வெள்ளி, 13 ஏப்ரல், 2018

                              தேவர் புலம்பல், இந்திரன்  முடிவு

1.   சூரக்    கொடுமை,     தேவர்    வழியின்றிச்
      சார்ந்தனர்   இந்திரன்   தாழ்ந்து.

2.    பசுவென     எம்மைப்   பலியெனத்    தந்தே
       சிசுவினைக்     கொன்றதும்  ஏன்?

3.   மானம்    இழந்து,  மதிகெட்டு    வாழ்கிறோம்:
      ஈனத்     தொழிலில்    இணைந்து.

4.   எங்களைக்     காப்பீர்!      இடர்தனை    நீக்கிடப்
      பொங்கி    எழுவீர்   புலம்.

5.   விண்ணவர்    வேதனை     விரிவினை    உன்னியோன்
      பொன்வர     மேன்மை   பொறு.

6.   அண்ணல்     அருளினை     வேண்டலே    நல்வழி
      கண்ணருள்    வேண்டிக்    கதறு.

7.   அஞ்சிய     மங்கையை   ஐயனார்    காத்திடுவார்
      மஞ்ஞையே!   மன்புகழ்    கேள்.

8.   அமுதமளி    மோகினிமேல்    அண்ணலுறு   காதல்
      குமுதமலர்    ஐயனார்   ஆம் .

9.   ஐயனார்     போற்றுவோம்: ஐயன்துணை  மாகாளர்
      வையகம்    காக்க,வந்தார்   வாழ்.

10. காழிநிற்கக்   காரிகை,   ஏழிசை    போற்றவல்லான்
      வாழிமலை     போற்றப்    புகுந்து.

                                 பொருள்

1.      சூரபன்மனின்  கொடுமைகளையும்,இன்னல்களையும்    தாங்க
இயலாத    தேவர்கள்,வாழ்வதற்கு,   வேறு   வழியில்லை:  என்ற   நிலையில்
மறைந்து வாழும்   இந்திரன்    இருப்பிடமான    சீர்காழியை   அடைந்தனர்.

2.   இந்திரனை   வணங்கிய   தேவர்கள்,  தேவலோகத்    தலைவரே!
 பசுவைப்   போல   அமைதியாய்    வாழும்    எங்களை,  அந்த   அரக்கனுக்குப்
பலியாக   வைத்தீர்: உம்மையே   நம்பி   வாழும்,  உமது  குழந்தைகளான
எம்மைக்    கொன்று  குவிக்க   உமக்கு    எப்படி    மனம்    வந்தது?ஒவ்வொரு
நாளும்,சூரனிடம்   நாங்கள்   படும்    வேதனையை     யாரிடம்   சொல்லி
ஆறுதல்  பெறுவோம்?  எங்களைத்  தனியே   தவிக்க    விட்டுவிட்டு 
எங்கோ   சென்று  விட்டீரே!

3.   பதவி   இழந்தோம்: பெருமை   இழந்தோம்:  அரக்கனின்   அடிமையாகி
அவன்   இடும்   பணிகளைத்    தலைமேற்கொண்டு    அஞ்சி   அஞ்சி
வாழ்கிறோம். ஈனத்   தொழில்   புரிகிறோம்:  மானம்  இழந்து   அடிமைகளாக
வாழ்கிறோம். எங்களது   சக்திகள்    பயனற்றுப்   போயின.அறிவும்,
ஆற்றலும்   இழந்து  தவிக்கிறோம்.

4.  தாயும்   தந்தையுமான  தாங்கள்   எம்மைக்    காக்க    வேண்டாமா?
எங்களைக்    காக்க  இன்றே  அரக்கனுடன்    போர்   புரிந்து    விண்ணுலகத்தை   விரைந்து   காப்பீர்.

5   விண்ணவரின்     வேதனையை   உணர்ந்து,  அவர்களைக்   காக்கவும்
ஆறுதல்   படுத்தவும்   வழி  அறியாத    இந்திரன்,   தேவர்களே!  அரக்கன்
சிவபிரானிடம்     பெற்ற     வரபலம்    அவனை   இவ்வாறெல்லாம்
செய்ய   வைக்கிறது.   இறைவனது    வரபலத்தை   எதிர்கொள்ளும்
ஆற்றல்   நமக்கு   இல்லை.  காலம்   வரும்  வரை    காத்திருத்தலே
நன்மை  பயக்கும்.பொறுமை   கொள்ளுங்கள்.  என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக