திங்கள், 26 மார்ச், 2018

                                     4..  இந்திரன்  மறைந்து  வாழ்தல்

1.   எல்லாம்    இணைந்தாலும்,    இந்திரன்    வெஞ்சிறை:
      நல்லாள்     இணைதல்    முதல்.

2.   ஏவினன்     ஏவலர்        எட்டுதிக்கும்,    தேடிட.
      ஆவியோடு     காணான்    சுரன்.

3.   பற்றினர்      தேவரைச்       சுற்றமாய்ச்     சுற்றியே,
      உற்றவன்     பற்றியுரை    மற்று.

4.   அறியா      அவலம்       முறையே      அறிந்தே
      வெறிசினச்      சூரன்    வெறி.

5.   அழிந்த       வளங்கள்:    அழிந்த     மனங்கள்:
      எழுந்த        புலம்பல்    தொழு.

6.   தாய்தந்தை     காணாச்     சயந்தன்   தவித்திடச்
      சேய்தனை       நாரதர்    தேற்று.

7.   நிலவன்ன      வாழ்க்கை:      நியதியை      ஏற்றுப்
      புலவர்சொல்    போற்றல்   முறை.

8.   தென்னகம்     தேடிவந்த      தூயவன்     சீர்காழிப்
      பொன்னூரில்    போற்றினான்   சம்பு.

9.   ஒற்றரின்      வேட்கையை      உன்னிய     இந்திரன்
      ஒன்றினான்     மூங்கில்    உரு.

10.  நீர்வளம்      வற்றிடவே ,  நித்திலன்     போற்ற,வரம்
       நீர்நதி         தோன்றும்     நிறை.

                                     பொருள்

1.    ஆட்சி,செல்வம், புகழ், போன்ற எல்லாச்செல்வங்களைப்    பெற்றிருந்தாலும்,  இந்திரனைச்   சிறையில்  அடைத்து,  அவன்   மனையாள்
இந்திராணியுடன்  உறவு  கொள்ள  வேண்டும்"  என்ற   வேட்கையைச்
சூரனால்  தணிக்க  முடியவில்லை.

                                               விளக்கம்
இந்திரன்  நல்லாள் ......இந்திராணி

2.    எட்டுத்    திசைகளுக்கும்   ஏவலர்களையும், வீரம்  மிக்க  பெண்களையும்   அனுப்பி,அவர்களைத்  தேட ஆணையிட்டான். விண்ணகம்   முழுவதும்
தேடியும்   இந்திரனை,இந்திராணியைக்    கண்டுபிடிக்க  முடியாமல் தவித்தனர்.


                                              விளக்கம்
சுரன் ................இந்திரன்

3.   விண்ணகம்    முழுவதும்  இந்திரனைத்     தேடியும்   காணாத    அரக்கர்கள்
அங்குள்ள    தேவர்களைச்    சிறையெடுத்துத்    துன்புறுத்தி,"இந்திரன்  எங்கே
ஒளிந்துள்ளான்"   என  வினவினார்.அவர்களோ  தங்களுக்கு  எதுவும்
தெரியாது,  என்றே  அழுது,புலம்பிக்    கூறினர். விண்ணுலகமெங்கும்
புலம்பல்:அந்நேரம்  சயந்தன்  விண்ணுலகம்  வந்தான்.



                                             விளக்கம்
உற்றவன் .....இந்திரன்

4.    இந்திரனும்,இந்திராணியும்  மறைந்துள்ள  இடம், அறிய   இயலாத ஏவல்
அரக்கர்கள்,அதனைச்    சூரனிடம்  தெரிவித்ததும்,வெறிகொண்ட   சூரன்
அரக்கர்களைத்   தாண்டித்தான்.அண்டங்கள்  முழுவதும்   தேடிட   ஒற்றர்களை   அனுப்பினான்.



5. இந்திரனைக்    காணாத   அரக்கர்கள்   இந்திர   உலகைப்   பாழ்    படுத்தினர்.
வளங்கள்  அழிந்தன:விண்ணவரின்    மனங்கள்   ஒடிந்தன :செய்வதறியாது
தவித்த   தேவர்கள்,உபேந்திரனைக்    காண  வைகுந்தம்   சென்றிருந்த ,
இந்திரன்  மகன்    "சயந்தனைக்   கண்டு   செய்தியைக்  கூறினார்.

6. அழிந்து,கிடக்கும்  சுவர்க்க   உலகைக்    கண்டு,  வருந்திய    சயந்தன்,
தாய்,தந்தையையும்    காணாது,  அழுது   புலம்பினான்.  அங்கு   வந்த
"நாரதர்"  அவனுக்கு,நிலையாமையை      எடுத்துரைத்து    ஆறுதல்   அளித்தார்.

7.   சயந்தனுக்கு,  நாரதரின்     ஆறுதல்   உரை. "சயந்தா!  நிலவின்    தேய்வும்
வளர்வும்    காலத்தால்   தோன்றியது.வாழ்வுக்கு     மகிழ்வும்,   வீழ்வுக்கு
வருத்தமும்  கொள்ளுதல்  முறையாகா.வகுத்தான்    வகுத்த    வகையே
வாழ்க்கை. அம்முறையை   ஏற்று,அதன்படி   நடத்தலே   ஆன்றோர்
நமக்கு  இட்ட   கட்டளை.  ஆதலின்   வருந்தாதே"  காலம்  மாறும்.அதுவரைப்
பொறுமையாய்,உன்  பணியை  ஆற்று"   என்று  அறிவுரை   வழங்கி, அவனை
அமைதிப்படுத்தினார்.

                                                               விளக்கம்
புலவர்.....சான்றோர்,  முனிவர்.

8.    சூரனுக்கு    அஞ்சி,ஒளிந்து, மறைந்து   வாழ   வேண்டிய   நிலையில்,
தனது   மனையாளுடன்   மண்ணகம்   சேர்ந்த   இந்திரன்,  தென்னாட்டில்
சீர்காழி"    என்னும்   ஊரிலே   மறைந்திருந்தான்.  தனது   நிலையை    எண்ணி
வருந்திய   அவன்  அங்கேயே   சிவபெருமானை   அருச்சித்து   வந்தான்.

                                                           விளக்கம்
சம்பு .............சிவபெருமான்

9.    உலகெங்கும்    சூரனின்   ஒற்றர்கள்    தன்னையும், தனது   மனையாளையும்   தேடுகிறார்கள்,   என்பதை   உணர்ந்து,மூங்கில் மரமாய்
மாறினர்  இருவரும்.அந்நிலையிலும்   மாறாது   இறைவனைப்  போற்றி வந்தனர்.

10. நாடெங்கினும்    இந்திரனைக்   காணாத   அரக்கர்கள்,   வளம்  மிக்க
சோலை,மரங்கள்,காட்டுப்   பகுதியில், அவன்   மறைந்திருக்கக்    கூடும்"என
எண்ணி,நீர்நிலைகளை   எல்லாம்  சேதப்படுத்தியும்,உடைத்தும்,ஆறு,
கால்வாய்களில்   நீர்  வற்றிட   வழி  செய்தனர். மழைமேகங்களை
மாற்றினார்.வறண்ட   வளமிழந்த   நிலத்தில், மறைந்து  வாழவும்,வழியில்லாத   இந்திரன்,  இறைவனைப்   போற்றித்   துதிக்க,
இறைவன்,"அசரீரி"   (வான்வழிச்சொல்)   ஆக,"கவல ற்க .இங்கு   விரைவில்
ஒரு   நதி  தோன்றும்"   என்று   அருள் புரிந்தார்.

                                                     விளக்கம்
நித்திலன்.......சிவபெருமான்
நிறை........அமைதி  பெறு .  அல்லது .  நிறை   நீர்   நதி    தோன்றும்" எனவும்                                 கொள்க.  அடுத்து   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக