வியாழன், 18 ஜனவரி, 2018

                                                         தோற்றுவாய்


        எல்லாம்   வல்ல   பரம்பருளின்   அருளினால்   "கன்னியாகுடி  கல்யாணி
அம்மை   பிள்ளைத்தமிழ் "   என்னும்   ஏழாவது    நூல்  அடியேனால்  படைக்கப்    பட்டுள்ளது.புதுக்   கவிதைகளும், ஹைக்கூ   வரிகளும்  நிறைந்து
ஆக்கிரமித்துள்ள   இத்தருணத்தில்   மரபு   சார்ந்த   வெண்பா,ஆசிரியப்பா,
கலிப்பா,வஞ்சிப்பா   தழுவிய   பாடல்களை ஆன்மிக    நோக்கில்   வெளியிடும்
வாய்ப்பை    எனக்கு   அருளிய   இறைவன்   எழிலார்   முருகன்    சேவடியை
மனம்,மெய்,வாக்குகளால்  நினைந்துருகிப்    போற்றுகின்றேன்.
         சிற்றிலக்கிய  வகைகளுள்   சிறந்து    விளங்கும்  பிள்ளைத்தமிழ்"  என்னும்   பிரபந்தத்தை முன்னரே   யான்  படைத்திருந்தாலும்,பெண்பால்
பிள்ளைத்தமிழ்"  என்னும்   அமைப்பில் ,எனது    பிறந்த    ஊராகிய
கன்னியாகுடியில்   கோயில்  கொண்டுள்ள    கல்யாணி    அம்மை    மீது
இந்நூலை  எழுதலுற்றேன். அம்மையின்   பேரருள், ஆறுமுகத்தான்
நல்லருள்,கன்னிக்     கைலாச நாதர்   கருணை   என்னை   வழி   நடத்தியது.
"  ருஷீணாம்  புணராத்யானாம்   வாசம்  அர்த்தோனு    தாவதி "  என்பார்,
பவபூதி.  அடியேனுக்கும்   அப்படிப்பட்ட    அருளை,ஆக்கத்தை,சொல்
ஓடிவரும்   நயத்தை, அன்னை   அளித்தாள் ."அவனருளாலே    அவன்
தாள்   வணங்கி"  என்பாரே   மாணிக்க வாசகப்     பெருந்தகை,   அதுபோல,
அவளருளாலே   அவள்   புகழைப்   பாடலுற்றேன்.
      குமரகுருபரரும்,பிற   சான்றோர்களும்  போற்றிப்   புனைந்த   பிள்ளைத்
தமிழிலக்கியத்தை ,  அன்பும்,பக்தியும்,  மூலப்பொருளாய்க்   கொண்டு
யானும்    படைத்துள்ளேன்.அவர்களின்   வழி நடையில்   காலால்
நடக்காமல்   தலையால்   நடந்து,அன்னையே!   எளியேன்  பாடல்களையும்
ஏற்றிடுவாய்,  என  வேண்டி  இந்நூலை   இயற்றத்    தொடங்கினேன்.
அன்னையருள்    இதனைப்   பயில்வோருக்கும்  கிடைத்திட   அன்னை  அருள்
புரிவாளெனவும்   நம்புகிறேன்.

பிள்ளைத்தமிழ்...........   "கடவுளைக்    குழந்தையாக்கிப்   பாடும்  மரபும்  உண்டு"
என்னும்  ஒல்காப்புகழ்த்     தொல்காப்பியரின்   கூற்றுப்படியும், "குழவி
மருங்கினும்  கிழவதாகும்"   (தொல் -பு.தி.-24)  என்னும்   நூற்பா    அடிப்படையிலும்,  தோன்றியதே   பிள்ளைத்தமிழ்   இலக்கியம்  எனலாம்.
மன்னர்கள்,செல்வந்தர்கள்,  பிற  சான்றோர்கள்  மீதெல்லாம்   பாடலாம்,
எனினும்   இறைவன்   மீது  பாடுவதையே  புலவர்  பெருமக்கள்   பெரிதும்
விரும்பினர் .பெரியாழ்வாரின்   பாடல்களே   பிள்ளைத்   தமிழுக்கு  முன்னோடி   எனலாம்.   ஒட்டக்கூத்தர்    பாடிய  "குலோத்துங்கன்   பிள்ளைத்
தமிழே "  தமிழ்  முதல் பிள்ளைத்தமிழ்   நூல்   எனலாம்.குமரகுருபரரும்,
பகழிக்கூத்தரும்  பாடியுள்ள,  முருகன்   சார்ந்த   பிள்ளைத்  தமிழ் நூல்கள்
அழகும்,வனப்பும், கவிநயமும், சந்தநயமும்  கொண்ட  சிற்றிலக்கியம் எனில்
அது மிகையாகாது.அவ்வழி    போற்றியே   அடியேனும் முருகன்  மீது
பிள்ளைத்தமிழ்   பாடியுள்ளேன்.  அதே   நெறியில்  இன்று " கன்னியாகுடி
கல்யாணி   அம்மை  பிள்ளைத்தமிழ்   பாடி,அம்மையின்   சேவடிகளில்
சமர்ப்பிக்க   உள்ளேன்.

பாடல்  வரையறை ........பிள்ளைத் தமிழ்    பத்துப்பருவங்களைக்   கொண்டது.
ஒவ்வொரு    பருவத்திலும், பத்துப்பத்து    பாடல்கள்  அமையவேண்டும்
என்பதே  இன்றைய  எழுதாச்    சட்டமாய்   அமைந்து,அதையே  கடைபிடித்து
வரினும்,  இம்முறை   பல  நூல்களில்   காணப்படவில்லை..
    ஒருகாலத்தில்  ஒற்றை எண்   அமைப்பிலேயே   பருவப்   பாடல்கள்
அமைந்தன.குறைந்தும்,  கூட்டியும்   காணப்படும்  சில   பிள்ளைத்தமிழ்
நூல்கள்.........
ஆண்டாள்   பிள்ளைத்தமிழ்    பதினோரு   பருவங்களைக்   கண்டதாக
விளங்குகிறது.
தில்லை    சிவகாமி அம்மை   பிள்ளைத்தமிழ்   பன்னிரண்டு   பருவங்கள்
கொண்டு   விளங்குகிறது.
சிவக்கொழுந்து  பல்லவன்  பிள்ளைத்தமிழில்    பருவங்களுக்கு,  ஏழு
பாடல்களே  காணப்படுகின்றன.
சிவஞான   முனிவரின்   "கலசை செங்கழுநீர்  விநாயகர்  பிள்ளைத்தமிழில்
பருவங்களுக்கு    ஐந்து   பாடல்களே   உள்ளன.
பழனி  பிள்ளைத்தமிழ்  நூலில்  பருவங்களுக்கு   மூன்று   பாடல்களே
உள்ளன,
திருஞான  சமபந்தர்  பிள்ளைத்தமிழ்   நூலில்   பருவங்களுக்கு  ஒரே  பாடல் ,
திருநாவுக்கரசர்   பிள்ளைத்தமிழ்  நூலில்   பருவங்களுக்கு   ஒரே  பாடல் .                                                                  (நன்றி,,,விக்கி   பீடியா)
1980   வாக்கில்   அடியேன்   இயற்றி,  டி ,வி,எஸ்  செய்தி   இதழில்  திங்கள்
தோறும்   வெளியிட்ட "  சுந்தரம்  ஐயங்கார்   பிள்ளைத்தமிழில்
பருவங்களுக்கு   ஒரே  பாடலே   பாடியுள்ளேன்.

பருவங்கள் .............
                "சாற்றிய    காப்புத்,தால் ,   செங்கீரை,சப்பாணி ,
                  மாற்றரிய   முத்தம்,   வாரானை,    போற்றரிய
                  அம்புலியே,   ஆய்ந்த    சிறுபறையே,    சிற்றிலே ,
                  பம்புசிறு      தேரோடும்   பத்து "  (வெண்பாப்  பாட்டியல் -நூ-7)

என்பதால்   பிள்ளைத்தமிழின்   பத்துப்பருவங்கள்   காப்பு,தாலம் ,செங்கீரை,
சப்பாணி,முத்தம்,வருகை,அம்புலி, சிறுபறை,சிற்றில்,சிறு தேர்,  என
வரையறுக்கப் படுகின்றன.இது   ஆண்பால்  பிள்ளைத்தமிழுக்கு   உரியது.
பெண்பால்  பிள்ளைத் தமிழிற்கு, 
          "பின்னை    மூன்றும்   பேதையர்க்காகா.
            ஆடும்   கழங்கு,   அம்மானை,   ஊசல்,
            பாடும்     கவியால்   பகுத்து    வகுப்புடன்,
            அகவல்    விருத்தத்   தாள்கிளை    அளவாம் "
                                                 (இலக்கண  விளக்கப்   பாட்டியல் -நூ-47)
என்பதால்   பெண்பாற்  பிள்ளைத்தமிழில் ,இறுதி   மூன்று  மட்டும்  மாறுபடும்
என்பது  புலனாகிறது.அவை   கழங்கு,  அம்மானை ,ஊசல் என  மூன்று
கூறப்படினும்,பிற்காலத்தில்   அம்மானை, நீராடல்,  ஊசல்   என வகுத்துக்
கொண்டனர்.
பருவம்   பயிலும்   வயது ......  முதல்  மூன்று   திங்கள்  குழந்தையை
அவ்வளவாக   இல்லத்து   வெளியே    கொணரும்   பழக்கமின்மையின்
இப்பருவ   அமைப்புகள்  மூன்றாம் திங்கள்  அதாவது   குழந்தை  பிறந்து
மூன்றாவது   திங்களில்   தான்  பிள்ளைத்தமிழ்   ஆட்டபாட்டங்கள்
தொடர்கின்றன.
1     மூன்றாம்   திங்கள் .....காப்புப்பருவம்
2.  ஐந்தாம்       திங்கள்   .....செங்கீரை
3.  ஏழாம்         திங்கள்  .......தாலாட்டு
4.  ஒன்பதாம் திங்கள் ......சப்பாணி
5.  பதினோராம் திங்கள் ..முத்தம்
6.  பதின்மூன்றாம் திங்கள் ...வருகை
7.   பதினைந்தாம்   திங்கள் ..அம்புலி           
8,   பதினேழாம்    திங்கள்    சிற்றில் சிதையேல்
                                                   பெண்பால் .....நீராடல்
9.  பத்தொன்பதாம்  திங்கள் ....சிறுபறை
                                                   பெண்பால்.....அம்மானை
10. இருபத்தோராம் திங்கள்..  சிறுதேர்
                                                    பெண்பால் ....ஊசல் (ஊஞ்சல்)

கன்னியாகுடி    கல்யாணி    பிள்ளைத்தமிழ் ..........நாகை    மாவட்டம் ,சீர்காழி
வட்டம்    அமைந்துள்ள   சிறு  கிராமம்  கன்னியாகுடி    ஆகும்.ஊர்     நடுவே
அமைந்த   கைலாச   நாதர்   கோயில்   அவ்வூரின்   இதயம்   எனலாம். என்
தந்தையும்,அண்ணனும்   பூசனை   செய்த  கோயில்   அது.  இன்று   வேறு
ஒருவர்   அப்பணியைச் செய்கிறார்.   நான்  பிறந்து ,வளர்ந்து,ஒடி,ஆடிய   ஊர்
அது.  சிறு   வீடு  எங்கள்   வீடு.அதனால்   நாளின்  பெரும்  பகுதியை   அந்தக்
கோயிலிலேயே    செலவிடுதல்   இன்றி  அமையாத தாகிவிட்டது .அதனால்
கோயில்,  மூர்த்தி,  இரண்டையுமே   என்மனம்   சுற்றிச்சுற்றி   வரும்.
அக்கோயிலைக்    கட்டவேண்டும்"  விழா  எடுக்கவேண்டும்"   என்று
பலநாள்  மனக்கற்பனையில்    வாழ்ந்தவன்   நான்.  அதெல்லாம்  முடியாது
போய்விட்டது. என்றாலும்  இன்றும்  அந்நினைவு  என்னை விட்டு   அகலவே
இல்லை.  கற்கோயில்   அமைக்கமுடியாத   என்மனம்  இப்படிச் சொற்கோயில்   அமைக்க முற்பட்டது.   அதன்  விளைவே  "கன்னியாகுடிக்
கந்தபுராண   வெண்பா"  கன்னியாகுடி   முருகன்  பாமாலை",  கன்னியாகுடி
முருகன்  பிள்ளைத்தமிழ்: "கன்னியாகுடிக்   கலம்பகம்"   கன்னியாகுடி
முருகன்   மஞ்ஞை   விடு  தூது"  என்று சிற்றிலக்கிய    நூல்களை  இறை
அருளால்  வெளியிட்ட  நான்    இன்று "கன்னியாகுடி கல்யாணி   அம்மை
பிள்ளைத்தமிழ்"  என்னும் இந்நூலைப்   படைத்துள்ளேன்.
அம்மையின்   புகழைப்  பலவாறு  போற்றியுள்ள நிலையில், அபிராமி பட்டர்,
திருஞானசம்பந்தர்,குமரகுருபரர்,போன்றோர்கள்   பெற்ற    அன்னையருளையும்  விளக்கியுள்ளேன்.கல்யாணி    அம்மையே  காமாட்சி,
மீனாட்சி,துர்க்கை,  சப்தமாதர்கள்,  என்னும் கருத்தை    வலியுறுத்த   பல
இடங்களில்   அவர்களை   அன்னை  கல்யாணி  அம்மையாகவே   பாடி
உள்ளேன்.  சான்றாக,
"வண்ண   வடிவே!   பொன்மழைப் பெண்ணே! "  (காப்பு-    )என   அலைமகளைப்போற்றி,
"ஆதவ   நல்லொளி,  வேதமுதல்  கலைமகளே!"(காப்பு-  ) எனக்கலைமகளைப்
போற்றியபின்,
"கூடலின் கோமகளே! கைலைமுன்  நாணுற்றாய்"  செங்கீரை-  ) என
அங்கயற்கண்  அம்மையை  நிகராக்கி,
"அருந்தவத்   தனிக்குமரியே "  (தால --4)  என
கன்னியா குமரியையும்,
"மகிஷனின்   மமதையை  அழித்தவளே!"(சப்பாணி--3) என
துர்க்கையையும்,
"வரமருள்   வாமை .........மாண்புநல்   மனோன்மணி"(அம்மானை--6) என்ற
பாடல் வழியே  நவசக்திகளையும்,
" கருமணல் சிவலிங்கம்   காத்த  காமாட்சி "(நீராடல்--3)   என  காஞ்சிக்
காமாட்சி  அம்மையையும்  போற்றிக்   கல்யாணி   அம்மையே என
இணைத்துப்  பாடியுள்ளேன். மாறுபட்ட   சந்தங்கள்,நானிலங்கள்,இயற்கை ன் வருணனைகள்  போன்றவற்றால்   கல்யாணி   அம்மையைப் போற்றி
இந்நூலைப் படைத்துள்ளேன்.
நன்றி..............செந்தமிழ்ச் சிற்றிலக்கிய   செம்மையை,  என் சிந்தையிலே
தோற்றுவித்து, அதனைப்   படைக்கும்    ஆற்றலை   அருள்மழையாய்
வழங்கிவரும்   ஆறுமுகக்  கடவுளை  நெக்குருகி,நிலம்  விழுந்து  வணங்கிப்
போற்றி   முதற்கண்  என் நன்றியைப்  பாதார விந்தங்களில்   சேர்ப்பிக்கின்றேன்..  இந்நூலுக்கு   அணிந்துரை    வழங்கிய                                                                                                                                                                                                              என் மனமார்ந்த  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்நூலைத்
தாங்களே  வெளியிடுவோம்,  எனக்கூறியதோடு   அல்லாமல்  அதனை
கருத்தரங்கு  ஒன்றிலும்  கூறி,வெளியிடவுள்ள   காஞ்சி  ஸ்ரீ ,சந்திர சேகர
சரஸ்வதி   சுவாமிகள்  என்னும்  மஹா பெரியவரின்   பெயர்  தங்கிய
மஹாவித்யாலயா   பதிப்புத் துறை  இயக்குனர் .முனைவர்.திரு .தோத்தாத்ரி.
வேணுகோபால்                                                                                                                                                                                          அவர்களுக்கும்,பல்கலைக்கழகத்   துணைவேந்தர்
அவர்களுக்கும்,என் மனமார்ந்த   நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும்  மேலாக,காஞ்சி  மஹாவித்யாலயத்தை  நிறுவி
நற்கல்வி  வழங்கி வரும்  பூஜ்யஸ்ரீ. காமகோடி   பீடாதிபதி                                                                                                                                                                                                                                                                                                                                                             எனது
பணிவான   வணக்கத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது  பணிக்கு   உறுதுணையாய்  விளங்கிய   என்  மனைவி,மகள்கள்,
மருமகன்கள்,பேரன்,பேத்திகளுக்கு  ஸ்ரீ .கல்யாணி   அம்மையின் திருவருள்
வழியே  ந,யாமும்,வளமும்  பெற்றுயர   வாழ்த்துகிறேன் ,
                                      நன்றியும்   வணக்கமும்


25.01.2018                                                                                     சுவாமி. சுப்பிரமணியன்




















'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக