வெள்ளி, 13 செப்டம்பர், 2019

                                        போர்க் களம்

1,நூற்றெட்டு   போர்த்தலைவர்  நாரணன்  நான்குதலை 
   காற்றக்னி  இந்திரன்  சூழ்.

2,நாற்படை  நன்னகர்   அஞ்சிடும்  பூதர்கள் 
   வேற்கடவுள்  வெற்றிநோக்கி வீறு ,

3, எல்லைப்     புறத்திலே  வல்லமைச்  சண்முகன் 
     உள்ளனன்  என்றனர்  ஒற்று.

4, பானுகோபன்   போர்க்களத்தில்   வீரபாகு  நாணசைய 
    மோனமாயை    ஞானவேல்   காப்பு.

5, திவ்யபாணம்  வேண்டிவீடு   சென்றபானு   தோல்வியின் 
    செவ்விய   சூரன்   செலல்,

6.அதிசூரன்  மாள,   அசுரேந்த்ரன்   மாள,
   விதிநொந்து   வீண்செருக்கு   வா,

7,  வீரநவர்   வீழ்ந்தனர்   சூரனிடம் ;வேலவன்
     காரருள்  தேர்முகம்   காண்.

8, காணற்   கரிய    கமலமுகம்   காற்சிலம்பு
    பூணும்    சதங்கையைப்   போற்று.

9, சிவமைந்த!  சீர்கழல்   செம்போரில்  வந்தாய்!
    அவமடைவாய்!  அன்னை  துயர்.

1௦,  வில்லினால்    சொல்லுவம்   வீரனே!  நின்மடிவு,
        அல்லன    நீக்கியே   ஆறு.


                                          பொருள்

1,  வீரபாகு!  இன்றே  இப்பொழுதே சூரனை   அழிக்கப்  படையெடுப்போம்,
எனது   தேரைக்    கொண்டு   வா! என்று சொல்லிக்    காற்றாகிய   தேரில் புறப்பட்ட   தேவ  சேனாபதியை  "சுப்பிரர்"முதலிய   பூதத்   தலைவர்கள்
நூறு பெரும்,திருமால்,பிரமன், இந்திரன் ,பிறதேவர்கள்  இரண்டாயிரம் இலக்கம் பூதப்படைகள்,  பின் தொடர்ந்தனர்,

2, தேர்,யானை, குதிரை  காலாட்படைகளும்,  சூரநகரத்தையே   அழித்து விடுவரோ  என   அரக்கர்கள்   அஞ்சும்  இரண்டாயிரம் இலக்கம்  பூதப்
படைகளும், சூரனை  வீழ்த்தி  வெற்றி பெற  மாமருகன்    தலைமையில்
வீறு   கொண்டெழுந்தனர்,அலைகடலைத்    தாண்டி,  இலங்கைத்தீவை
அடைந்தனர்.திருமாலின்    வேண்டுகோளுக்கு   இணங்க   "ஏமகூடம்"
என்னும்   நகரை உருவாக்கினர் தேவ தச்சர்கள்.அக்கடல்சூழ்    நகரிலே
முருகன்   படைவீடு  கொண்டான்.

3,  சூரனை  வணங்கிய   ஒற்றர்கள், மன்னா!நமது    எல்லைப்புறக்   கடல்
பகுதியில் நால்வகைப்   படைகளோடும்,எண்ண  இயலாப்   பூதப் படைகளோடும்,வல்லமை   கொண்டசுப்பிரமணியர்   படைவீடு  கொண்டுள்ளார்" என   வணக்கத்துடன்   கூறினர் ,

4,  பெருஞ்சினம்   கொண்ட   சூரபன்மன்   தனது   மகன்   பானுகோபனை
அழைத்தான்;வெற்றி   வீரத்திலகம்   இட்டு,ஆயிரம்  ஆயிரம்   அரக்கர்  படை
சூழப்  போர்க்களத்திற்கு   அனுப்பிவைத்தான்.

5,   பானுகோபன்   போருக்கு   வருகிறான்"  என்ற   செய்தியை   நாரதர்
வாயிலாக   அறிந்த  சண்முகர்   வீரபாகுவை   எட்டுத்   தம்பியருடனும்,
பூதப் படைகளும்  புடை சூழ ப் போரிட   அனுப்பி  வைத்தான்,

6,  அரக்கர்களும்,  பூதர்களும்  கடுமையாக   மோதிக்கொண்டனர்,அரக்க சேனை   பூதப்படையால்   அழிக்கப்பட்டன;  அதுகண்டு   சினந்த   பானுகோபன்   பூதப்படைகளை    அழித்தான்;  எட்டு   வீரர்களும்  தோல்வியுற்ற   நிலையில்   முருகனை   வணங்கிய  வீரபாகு அவனை
எதிர்த்தார்,  பானுகோபன்  மீது  பாணமழை   பொழிந்து, அவனை நிலை
குலையவைத்தார், பானுகோபனோ  நான்முகனிடம்    தான்பெற்ற   மோகப்
படையை ஏவினான், அது   வீரர்களையும், போத்தப்படையினரையும்   மயக்கத்தில்   ஆழ்த்தியது,மயங்கிய   பூதப் படைகளை அழித்துக்   குவித்தான் பானு, இதனை   ஆன்ம திருஷ்டியால்   உணர்ந்த   மாமுருகன்
அமோகப்படையான   ஞானப்  படையை  ஏவினார்,மயங்கிய   எல்லோரும்
மயக்கம்   தீர்ந்து, எழுந்தனர்,  வீரபாகுவும்,பானுகோபனும் கடுமையாகப்
போரிட்டனர்,மாறி  மாறி   கணைகளை வீசிக்கொண்டனர்,
தேரிழந்து,வில்லிழந்து  வேறு வேறு பெற்றுப் போரிட்டனர்.வீரபாகு  "சிவப்
படையை" க்   கையால்  தொட்டார்;  அதனை   எதிர்க்கும்   தெய்வீகப் படைகளை  ஆணவத்தால்   எடுத்து வர  மறந்த    பானுகோபன்  அஞ்சினான்;
தெய்வீகப்   படைகளோடு   நாளை   வந்து   இவனோடு  போரிடுவேன்"
என்று   மனத்தில்   கூறியபடி க்   காலத்தை விட்டு   தனது   வீடு   நோக்கி ஓடினான்; வீரபாகுவை   முருகன்   பாராட்டினார்,

5,  திவ்ய  அம்புகளை  எடுக்கத்   தோற்றோடி   வந்தான்   மகன்"  என்ற செய்தி அறிந்து  மகன்மீது   வெறுப்புற்ற   சூரன்   தானே  போருக்குச்   செல்லத்   திட்டமிட்டான்,பெரும்படையுடன்   போர்க்களம்   சென்றான்,

6,  சிங்கமுகனின்   மகன்   அதிசூரனும், தாரகன்  மகன் அசுரேந்திரனும்
பெரியப்பாவைப்   பின்   தொடர்ந்தார்கள் ,சூரனது   வருகை   அறிந்த
சுப்பிரமணியரும்   போர்க்களம்   புறப்பட்டார், வீரபாகுவோடு   போரிட்ட
அதிசூரனும்,அசுரேந்திரனும்   மாண்டனர்,இச்செய்தி    அறிந்த   சூரன்
விதியை   எண்ணி   மனம் வருந்தினான்.ஆயினும்   மனம்    மாறாத  செருக்கு
கொண்ட   அவன்   தானே   தேவப்படைகளை   அழிக்கப் புறப்பட்டான்.

7,  சூரன்  பூதர்களையும்,  தேவர்களையும்   அழித்து   நசுக்கத் தொடங்கினான்.   நவ   வீரர்களில்   எண்மரும்  போரிட்டு,மயங்கி, மூர்ச்சித்து விழுந்தனர்,  வீரபாகுவும்   சூரனுக்குச்   சமமாகப்   போரிட்டாலும் வரபலம்
மிகுந்த   சூரனிடம்   தோற்று   மூர்ச்சித்தார்,இச்செய்தி   அறிந்த  முருகன் சூரன்   முன்  போரிட   வந்தார்,

8,    ஞானிகளுக்கும், முனிவர்களுக்கும்   கிடைக்காத   முருகனது   அருட்பார்வை   சூரன்   மீது  விழுந்தது, தன்முன்   நிற்கும்    முருகனைப்
பார்க்கிறான்   சூரன்,தாமரைபோன்ற    ஆறுமுகங்கள்;  ஈராறு கரங்கள்;
அகன்ற அழகுக்  கோல   மார்பு; சதங்கை   அணிந்த   கால்களிலே வீரக்கழல் '
அணிந்துள்ள  அழகுக்கா ட்சியைக்  கண்ட   சூரன்  மனம்  ஒருநொடி தூய்மை பெற்றது;கையெடுத்து   வணங்க   விரும்பியது ;ஆணவம்  தடுத்தது,

9,   சிவ  மைந்தனே!  கிண்கிணி  சதங்கை   அணிந்த   காலிலே   வீரக்கழல்
அணிந்த  நீ   அழியா   யாக்கையும்,அழிவில்லா   ஆயுளும்  பெற்று  விளங்கும்
என்னோடு   போரிட்ட   வந்துள்ளாய், வரபலம்   மிக்க   என்னோடு   போர்
புரிந்து வெல்ல    இயலாமல்    தோற்று   அழியப்   போகிறாய், உன்னைப்போருக்கு     அனுப்பிவைத்த உன்   அன்னை   பார்வதி தேவியார்
பெருந்துயர்   அடையப்  போகிறாள்,  பார்   என்   வீரத்தை"  என்றபடிப்
போரிட  முனைந்தான்.

1௦, சூரனே!  உனக்கு   என்   வில்லே  விடை நல்கும்;வெற்றுச்   சொல்  உயர்வு
ஆகாது;உனது    அழிவு. உலகோர்   துயரைப் போக்கும்;உலக   உயிரினக்களுக்கு    ஆறுதலை   நல்கும்,    அவ்வாறு தலை .  இவ்வாறு  தலை
இன்றே   அளிக்கும்"என்றபடி   முருகன்   வில்லினைத்   தொட்டார்.


                                                               விளக்கம்
"ஆன்ம திருஷ்டி"............................உயினங்களின்   ஆன்மாவில்  உயிர்க்கு  உயிராய்  நிறைந்திருப்பவர்   முருகப்பெருமான்.அதன்படி   மாயத்தில்
மயங்கிய   வீரவாகு   போன்றோரின்   ஆன்மாவில்   அமர்ந்துள்ள   முருகன்
கண்டு ,அவர்களைக்  காக்க   அமோகப் படையை ஏவுகிறார்..

காற்றக்னி ..............................உம்மைத்தொகை
வீறு..............................................முதனிலைத் தொழிற்பெயர்
ஞானவேல் ...............................உருவகம்.
திவ்ய பானம்...........................தத்பவ  வடசொல்.
வீரநவர் ......................................முன்பின்னாகத் தொக்கது.
காற்சிலம்பு................................ஏழாம்   வேற்றும   உருபும்  உடன் தொக்கதொகை
கமலமுகம்..................................உவமைத்தொகை

ஆறு=  எண்      ஆறு .................முன்னிலை ஒருமை வினைமுற்று.

அணி

அதிசூரன்   மாள,   அசுரே ந்த்ரன்   மாள
 விதிநொந்து  வீண் செருக்கு    வா.
 இப்பாடலில்    சொற்பொருள் பின்வருநிலை  அணி  பயில்கிறது.
"மாள" என்னும்  சொல்   இருமுறை   வந்து ஒரே பொருளைத் தருவதால்
இவ்வணி   ஆயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக