புதன், 21 மார்ச், 2018

                                   சூரவம்சம்

1.    அண்டங்கள்    ஆயிரம்    ஆளுகை    கண்டவன்
       விண்ணவர்     வீழ்த்திய    வேந்து

2.    மாமுடி    சூட்டினான்      மாமறை     நான்முகன்
       மாதவர்    விண்ணவர்     வாழ்த்து.

3.    வீர   மகேந்திரம்     ஆசுரம்,  மாயபுரம்
       சூரச்     சகோதரர்    ஊர்.

4.    பதும      கோமளை    சூரன்     மனையாள்::
       மதுவிபுதை  சிங்கன்   மனை.

5.    மணந்தனன்    கௌரியைத்    தாரகன்      மாறாக்
       குணத்தால்      குவித்தனர்    கேடு.

6.    செம்மீன்   பிடிதொழில்   இந்திரன்,  செங்காற்று
       செம்மனைத்    தூய்மை  செயும்.

7.    தொட்டிலில்    தாவும்   கிரணச்    சினத்தினால்
       கட்டினான்     பானுகோபன்    சூர்.

8.     அதிசூரன்    சிங்கமகன்     அன்புடை   இந்த்ரன்
         விதிவழி     தாரகன்    சேய்

9.      அசமுகி     இல்லன்பு    வல்புணர்வு    வாழ்வு,
         திசைதோறும்   தீமை   உரு.

10.   வல்வழி     துர்வாசர்    வாதாபி    இல்வணன்
        அல்வழி     சாபம்    அளி.

                                        பொருள்

1.     ஆயிரத்தெட்டு   அண்டங்களின்    ஆட்சியை   ஆண்டவனிடம்   பெற்ற
சூரன்   விண்ணவர்,கந்தர்வர்,மண்ணுலக  மக்கள், என   அணைத்து
அண்டங்களிலும்  அனைவரையும்  அடிமைப்  படுத்தினான்.அசுர  மாமன்னன்
எனப்  பேரும்   புகழும்   பெற்றான்.

                                           விளக்கம்
ஆளுகை......தொழிற்பெயர்.

2.    நல்ல   நாளிலே     சூரனுக்கு   முடிசூட்டு   விழா   நடைபெற்றது, அசுர
குருவும்,தேவகுருவும்   வாழ்த்த,திருமால்   போற்றிப்புகழ ,இந்திரன்  கவரி
வீச,வருணன்   முதலியோர்   கொடி பிடிக்க,  நான்முகன்    மாமுடியைச்
சூரனுக்குச்   சூட்டினான்.முனிவர்களும்  அரக்கர்களும்,விண்ணவர்களும்  வாழ்த்தொலி எழுப்பினர்.


3.     தேவ  தச்சனைக்   கொண்டு   உலகிலேயே   மிக அழகானதாகவும்,
அனைத்து   வசதிகள்  கொண்டதாகவும்," வீர மகேந்திராபுரம்"என்னும்
நகரை  உருவாக்கி, அதையே  தலைநகராகக்   கொண்டு   சூரன்   ஆட்சி
புரிந்தான்.  அவனது  நகரைப்போலவே    உருவான  "ஆசுரம்"   என்ற
நகரிலே   அமர்ந்து   சிங்கமுகன்  அண்ணனுக்குத்    துணையாக     ஆட்சி
புரிந்தான்.  "  மாய  மாபுரம்"  என்னும்  மாயைகள்  நிறைந்த   "கிரௌஞ்ச"மலையோடு   இணைந்த    நகரில்   அமர்ந்து     தாரகன்   ஆட்சி
புரிந்தான்.

4.     தேவதச்சன்   மக்களாகிய  "பதும  கோமளை " என்னும்   அழகிய  பெண்ணை  மணந்து கொண்ட    சூரன்   மகிழ்வோடு   வாழத்  தொடங்கினான்.
யமனின்   மகளான   "விபுதையை "மணந்தான்   சிங்கமுகன்,

                                                         விளக்கம்

மது விபுதை ........தேன்போல்  இனிக்கும் விபுதை .   உவமைத்தொகை.



5......... நிருதியின் மகளான   "கௌரியைத் "தாரகன்  மணந்து கொண்டான்.
மூவருமே   மாறாத  ஆணவத்தால், உலகிற்குத்    துன்பத்தையே  அளித்தனர்.

                                                           விளக்கம்
மாறா ...........ஈறு கெட்ட   எதிர்மறைப்   பெயரெச்சம்

6.    விண்ணவர்களை    அடிமைப்  படுத்திய  சூரன்   மூன்று   நகரங்களிலும்
விண்ணவர்   ஆற்றவேண்டிய   பணிகளைப்   பட்டியலிட்டான் .அதன்படி,
நாள்தோறும்   தவறாமல்   மூவரையும்  வந்து   காணவேண்டிய   பணியை
மாலுக்கும், மூன்று  நகரங்களிலும்  பஞ்சாங்கம்  படிக்கவேண்டிய   பணியை
நான்முகனுக்கும்,தேவர்களோடு   சென்று  மீன்  பிடித்து,முன்று   நகரங்களுக்கும்  அளிக்கும்  பணியை,இந்திரனுக்கும்,தெருக்கூட்டும்
பணியை வாயுவுக்கும்,கூட்டிய  தெருவை  மணம்  மிக்க   நீரால்   தூய்மைப்
படுத்தும்   பணி    வருணனுக்கும்   அளிக்கப்பட்டது.ஆதவன்   இளங்கதிரையே  வீசவேண்டும்,நிலவோ  முழுநிலவாகவே    வானில்   வரவேண்டும். தங்களது
நிலையை  எண்ணி  வருந்திய  தேவர்கள்   சூரனின்   வரபலத்திற்கு   அஞ்சி
அடங்கி,ஒடுங்கி  நடந்தனர்.

7.   சூரனின்   தவபலத்தால்    பதுமகோமளை   ஒரு  அம்மகனைப்   பெற்றெடுத்தாள்.  அக்குழந்தை    தொட்டிலில்   படுத்திருந்தது.  சாளரம்
வழியாக  ஆதவனின்   ஒளி   அக்குழந்தை  மீது  பட்டது,அதனால்  கோபமுற்ற
குழந்தை   சூரியனைப்    பிடித்து   இழுத்து  வந்து,  தன்    தொட்டில்    காலிலே
கட்டிப் போட்டது. சூரியனை   விடுவிக்க   நான்முகன்   ஓடோடி  வந்தான்.
குழந்தையிடம்   கெஞ்சினான்.  குழந்தை  கூறியது," உன்   ஆயுதங்களை
எல்லாம்  எனக்குக்  கொடுத்தால், இவனை  விடுவிப்பேன்"  என.  பிரம்ம
தேவனும்  தனது  சக்திமிக்க   படைகளைக்   கொடுத்து,  ஆதவனை   மீட்டான்.
அன்று முதல்  அக்குழந்தையின்  பெயர்  "பானு  கோபன்"  ஆயிற்று.
பானு=சூரியன்.  அவன்மீது  கோபம் கொண்டு  வெற்றி பெற்றதால் அப்பெயர்
வந்தது.

8.     சிங்கமுகனுக்கு   "அதிசூரன்"  என்ற  மகன்   பிறந்தான்.  தாரகனுக்கு
அசுரேந்திரன்"   என்ற   மகன்   பிறந்தான்.அன்பும், பண்பும்   வாய்ந்த   இவன்
அசுரர் குலத்தில்   பிறந்தது   விதியின்  பயனே   ஆகும்.

9.    சூரனின்    தங்கை,   "அசமுகி"  அன்பும்,பண்பும்   தவிர்த்து,  தீமையே
உருவானவள்.யாரையும்  திருமணம்  செய்து  கொள்ளாமல்  வாழ்ந்தாள்
தனக்கு   யாரையேனும்   பிடித்துவிட்டால்,  அவர்  தேவராயினும்,  முனிவராயினும்   விடமாட்டாள்.வன்மையாய்   அவரோடு   புணர்ந்து  தனது
காமப்பசியைத்  தீர்த்துக் கொள்வாள்.

10.   ஒருசமயம்    துர்வாசர்"   என்னும்  கோபக்கார   முனிவரை   வலுக்கட்டாயமாகப்   புணர்ந்தாள் .  அதன்  பயனாக,"  இல்வணன்,""வாதாபி"
என  இரு மகன்களையும்   பெற்றெடுத்தாள் ,அவ்விருவரும்,  தந்தையான
துர்வாசரிடம், அவர்  புரிந்த   தவப்பயன்  அனைத்தையும்   தங்களுக்குத்
தருமாறு  வற்புறுத்தினர் .  அவர்  தர   மறுக்கவே,  அவரையே   கொலை
செய்ய  முயன்றனர்.சினமுற்ற  முனிவர்,"  நீங்கள்  இருவரும்   காடு மேடு
-களில்   வாழ்ந்து, வழியில்  தென்படும்  முனிவர்களைக்   கொன்று தின்று
வாருங்கள்.அக்காலை    அகத்திய  மாமுனிவரால்   இருவரும்  மடியக்
கடவீர்கள் "  என   சாபம்  கொடுத்துவிட்டு, மறைந்தார்.  அவ்விருவரும்
தாயின்  சொற்படித்  தவம் இருந்து,வரபலம்   பெற்று,  வாழ்ந்தனர்.

                                                     விளக்கம்
வல்வழி .........வன்புணர்ச்சி   வழியாக   முனிவரோடு  இணைந்து .

அல்வழி ....தந்தை  என்று பாராமல்  அவரையே  கொல்ல   முனையும்           
                       பொழுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக