலே படைக்கும் இவர்
இறைவனை இயற்கை உருவாகவே காண்கிறார் எனலாம். பல்வேறு
தலங்களுக்குச் சென்றார் சம்பந்தர் 219 பதிகங்களை முதல் மூன்று
திருமுறைகளாகப் பாடியுள்ள சம்பந்தர், நடந்தும், பல்லக்கிலும் பயணம்
சென்று இறைவன் புகழ், சைவநெறி, இயற்கை வருணனை, போன்றவற்றையும், வரலாற்றுப் புராணச் செய்திகளையும் படைத்துள்ளார்.
ஈ. சிவனருட்பரிசு
ஒவ்வொரு தலத்திற்கும் குழந்தை வந்து பாடுகின்ற செந்தமிழ்ப் பாடலைக் காதுகுளிரக் கேட்ட சிவனார், தாளம் போடும் கை வலிக்குமேஎனப்பொற்றாளமும் , நடக்கும் கால் நோகுமே என மணிச்சிவிகையும்,
வெய்யில் சுடுமே என முத்துப்பந்தரும், அவரது தந்தை ஆற்றும் வேள்விக்காக, பொற்கிழியும், பஞ்சம் தீர்க்கப் படிக்காசும், அவரது
அடியவர்களுக்காக, வேறு வேறு அற்புத நன்மைகளும் பரிசாக
அருளியுள்ளார்.
உ. அப்பரடிகளோடு
தனது காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களும் நாயன்மார்கள்பலரோடும் சிவனைப்போற்றிவந்த சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும்
நால்வராம் சமயக்குரவர்களில் ஒருவரான மூத்த தலைவருடன் பேசிப்
பழகிப் பதிகம் பாடி, நடந்து, தலங்களுக்குச் சென்று இன்பச்சிவநெறி
பரப்பியுள்ளார். "அப்பரே வருக" என்று இவர் அழைத்ததின் பின்னரே,
திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயர் வழங்கலாயிற்று. திருவாய் மூன்றில் தொடங்கிய இருவரது நட்பு, திருப்பூந்துருத்தியில் மணிச்சிவிகையைச் சுமக்கும் அளவு, நாவுக்கரசருக்கு அன்பும், பாசமும்
ஏற்பட்டது. வியப்பல்லவா! "அப்பர் எங்குளார்" என சம்பந்தரின் தவிப்பும்,
"ஒப்பரிய தவம் செயதேன் ஆதலினால் உம் அடிகள் இப்பொழுது
தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான்" (பெ.பு.2833) என அப்பர் கூறும் அளவு
இருவரிடையே நட்பு பரிணமித்தது. மூத்தவரான அப்பரடிகளும், மிக
இளையவரான ஞான சம்பந்தரும் பக்தி பூர்வமான நட்புரிமை பாராட்டிப்
பலதலங்களுக்குச் சென்றதும், திருமறைக் காட்டில் கதவம் திறக்கப்
பாடியதும், அடைக்கப் பாடியதும் சைவநெறி வரலாற்றில் மிக முக்கிய
நிகழ்வு எனலாம்.
ஊ. பிறநாயன்மார்களுடன்
சம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு நட்புற்று, தமது தேவாரப்பாடல்களை அவர்வழியே பண்ணிசைப் படுத்தினார் எனலாம்.மற்றும், முருகன், சிறுத்தொண்டர், குலச்சிறையார், போன்ற நாயன்மார்களோடு நட்புற்று சிவத்தொண்டு ஆற்றினார். இன்னும்
தில்லைவாழ் அந்தணர்கள், நீலநக்க அடிகள், குங்கிலியக் கலிய நாயனார்,
போன்றோருடனும் இணைந்து சிவபெருமான் கோயில் சென்று வழிபட்டுப்
பாடல்கள் பாடியுள்ளார்.
எ. அற்புதங்கள்
சம்பந்தர் தான் செல்லும் ஊர்களில் உள்ள சிவனடியார்களோடுஇணைந்து பழகியே சிவப்பணி ஆற்றினார். சிவனடியார்களுக்கும்
மற்றவர்க்கும் ஏற்படும் துன்பத்தைச் சிவனருளால் போக்கி வந்தார்.
பல்வேறு அற்புதங்களை, பதிகம் பாடியே, அஞ்செழுத்து ஓதியே
இறையருளால் நிகழ்த்தினார். அவைகளைப் பின்னர் தனித்தலைப்புகளில்
காணலாம்.
ஏ. பூணூல் அணிவிழா
கவுணிய கோத்திரத்தில், அந்தண குலத்தில் தோன்றிய சம்பந்தருக்கு,வேத நெறிப்படி, அவரது ஒன்பதாம் வயதில் அவருக்கு "உபநயனம்"
என்னும் பூணூல் அணிவிக்கும் விழாவிற்கு, சிவபாத இருதயர் ஏற்பாடு
செய்தார். "அனைத்தும் அஞ்செழுத்துக்குள் அடக்கம்" என்றிருந்த சம்பந்தர்
தொன்மை நெறி போற்றிட எண்ணி, அச்சடங்கில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டார். நல்ல நாளிலே வேதமந்திரங்கள் முழங்க உபநயன விழா
நிறைவுற்றது.
"ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த,.............தோலொடு நூல்
தாங்கினார் சுரர்கள் போற்ற " என்பார் சேக்கிழார்.(பெ.பு.2163)
ஐ. சைவநெறி
சம்பந்தர் சைவநெறி தழைத்தோங்க அயராது பாடுபட்டவர் எனலாம்.அவரது பணிகளில் மிக உயர்வானதும், பிறமதக் கோட்பாடுகளை வீழ்த்தியும் சைவமதக் கொள்கையை நிலைநிறுத்தியதும் மதுரை மாநகரில் அமைந்தது எனலாம். சமண சமயம் சார்ந்த பாண்டிய
மன்னனைச் சைவனாக்கியது, சமணர்கள் வைத்த தீயை, அவர்களை ஆதரித்த பாண்டிய மன்னனுக்கே நோயாக மாற்றியது. அனல்வாதப்
புனல்வாதங்களில் வென்று சமணர்களைக் கழுவில் ஏற்றியது.
பாண்டிமா தேவி, மங்கையர்க்கரசிக்கும், குலச்சிறையார்க்கும் உதவி,
மன்னனை மாசற்றவனாக்கியது, மதுரை நிகழ்வினால் சைவநெறியை
உலகுய்யச் செய்தது ஆனபலவற்றால் சமபந்தரின் சைவநெறி உயர்த்தல்
பண்பாட்டை உணரலாம்.
ஒ. மணமும், மலரடி சேர்தலும்
சம்பந்தர் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தார். தனது பதினாறாம்அகவையில் "நம்பாண்டார் நம்பி" என்பாரின் மகளான "சொக்கியார்"
என்பவரை, மணந்து கொள்கிறார். இல்லறம் காண்பது நல்லறம்
என்ற நிலையில் அவரது மண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. "திருப்பெரு மண
நல்லூர்" என்ற ஊரிலே திருமணம் நடைபெறுகிறது. மணம் முடிந்ததும்,
"நாதனே! நல்லூர் மேவும் பெருமண நம்பனே! பாத மெய்ந்நீழல் சேரும்
பருவம் ஈது " (பெ.பு. 3143. 6.1.1245) எனப்பாடி இறைவனைப் போற்றுகிறார்.
இறைவன் அசரீரியாக, "நீயும் பூவை அன்னாளும், இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் யாவரும், எம்பால் சோதியினுள் வந்து
எய்தும்" என்று சொல்ல, தோன்றிய சோதியிலே "மூவுலகு ஒளியால்
விம்ம, முழுச்சுடர்த் தாணுவாகி" (பெ.பு. 3144. 6.1.1246) கலந்து இறைவனது
மலரடியிலே இணைந்து விடுகின்றனர். சம்பந்தர், அவரது மனையாள்,
திருமணம் காணவந்த உறவினர்கள், அடியவர்கள், கோயிலில் உள்ளார்
அனைவருக்கும் சம்பந்தரால் இறைவனடி கிட்டுகிறது.
3. சம்பந்தரின் தேவாரப்பாடல்கள்
இயற்கை எழிலோடுகூட இறைவன் பெருமையைப் போற்றிப்பாடும்ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப்
பட்டுள்ளன. பன்னிரு திருமுறைகளான சைவநெறிக் கருவூலத்தில் முதல்
மூன்றிடத்தை, ஞானசம்பந்தரின் தேவாரங்கள் அலங்கரிக்கின்றன.
பண் முறை, தலைமுறை, அடங்கன்முறை எனத் தேவாரப்பாடல்களை
வரிசைமுறைப்படுத்துவர். முதல் திருமுறையில் 133 பதிகங்களும்,
இரண்டாம் திருமுறையில் 121 பதிகங்களும், மூன்றாம் திருமுறையில்
123 பதிகங்களும் உள்ளன. அவை இறைவன் பெருமை, புகழ், புராண
வரலாறுகள், இயற்கை வருணனை, ஊர் அமைப்பு முறை, நீர்வளம்,
போன்றவற்றை அழகுற வருணிக்கின்றன. புது யாப்பு முறையையும்
இவர் தன் பாடல்களில் பயன்படுத்தியுள்ளார்.
4. இறையருட்பொழிவு அற்புதங்கள்
க. பொற்றாளம் பெறுதல்
மூன்று வயதுப் பாலகன் தன்கோயில் முன் வந்து, கைத்தாளமிட்டுப்பாடுவதைக் கவனித்த திருக்கோலக்கா இறைவன் ஞானசம்பந்தர்
பாடுங்கால் பயன்படுத்தக் கூடிய பொன்னால் ஆன தாளத்தை அருளோடு
அளிக்கிறார். ஐந்தெழுத்து எழுதிய தாளம் கோயிலுக்குள் சென்ற சம்பந்தரது கரத்தில் வந்து ஒலித்தது. "மறைச்சிறுவர் கைத்தலத்து
வந்தது அன்றே" (பெ.பு. 2001. 6.1.103)
ங. முத்துச்சிவிகை,குடை,சின்னம்
தந்தையின் தோளில் அமர்ந்தபடியும், அடியவர் புடைசூழ நடந்தும்பல்வேறு சிவத்தலங்களுக்குச் செல்லத்தொடங்கினார் சம்பந்தர். குழந்தை
வெய்யிலிலும், வெப்பத்திலும் நடந்து வருவதைப் பார்த்த திருவரத்துரை
எம்பெருமான் தங்கக் குடையும், முத்துச்சிவிகையும், ஊதுகுழல் சின்னமும்
பரிசாக, பூதகணங்கள் வழியே கோயிலுக்குள் சம்பந்தர் வந்ததும் வழங்க
வழி செய்தார். அதனைக் கண்டும், ஏற்றும் அமர்ந்தும் அகமகிழ்ந்தார் அவர்.
"தங்க வெண்குடை,தூய சிவிகையும்,பொங்க ஊதும் பொருவறு சின்னமும்,
அங்கண் நாதர் அருளினால் கண்டனர்" (பெ.பு. 2099.6.1.201) என்பார் சேக்கிழார்.
ச. முத்துப்பந்தர்
சோழ நாட்டுத் தலங்களைக் கண்டு, இறைவனைப் போற்றிவந்தசம்பந்தர், பட்டீச்சரம் என்ற ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வெய்யில், வெப்பம் தாளாது, தன்னடியவர் சம்பந்தர் வாடுவாரே, என
எண்ணிய பட்டீச்சர ஈசன் பூதகணங்கள் வழியே முத்துப்பந்தரை அனுப்பி,
அவர் நடந்தோ, சிவிகையிலோ வருமிடத்தில், முத்துப்பந்தரை, அவர்மீது
வெய்யில் படாமலும், வெப்பம் தாக்காமலும் இருக்கப் பூத கணங்களை
விட்டுக் கூடு போல் தலைக்குமேல் பிடித்துவர ஆணையிட்டார்.
"வெம்மை வெப்பம் தணிப்பதற்கு, மும்மைநிலைத் தமிழ் விரகர்
முடிமீதே ,சிவபூதம் தம்மை அறியாதபடி தண்தரளப் பந்தர் எடுத்து,
எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்றியம்ப" (பெ.பு.2290//6/1/392)
என விளக்குவார் சேக்கிழார்.
ஞ. பொற்கிழி
சம்பந்தரின் தந்தை சிவபாத இருதயர் வேள்வி செய்வதற்காகமகனிடம் பொருள் கேட்டார். சம்பந்தர் திருவாவடுதுறை ஈசனிடம்
வேண்ட, அவ்விறைவன் பூதகணங்கள் வாயிலாக, பலிபீடத்தில்
ஆயிரம் பொன் கொண்ட பொற்கிழியை வைத்துவிட்டுச் சென்றன.
அதுகண்டு, இறைவனது அருளை வியந்து அப்பொருளைத் தந்தையிடம்
கொடுத்து, வேள்வி நடத்துமாறு வேண்டுகிறார். "அருள்பூதம் முன்விரைந்து,
கல் பீடத்து உச்சி வைத்தது பசும்பொன் ஆயிரக்கிழி ஒன்று"
(பெ.பு.2234. 6.1.426) என்பார் சேக்கிழார்.
ட. படிக்காசு பெறல்
திருவீழி மிழலை என்ற தலத்தில் தங்கி, சிவ வழிபாடு செய்துவந்தார் சம்பந்தர். அவரோடு சிவனடியார் கூட்டம் தங்கி இருந்தது.
அப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டதால் அடியார் கூட்டம் உணவு, உடை
இன்றித் தவிக்கக் கூடாது, என எண்ணிய சம்பந்தர் மிழலை நாதனிடம்
முறையிடுகிறார். அவரோடு அங்கு இருந்த நாவுக்கரசரும் தனது
அடியார் கூட்டத்திற்காக வேண்டுகிறார். இருவருக்கும் ஒரு காசு
அன்றாடம் பலிபீடத்தில் இருக்குமாறு இறைவன் அருள் புரிகிறார்.
"சிவநெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு,நித்தம் ஓர் ஓர்
காசு நீடும்" (பெ.பு. 2363. 6.1.564)
அப்படிக்காசினைப் பெற்றும் அடியவர்களுக்கு, உணவு, உடை போன்றன
அளிக்கப் படவில்லை. ஏவலர்களிடம் சம்பந்தர் காரணம் கேட்க,
அக்காசு தகுதி குறைந்து உள்ளதால் பொருள்கள் வாங்க இயலவில்லை
என்கின்றனர். அதுகேட்டு இறைவனிடம் குறையில்லாக் காசு நல்குமாறு
வேண்டுகிறார். "தரும் காசு வாசி தீரப் பாடுவன்" (பெ.பு.2469.6.1.569), "வாசி தீரவே காசு நல்குவீர்" எனவேண்ட, இறைவன் மாசற்ற
காசை நல்குகிறார். பரிசனங்கள் இக்காசு சிறந்தது, எனக்கூறிப்
பொருள்களை வாங்குகின்றனர். "இக்காசு சால நன்று" (பெ.பு.2460.6.1.570)
ண. முயலகன் நோய் தீர்த்தல்
சம்பந்தரின் பயணத்தில் திருப்பலாச்சிரமம் என்ற தலத்தில்வழிபாடு செய்து விட்டு, வருங்கால கொல்லி மழவன் மகளைப்
பிடித்திருந்த அசைவில்லா முயலகன் நோயைப் பதிகம் பாடி, இறைவன்
அருளால் தீர்த்து வைத்தார். "கன்னி உறுபிணி விட்டு நீங்கக் கதும் எனப்
பார்மிசை நின்று எழுந்து" (பெ.பு. 2217..6.1.319)
த. விடம் நீக்கி உயிர்ப்பித்தல்
திருமருகல் என்னும் தலத்தில் இறைவனை வழிபட்டு வெளிவந்தசம்பந்தரின் கால்களில் விழுந்து வணங்கிய பெண்ணொருத்திக்
கதறியபடித் தன்கணவனைப் பாம்பு தீண்டிவிட்டது, நானோ உற்றாரை
விட்டுப் பிரிந்து வந்தவள், முறை மாமனான இவரையே திருமணம்
செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறியவள். எனது தந்தை
தனது ஆறு பெண்களையும் முறைமாமனான இவருக்கு மணம் செய்து
தருவதாக வாக்களித்தே மற்றவர்க்கு அவர்களை மணமுடித்து இவரை ஏமாற்றினார். ஏழாவது மகளான நான் இவரோடு, இவரை மணந்துகொள்ள
வெளியேறி விட்டேன். இரவு ஒரு சத்திரத்தில் தூங்குகையில் இவரை
அரவு தீண்டிவிட்டது. யாருமற்ற எனக்கு நீங்கள் தான் அருள்காட்டி,
இவருக்கு உயிர்ப்பிச்சை வழங்க வேண்டும் என வேண்டினாள். சம்பந்தரும்
திருமருகல் இறைவன்மீது பதிகம் பாடி, சிவனருளால் அவனை உயிர்ப்பித்து, அவன் எழுந்ததும், அவர்களுக்கு மணம் முடித்து வைத்து,
வாழ்வதற்குப் பொன்னும், பொருளும் வழங்கி அனுப்பி வைத்தார்.
"பொங்கு விதம் தீர்ந்து எழுந்து நின்றான்" (பெ.பு.2381..6.1.483) என்பார் சேக்கிழார்.
கொடிமாடச் செங்குன்றூரில் அடியவர்களுக்கு வந்த விஷஜுரம்
போக, திருநீலகண்டப்பதிகம் பாடி நோய் நீக்கியதும்,
துன்பம் தரும் பனிப்பொழிவை நீக்கியதும், இறையருளால் ஆன
அற்புதங்களே .
ந. கதவம் திறத்தலும், அடைத்தலும்
திருமறைக்காடு என்னும் தலத்திற்கு அப்பரடிகளோடு சம்பந்தர்சென்றார். இறைவனைக் காண சாளரம் போன்ற வழியைக் காட்டினர்
அவ்வூரார். கோபுர வாயிற்கதவு மறைகளால் பூசித்து அடைக்கப் பட்டிருந்தது. திறக்க இயலாத அக்கதவை, நாவுக்கரசர் இறைவனை
வேண்டிப் பதிகம் பாடித் திறந்தார். நேர்வழியில் சென்று இறைவனைப்
போற்றியபின், மீண்டும் அக்கதவைப் பதிகம் பாடி மூடினார் சம்பந்தர்.
"இரண்டு பாலும்,நிறை அக்கதவு காப்பு நிரம்பிட அடைத்தது"(பெ.பு.2485
6.1.587). அதன்பின் திறக்கவும், மூடவும் செய்தது கதவு.
ப. வெப்பநோய் தீர்த்தல்
பாண்டிய மன்னன் நெடுமாறன் சமண சமயம் சார்ந்திருந்ததை மாற்றிடஎண்ணிய பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும், சம்பந்தரைத் திருமறைக்காட்டில் சந்தித்து, "மன்னன்
மனம் மாறிச் சைவ சமய அரசனாக ஆக்கிட மதுரை வரவேண்டும்" என
அழைப்பு விடுத்தனர். அவ்வழைப்பின்படி மதுரை சென்றார் சம்பந்தர்.
சினமுற்ற சமணர்கள் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீ
வைக்கின்றனர். அடியவர்களும், பரிசனங்களும் அஞ்சிட, சம்பந்தரோ
"பையவே சென்று பாண்டியற்காகவே " என்று பாடி, தீயின் தாக்கத்தை
மன்னன் பக்கம் திருப்புகிறார். அதனால் பாண்டியனுக்கு வெப்பநோய்
தோன்றி, உடலெல்லாம் எரிய, வெப்பம் தாங்க முடியாது தவிக்கிறான்.
மயிற்பீலிகை கொண்டு சமணர் ஜபித்த மந்திரங்களில் அது நிற்கவேயில்லை. அரசியும், அமைச்சரும் சம்பந்தரைப் பற்றி மன்னனிடம்
எடுத்துக்கூறி அவரை அரண்மனைக்கு அழைக்கின்றனர். மன்னனின் நோயைக் குணமாக்க இவர் முற்படுகையில், ஒப்பாத சமணர்கள்
நோய்தீர்க்கும் முயற்சியில் ஈடுபட, மன்னனின் இடதுபுறம் சமணர்கள்
போக்கவும், வலதுபுறம் சம்பந்தர் போக்கவும் முடிவு செய்து தொடர்கின்றனர். சோமசுந்தரக் கடவுளின் பாதங்களை மனதில் இறுத்தி
மன்னன் உடலில் திருநீற்றைப் பூசியபடி,"மந்திரமாவது நீறு" என்னும்
பதிகம் பாடிட, வலது பக்கம் குணமாகிறது. இடப்பக்கமோ அளவுக்கு
அதிகமாய் எரிச்சல் ஏற்பட, அப்பக்கமும் திருநீறு பூசி, சிவனைப்போற்றிட
மன்னன் உடலும், மனமும் நல்வழி திரும்புகிறது.
ம. அனல்வாதம்
பாண்டிய மன்னனின் நோயைத் தீர்த்த சம்பந்தர், அவர் சமயம்சிவபெருமான் மீதெல்லாம் மன்னனுக்குப் பற்று வருவதைப்
பொறுக்க இயலாத சமண சமயத்தவர், வாதுக்கு சம்பந்தரை
அழைக்கின்றனர். வாதிலே தோற்றால் கழுமரத்தில் ஏற்றப்படுவர்
என்ற நிபந்தனையுடன் அனல் வாதம், புனல் வாதம் துவங்குகிறது.
"இருவரும் தங்கள் சமயக்கோட்பாடுகளை எழுதி, நெருப்பிலே இடவேண்டும். யார் எழுதியது எரியாமல் பசுமையூயாக இருக்கிறதோ
அவரே வென்றவர்" என்ற நிலையில் போட்டி துவங்குறது .
"போகமார்த்த" என்னும் திருநள்ளாற்றுப் பதிகத்தை எழுதி இறைவனை
வணங்கிய சம்பந்தர் அதனை எரியும் நெருப்பிலே போடுகிறார்.
சமணர்கள் தங்கள் கொள்கையை எழுதிப் போடும்போதே எரிந்துவிடுமோ
என்ற அச்சத்துடன் போடுகிறார்கள். சில நொடிகள் சம்பந்தரது ஓலை
பசுமையாய்ப் புதுமையாய் நெருப்பிலிருந்து எடுக்கப்படுகிறது. சமணர்
ஓலை கருகிச்சாம்பலாகிறது. "பசுமையும், புதுமையும் பயப்ப" என்பார் சேக்கிழார். (பெ.பு.2687..6.1.789) "பெருகு தீக்கதுவ வெந்து பேர்ந்தவை கண்ட மன்னன் தருபுனல் கொண்டு செந்தீ தணிப்பித்தான்" (பெ.பு.2689..6.1.791). அனல் வாதத்தில் தோற்ற சமணர் புனல் வாதுக்குத் தயாராகினர்.
ய. புனல் வாதம்
"ஓடும் வைகை வெள்ளநீரில் இருவரும் தங்கள் கருத்தினைத் தாங்கியஓலையை இடவேண்டும். யாருடைய ஓலை நீரை எதிர்த்து வருகிறதோ, அவரே வென்றவர்" என்னும் நிலையில், "அத்தி நாத்தி"
என்றெழுதி சமணர்கள் விட அவ்வோலை நீரோடு சென்று கடலோடு
கலக்கிறது. சம்பந்தர், "வாழ்க அந்தணர்" தொடங்கி "அரன் நாமமே சூழ்க
வையகம்" என்றெழுதி, இறைவனை வணங்கி விட, அவ்வோலை நீரை
எதிர்த்து விரைவாகச் சென்றிட, குதிரை மீதேறிச் சென்ற குலச்சிறையார்
அதனை, "திருவேடகம்" என்ற ஊர்க்கரையில் பற்றிக் கொணர்ந்து
மன்னனிடம் அளிக்கிறார். அஞ்சி ஓடிய சமணர்கள் தவிர அறுபதினாயிரம்
சமணர்களும் கழுவில் ஏற்றப் படுகிறார்கள்.
ர. எலும்பைப் பெண்ணுரு ஆக்குதல்
திருமயிலை என்னும் பதியில் சிவநேசன் செட்டியார் என்னும்சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவருக்கு, "பூம்பாவை" என்றொரு மகள்
இருந்தாள். திரு ஞானசம்பந்தர் மீது பேரன்பு வைத்திருந்த சிவநேசன்,
தன்மகள் பூம்பாவையை அவருக்கே மணம் முடிக்கவேண்டும் என்ற
அவாவில் இருக்கையில், பூம்பாவையைப் பாம்பு தீண்டி இறந்து
விடுகிறாள். எரியூட்டப்பட்டபின் அவளது எலும்புகளை எல்லாம் ஒரு
பானையில் சேமித்து வைக்கிறார். சம்பந்தர் தனது ஊருக்கு வருங்கால்
அவர் சேவடிகளில் சமர்ப்பிக்க எண்ணிக் காத்திருந்தார். மயிலைக்கு
ஞானசம்பந்தர் வந்ததும் அவர்முன் பானையை வைத்துத் தன்மகள்
இறந்த விவரம் கூறுகிறார். அந்தப்பெண்ணிற்கு உயிர் அளிக்க இறைவன்
மீது பதிகம் பாடுகிறார். அவளது வயது வளர்ச்சிக்கு ஏற்ப, ஒவ்வொரு
பருவமும் வளரத் தமிழிசை பாடி, அவளை பருவப்பெண்ணாக மாற்றி,
பானையிலிருந்து எழ வைக்கிறார். மகிழ்ந்த சிவநேசன் அவளைத்
தாங்களே மணக்கவேண்டும் எனப்பணிவோடு சொல்ல, அவளுக்கு
உயிர் கொடுத்ததால் நான் தந்தையானேன். அவள் சிவனடி சார்ந்து
வாழ்வாள்" என்று அவளை வாழ்த்தி அடுத்த தலம் நோக்கிப்
புறப்படுகிறார். பூம்பாவையும் தன் வாழ்நாளை இறைத்தொண்டில்
செலுத்தி, சிவனடி சேர்கிறாள்.
ல. மணமும் , அடியார்களுடன் சோதியில் கலத்தலும்
சமபந்தருக்கு மணம் செய்விக்க விரும்பிய சிவபாத இருதயர்நம்பாண்டார் நம்பி என்பாரின் பெண்ணான சொக்கியரை மணம் பேசி,
பெருமண நல்லூரில் மணநிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பெரு மண
நல்லூர் இறைவனைப் போற்றிப் பதிகம் பாடியபின் மணமகள் கழுத்தில்
மங்கள நாணாம் தாலியைக் கட்டியபின், "காதலாகி" என்னும் பதிகம் பாடி
"நாதனே! நல்லூர் மேவும் பெரு மண நம்பனே! உன் பாத மெய்ந்நீழல்
சேரும் பருவம் இது" (பெ.பு. 3143..6.1.1245) என மனமுருகி வேண்டினார்
சம்பந்தர். வானத்தே எழுந்தது அசரீரி " நீயும் பூவை அன்னாளும் இங்கு
உன் புண்ணிய மணத்தின் வந்தார் யாவரும் எம்பால் சோதி இதனுள்
வந்து எய்தும்" (பெ.பு.3144.6.1.1246) என்ற குரலுடன் "மூவுலகு ஒளியால்
விம்ம,முழுச்சுடர் தாணுவாகி" த்தோன்ற அதனுள் சம்பந்தரும்,
அவர் மனையாளும், சுற்றமும்,அடியவர் கூட்டமும், பரிசனங்களும்
கோயிற் சோதியினுள் ஒன்றிக் கலந்தார். "மருவிய பிறவி நீங்க மன்னு
சோதியினுள் புக்கார்" (பெ.பு.3147.6.1.1250) என்பார் சேக்கிழார்.
5. சம்பந்தர் காலம்
திருஞான சம்பந்தர் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அப்பர்அடிகளோடு இணைந்து பற்பல தலங்களுக்குச் சென்றவர். சுந்தரர்
எட்டாம் நூற்றாணடைச் சார்ந்தவர். அவரால் பாடப்படும் இவ்விருவரும்
ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்கள் ஆகிறார்கள்.
வாதாபிப் போரில் வென்ற பரஞ்சோ தியே திருச்செங்காட்டங்குடி
சிறுத்தொண்ட நாயனார் ஆவார். அவரை ஞானசம்பந்தர் சந்திக்கிறார்.
அவர் சந்தித்த ஆண்டு கி.பி.650.
மதுரை ஆண்ட நின்றசீர் நெடுமாறனை மங்கையர்க்கரசியாரும்
அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட, சமண சமயத்திலிருந்து சைவ
சமயத்திற்கு மாற்றுகிறார். இம்மன்னனை சம்பந்தர் சந்தித்த காலம்
கி.பி.650 எனக்கொள்ளலாம். இச்சான்றுகளால் இவர் காலம் "கி.பி. ஏழாம் நூற்றாண்டு", என்கிறார் "நால்வர் கால ஆய்வுக் கட்டுரை" எழுதிய
குடந்தை சேதுராமன்.
சம்பந்தர் கி.பி.640 முதல் 656 வரை 16 ஆண்டுகள் வாழ்ந்தவர்
என்கிறார் குடந்தை சேதுராமன்.
6. கோயில்
திருஞான சம்பந்தருக்கு, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம்"பேய்க்கரும்பன் கோட்டை" என்ற கிராமத்தில் தனிக்கோயில் உள்ளது.
அங்கு மூலவர் சம்பந்தரே. உற்சவ மூர்த்தியும் அவரே. வைகாசித்
திங்களில் நடைபெறும் திருவிழாவில் வீதியுலா செல்லும் மூர்த்தியும்
சம்பந்தரே ஆவார். அவருக்காக ஊர் மக்கள் மார்கழித் திங்களில்
சிறப்பு வழிபாடு நடத்துவர்.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் திருமேற்றளித்தெருவில்
சம்பந்தருக்கு ஒரு கோயில் உள்ளது. (நன்றி விக்கி பீடியா)
முடிவுரை
சைவசமயக் குரவர்களில் ஒருவராய் விளங்குபவர் சம்பந்தர்.மூன்று வயதிலே சிவஞானம் அடைந்தவர். பொற்றாளம், முத்துச்சிவிகை
தங்கக்குடை, முத்துப்பந்தர், படிக்காசு, பொற்கிழி போன்ற பரிசுகளை இறைவன் சிவபெருமானிடம் இருந்து பெற்றவர். சைவநெறி காத்தவர்.
சமண சமயக் கொள்கையை வென்று, வேரறுத்தவர். தன்னோடு தன்னைச்
சார்ந்தவர்களையும் சிவனடி சேர்த்தவர். அவர் பாடிய தேவாரங்கள்
முதல் மூன்று திருமுறைகளாக விளங்குகின்றன.
..................................................................................................................................................................
முனைவர். திரு பூவை சுப்பிரமணியன்
தமிழ்த்துறை
காஞ்சிபுரம்
மதிப்பு கெழுமிய சான்றீர்
வணக்கம். இத்துடன், "சம்பந்தர் - தோற்றமும், இறையருட்
பொலிவும்" என்னும் ஆய்வுக் கட்டுரையை அனுப்பியுள்ளேன்.
நன்றி
6.5.2018 தங்கள்
எஸ் .சுப்பிரமணியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக