செவ்வாய், 27 மார்ச், 2018

தாலப்பருவம் ...6

                                         தாலப்பருவம் ...6

அழகென    அருளென,   அறிவெனத்   தோன்றி,
                    அகமெலாம்   நிறைமணியே!
பழகிடும்     தமிழ்மொழி     பகர்ந்திடும்    பொருளாகிப்
                     பழமையின்     பவளமே!

உழவரின்      உழைப்பினில்    அமைந்திடும்     பயிராகி,
                     உலகுயிர்      உயர்முத்தே!
அழலெனத்    தவிமன      அருந்துயர்      மருந்தாகி
                     அரவணை     மரகதமே!

மழலையாய்க்    குழறியே      விழுப்பொருள்    பேசிடும்
                     மலர்வாய்       அமுதமே!
அழல்துணை,       குழகனின்     மழகயத்      தாயாகி,
                    அகிலமும்    காப்பவளே!

சுழல்வினை    பிறப்பறு    சிவனவன்    கல்யாணி!
                     தாலோ!      தாலேலோ!
நிழல்பொழி     நிமலனூர்    நிலையருள்     கல்யாணி!
                     தாலோ!      தாலேலோ.

                                              பொருள்

   அழகாகவும்,  அருளாகவும்,   அறிவாகவும்   தோன்றி,  உலகோர்   மனம்
எல்லாம்  நிறைந்திருக்கும்   இரத்தினங்கள் போன்ற   மகளே!  பைந்தமிழ்
மொழிபேசிப்   பலப்பல பண்பாட்டுப்    பொருள்  அருளும்,  பவளச்  செவ்வாய்
கொண்ட   அம்மையே!
       உழவர்களின்    உழைப்பால்   உருவான   விளைபொருளாகி,உலகெல்லாம்
காக்கும்   முத்தே!  நெருப்பாய்த்    துன்புறுத்தும் , துயரால்   தவிக்கும்  உலக
உயிர்களின்  மனத்திற்கு,  மருந்தாகித்    துன்பம்   போக்கி  அன்போடு
அரவணைக்கும்   தாயான   மரகதச்   செல்வியே!
      அமுத   மலர்வாயால்   குழறிக் குழறி  மழலை   மொழிபேசி,  ஞான
மயமான   செய்திகளை   விளக்கும்   ஞான  குருவாய்  விளங்குபவளே!
நெற்றிக்கண்ணனின்    துணைவியே!  அழகன் முருகனுக்கும், கயமுகனுக்கும்   தாயாய்  விளங்கி,  உலக  ஆன்மாக்களுக்கும்  தாயாகிக்
காப்பவளே!
       நீர்ச்சுழல்போல்   சுற்றி ,சுற்றி   வரும்  பிறப்பினை   நீக்கி,வீடு  பேறு
அளிக்கும்   கைலாசநாதரின்   துணைவி கல்யாணி    அம்மையே!
தொட்டிலில்  தவழ்ந்து   நல்லுறக்கம்  கொள்வாய்.   தாலேலோ.
     கருணையாம்   நிழலை  ஆன்மாக்களுக்கு   நல்கும்  கைலாச  நாதன்
வீற்றிருக்கும்  கன்னியாகுடியின்  அருள் பொழியும்  கல்யாணி   அம்மையே!
தொட்டிலில்   தவழ்ந்து  நல்லுறக்கம்  கொள்வாய்.  தாலேலோ.
     


                   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக