திங்கள், 19 மார்ச், 2018

                                       அசுரர்   வளர்ச்சி

1.    இருள்மறை    காலை   இருள்வளர்    தோன்றல்
       பெருந்திறல்    பார்த்தார்    முனி.

2.    நல்வழி    நாட்டும்     நலவழி       நீக்கியே
       வல்வழி     காட்டினாள்      தாய்.

3.    குருவின்    துணையில்    குலப்புகழ்    கூட,
       அருந்தவ    வேள்வியும்    ஆற்று.

4.    மந்திர      மாயை     மதிநிறை    மாண்புகள்
       வந்தனை     ஆற்றி   வரம் .

5.    தேவர்     நடுங்கிடத்    தீவேள்வித்     தீம்புகை
       ஆவியளி     ஆழ்பலி    ஆம்.

6.     தவித்திடும்    தம்பியர்    தன்மையைத்     தள்ளி,
        புவிவாழ்      வளித்தான்    பரம்.

7.     அண்டமெல்லாம்       ஆளுகை,   இந்திர    ஞாலத்தேர்
        அண்டரன்ன      ஆக்கை    அளி .

8.    சிவசக்தி    அன்றிச்     சிதிலம்     காணா
       நவவுடல்    நாற்படை  கொள்.

9.    தம்பியர்      தாமும்     தழலளி    பெற்றதால்
       உம்பர்     இழிவர்    உயர்.

10.  மால்முதல்      நான்முகன்    போற்றிட,  இந்திரன்
       பால்மொழி      தம்மோடு     ஓடு.

                                              பொருள்

1.   பொழுது  புலர்ந்தது.  ஓர்    இரவில்    காம  வசத்தால்    தோன்றிய
அசுரக்   கூட்டங்களை,   தம்முடைய   பிள்ளைகளைப்   பார்த்தார்   காசியபர்.
சூரபன்மன்   முதலிய  கோடிக்கணக்கான   அரக்கர்   வம்சம்   துயரைப்
பிறர்க்கு   நல்குவதற்காகவே    தோன்றியது.

                                                  விளக்கம்

இருள்மறை............இருள்வளர்       பொழிப்பு  முரண்  தொடை.முதல்  இருள்
                                     இரவின்   இருள்  நீக்கத்தையும்,    இரண்டாம்   இருள்
                                     துன்பம் ,பாவம்,போன்றன  வளர்க்கும்   அரக்கர்   கூட்ட
                                    வளர்ச்சியையும்   குறிக்கும்.

2.     செல்வக்    குழந்தைகளைக்  கண்டு,மகிழ்ந்த   தந்தை   காசியபர்,
 அவர்களுக்கு   நியாயம்,தர்மம்,பணிவு,  இறைவழிபாடு  போன்ற   நல்ல
வழிகளை   உபதேசித்தார். அருகே  நின்றிருந்த   மாயை,  அவர்   கூறியதை
மறுத்து, இவ்வுலகில்  வாழ இன்றியமையாதது,   செல்வம்.புகழ்,யாரையும்
மதிக்காத   கர்வம்,இறைவனை ,தேவர்களை ,முனிவர்களை   வணங்காத
ஆணவம், போன்ற   தீய  வழிகளைக்   கூறி,அதன்படியே  நடக்க  வலியுறுத்தினாள்.

3.    அசுர   குருவான   சுக்கிராச்சாரியாரைக்   கண்டு  வணங்கிடவும்   ஆணை
பிறப்பித்தாள்.  மாயையின்   மைந்தர்களைக்  கண்டு  மகிழ்ந்த   சுக்கிரர்
இனி   அசுரர்   உயர்வர்,  தேவர்கள்  அழிவர்"  என  மனதில்   நினைத்து,
மாயையைப்  பாராட்டி,பலமும்,வளமும்,பற்றிட,  வேள்வி செய்து
கடுமையான   தவம்  இருந்து   சிவபெருமானிடம்  வரங்கள்   பெறும்  வழி
முறைகளையும்,  மந்திரங்களையும்   உபதேசித்தார்.தேவர்கள்   மீது    பகை
உணர்ச்சியையும்,உருவாக்கினார்.

4.    மாயையும்,  தனது  குமாரர்களுக்கு,  மாய மந்திரங்களை     உபதேசித்து,
வேள்வி  செய்யும்,முறை, வேள்விப்  பொருட்கள்,வேள்வி   செய்ய   உகந்த
இடம்   போன்றவற்றைக்   கூறிக்   கடுமையான   தவம்  ஆற்றுமாறு   கூறினாள்.இறைவனைப்  போற்றும்  முறை,வரங்கள்   பெறும்  வழிமுறை
போன்றவற்றையும்   விளக்கி,சூரன்,சிங்கமுகன், தாரகன்   போன்றோரைக்
கடுமையான  தவத்தில்   ஈடுபட  வைத்தாள் .

                                                      விளக்கம்



மதிநிறை  மாண்புகள் ..........புலனடக்கம், விடாமுயற்சி, மந்திரங்களை
உச்சரித்தல் ,வேள்விப்பொருட்கள், நச்சுமரங்கள்,  பல்வேறு   விலங்கின
மாமிசங்கள் ,போன்றவற்றை   விளக்கி ,அவைகளை   அளித்தல் .

5.    சூரபன்மன் ,  தன்   தம்பியர்  சூழ   வீர  வேள்வி  செய்யத்    தொடங்கினான்.
இருபுறமும்   சிங்கமுகனும்,தாரகனும்  வேள்விக்குண்டம்     அமைத்து,
வேள்வி செய்தனர்,நடுவே   முறைப்படி   அமைந்த   வேள்விக்குண்டத்தில்
சூரன்   நெய் ,சமித்து ,மாமிசம்,  போன்றவற்றை   ஆஹுதி   செய்தான்.
வேள்விப்  புகை  கண்டு,தேவர்கள்    அஞ்சி  நடுங்கினர். மேலும்
பல  வருடங்கள்  ஆகியும்  இறைவன்  காட்சி    தரவில்லை. வானிலே
நின்று,தனது     அவயவங்களை  வெட்டி,வெட்டி   ஆஹுதியாகப்  போட்டான்.
அவைகள்  வளர்ந்தனவே  அன்றி  இறைவன்  தோன்றவில்லை.எனது
உடலையே   வேள்விப்  பொருள்   ஆக்குவேன்    என்றபடி.வேள்வித்   தீயில்
விழுந்து  சாம்பலானான்.

                                                           விளக்கம்
ஆவியளி   ஆழ் பலி   ஆம்,..........இறுதியாக   என்  உடலை   பலியாக
                                                                 வேள்வியில்  அளித்தல்   இறைவனைக்காண
                                                                 வழி  வகுக்கும்" என்று  முடிவு  செய்த   சூரன்
                                                                 தன்னையே  வேள்வி  ஆஹுதிப்   பொருள்
                                                                 ஆக்குகிறான்.

6.   அருகே    அமர்ந்து   வேள்வி  ஆற்றிக்கொண்டிருந்த   சிங்கமுகனும்,
தாரகனும்  அண்ணன்   வேள் வித்    தீயில்   சாம்பலானதைக்   கண்டு,
துடித்தனர்:பதறினர்:அழுது  புலம்பினர்: அவ்வேளை   அங்கு அந்தண  வேடத்தில்   வந்த  சிவனார்     அவர்கள்  துயரைப்போக்கி,ச்    சூரனுக்கு
நல்லுடலும்,நல்லுயிரும்  அளித்தார்.

                                                            விளக்கம்
தம்பியர்  தன்மையைத் தள்ளி =   சிங்கமுகன்,தாரகன்    துயரைப்போக்கி,


7.   உயிர்  பெற்றெழுந்த   சூரன்   பரம்பொருளாம்   சிவபெருமானைக்  கண்டு
அளவில்லா   மகிழ்வடைந்து,பலவாறு   போற்றினான். வேண்டும்  வரம்
கேள்"  என்று  இறைவன்  சொன்னதும் ,  அழியாத   உடல்,தேவர்,கந்தர்வர்,
மனிதர்  யாராலும்  அழிக்க இயலாத  வாழ்வு,அண்டங்கள்  முழுவதும்
ஆளும்  உரிமை,எங்கும்  சென்றுவர  இந்திர  ஞாலத்தேர் ,சிறப்புமிக்க
சிங்க  ஊர்தி, போன்றவற்றை   வரமாகக் கேட்டுப் பெற்றான்..அனைத்தையும்
 இறைவன்     அளித்தார் ,


8.   சிவ  சக்தி   அல்லாமல்,  எச்சக்தியாலும்  அழியாத    உடல்,
கோடிக்கணக்கான   நாற்படைகளும்   அளித்து,வாழ்த்தினார் .

                                                  விளக்கம்
சிதிலம்=அழியாத   தன்மை

9.    சூரனைப்போலவே    வேள்விகள்  புரிந்த  சிங்க முகனுக்கும்,தாரகனுக்கும்,.
பல்வேறு  வரங்களை   அளித்தார்   இறைவன். அரக்கர்கள்  பெற்ற    அழியாவரம்   தேவர்களை  அஞ்சி நடுங்கி    ஆங்காங்கு  ஓட வைத்தது. தேவர்களின்   தாழவும்,அரக்கர்களின்   ஆக்கமும்   உறுதியானது.

10   வரங்களை    அடைந்த,  மகிழ்ச்சியோடு,மாயையையும் குருவையும்
 வணங்கி,ஆசிபெற்ற    மூவரும்  எட்டுத்   திசைகளிலும்   போர் தொடுத்து,
வெற்றிமேல்   வெற்றி  பெற்றனர்.பாற்கடலைக்     கலக்கிய   தாரகன்
திருமாலைப்  பணிய  வைத்து,அவரிடம்  இருந்து   சக்கராயுதத்தை த்
தனது  மார்பில்  பதக்கமாக   அணிந்து  கொண்டான்.பிரமனும். ஏனைய
திக்   பாலகர்களும்  பணிந்து  வணங்கினர்.கைலை  சென்று  சிவனைத்
தொழுது,விண்ணகத்தைத்  தன்  வயப்படுத்தினர். இந்திரன்   இந்திராணியுடன்
ஒடி,ஒளிந்தான்,

                                                       விளக்கம்
பால்மொழி ......அமுதம்போல்   பேசும்  இந்திராணி .....அன்மொழித்தொகை


              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக