வியாழன், 15 பிப்ரவரி, 2018

                         பேறுடைப்பிள்ளை

1. நாரதர்    ஆற்றிய     தொல்வேள்வி      நல்மந்திரம்
    வேறதால்   தோன்றிய   ஆடு.

2,  அவையோர்    அழிக்கவே     அஞ்சிய     அல்லல்
     நவவீரன்    நீக்கினான்   நாடு.

3.  ஆறுமுக    ஊர்தியாய்    சூரனழி     சான்றாகி,
     ஏறுமயில்   போன்றதோடு     ஏகு.

4.  அஞ்சுதலை    போற்றிட   நான்குதலை   வந்தனன்:
     ஆறுதலைக்     காணான்    அழு.

5.  பிரணவத்    தொன்மை    அறியாச்    சிறையில்
     பிரமனே:   பெற்றுய்      சிவன்.

6...உற்றுய்ந்தான்    ஓங்காரம்:   பெற்றபிள்ளை     ஆசானாம்:
     முற்றுமுனி    பற்றித்தான்    கற்று.

7.   ஆற்றிய      உற்பத்தி      ஏற்றிட்டான்     நற்காப்பு,
      சாற்றுவழிச்   சங்காரம்    காண்.

8.   முத்தொழிலில்     மூத்தோனை     முற்பிறவி    நற்பயனை
       பத்தியால்      மால்மகளிர்     பற்று.

9.   அமுதவல்லி     இந்திரன்    செல்வியாம்: சிந்தும்
      குமுதவல்லி    நம்பிராசன்   குலம்.

10. அன்பருள்     வாய்த்த     அருஇரு    வல்லிகள்
      தொன்வழி    தொல்லிடம்     ஏகு .

                                   பொருள்

1.   நல்லோர்   பேரவையில்   நாதனாய்   அமர்ந்து, முருகன்   அருள்  பாலிக்கும்
   தருணம் ,"ஐயனே! காப்பாற்றுங்கள்!  அண்ணலே!  காப்பாற்றுங்கள் ,"என
ஓலமிட்டபடி, நாரதர்  ஒடி வந்தார். அஞ்சி நடுங்கிய    அவர்,  நான்மறை
நாயக! வேள்வி ஒன்றைத்   தொடங்கிய   நான்,  வேதங்களைத்     தவறாக
உச்சரித்துவிட்டேன். அதனால்   வேள்வித்      தீயினின்று   தோன்றிய    ஆடு,
எங்களை   எல்லாம்   முட்டியே    அழித்து   விடும் போல்   ஆவேசத்துடன்
ஒடி   வருகிறது.  தங்கள்  தான்  காப்பாற்ற  வேண்டும்", எனக்காலில்  விழுந்து
கதறினார்.

                                                          விளக்கம்
வேறதால் .......மந்திரம்   ஒலி ,உச்சரிப்பு,  சொல் தடுமாற்றம்    ஆகியவற்றால்
மாறுபட்ட   பொருளைத்   தந்ததால் .

2.     அவையோரும்,மற்றோரும்    அஞ்சி   நடுங்க வைத்த   அவ்வாட்டினை,
முருகன் அருளால்   வீரபாகு   அடக்கினான்.ஆட்டின்  கர்வம்,பலம்,எல்லாம்
ஒடுங்கியது. யாவரும்   மகிழ்ந்தனர்.

3.   அடங்கா   ஆடு. அதனை   அடக்கும்  ஆற்றல்  தங்கள்  வசமே   உள்ளது.
அதனாலும்,  தங்கள்  ஆணைப்படி,தங்கள்  இளவல்  வீரவாகு,அடக்கியதாலும்,
இவ்வாடு    தங்களுக்கே  உரியது.  ஆதலின்    இதனைத்     தாங்களே
ஊர்தியாகக்    கொள்ள வேண்டும்," என   நாரதர்   முதலியோர்   வேண்டிப்
பணிந்து  கேட்க,முருகனும்    அதன் மீது   அமர்ந்து  மூவேழ்     உலகையும்
சுற்றி வந்தார்.சூரனை   சங்கரிக்கத்   தோன்றிய   முருகனுக்கு   இவ்வாடும்
ஊர்தியாக    அமைந்தது.

4.    கயிலை  மலையில்   வீற்றிருக்கும்   சிவபெருமானைத்   தொழுது
வணங்கிட,பிரம்மதேவன்   வந்தான்.  நுழை  வாயிலில்   மயில்   மீது
அமர்ந்திருந்த   ஆறுமுகக்   கடவுளைக்   காணாமலும்,வணங்காமலும்,
இவன்  "சின்னக்குழந்தை   தானே" என கர்வத்தோடும் உள்ளே   செல்ல
முற்பட்டான். அவனைத்  தடுத்து   நிறுத்திய   முருகன்,அவர்      ஆற்றும் 'தொழில்  பற்றிக்  கேட்டான்.   அவரோ.மிகுந்த    ஆணவத்தோடு "படைப்புத்
தொழிலை   ஆற்றுகிறேன்   என்றார் .படைப்பின்  அடிப்படையும்   வேதம்
ஓதத்   தெரியுமா?என வினவினான்.தெரியும்,என்றவர்,  "ஓம் "  என   ஆரம்பித்தார்.

                                                       விளக்கம்
 அஞ்சுதலை...சிவபெருமான்.   நான்குதலை .....பிரமன்.   ஆறுதலை ..முருகன்
 அஞ்சி  வணங்க  வந்தவன்   ஆறுதல்  இல்லாது   துயர்   அடைந்தான். என்றும்.
ஆறுதலை  முருகனை  வணங்காத    ஆணவத்தால்    துயர்   அடைந்தான் ,
எனவும்  பொருள்  கொள்க,   அழு...துன்பம் .

5.   ஓம்" எனத்     துவங்கிய  பிரமனை    இடையில்   நிறுத்திய   முருகன்,
ஓமெனும்  பிரணவத்திற்குப்     பொருள்   கூறுமாறு   சொல்லப்,  பிரமன்
பொருள்  அறியாது,  விழிக்க, பிரணவப்    பொருள்   தெரியாத   பிரமனைச்
சிறையிலே   அடைத்தார்.பிரமனால்     சிவனோ   ஓங்காரப்   பொருளை
அறிந்து   உயர்வு   பெற்றார்.

6.   தேவர்களின்   வேண்டுகோள்  கேட்டு,  முருகனிடம்  வந்து,பேசிப்  பிரமனைச்  சிறையிலிருந்து  மீட்டார்   எம்பெருமான்  சிவனார். தந்தை
சொல் கேட்டு  விடுத்த   முருகனிடம்,பிரணவப்     பொருளை, நீ    அறிவாயோ?
அறியின்   எனக்கு   உரைப்பாய்"!  எனத்    தந்தை    வேண்ட,முருகனோ
முறைப்படி,ஆசானிடம்   வணங்கிக்   கேட்கும்   சீடன்   போல்   தாங்கள்
கேட்பின்,யான் அப்பொருளை    உபதேசிப்பேன்"  என்றதும், ஆலமரத்து
ஆசான்    மகனைத்   தோளிலே   சுமந்து,வாய்  பொத்தி ,சிரம்   தாழ்த்தி,
பணிவுடன்  நிற்க, சுவாமி,   நாதனாகி ,பிரணவப்    பொருளைத்  தந்தைக்கு,
உபதேசித்தார்.செய்தி     அறிந்த    அகத்திய    மாமுனி   வேண்ட,அவருக்கும்
உபதேசம்  செய்தார்   முருகன்.

7.  பிரமனைச்     சிறையிலே   தள்ளிய   காலத்தில் ,தானே   படைப்புத்
தொழிலை   ஏற்ற ,முருகன்,  உலகைக்   காக்கும்  தொழிலையும்  ஏற்றார்.
சூரன்   முதலிய அரக்கரை  அழிக்கும்   முகத்தான்   சங்காரத்தையும்
மேற்கொண்டார்.

8.   மூவருக்கும்  மூத்தோனாக  விளங்கும்  முருகனை, பிறவிப்   புண்ணியத்தால்  திருமால்  மகளாகத்    தோன்றிய ,அமுதவல்லி, சுந்தர
வல்லி   என்னும்  இரண்டு   பெண்களும்,முருகனே"  கணவன்." இருவரும்
அவரையே  மணப்போம் "  எனத்   தவம்   இருந்த   இருவருக்கும்   காட்சி
கொடுத்த  முருகன் இருவருக்கும்  நல்வழி   காட்டினார்.

9.   முருகன்  ஆணையின்  வண்ணம்,அமுதவல்லி,  இந்திரன்   மகளாய்,
"தேவயானை" என்ற  பெயருடனும்,  சுந்தரவல்லி   நம்பிராசன் என்ற
மலைநாட்டு  மன்னன்  மகளாய், வள்ளி"  என்ற   பெயருடனும்  தோன்றினர்.

10..திருமால்   மகள்கள்   இருவரும்    இந்திரன்   மகளாகவும்,நம்பிராசன்
மகளாகவும்,தோன்றி,தொன்மை  காக்கும்  அவரவர்  மரபுடன்   வளர்ந்து
வந்தனர் .
                                                           விளக்கம்
தேவயானை .....அமுதவல்லி   ஒரு குழந்தை   வடிவம்  கொண்டு, வேதமலையில்  தவம்புரியும்   இந்திரன் முன் சென்று," நான்   உமது
இளவல்  உபேந்திரனின்  மகள். என்னை  உன்   குழந்தைபோல்  வளர்ப்பாய்"!
என்றதும்,மகிழ்ந்த   இந்திரன்   அருகில்  நின்ற  ஐராவதத்திடம் ( வெள்ளை யானையிடம்  கூற,  அவ்யானை   வளர்த்ததால்  தேவயானை  என்னும்
பெயர் பெற்று  வளர்ந்து   வந்தாள் .




வள்ளி.......... முனிவரால்  சாபம்  பெற்று ,முனிவராகவும்,மானாகவும்
 காட்டில்  வாழ்ந்துவரும், திருமால், இலக்குமி, மனத்தால்   காதலுற்று,
மானின்  வயிற்றிலே   மகவாய்   மலர்ந்து,வள்ளிக்  கிழங்ககழ்   குழியிலே
வள்ளியாய்த்    தோன்றி,நம்பிராசன்  என்னும்  மலையரசனால் மகளாய்
வளர்க்கப் பட்டாள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக