குமரக்குறள் வெண்பா .
தோற்றுவாய்
பரங்குன்றம் வாழ்க; பழனிமலை வாழ்க;
திறனுடைச் செந்தூரும் வாழ்க; ___ வரமருள்
ஏரகமே வாழ்க; திருத்தணி வாழ்கவே.
தார்ப்பழ நல்லுதிர்சோ லை .
முதல் அழகே! முருகே! முத்தமிழே!
எல்லாம் வல்ல பரம்பொருள் எம்பெருமான் திருமுருகன் புகழைப்
பெருமையைப் போற்றுகின்ற நாளே பிறவிப்பயனின் பெறற்கரிய பேற்றைப் பெற்றுய்ந்த நன்னாளாகும்.
'பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" என்று போற்றும் சான்றோர்
சாத்திரக் கனிச்சாறை மனத்தில் கொண்டால் இனிய முருகன் அருள்
சித்திக்கும்; சித்திக்கும் முத்திக்கும் மோகனச்சுவடு காட்டும்.அம்மோகனமே அழகு; அவ்வழகே முருகு ; அம்முருகே முத்தமிழ் ;
2. இளமை; இனிமை; இயற்கை.
இளமை என்பதன் இனிய விளக்கமே முருகன். இயற்கை விரிந்து பரந்து
பட்ட மஹா விஸ்வரூபமே முருகனின் மகோன்னதப் பேருருவம்.எல்லா உலகங்களும் ,எல்லா நீர்நிலைகளும், மலைகளும், மரங்களும், முருகனே.
ஊர்வன,நடப்பன, பறப்பன யாவும் முருகனே. உருவானவன் அவன்;உளதானவன் அவன்;உளதானவன் அவன்; இலதானவன் அவன்;
அந்தப் பரம்பொருளின் பெருமை பேசுகின்ற நூற்கள் ஆயிரம் ஆயிரம்;
கச்சியப்பசிவாசார்யாரின் கந்தபுராணம் தொட்டு,இன்றுவரை தோன்றியுள்ள முருகனது பெருமை சால் நூல்கள் அளவிறந்து போற்றற்குரியன. அவ்வழியில் ஆறுமுகப் பெருமைக்கு மேலும்
ஒரு மணிமகுடமாக முருகன் அருளால் உருவானதே குமரக் குறள் வெண்பா" என்னும் இந்நூலாகும்.
3. பெயர்க்காரணம் ..
குறள் வெண்பாக்களால் உருவாக்கப் பட்ட குமரன் புகழ் போற்றுவது.
கந்தபுராணம் ஆறுகாண்டம்; கந்தனின் தாரக மந்திரம் ஆறு எழுத்து;
ஆறுமுகம்; ஐந்து முகத்தோடு அதோமுகம் சேர்ந்து அவதரித்தவன்;
ஆறு என்பதையே நிலைக்களனாகக் கொண்டவன் ;ஆதலின் இந்நூல்
கந்தபுராண ஒவ்வொரு காண்டத்திற்கும் நூறு குறட்பாக்கள் வீதம்
அறுநூறு குரள் வெண்பாக்களைக் கொண்டு பாடப்பட்டது.
குமரன் புகழை அறுநூறு குறள் வெண்பாக்களின் வழியே கந்த புராணத்தைப் போற்றுவது.
ஆறு காண்டங்கள்; அறுபது அதிகாரங்கள்; அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள். என்ற முறையில் கந்தபுராணத்தை முதல் நூலாகக் கொண்டு
பாடப்பட்டுள்ளது.
குமரனின் புகழை விளக்கும் குறள் வெண்பாக்கள் அறுநூறு கொண்டு விளங்குவது இந்நூல் ஆகும்,
4. நூல் அமைப்பு ...
கடவுள் வாழ்த்து தொடங்கி மூல நூலாகிய கந்தபுராண வழியில் ,
பார்வதி அவதாரம்,சிவத்தவம்,சரவணம் ,விஸ்வரூபம்,தாரகவதம்.
அசுரகாண்டம்,அசுரவளர்ச்சி, மகேந்திரகாண்டம்,வீரவாகுதூது,யுத்தகாணடம்,தேவகாண்டம்.தக்ஷகாண்டம்
பத்துநாள் போர்க்களம்.தெய்வயானை திருமணம், தேவர்கள் சிறைமீட்டல்.
வள்ளி கல்யாணம்,என்ற முறையில் நூல் வளர்ச்சி பெறுகிறது.
5, கவிதை, கந்தன், கற்பனை ...
தெள்ளத் தெளிவாய் என் உள்ளத்திலே நின்று ஆணையிட்டு என்னை
ஆட்டிப்படைப்பவன் கந்தன்.அவன் இடும் ஆணைதான் என் கவிதை;அவன் இடும் கட்டளைகள் என் கவிதைகள். அவன் சொல்லாமல் யான் எதையும்
செய்வதில்லை;வண்ணமய ஆகாயம் அங்கே தோன்றும் அளவிடற்கரிய
ஆன்மஞான சிந்தனைகள்; கருவாகி,உருவாகி விரிவெடுத்து வெளியாகும்
கடலலை;கற்பனைக் கருவூலம்; அதன் மையம் கந்தன்; அதன் விரிவு கந்தன்;
சொல்லும் பொருளுமாய் சோதிப்பிழம்பு ; அறுநூறு குறட்பாக்களுக்குள்ளே
கந்தபுராணக் கடலை, அடக்கல் இயலுமோ! கந்தன் காட்டிய வழி கவிதையாய் க் காப்பியமாய், முருகன் புகழ் பாடுகிறத.
6. நன்றியும்,நன்முருகனுக்கே.....
பேசா நாளெல்லாம் பிறவா நாளே" என்பது ஞான சாத்திரம்.
போற்றிப் பணிந்து, பூசித்து, வாழ்த்தி. வையகம் சிறக்க வாழ வைத்த
வள்ளல் முருகனை,வள்ளிமணாளனை,தெள்ளுதமிழ்த் தெய்வத்தை
வாழ்த்துவதே என் முதற் பணி .அவ்வகையில் எனக்கு எல்லாமாக இருக்கும்
எம்பெருமான் பாதாரவிந்தங்களைப் பணிகின்றேன்.இவ்வாய்ப்பும்
இந்நிலையும் அருளிய அருள் நினைந்து ஆனந்தம் மிக மேலிடுகிறேன்.
இந்நூல் வெளிவரப் பல்லாற்றானும் பல்வேறு உதவிகளைப் புரிந்த
அன்பு நெஞ்சங்களை வாழ்த்தி, ஆறுமுகப் பேரருள் அனைவருக்கும் சித்திக்கச் செவ்வேள் கருணையை வேண்டுகிறேன்.
17.9.21 முருகனடி போற்றும்
சுவாமி.சுப்பிரமணியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக