செவ்வாய், 13 மார்ச், 2018

                                 அசுர    காண்டம்

                                         மாயை

1.   காசியபர்    வம்சம்   கசடர்    அரக்கர்கள்
      மாசுடை    மன்னர்    புகழ்.

2.    மங்கல   கேசி    மணந்த    அசுரேந்த்ரன்
       மங்கள    மாயை    மகள்.

3.    சுரசை   கண்டதும்    சுக்கிரன்    மாற்ற,
       அரக்கர்     அடிமை    அகல்.

4.     கல்விகேள்வி    கற்றுவித்த   சுக்கிரன்    காச்யபரை
        வல்லே     வளைக்க    வழி.

5.     விழியால்     வளைத்து, வினையால்    அசைத்து,
        மொழியால்    முனியை   அடை .

6.      கண்டதும்     கொண்டகாமம்     பண்டகு     மாமுனிவன்
         கண்தனில்     வீழ்ந்தனன்    ஆங்கு.

7.      மாற்றுரு      ஏற்றுபுணர்       ஆற்றலில்      வேற்றுருவம்
         தோற்றியே      சேற்றினுள்     சேர்.

8.      தேவராய்ச்     சூரபன்மன்,      சீயமாய்ச்     சிங்கமுகன்,
          மாவலி        மாதங்கம்     மற்று.

9.      ஆடாய்       அசமுகி,    அல்லல்     வியர்வையில்
         கோடிகோடி    கூற்றுவர்    கூழ்.

10.    உறக்கம்     தவிர்த்த    இரவில்      உதித்த
         அரக்கர்       இரக்கப்      பகை.

                                     பொருள்

1.     வியாழன்    என்னும்   தேவகுரு ,   முருகனைப்  பணிந்து,அரக்கர்     தோன்றிய    வரலாற்றைக்     கூறத்    தொடங்குகிறார் .காசியபர்   என்னும்
மாமுனிவரால்    தோற்றுவிக்கப்   பட்ட   வம்சமே    அரக்கர்   வம்சம் .
குற்றமே  குணமாகக்    கொண்டு  விளங்கிய   அரக்கர்கள்     புகழ்   அடைந்த
வரலாறு  இது.

                                            விளக்கம்
  மாசுடை  மன்னர்   புகழ் ...............கசடும்,    மாசும்  கொண்டு     விளங்கியவர்,
            என்றும், அவர்களது  புகழே    கசடும்,மாசும்    கொண்டது    எனவும்
பொருள்    கொள்ளலாம். குற்றஉணர்வில்,   மாசற்ற   உருவங்களில்
தோற்றியவர்கள்     எனவும்   கொள்ளலாம்.

2.    அசுரேந்திரன்    என்ற    அரக்கர்குல   மன்னன் ,   மங்கள   கேசி    என்பாளை
மணந்து,  மகிழ்ந்து   வாழும்காலை    அவர்களுக்கு   
'மாயை"   என்னும்   மகள்   பிறக்கிறாள்.

3.   சுரசை"   என்னும்    பெயருற்ற    அரசன்   மகளின்   அழகை,   அறிவுத்
திறனைக்   கண்ட,  அசுரகுரு   சுக்கிராச்சாரியார்    அடிமை   வம்சமாக   இருக்கும்   அசுரர் வம்சத்தை,உயர்த்தவும்,தேவர்களை   அடிமை   ஆக்கவும்
முடிவு   செய்து,சுரசையின்    பெயரை,   மாயை"  என   மாற்றி, அவளின்
அறிவாற்றலை  வளர்ப்பதோடு,  தேவர்களை    அடிமையாக்க    வேண்டும்"
என்ற   எண்ணத்தையும்,  அவர்  மனதில்  தோற்றுவிக்கிறார்.
4. கல்வி,கேள்விகளில்   அவளை   வல்லவளாக்கிய   சுக்கிரன்    மாயையை    அழைத்து,   மாயையே!   நீ   அழகே   உருவான
பெண்ணாக   உருவெடுத்து, மாமுனிவர்    காச்யபரை    மயக்கி,   அவரோடு
இணைந்து    ஆயிரக்கணக்கான    அரக்கர்களைப்   பெற்றெடுத்து,
அவர்கள்  வழியே    தேவர்களை    அடிமைப்  படுத்தியும்,  அழித்தும் ,
அகில    உலகத்தையும்   ஆளும்   அதிகாரத்தை   அரக்கர்கள்   பெற    வழி
வகை   செய்தல்  வேண்டும்"  எனப்பணிக்கிறார்.

5.      தவம்   புரியும்   காசியபர்    முன்    சென்ற    மாயை,   அவரைத்     தனது
அழகான   மேனியால்,  கண்ணால்,   மயக்குகிறாள்.    மென்மையான
காதல்    மொழி   பேசி     முனிவரின்  மனதிலே   ஆசையைத்   தூண்டுகிறாள் .
மாயை  மீது     மயக்கம்  கொண்ட   முனிவர்   தவம்  விடுத்து ,  அவளைப்
பின்   தொடர்கிறார்.

6     மாயையின்    அழகில்   மயங்கிய   மாமுனிவன்   அவளின்   மாய
வலையில்   விழுந்தார்.  அவளே   உலகம்   எனப் பின் தொடர்ந்தார். தவம்
பண்பு,  ஒழுக்கம்  எல்லாம்  துறந்தார்.அவளை   அடைவதே   புண்ணியம்
என்பதுபோல்   காமக்கண்ணில்   கலந்தார்..

7.     அவரை    மாயவலையில்   விழவைத்த    மாயை,  தன்னோடு   இணைய
வேண்டுமாயின்   தான்   சொல்லும்  முறை கேட்டு   அதன்படியே   இணையலாம் " என   கட்டளை  இட்டார்.  மாமுனி  ஏற்றுக் கொண்டார்.
அதன்படி   வேறு  வேறு  உருவங்கள்   எடுத்து  நாம்  இணைய   வேண்டும்
என்ற  மாயையின்  சொல்லைத்    தலைமேற்கொண்ட  முனிவர்   அவள்
எந்த   உருவம்  எடுக்க  ஆணையிட்டாளோ    அவ்வுருவத்தை    இருவரும்
தாங்கி க்     கலவியில்    கலந்தனர்.

                                                   விளக்கம்
சேற்றினுள்...........காமம்  ஆகிய   சேறு .

8.     அதன்படி,  அவ்விருவரும்    முதல்  யாமத்தில்   அழகிய    தேவ  வடிவம்
கொண்டு   இணைந்தனர்.  ஆங்கே    சூரபன்மன்   தோன்றினான்.அடுத்த
யாமத்தில்   சிங்கவடிவம்   கொண்டு   இணைந்தனர்.  அங்கே    சிங்கமுகன்
பிறந்தான். மூன்றாம்  யாமத்தில்   யானை  உருவம்  எடுத்து  இணைந்தனர்.
அங்கே     யானைமுகன்   தாரகன்   பிறந்தான்.

9/               நான்காம்   யாமத்தில் ஆட்டுருவத்தில்  இணைய,   அசமுகி"   பிறந்தாள் .அவர்களது    புணர்ச்சி காலத்தில்  தோன்றிய  வியர்வைத்   துளிகள்  வழியே  கோடிக்கணக்கான அரக்கர்  கூட்டம்   ஜனித்தது .

                                                    விளக்கம்
கூற்றுவர்    கூழ் ..........தீமை   உருவான   கூட்டம் 

10.         அவ்விருவரும்    உறக்கத்தை   மறந்து   இணைந்த     அவ்விரவு
கோடிக்கணக்கான   இரக்கமற்ற   அரக்கர்  கூட்டத்தை   உருவாக்கியது.
"ரிஷி  கர்ப்பம்  இராத்     தங்காது "   என்னும்   மொழிக்கேற்ப   இப்பாட்டாளம்
தோன்றியது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக