செவ்வாய், 6 மார்ச், 2018

                                   தாரக  வதம்

1.   வீரவாகு  உள்ளிட்ட  வீரப்படை  சூழ்ந்திட்ட
      வீரமுதல்   வந்தார்   வரை.

2.   கண்ணுதலார்   முன்னிரஞ்சும்   விண்ணவரின்   மென்குரல்
      கண்காட்டக்     கந்தன்    அருள்.

3.   அருள்காட்டு!    ஆற்றல்     திறம்காட்டு!  அல்லார்
      இருள்நீக்கு!    இன்றே   தொடர்.

4.   பூத    கணங்கள்    புகழ்மிகு    நற்படைகள்
      மாதரசி    மாவேல்   பெறு.

5.   மாயக்     கிரௌஞ்சம்    மாதங்கன்    மாய்த்திட
      சேயோனே! சென்றுவெற்றி    சேர்.

6.   முன்சென்ற   வீரவாகு   முன்வீரம்   செல்லாமல்
      மன்குகை    மாயம்    விழு.

7.   களம்காணும்   கந்தன்   திருமுகம்    கண்டான்
      உளம் நிறை    நற்குணம்    நாடு.

8.   மாயமலை,  மாண்பில்லாப்     பேச்சோடு   தோற்றத்தில்
      மாயையாய்ச்    சூரிளவல்    போர்.

9.  தீமையை    மாற்றாத     தீயோனை     வஞ்சத்தை,
     நன்மையாம்    வேலே    அழி.

10. நீறுடை     நெற்றிப்     பொறிபோல்    அரக்கனையும்
      நீறாக்கி     நின்றது    வேல்.

                                                    பொருள்

1.      வீரவாகு   முதலிய  ஒன்பது   வீரர்களும்,  பூத  சேனைகளும் ,பின்தொடர,
வெள்ளியங்கிரி   மலை யாம்   தந்தையின்  கயிலை   மலைக்கு   முருகன்
எழுந்தருளினார்.

                                                      விளக்கம்
வீரமுதல் ........வீரத்திற்கு   முதன்மையானவர், காரணமானவர்.
                               தேவர்களின்   படைகளுக்குத்   தலைமை   தாங்கப்போகும்
                              சேனாதிபதி" என்றும்   பொருள் கொள்க.

2.     சிவபெருமானைப்  பலவாறு  போற்றிய  தேவர்கள்   தங்களது  வேண்டுகோளைக்   கூறவும்,அவர்களுக்கு   அருள்   புரியும்  முறையில்,
முருகனை  நோக்கி, குமர!  இவர்தம்  துயர்  நீங்குமாறு   அரக்கர்களை
அழித்து,இவர்களைக்     காப்பாய்" என்றதும்,  தந்தையின்    சொல்லை
ஏற்று, இன்றே   போரெடுத்து,அரக்கர்களை   அழிப்பேன்" என்று  முருகன்
அருளோடு  கூடிய  விடையை அளித்தார்.


                                                          விளக்கம்
 கண்ணுதலான் ....சிவபெருமான்.
மென்குரல்..........வருந்தி,அஞ்சி,இரங்கி,  உரைத்த  தேவர்களின்    துயர்க்குரல்
கண்காட்ட.......மகனைப்பார்த்துக்     கண்ணாலே " இவர் துயர் களை "
                             என்னும் குறிப்பை  உணர்ந்த   முருகன்  செயலில்  ஈடுபடல்
அருள்....போருக்குப்  புறப்படல் .

3.    முருகா!   இன்றே   தொடர்.தேவர்கள்     மீது    அன்புகொண்டு,  உனது
வீர   ஆற்றலைக்   காட்டு.சூரபன்மன்     முதலிய     அரக்கர்களை   அழித்து,
தேவர்களைக்   காப்பாய். படையெடுப்பை   இன்றே   துவங்கு." என
சிவபெருமான்  முருகனுக்கு    அன்புக்கட்டளை இட்டார்.

                                                   விளக்கம்
  அல்லார் ......பகைவர்,  அரக்கர்கள்
  இருள்நீக்கு .....துன்பத்தை(அரக்கரிடம் படும்  வேதனையை) நீக்கு.

4.   படையெடுக்கச்   சொல்லிய    இறைவன்,  முருகனுக்குப்     பல்வேறு
படைகளை   அளிக்கிறார்.பூதகணங்கள்    உனது   படை  வீரர்களாக  வருவார்.
ஏகாதச   உருத்திரர்களும்,  உனது    கரங்களிலே  படைக்கலன்களாக
அமைவர். மலைமகள்  தவத்தால்  பெற்ற   வேலாயுதம்   என்றும்  உன்னோடு
இருந்து  உன்  வெற்றியைப்  பறை  சாற்றும்",  எனக்கூறிப்  படைகளையும்
அருளையும்,அன்னை   பார்வதியோடு சேர்ந்து   அளித்து,அனுப்பினார்

                                                           விளக்கம்
மாதரசி.....................பார்வதி  தேவியார்

5.    மாயன்கள்   பல  கொண்ட   கிரௌஞ்ச  மலையையும்,  சூரனின்   தம்பி
யானைமுகனாகிய   தாரகனையும்   அழிக்க,  முதலில் புறப்படு ,  வெற்றி
பெறுக"  என்றே   நாரதர்   முதலிய  தேவர்கள்   வாழ்த்துரைக்க, முருகன்
போர்க்கோலம்    கொண்டார். 

                                                          விளக்கம்
மாதங்கன் ......யானைமுகன்     தாரகாசுரன்                      
      .

6.  வீரவாகு!  நீ   முன்னே சென்று   அரக்கனை   எதிர்கொள். தக்க  தருணத்தில்
யான்  வருவேன்"  என்ற  முருகன்   ஆணையைச்   சிரமேற்கொண்டு 
போர்  முழக்கம்  செய்த   வீரவாகுவின்  குரல் கேட்டு, விண்ணவரும்
திருமாலும்   தோற்றோடி.ஒளிந்ததை  மறந்து, போர் தொடுக்க   வந்தனரோ?
என  வெளிவந்த   தாரகன்  வீரவாகுவோடு,கடுமையாகப்    போர்  புரிந்தான்.
வீரத்தால்  வெல்லத்   தயங்கிய   தாரகன்   மாயத்தால்  கிரௌஞ்ச  மாலைக்குள்  வீரவாகு  முதலியோரை   மயக்கமுறச்   செய்து   மறைத்து
வைத்தான்.

                                                          விளக்கம்
மன் குகை ......கிரௌஞ்ச  மலைக்குகை 

7.   நாரதர்   வழியே  செய்தி  அறிந்த முருகன்    தானே   போர்க்களம்  சென்றான்.
தன்முன்   போர்  வீரனாக  நிற்கும்  முருகனைக்   கண்டு,  என்னே   அழகு!
என்னே  வீரக்களை!  இவனோடு    போர்  புரிய  வந்தேனே!  இவன்   தாள்களில்
விழுந்து   வணங்க  வேண்டும்போல்   தோன்றுகிறதே!  சிவன்   மகனல்லவா!
என்றெல்லாம்   எண்ணிய    தாரகன்  "முருகனே!  உமக்கும்  உன்  தந்தைக்கும்
பக்தனல்லவா?நான்.என்னோடு  எதற்காகப்   போர்! என  வினவினான்.
தேவர்களைத்  துன்புறுத்தும்   அரக்கர்களை   அழிக்குமாறு   என்னை,
எம்பெருமானே   ஏவினார்.தேவர்களை   விடுவித்தால்   உமக்கு  வாழ்வுண்டு "
என முருகன்   மறுமொழி   பகர்ந்தார்.

8.        அழியா   வரங்கள்   பெற்றவன்,திருமாலையே   வென்று,அவன்  சக்கரப்
படையை  மார்பில்  அணிந்தவன்.என்னை   யாரால்  அழிக்க    இயலும்?
என்   மாய மலை  கிரௌஞ்சம்   இருக்கும்   வரை  என்னை   எவர்   வெல்வார்?
என்று   ஆணவமாய்ப்  பேசிய   தாரகன்  போர்  புரியத்    தொடங்கிப்  பல்வேறு
அஸ்திரங்களை   ஏவி,முருகன் எதிர்  நிற்க  முடியாமல்   மாயப்   போரைத்   துவங்கி வேறு வேறு  உருவத்தில் வந்து  போரிடுகிறான். 

                                                              விளக்கம்
சூரிளவல் ..........சூரனது  தம்பி   தாரகன்

9.    சத்துரு  சங்கார   மணி வேலே!  நீ   சென்று,  தீமையே  உருவான  அரக்கன்
தாரகனையும்,அவனது  மாயமலை   கிரௌஞ்சத்தையும்,அழிப்பதோடு,
மலைக்குள்    மயங்கியிருக்கும்   வீரவாகு  உள்ளிட்டோரையும்   மீட்டு   வா"
என  வேலுக்கு  ஆணை பிறப்பித்தார்  முருகன்.

                                                        விளக்கம்
நன்மை    முதலடி  முதற்சொல்.
தீமை       இரண்டாம்  அடி  முதற்சொல்.  இது   அடி  முரண்   எதுகை   ஆகும்.

10,    ஒளியும்  விரைவும்   கொண்டு  விரைந்த   வேலாயுதம்  சிவபெருமானின்
நெற்றிக்கண்   பொறிபோல  அரக்கன்    தாரகனையும்,அவனது  மாய  மலை
கிரௌஞ்சத்தையும்   அழித்து  வீழ்த்தியதோடு,வீரவாகு  உள்ளிட்டோரையும்
முருகன்  முன்  கொணர்ந்து  நிறுத்தியது, தேவர்கள்  மகிழ்ந்து  முருகனைப்
போற்றினர்.

                                                      விளக்கம்
அரக்கனையும்........இங்கு   "உம் "   இறந்தது  தழீய    எச்ச  உம்மை.
                                      தரகனையும்,  கிரௌஞ்சமலையையும்   அழித்தது  வேல்.
                                      எனப்பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக