; சுவாமி நாத சதகம்
கணபதிக்காப்பு ;
1. மலைமேவு மாமுருகன் மன்மலைப் பேருரு:
கலைஞான நற்கோலம் : கரமைந் ------- தலையிடர்ப்
பாசமலப் பற்றறுத்துப் பைந்தமிழ்த் தாள்போற்ற
வீசுபுகழ் நாயக! காப்பு .
பொருள்
குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரன்; மூவர்க்கும்
முதல்வனானனவன் ; அவன் வீற்றிருக்கும் மங்கள மலை போன்ற
பெரும் உருவம் கொண்டவனே ;உலகிலுள்ள கலைகளின் ஞான ஸ்வரூபியே ;
யானைமுகமும், ஒடித்த ஒரு தந்தமும், பருத்த வயிறும், அஞ்ஞானம் அகற்றும்,
ஞானநோக்கும் கொண்ட அழகுக்கோலம் கொண்டவனே ; நான்கு கரத்தோடு
ஐந்தாவது கரமாகிய துதிக்கையையும் கொண்டவனே ; பிறவி உயிர்களைப்
பற்றிக்கொண்டு, ஓயாத கடலலைபோல துன்பம்தரும் பற்று,பாசம்,
ஆணவக்கன்ம மாயாமலங்களை நீக்கி, யோகம் வழங்கும் மாமுருகன்
சுவாமிமலைக்கடவுள் ,புகழ்ப்பாடவரும் போற்றவரும் , சுவாமிநாதசதகம்
என்னும் செந்தமிழ்க்காப்பியத்தால் போற்றிட அருள்புரிவாய்!
தென்றல்போல்,பொதிகைபோல் , புகழுற்ற விநாயகப்பெருமானே !
காத்திடுவாய் உலகை. வாழ்த்திடுவாய் தமிழ்ப்பாடலை. கற்போரும்,
கேட்போரும் நன்னிலை அடைய அருள் புரிவாய்! என்று வணங்கி
வேண்டுகிறார் ஆசிரியர்.
2. மாமுருகன் மாமலை மாவுரு மேலதாகி ,
சேமவழிச் சீர்மையாய்ச் சோமநாத ------ ஓமாகி
ஏமவழி ஐங்கரத்தாய்! ஈரிரண்டு சொன்மாலைத்
தேமதுரத் தீந்தமிழ் கா.
பொருள்
இறை வாழ்த்தின் இரண்டாம் படியாக இப்பாடல் அமைகிறது.
பாட்டுடைத் தலைவன் பைந்தமிழ் முருகன். அவன் வீற்றிருக்கும் இடம்
குறிஞ்சி மலையாகும். அந்த மாமேரு,இமயம், தணிகை , சுவாமிமலை
போன்று,உயரமும்,அகலமும், வளங்களும், கொண்ட பெரும் உடல்வளத்தைப்
பெற்று விளங்குபவர் விநாயகர். உலகின் எந்த நன்மைக்கும் அவரே
முதலானவர்; சேரும்,சிறப்பும் உயிர்களுக்கு வழங்குபவர். எல்லாம்வல்ல
எம்பெருமான் சிவபெருமானின் உபதேசத் திரு ஓங்கார உருவமாக
விளங்கும் மூத்தமகன்; ஐந்துகரம்கொண்டு அனைத்துலகையும் காப்பவர்;
இத்தகைய சிறப்புக்கள் கொண்ட விநாயகப்பெருமானே !
அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கையும் தன்னுட்கொண்டு,
சுவாமிமலை முருகன்மீது பாடப்படும் சதகநூல் மாலையை ,இனிமை
உடையதாகவும், எளிமை உடையதாகவும் அமைந்திட வாழ்த்திடுவாய்!
பாட்டுடைத்தலைவன் புகழ் நிலைக்க அருள்வாய்! படிப்போரும் ,கேட்போரும்
பல்லின்பம் பெற்றிட அருள்வாய்! என்று ஆசிரியர் வேண்டுகிறார்.
3 . கணநாதா! கையொடித்த தந்தத்தால் காத்த
மணநூலின் மாதவனே ! முருகக் ------- குணநூலை
முத்தமிழைத் தத்துவத்தை நித்தியமாய் மூவுலகும்
புத்திகொள்ள வித்திடுக வாழ்த்து.
பொருள்
சிவகணங்களின் தலைவனே! வியாசமுனிவனின் மகாபாரதம் எனும்
நூல் வழிவழி சிறக்கவும்,அறக்கருத்து உலகில் வளரவும், தனது தந்தத்தை
ஒடித்து,அதையே எழுத்தாணியாகக் கொண்டு எழுதி,அந்நூலை நித்தியமாய்
மூவேழ் உலகிலும் நிலைநிறுத்திய தவமுதல்வனே! அதேபோன்று,
மாமுருகன் புகழ் பாடவந்திருக்கும் சுவாமிமலை சதகம் என்னும்
முத்தமிழாம்,தத்த்துவமாம், இந்நூலையும்,நித்தியமாய் நிலைக்க
அருள் புரிவாய். மூவுலகும் இந்நூற்கருத்தை மனத்தில் கொண்டு
முருகனைப் போற்றிவாழவும் அருள்புரிவாய்! பாட்டைப் பாட்டுடைத்
தலைவனை வாழ்த்திடுவாய்! உனது தாமரைச்சேவடிக்கு எனது
வணக்கங்கள். என்று ஆசிரியர் விநாயகரைப் போற்றுகிறார்.
1 பக்தியும் பரமனும் நீயே
உலகத்து நலமெல்லாம் உண்மையில் நீயேயாவாய்;
உணர்ந்தோர்க்கு அதுபுரியும்;
நிலையாகி நின்றிட்டாய்; நித்தியமும் நீதானே ;
நிலத்தோர்கள் நீளறிவர் ;
வலையாகி மீனாகி வலிகூட்டும் உணவாகி ,
வாழ்வதனின் இலக்கணம் நீ ;
பலமற்றோர் பெருங்கூட்டப் பத்தியினைக் கண்டாலும்,
பலன்பெறுவோர் அறிபவன் நீ .
கலையெல்லாம் காசிற்கே ; கவினெல்லாம் காசிற்கே ;
காலத்திலே கணிப்பவன் நீ.
சிலையாகிப் போனதாலே சீர்தூக்கல் மறந்தாயோ?
மலைமுட்டி மனம்நொந்ததே 1
கவலையே கணக்காகிக் காலமெல்லாம் கால்பற்றினும்
கண்காட்டாக் கந்ததேவே!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
சதகம் நூல் விளக்கம்
போற்றுதற்குரிய பெரும்பொருளைப் பற்றி.ப் பெருமைகள், அருளறங்கள்,
போன்றவற்றை விளக்கிப்பாடுதல் , அல்லது, உலக நன்மைகளை உள்ளூறக்
கொண்ட வழிமுறைகளை வரிசைப்படுத்தி அதன்வழியே பாட்டுடைத்
தலைவன் புகழ் பாடுதல் , அல்லது எடுத்துக்கொண்ட தலைப்பிற்கேற்ப
நாடு,நகர மேன்மைகள், வழிவழிச்செய்திகள் ஆட்சிமுறை,
போன்றவற்றையும் பாடுதல், என்ற நோக்கத்தில் நூறு விருத்தப்பாடல்கள்
பாடுவது சதகம் ஆகும்.
சதகம் என்பது நூறுடையது ;நூறுபாடல் கொண்டது என்பதேயாகும்.
பாட்டின் முத்தாய்ப்பாக இறுதி அடி அனைத்துப்பாடல்களிலும்
ஒன்றாகவே அமைத்தல்; பாட்டுடைத்தலைவனின் பெரும்புகழை
விளக்கிப் பல்வேறு சொற்றொடர்களில் அழகுற அமைத்துப்
பாடுதல் ஒருமரபு .
இலக்கணவி ளக்கம் போன்ற நூல்களில் கூறப்படும் முறை தழுவி
இந்நூல் " சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!"
என்னும் பெருமைமிக்க தொடரால் சுவாமிமலை முருகனைப்
பாடுவதாக அமைந்துள்ளது. பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தப்பாடலாக அமைந்துள்ளது.
பத்து அதிகாரம் கொண்டு பாடப்பட்டுள்ளது. முருகனின் அவதாரம்
தொடங்கி என்னும் தலைப்புகளில் பத்துப்பத்துப் பாடல்கள் வீதம்
நூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. அந்த வகையில் முதல் அதிகாரம்
ஆகிய அவதாரத்தில் பத்தியும்,பத்திகொண்டவன் தேடி அடைவதற்கான
பரமனும் சுவாமிமலை சுவாமிநாதக் கடவுளே ஆவார் என்பதை
முதற்பாடல் விளக்குகிறது.
பொருள்
உலகம் , மக்கள்,நன்மை,தீமை, இவைகளை ஆக்கியவனும்நீ; நன்மையாய்க்
காப்பவனும் நீ; அனைத்துமானவன் நீயே. இது கற்றறி ஞானிகளுக்கு நன்கு
புரியும்.
அழியா முத்தி ஆனந்தமான நீ அழகுச்சிலையாய் ஆங்காங்கு
நின்றிட்டாய்; நின்றாலும் நித்தியமானவன் நீயேயாவாய். மூவேழ்
உலகிலும் வாழும் கோடிக்கணக்கான சாமானிய மக்களும் இதனை நன்கு
அறிவார்.
மீன்களைப்பிடிக்கும் வலையும் நீயேயாவாய்; அவ்வலையில் படும் மீனும்
நீயே; வலிமைபெற வாழ் மனிதர்களுக்கு உணவாகவும் நீ ஆகிறாய்; உலகில்
யாவுமாகி, உயிர்களின் உள்ளத்திற்கும், செயல்பாடுகளுக்கும் விளக்கம்
காட்டும் இலக்கணமாகத் திகழ்பவன் நீயேயாவாய்.
பணபலம், உடல்பலம், போன்றவை இல்லாத கோடிக்கணக்கான
உன்னடியார்கள் உன்னைத்தேடி, உன்கோயிலைத்தேடி ஆடியும்,பாடியும்
காவடிஎடுத்தும் உன்புகழைப் பாடியவண்ணம் வெய்யிலிலும், மழையிலும்
வருகிறார்கள். வந்தவர்களின் உண்மைவடிவத்தை உள்ளப்பாங்கை நன்கு
அறிந்த நீ அவ்வவர்க்கு ஏற்ற அருளைப்புரிகிறாய்;
கற்ற கலைகளைக் காசுக்குவிற்று, உயிர்வாழ்வோர் ஓராயிரம்;
ஓவியம்,சிற்பம், இலக்கியம் போன்றவற்றையும் வயிற்றுப்பிழைப்பிற்காக
விற்று வாழ்பவரும் ஓராயிரம்; அவ்வவற்றை அறிந்து அவரவர்க்கு ஏற்ற
வாழ்வியல் மாற்றங்களை அளிப்பவனும் நீயே.
ஆற்றவேண்டிய செயல்களை ஆற்றாமல், காலம் பறிபோகிக் கடுந்துயர்
வந்தபின்பு கடவுளே! முருகா! கண் திறந்து பார்க்கமாட்டாயோ?
காதுகொடுத்துக் கேட்கமாட்டாயோ/ வாய் திறந்து வழி கூற மாட்1டாயோ?
சிலையாகிப் போனதாலே செயலாற்ற மறந்தாயோ? என்று ஏகமாகப் பேசி,
நின்னருள்வேண்டும் கூட்டம் ஒருபுறம்; உன் மலையிலே தலையை முட்டி
மோதி உயிரை விடுவேன்; என்முன் வா! எனக்கு செல்வம் கொடு! நல்லுடல்
கொடு ! பதவி கொடு ! என்றெல்லாம் துன்பமிகுதியில் புலம்புவோர் கூட்டம்
ஒருபுறம்.
கவலை, இல்லாமை, துன்பம், இவைகளே என் சொத்தாகின;
இளமை,முதுமை எல்லாக்காலங்களிலும் வறுமை!வறுமை! உனது
கால்களைப் பற்றிக்கொண்டு கதறுகிறேன் ; உன்னருள் பார்வை என்மீது
விழவில்லையே! கல்லாகிப்போனதோ உன் நெஞ்சமும்? என்போர் ஒருபுறம்.
இவர்களுக்கு இடையே கடனைச்செய்யாமல் பலனை எதிர்நோக்கும்
பக்தர்களே! என்றழைத்தபடி சிவஞான வழியில், உயரமோனத்தில்
ஒன்பான் யோகத்தவத்தில் நிற்போனே ! தந்தையாம் சிவனுக்கே
உபதேசித்த குருநாதனே ! சுவாமிநாதா! உன்னடி போற்றுகிறேன்.
2. அழகாடலே முருகன்
தழல்கூட்ட வழல்பொறி சுழல்நடு வெழுகருணை
விழுத்தோன்றல் குழந்தை நீ .
குழுக்கூட்டம் பழிபாவச் செழுமுள்மரம் அழிந்தழிய
உழுவீர முழுமை நீ.
அழுவிண்ணகப் பழுதுமாற்றிட மழுவருள்வேல் தழுதுளத்தாய்
பழுதறுத்தர விழுமுதல்நீ .
அழுகுரலதை முழுபுவன மெழுவிசையெனத் தொழுதுபணி
அறுமீன்கள் அறுமுகன் நீ .
கழுகுமலை சுழுமுனையில் மழவாடல் எழுமலைகள்
தழுதழுக்கச் செய்தவன் நீ.
அழுங்கடலே கொழுவானாய், எழுந்தீயே சுழிகாற்றாய்
விழிமாற்றி வைத்தவன் நீ.
அவதியினில் பவக்குறைவோர், சிவநாமச் சீரந்தணர்
கவலையறு சிவமகன் நீ .
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே !
சுவாமிமலை க் குருநாதா!
பொருள்
தீமைகளை அழிப்பதற்காக, கயிலைக்கடவுள் நெற்றிக்கண்ணன்
விழிப்பார்வை அழல்பொறி வெளிப்பட, அதிதீப்பொறியின் அளவுகடந்த
சுழல் தழலில் ஆனந்த மாக்குழவியாய் அவதரித்தவன் நீ.
மூவுலகிலும் ஆளுமை பெற்ற அரக்கர் கூட்டம் இறைவரத்தால் வலிமை
பெற்றதை மறந்து ஆணவமேம்பாட்டில் தேவர்களைத் துன்புறுத்தி,
மறைவழி மாண்புகளை அழித்தொழித்த அரக்கர் கூட்டத்தை அழித்து
தேவர்களைக் காத்தவன் நீ. மறைவழி காத்தவன் நீ. பழி பாவங்களைச்
செய்த முள்மரம்போன்ற தீயக்கூட்டத்தை அழித்த முழுமை பெற்ற
மாவீரன் நீ.
துன்பப்படும் தேவரக்கூட்டத்தின் துயர்போக்கி, தக்கயாகத்திலே
தேவர்கள் செய்த குற்றத்தை மாற்றி, இறைக்கருணைக்கு அவர்களை
ஆளாக்கி, அன்னை தந்த வேலின் துணைகொண்டு குற்றம் புரிந்த
அரக்கர் கூட்டத்தின் பழிபாவங்களையும் அழித்து அருள்புரிந்த அரனாரின்
புதல்வனாகி, மூவருக்கும் முழுமுதவன் ஆனவனும் நீ.
சரவணப் பொய்கையிலே மலர்களாய் மலர்ந்து அவதரித்த உனது
அழுகுரல் மூவேழ் உலகிலும் தேவகானம் போல் இசைத்தொலிக்க ,
அவ்வோசையில் மயங்கி மகிழ்ந்த கார்த்திகைப் பெண்டிரான ஆறு
விண்மீன்கள் விரைந்துவந்து எடுத்து, உச்சி முகர்ந்து, பாலூட்டிச்சீராட்டி
வளர்ந்த ஆறுமுகன் நீ.
கழுகுமலையில் நின்றபடி, நின்றபடி, காற்றைச்சுழிமுனையில் நிறுத்தி,
இளங்குழந்தை விளையாடும் பந்தாட்டம்போல் உயர்ந்த மேருமுதல்
சிறுமலைவரை எடுத்துத் தூக்கியெறிந்து, மேலும் கீழுமாய் அவைகளை
மாற்றி விளையாடி மலைகள் உன்கரம் பட்டதால் சிலிர்த்து, மகிழ்ந்து
தொடு (ஸ்பர்ச ) சுகத்தை உணர்ந்து மகிழ்வடையச் செய்தவன் நீ.
சிறுகுழந்தை ஆடல்போல் ஆழ்கடலை வானத்தில் நிலைக்கச்செய்து,
பரந்த வானத்தைப் பாதாளத்தில் அமுக்கிவைத்து, வீச்சுகாற்றைத்
தீயாக்கி, எரியும் தீயைக் குளிர்காற்றாக்கி விளையாடியவன் நீ.
பிறவியென்னும் பிறப்பிறப்பிலே துன்பமுற்று, நிலைதாழ்ந்த
முனிவர்களும், சிவ சிவ என்று எப்பொழுதும் கூறிக்கொண்டே வாழும்,
உயர்ந்தோர்களும், பிறவி என்னும் கவலையை மறந்து சிவகதி பெற
அருள்புரிபவன் நீ.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்துநிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்றருள்புரியும் சுவாமிநாதா! உனதடி போற்றுகிறேன்.
3. அறமுதலும் அறுமுகனே .
அம்மையோடு வந்தசிவம் அழகுமகன் அருள்காட்ட,
மும்மையுணர் மூதரசி
அம்மவோவென் றன்போடு அணைத்தனளே ஆறுகுழவி
அணைகரத்தால் ஒன்றாயின;
மும்மலத்தை வென்றதந்தை முகநோக்கி முழுதுணர்ந்த
முளைப்பயிரே விழுதாமே.
செம்மலரைச் சீராட்டிச் செவ்வேத முதலாக்கிச்
செயக்கந்தன் ஆக்கினரே .
மம்மரறு மணிமுத்தை மகரந்த மலர்க்கரத்தை
மதிமுகத்தை, மணவடியை
இம்பருலகு எழில்மீன்கள் ஏந்தியேந்தி அன்புபக்தி
இன்புகந்த இளங்குழவி.
தவக்கோலப் பொய்கையும், தழல்வாயுத் தண்ணாறும்
புவப்பதியும் சிவமாமே .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா.
பொருள்
சரவணப்பொய்கையில் அவதரித்த ஆறுகுழந்தைகளையும், கண்டிடவே
ஆசிபுரியவே அன்னையும் தந்தையுமான பார்வதி பரமேஸ்வரர்கள்
வந்தனர். அருள்பொழியும் அழகுமுக அரும்புதல்வனைக் கண்ட
ஆருயிரன்னை மும்மையும் உணர்ந்த முதுமகள் ,
அம்மம்மா! என்னே அழகு! என்னே அருள்நோக்கு! என்றபடி ஆறு
குழந்தைகளையும் அன்போடு குனிந்து,வாரியெடுத்து அணைத்துக்
கொண்டாள்; அன்னையின் கரம் அனைத்து மகிழ்ந்த தருணம் அவ்வாறு
குழந்தைகளும் ஒன்றாயின; அணைத்த அன்னைக்கரம், அருகமைந்த
ஆண்டவனின் அருள்நோக்கு ஆன பல ஆசிகூடியதால் அழகுக் கந்தன்
ஆனான் அக்குழந்தை.
மும்மலத்தைவென்றவனும்,மும்மலம் பற்றாதவனும் ஆகிய செஞ்சிவனாம்
பரம்பொருளாம் தந்தையின் முகம் நோக்கியது தாயின்கையிலுள்ள
குழந்தை. முன்னைப்பரம்பொருள் முழுதுணர்ந்த முகநோக்கு
அக்குழந்தையை எல்லாம் அறிந்த கற்றுணர் ஞானியாக, இளந்தளிரிலேயே
ஆழ்ந்து பற்றும் வேறுடை ஆன்றமரமாக அருள்பாலித்தது.
தாய்,தந்தை இருவரும் ஒருங்கு கூடி அகமகிழ்ந்து ஆசியளித்து,
அன்புடன் அணைத்துப் பற்றியகாலை ஆறுகுழந்தைகளும் ஒன்றாகி,
அருள்காட்டும் கந்தனாகிக் காட்சியளித்தது. அம்மையப்பர் ஆசிநிறைவால்
அனைத்தும் பெற்றவனாகிய கந்தன் ஆனது அக்குழந்தை.
செந்நிறமலராய் விளங்கிய தன்மகனை தாய் தந்தையரான இருவரும்
சீராட்டினர் ; கொஞ்சிமகிழ்ந்தனர் ; பாலூட்டினர் ; வேதாகமம்
புகட்டியதுபோல அக்குழந்தை வேதமுதல் ஆயிற்று. வீரமும் வெற்றியும்
நிறைந்து விளங்கும் வெற்றிவேல் முருகனாம் கந்தன் ஆனது அக்குழவி .
இருள் என்னும் அறியாமையை அகற்றவந்த மணியை,முத்தை,
இளந்தளிர் போன்ற மலர்க்கரத்தை, நிலவுபோன்ற முகத்தை, நறுமணம்
மிக்கதாகிய சேவடியைப் போற்றிப் பாதுகாக்கவும், பாலூட்டிசச்சீராட்டி
வளர்க்கவும், விண்ணகமகளிர் விண்மீன்கள் கார்த்திகைப் பெண்கள்
அறுவர் விண்ணுலக்கிலிருந்து சரவணப்பொய்கை வந்து குழந்தையைக்
கண்ணும் கருத்துமாய்க் காத்தனர். அவர்களது பணியை அந்த
இன்பக்ககுழவி உகந்து ஏற்றுக்கொண்டது.
இப்பாடலில் இன்புகந்த குழவி என்பதை, இன்பத்தை உகந்து
ஏற்றுக்கொண்ட குழந்தை என்றும்,
இன்பமாகிய கந்தன் என்ற குழந்தை எனவும் பொருள் கொள்ளலாம்.
குழந்தையாய் அவதரித்து, நிலைத்தவம் கொண்ட பொய்கையும்,
கொணர்ந்து சேர்த்த நெருப்பும்,காற்றும், தாங்கிகுளிரவித்த கங்கையாறும்
சிவக்குழந்தை வளர வகை செய்ததால் அவைகளும் சிவமாகவே
தோன்றின. சிவமாகவே உடன் நின்றன. குழந்தையை ஏற்று அதன் புகழ்
வளரப் பாடுபட்ட இந்நிலவுலகும் சிவமாகவே காட்சி தரும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே !
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
4. பரம்பொருளே பாலகன்
வளர்ந்தன வளர்ந்தன வளப்பொய்கை அலையகத்தே;
வலைப்பாசக் கலைக்கூடம்;
கலைந்தலைந்தன கருமேகக் கார்கூட்டம் கலைக்கரத்தால்;
முளைப்பாலன் முதுவேகம்;
தளர்ந்தோடின தேவசேனை; தளர்ந்ததுவே தனிவச்சிரம்;
உளத்தஞ்சின ஒருநான்கும்;
முளரிநாடு அலறிடவே, களம்காண நிலைகொள்ள
விளக்கினானே வியன்னாரதன்;
மலைநடுங்கின; மனம்நடுங்கின; மதிகோள்கள் விதியெண்ணின;
அலைகாற்றும் அனல்பிறவும்,
தலைதப்பித் தொலைநோக்கால் குலைநடுங்கிப் பலமிழந்தன;
நலக்குமர! நாயகன் நீ.
உவகையால் புவனமெலாம் சிவமாக்கிய பவோத்பவ!
பவன்படைத்த பரம்பொருள் நீ.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலை க் குருநாதா!
பொருள்
சரவணப்பொய்கையிலே பாலகனாய் அவதரித்த ஞானப்பரம்பொருள்
வளர்கின்ற நேரத்தில் பற்று,பாசம் விட்டொழிக்கும் பண்பும், வளர்ந்தன;
பரம்பொருள்மீது பற்றுற்றுப் பணிந்து போற்றும் பங்கும் முறைகுறையே
வளர்ந்தன; அவ்வலைசூழ் பொய்கை ஞானக்கலைக்கூடமாக மாறியது.
இளந்தளிராக இளங்குழந்தையாக அங்கு அவதரித்த ஞான்று, தோன்றிய
அறிவு வளர்வு,படைமாட்சி, கைக்கொண்ட பாலகன் செயலால் அரக்கர்
கூட்டமாம் கருமேகம் கலைந்தோடிற்று; ஒழிய இடமின்றி ஆங்காங்கு
தவித்து நின்றன.
சிலிர்த்து எழும் வேற்படைக்கூட்டம்கண்டு தேவலோகப் படைகள்
அஞ்சிநடுங்கின; எதிர்க்க வந்த இந்திரனின் வச்சிராயுதம் வளைந்து
ஒடுங்கியது; நான்கு தலையுடைய பிரும்மதேவனும் இளம்வீரம் கண்டு
நடுங்கினான்; தாமரைக்கண்ணான் நாடும் தளர்ந்து எதிர்க்க முடியாமல்
ஓடிற்று. காலத்தில் தோற்றுநின்ற இந்திரன் முதலியோர்க்கு நாரதன்
முருகனின் தோற்றம் கூறி, அவன் பெருமையையும் உரைத்து வணங்கி
வழிபட வழிகாட்டினான்.
விளையாட்டாய் முருகக்குழந்தை எடுத்த போரிலே விந்தம்முதல் மேரு
வரை, மலைகள் எல்லாம் நடுநடுங்கின; வானத்துக்கோள்கள் எல்லாம்
தத்தம் நிலையிழந்து தடுமாறி,வழிமாறி வகையறியாது நிலைகுலைந்தன;
அக்கினி, குளிராயிற்று;காற்று தன்னிலை இழந்தது; இடம் மாறி இடருற்ற
அவைகளெல்லாம் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்றஞ்சி
வலியிழந்து நிலைகுலைந்தன; நற்குழந்தையின் நனிவிளையாட்டு.
உலகோருக்குத் தன்வருகையை விளையாட்டாய், வினைச்செயலாய்
உணர்த்திய வேலவா! பரம்பொருளின் நெற்றிக்கண் தோன்றிய
பவோத்பவா !நன்மைகளின் தலைவன் சிவபெருமான் படைத்த
பரம்பொருள் நீ அல்லவா!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
5. உணர்த்த உயர்ந்தோன்
உணராத பணக்கூட்டம், வணங்காத சினக்கூட்டம் ,
குணமுற்ற குலக்கூட்டம்,
தணல்போற்றும் தவக்கூட்டம், இனத்தேவர் தலைக்கூட்டம்
உணர்ந்திடவே உயர்ந்துநின்றவ!
அண்ணாமலை அரும்சோதி அடிபூமி முடிவானாய்,
மண்ணார்ந்தும் , விண்ணார்ந்தும்,
கண்ணிலவுக் கதிர்சூரியன், கயிலைப்பதி கருஞ்சடையுள்,
கருஞ்சுழிமால் , கருவுருநால் ,
பொன்னாள்உரம், பூவாள்கரம், பொலிவாள்நா, பண்மொழியுடன் ,
என்புவச்சிரம், அன்புநெஞ்சம்
பொன்னியாள்,புவி கோள்கள்,தீ, தென்றல்,திரள் தேவகூட்டம் ,
தன்னுள்தான் தரித்தவா !
அவனிநிறை காய்கனிமரம் , ஆன்றகனி, ஈன்றபசு
அனைத்தையுமே அகமுண்டவா
சிவஞான, பரமோன , நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
பரம்பொருளே குழப்பிதையாய் அவதரித்து உலகைக் காக்க
வந்துள்ளான் என்பதை உணராத, உணரமுடியாத தீமைப்பாம்பு போன்ற
நச்சுக்குணம் கொண்ட கூட்டமும், ஆணவத்தால் தாமே உயர்ந்தவர் என்ற
மமதையில் சினத்தோடு திரியும் கூட்டமும், நல்லகுணங்கள் பெற்று வாழும்
நற்குடிப் பிறந்தோர் சால்புக் கூட்டமும், வேள்வி அக்கினியே தெய்வம்
போற்றும் வழி,என வாழும் முனிவர் கூட்டமும், இந்திரன் முதலிய வழிவழி
விண்ணவர் கூட்டமும் , தன்னை, தனது பரம்பொருள் தன்மையை
உணர்ந்திட,உயர்ந்தோங்கி நின்றவா!
அண்ணாமலை தோன்றிய அரும்சோதிபோல் அடி நிலமாகி , முடி
வானாகி , மண்ணெல்லாம் நிறைந்தும், விண்ணெல்லாம் விரிந்தும்
நின்றவா!
கண்கள் நிலவும்,சூரியனும், ஒளிமிகு கதிரும் ஆயின; கயிலைப்பதியாகிய
சிவனோ செஞ்சடையுள் ; நாபிக்கமலத்தில் திருமால்; கருக்குறியில்
நான்முகன்; பொன்போன்ற பார்வதி நெஞ்சில்; இலக்குமியோ கரத்தில்;
கலைவாணி நாவில்; பண்ணிசை,மொழி கள் திருவாயில் ; என்புகளோ
வச்சிரம்; அன்பும்,அருளும் மொழியில். காவிரி,கங்கை, ஆறுகள்,
மூவேழுலகம், நலக்கோள்கள், அக்கினி,வாயு, காற்று, தென்றல், திரண்ட
தேவ.அறக்கக் கூட்டங்கள், இவைகளை உன்னுள் அடக்கியவா!
உலகெலாம் நிறைந்துவிளங்கும் மரங்கள், செடிகள், கொடிகள்,
காய்,கனி,இலை, பூ, விலங்குகள்,கன்றுகள் போன்ற பலவற்றையும் தன்னுள்
அடக்கியவா!
சிவஞானமாய் விளங்குபவனே!மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
பணிந்து போற்றுகிறேன்.
6. குழந்தை விளையாடல்
செஞ்சிவனின் செஞ்சுடரே, விஞ்சுபுகழ் மஞ்சையாய்
அஞ்சுலகு காக்கவந்தவா!
மஞ்சுசூழ்ந்த கஞ்சமலர்த் தஞ்சமன்னான் சத்துலகை,
செஞ்செல்வச் சீர்மைத்தாள்
கொஞ்சுமார்பன் நஞ்சுசயனன் வஞ்சமால் கடலாக்கி,
மஞ்சமாற்றிய மகிழ்குழவியே !
இந்திரனூர் இடுகாட்டில்; இடுகாட்டோன் இந்திரபதம் ;
அந்திமத்தான் பொந்துபுலம்;
செந்தீயது செங்கடலுள்; மந்தமாருதம் மாக்குகைக்குள் ;
வந்தவினை தந்தவனே!
உந்துகோள்கள் சந்துமறப்ப உடுமீன்கள் நடுநிற்க,
விந்தைபல உந்தனாடல் ;
தவமுற்றோர் தருக்கற்றப் பவமாகவே நவமாக்கிய
சிவவழியின் தவப்புதல்வ!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே 1
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
செந்தீ வடிவம் உடையோன் செம்மைக்கருணைமிகு பரம்பொருளின்
நெற்றிக்கண் தோன்றிய சுடரே! வியக்கத்தக்க புகழைக்கொண்டு,
மயிலாய்,மயிலானாய் அரக்கர்களால் அஞ்சித்தவிக்கும் பேருலகைக்
காக்க அவதரித்தவனே!
மேகம் சூழ்ந்த உலகில், தாமரைமலர்மீது அமர்ந்தவன்;( தாமரைமலர்மீது
அமர்ந்த சரஸ்வதியைத் தஞ்சம் அடைந்தவன்) பிரும்மதேவனது சத்ய உலகை,
செம்மைச்செல்வத்தின் தலைவி, தம்மைத் தனது நெஞ்சத்திலே
வீற்றிருக்கவைத்துப் போற்றிக் கொஞ்சுபவன்; பாம்பினைப்படுக்கையாகக்
கொண்டவன்; மாயத்திருமால் வீற்றருளும் பாற்கடலாக மாற்றினாய்!
இருவர் நாட்டையும், சிங்காதனத்தையும் மாற்றிய மகிழ்வடைந்த
குழந்தையே!
இந்திரனது செல்வமாளிகையை இடுகாடாக்கியும், இடுகாட்டவனாகிய
நிருருதிக்கு இந்திர மாளிகையையும் என மாற்றியவா ! இறப்பை நல்கும்
இயமனுலகை மரப்பொந்தாக்கிக் குகையும் ஆக்கியவா ! எரிக்கும்
அக்கினியைக் குளிர்மிகுந்த கடலுக்குள்ளும், ஆற்றல்மிகுந்த காற்றினை
அடங்கியொடுங்கும் குகைப்பகுதியிலும் மாற்றி அமைத்தாய்; முற்பிறவி
வினைபற்றி இவ்வாறு விளையாட்டாய் வழங்கியவா!
தன்வழியில் நிலையாகச் செல்லும் கோள்களின் வழிகளை மாற்றி
அவைகளது பயணத்தை அலைக்கழிக்க வைத்தவா! ஆங்காங்கு தத்தம்
இடத்தில் ஜொலிக்கும் விண்மீன்களின் செல்வழி மாற்றி அவைகளை
நிலவுபோல் நடுவானில் கண்சிமிட்டவைத்தவா! உந்தனது விளையாட்டு
விந்தையும், வினைசார்ந்த தண்டனையாகவும் அமைந்ததோ!
தவத்தால் உயர்ந்த முனிவர்கள் ஆணவமும்,கர்வமும் இன்றி
நல்லவழி நடப்பேன் அவர்களுக்குச் சிவ உலகு நல்கும் ஒன்பான்
யோகங்களை அருள்பவனே ! நவயோக நற்பலனாம் சிவ வழி,சிவகதி
அருளும் சிவக்குமரா !
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் சிறந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்றருளும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
7. தந்தைக்கே உபதேசித்த ஞானகுரு
வெண்கயிலை பெண்ணினல்லாள் மன்னுபாகக் கண்மூன்றான்
தண்ணருளான் தங்குமலை;
மண்கணங்கள் பண்பாட மலைக்கணபதி சண்முகனுடன்
வன்னந்தி முன்நில்மலை ;
காணவந்த திருமாலும், மோனநிலை முனிவர்களும்
கணபதிகுகன் பணிந்தனரே .
வீண்கர்வ வேதமுதல் வெறுத்தேகும் நான்முகனிடம்
வியன்பிரணவப் பொருள்கேட்ப,
தடுமாறித் தத்தளிக்கக் கடுஞ்சிறை அடைத்திட்டார்;
விடுத்தசிவம் விரும்புபொருள் ;
எடுத்துயர்த்தி ஏகாந்த ஞானவள்ளல் வாய்பொத்தி,
வடுபதேசம் கேட்டாரே.
சிவமான தந்தையைச் சீடராக்கிய சுவாமிநாதா!
சித்தாந்த ஞானமகனே!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
வெண்பனி போர்த்திய கயிலைமலை; பெண்களில் அருளும், அறமும்
கொண்டு மிகமிக நற்கருணைகொண்டவளாகிய பார்வதி தேவியைத் தனது
உடலில் ஒரு பாகமாகக் கொண்டவன்; நெற்றிக்கண் உடையவன்;
அடியவர்களுக்கு அருள்பொழியும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித
மலையாகும்.
மிகப்பெரிய மாளிகைபோல் விளங்கும் அம்மலையின் நுழை
மண்டபத்தில் பண்பாடிப்போற்றும் கணங்களும், விநாயகப்பெருமானும்,
குமரக்கடவுளும் அமர்ந்திருப்பர்; மலைப்பாதுகாவலர் நந்திதேவரும்
அங்கு நின்றிருப்பார்.
அன்றாடம் எம்பெருமானாம் சிவபெருமானைக் கணவருவோர் பற்பலர்;
விண்ணவர்களும்,திருமாலும், முனிவர்களும் சிவனை வணங்கவந்து
முன்மண்டபத்தில் உள்ள கணபதியையும், முருகனையும் வணங்கியே
செல்வர்.
படைக்கும் முதல்தொழில் செய்யும் கர்வம் கொண்ட பிரம்மதேவன்
பரம்பொருளைக் காணவந்தவர் முன்வாயிலில் அமர்ந்திருந்த கந்தனை
வணங்காமல். இச்சிறுவனை நான் ஏன் வணங்கவேண்டும்? நான்மறை
வல்லுநன் நாம்; என்ற அகந்தையை வணங்காது உள்ளே நுழைய
முற்பட்டார். அவரைத தடுத்து நிறுத்திய குகன், அவரது பெயர்,செய்யும்
தொழில் போன்றவற்றை வினவினான். ஆணவம் மேலிடத் தன்னை
மிகமிக உயர்திக் கர்வத்துடன் மறைமுதல் தானே, படைப்புத் தொழில்
புரியும் உயர்ந்தவன் தான், என விடையளித்தான் பிரமன். மறையறிந்த
அவனிடம் வேதமுதலாம் பிரணவத்தின் பொருள் கூறுமாறு முருகன்
கட்டளையிட்டான் ,
ஆணவமலத்தால் கட்டுண்ட அவன் மனத்தே அப்பொருள்
தோன்றவில்லை; தடுமாறித் தலைகுனிந்தான் பிரமன்.
ஓங்காரப்பொருளறியா உமது இடம் சிறைச்சாலையை எனச்சிறையில்
அவனை அடைத்தார் முருகன். விசின்னவர் வழியே செய்தியறிந்த சிவனார்
பிரமனை விடுவித்தார். பிரணவத்தின் பொருளைத் தனக்குக் கூறுமாறு
வேண்டினார்.
குருவாய்த் தன்னை ஏற்றுப் பணிவோடு கேட்பின் அருள்வேன்" என
மகன் கூறியதும், தந்தையாகிய சிவபெருமானாம் பரம்பொருள்
முருகனைத் தோளில் சுமந்து, பணிந்து வாய்பொத்தி மகனிடம்
உபதேசம் கேட்டார். வடு= இளம்வேதம் பயில்மணவன் (பிரும்மசாரி )
உலகுக்கே குருவான ஞானவள்ளல் ஆகிய தந்தையாம் சிவபெருமானைத்
தனது சீடராகக் கொண்டு ஓங்கார உபதேசம் செய்த ஞானகுருவே!
சுவாமிக்கும் நாதனான சுப்பிரமணியக்கடவுளே!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி பணிந்து போற்றுகிறேன்.
8. உபதேச அருளுற்று உயர்ந்தோர்
நவவீரர் நலமிசைத்த நவஇரவு நல்லிசையாள்
நலப்பாகால் நன்குணர்ந்தாள்.
அவவிழுங்கு அமலவனும், தவமக்கள் கமலினியும்
அவம்போக அன்றுணர்ந்தனர் .
மௌலியால் மண்டியிட்டு மறைத்தலையன் மனம்கொண்டான்;
மௌனவாணி மௌலியேற்றாள் .
தவக்குறுமுனி தழல்கௌசிகன், தழல்கீரன் , தளிர்வள்ளி
தவநிலையால் சிவம்பெற்றனர்.
அவமுற்ற வரக்கனுமே அருளுற்றான் அகச்சொல்லால்;
துவண்டிடும்பன் தூயதொண்டன் ;
சிவக்கச்சி யப்பரோடு, குகானுபவம் உவந்தவர்கள்
செந்தமிழ்க்கிரி குமரகுருவும்.
பவவினை பலவும் பரிகரி உபதேசச்
சிவகதிதரு சிவதேவா!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
முருகனுக்குத் தொண்டு செய்ய வீரவாகு முதலிய நவ வீரர்களைத்
தனது அருளாசியால் தோற்றுவித்த நவராத்திரியென்னும் ஒன்பதுநாள்
விழாவெடுத்துப் போற்றும் நவதேவிகளாக உருக்கொண்டவளான
பாரவ்தி அம்மையும் பிரணவ உபதேசத்தை எம்பெருமான் சிவன்
பெற்றகாலையே தானும் பெற்றாள் ; அவரின் ஒருபாகமாக விளங்குபவள்
அல்லவா!
உலகையே ஒருசமயம் விழுங்கிய திருமாலும் , தவம்புரிந்து கண்டு
நன்மை அடையும் மக்களால் போற்றப்படும் இலக்குமியும், தங்களின்
மலமாயை அகல நல்லுபதேசம் பெற்று உய்ந்தனர்.
தனது நான்கு தலைகளும் நிலத்தில் படுமாறு வணங்கிய பிரம்மதேவன்
ஆணவம் அகன்று அவ்வுரை மனம் கொண்டான்; அமைதியே
உருக்கொண்ட கலைவாணியும் அனைத்துக்கலைகளும் நிறைந்த தனது
மதியிலே இவ்வுபதேசத்தை மிக உயர்வாகக் கொண்டாள்.
அகத்தியமாமுனிவர் அடிவணங்கி அவ்வுபதேசம் பெற்றார்;
கௌசிகமாமுனியும் அருள்பெற்றார்; தமிழ்ப்புலவராகிய நக்கீரரும்
திருப்பரங்குன்றத்தில் உபதேசம் பெற்றார்; நீண்டநாள் தவமிருந்து
முருகனை மணாளனாய் அடையும் தருவாயில் முருகனே வள்ளிக்கு
உபதேசம் செய்தருளினார்.; இவர்கள் எல்லோரும் தவமேன்மையால்
அருள்பெற்றனர்.
ஆணவத்தால் இறுமாந்திருந்த சூரபன்மனும் முருகனின் நோக்கு
தீட்சையால் பேரின்பம் பெற்றான். எதிர்த்து ப் போர் புரிந்த இடுமபனும்
முருகனின் அம்புகள் பட்ட ஸ்பர்ச தீக்கையால் தொண்டனாகி நாளும்
பணிவிடையாய்க் காவடி தூக்கிப்போற்றினான்.
கந்தபுராணம் பாடிய செஞ்சிவக் காஞ்சியில் தோன்றிய கச்சியப்பர்
குகனையே கண்டு, பாடலின்முதலடி எடுத்துக்கொடுக்கவைத்து
நல்லுபதேசம் பெற்று விளங்கினார். திருப்புகழ் பாடிய அருணகிரியும்,
குமரகுருபரரும் உபதேசம் பெற்றே உயர்ந்தனர்.
இந்நிலவுலகில் பழவினை,பிறவிவினை போன்றவற்றை நீக்கி,
மும்மலங்களை அழித்து, நற்சிவனின் நல்லடி பெற வழி வகுப்பது
பிரணவ உபதேசம் ஆகும்.அவ்வருளை அன்பர்க்கு வழங்கிய
சிவமைந்தனே! சிவனின் சிவமே!
சிவஞானமாய் விளங்குபவனே!மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்துநிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக் கடவுளே!
உன்பொன்னடியைப் பணிந்து போற்றுகிறேன்.
9. அவதார அருளாற்றல் .
நெற்றிப்பொறி முற்றும்சுடர் பற்றும்பணி சுற்றுச்சுழல்
உற்றேயுளம் சற்றேகுலை,
நற்றாயவள் பொற்பூசலாய் யிற்றோடக் கற்சிலம்பு
அற்றேமணி சுற்றிழந்தன;
நவமணிகள் தவமாகச் சிவப்பார்வை உவப்பாக,
நவகர்ப்பம் நவசிசுவாம்;
புவப்பதியாள் அவச்சாபம் சிவமுயல்வு கவல்நீங்க
நவவீரர் சிவமகன்களே.
அஞ்சியோடிய மஞ்சையவள் மஞ்சனநீர் பஞ்செனநிலம்
மஞ்செனத்தெரி குஞ்சுகளாம் ;
விஞ்சையர் விஞ்சுவலம் புஞ்சைநில மஞ்சுகளாம் ;
அஞ்சிலக்க வாறிலக்கமாம்.
சிவச்சார்பு தவக்குமரன் புவம்காக்கும் உவப்படையிது ;
அவவரக்கர் அழிவதுறுதி .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா.
பொருள்
சிவபெருமானின் நெற்றியிலிருந்து மகனைத் தோற்றுவிக்கப்
பொறியானது பளிச்சிட்ட காலத்தே மூவேழ் உலகங்களும் அஞ்சி
நடுங்கி ஒடுங்கியதைப்போலவே அன்னை பராசக்தியும் அவ்வொளியும்,
ஒலியும் ஏற்படுத்திய அச்சமிகு தோரணையால், தானும் அஞ்சியே
ஓடினாள். ஓடிய காலத்தே காற்சதங்கைகள் அசைந்தாடி அப்படியே
கழன்றுவிழுந்தன. வேகத்தில் சிலம்பினுள் இருந்த நவமணிகளும்
இங்கும் அங்கும் பறந்து விழுந்தன; நவ மணிகளும் நவதேவியராய் நாணி
நடந்தன; அத்தேவியர் மீது தீப்பொறி வெளிப்படுத்திய சிவனாரின் குளிர்ப்
பார்வை பட்டது; நவதேவியரும் புதிதாய்க் கர்ப்பம் உற்றனர்;
செய்தியறிந்த சிவத்தலைவி சினந்து அவர்களுக்குக் கடுஞ்சாபம்
இட்டாள் ; குழந்தைகள் கர்ப்பத்திலிருந்து வெளிவாராதிருக்க , அன்னை
பணித்த சாபம் கேட்டு , அங்குவந்த சிவனார் அன்னையைச் சமாதானப்
படுத்தி, அக்குழந்தைகள் உடன்பிறந்திட வழிவகை செய்தார்.
அக்குழந்தைகளே நவவீரர்கள் ஆவர்.
அன்னை அஞ்சி ஓடியகாலை உடலெல்லாம் வியர்வை நீர்போல்
வழிந்தது; அத்துளி நிலத்தில் வீழ்ந்தது; மென்மையான நிலம் அத்துளியை
ஏற்றுக் குழந்தைகளாக வெளியிட்டது; பல இலக்கம் துளிகள்;பல இலக்கம்
வீரக்குழந்தைகள்; விண்ணவர்க்கு இணையான வலிமை பெற்ற அவைகள்
இலக்கக் கணக்கில் குவிந்தனர்;அரக்கர்களை அழிக்கும் படையில்
வீரர்களாக இணைந்தனர்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன் நிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே!தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!சுவாமிமலையில்
வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உனது பொன்னடிகளைப்
போற்றி வணங்குகிறேன்.
10. அவதார நோக்கம் துவக்கம்
தன்னைப்போல் தனியூர்தி தனயனுக்குத் தான்வழங்க,
நாரதன்வழி நாடகத்தான்
மன்வேள்வி மறைக்குறையால் வன்னாடு புண்ணாக்கத்
துன்புற்றோர் நன்மையுற,
முன்வந்த வீரவாகு முன்னோனருள் பின்வாங்கிட
அன்பாடுமே பண்ணூர்தி.
கன்னியிருவர் நண்ணியமால் மன்னன்புகழ் நன்றுரைக்கத்
தண்ணவனும் முன்னருளினான்.
மின்னமுதப் பொன்னழகியர் நண்ணினரே தண்ணழல்தவம் ;
பெண்ணிருவர் பெற்றனர்பதம்.
தவமேன்மைத் தேவயானை, உவக்காதல் நலவள்ளி ,
தேவக்குற குலத்துதித்தனர்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
தன்னைப்போலவும், பிரமன்,மால் போலவும் தன்மகனாம்
முருகனுக்குத் தனியூர்தி அளிக்கவேண்டும் என்ற அருள்நோக்கு
உற்ற சிவபெருமான், நாரதன் வழியே ஒரு நாடகம் நடத்தினார்.
தான்தொடங்கிய வேள்வியில் ஓதப்பட்ட மந்திரக்குறைபாடுகளால்
வேள்வித்தீயில் தோன்றிய ஆடு ஒன்று படாதபாடு படுத்துகிறது;
அதனை அடக்கி என்னையும், தேவஉலகத்தையும் காப்பாற்றுவாய்
முருகா முருகா என்று ஓலமிட்டபடி ஓடிவந்தார் நாரதர்.
அறிந்த முருகன் அன்புத்தம்பியைப் பார்க்க விரைந்துவந்த
வீரவாகு ஆட்டை அடக்கி, ஆறுமுகன் முன் நிறுத்தி இதனைத்
தாங்களே ஊர்தியாகக்கொள்ளவேண்டும் என்றுபணிவோடு கேட்க,
ஏனைய தேவர்களும் அவ்வாறே வரம் வேண்ட மாமுருகன்
ஆட்டின்மீது அமர்ந்து அனைத்துலகும் சுற்றி வந்தான். அன்றுமுதல்
ஆடு முருகனது ஊர்தி ஆயிற்று.
தன்னுடைய இரண்டு மகள்களான அமுதவல்லி, சௌந்தர்யவல்லி
ஆகிய இருவரிடம் மருகன்,முருகன் பெருமைபற்றிப் பேசினார் ஒருநாள்
திருமால். அன்றிலிருந்து முருகனையே கணவனாகப் பெறவேண்டும் என்ற
எண்ணத்தில் கடுந்தவம் இருந்தனர் இருவரும். அவர்கள் முன் தோன்றிய
முருகன் கன்னியரே! மிக்க மகிழ்ச்சி; நீங்கள் செய்த இத்தவத்தால்
இக்கணமே அமுதவல்லி நீ இந்திரனுக்கு மகளாகவும், சௌந்தர்யவல்லி
நீ மான்மகளாகி நம்பிராஜன் என்ற மலையரசனால் வளர்க்கப்பட்டு
வளருங்கள்; தக்கசமயத்தில் நானே வந்து உங்களை மணப்பேன் " என்று
வரமளித்தார்.
தவமேன்மையால் இந்திரன் மகளாகி ஐராவதம் என்ற
வெள்ளையானையால் வளர்க்கப்பட்ட அமுதவல்லி தேவயானை என
விண்ணவர்களால் போற்றப்பட்டாள் . சாபத்தால் மானான இலக்குமியின்
வயிற்றில் உதித்த மக்கள் மலையரசன் நம்பிராசனால் வள்ளி என்ற
பெயரோடு சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டாள் .
இவ்வரலாறுகள் நிறைந்த
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே!தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உனது
பொன்னடிகளைப் போற்றி வணங்குகிறேன்.
2. வீற்றிருக்கும் வியன் தலங்கள்.
11.
செந்திப்பதி செம்பழனி சீர்குன்றம் சுவாமிமலை,
அந்திருத்தணி பழமுதிர்கா .
முந்திநிற்கும் விந்தியங்கள்; பந்தம்தரும் பலபார்ப்போம் ;
பந்தநல்லூர், பெரும்புலியூர்.
இடைமருதூர், நாகேச்சரம் சக்கரப்பள் ளி ,வலஞ்சுழி
ஆடுதுறை, சிவபுரமே .
பூந்துருத்தி, கொட்டையூர் , மாந்துறை , உய்கொண்டான் ,
திருப்பராய்த்துறை , ஆனைக்கா.
திருநெடுங்குடி, குமாரவயலூர், திருச்சிராப்பளி , கழுகுமலை,
திருச்செந்தூர், திருவிலஞ்சி .
திருவிக்கிர மசிங்கபுரம், குற்றாலம்,அவிநாசி,
திருமுருகன் பூண்டியாய்க்குடி .
சிவத்தமிழால் அருணகிரி தவமாகப் பாடிட்ட
சிவக்குமரன் நவப்பதியே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
சுவாமிமலை சுவாமிநாதக்கடவுள் வீற்றருளும் தலங்களின்
திருநாமங்கள்; முதலில் முத்தாய்ப்பாய் விந்தியமலைபோல்
உயர்ந்தோங்கி விளங்கும் அறுபடை வீடுகளாம் திருச்செந்தூர்,
பழனி, திருப்பரங்குன்றம்,சுவாமிமலை,திருத்தணிகை,பழமுதிரும் சோலை
ஆகிய பதிகள் ஆகும். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் முறையே
சென்று பாடிய திருத்தலங்களின் பட்டியலை வரும்பாடல்களில் காணலாம்.
12 ஆம்பாடல்
திருப்புகழ்த்தலங்கள்
திருத்தணிகை ஆலங்காடு திருவொற்றியூர் அண்ணாமலை,
தேவிகாபுரம் செய்யாறு,
திருவாரூர் மாகாளம் வீழிமிழலை திருஎண்கண் ,
திருச்செங் காட்டாங்குடி ,
திருவிற்குடி, குடவாசல், திருவாஞ்சியம், சிதலப்பதி ,
திருவேப்பூர் திருவல்லம்,
விரிஞ்சிபுரம் வள்ளிமலை, காங்கேய நல்லூர்,
திருநாவலூர், ஆமாத்தூர் ,
திருவெண்ணெய் நல்லூர் திருவக்கரை, திருப்புவனம்,
திருச்சத்தி முற்றமொடு,
திருப்பனந்தாள், பிரான்மலை, காளையார் கோயில்,
திருநல்லூர், கோணமலை,
சுவாமிமலை, கீழ்ப்பழுவூர், திருவான்மியூர் , மயிலாப்பூர்,
காளஹஸ்தியில் குடிகொண்ட,
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
13.
திருமுல்லை வாயிலொடு பேரூர், திருவேட்களம்,
திருவதிகை, திருத்தளூர்,
திருவாமூர், மாணிக்குழி, வலிதாயம் , கடம்பூர்,
திருப்பா திரிப்புலியூர்,
திருக்கடலை யாற்றூர், தீர்த்தமலை, திருப்பழனி,
திருக்கொடுமுடி, பவானி,
திருவேற்கா டுத்திர மேரூர் ,திரு நள்ளாறு,
திருப்பரங் குன்றமொடு,
வேலாயு தம்பாளயம், குளித்தலை, சோலைமலை,
வெஞ்சமாங் கூடலூர்,
நால்வேத ஆரண்யம் நற்றேவூர், பெரம்பூர்,
நற்கைவிளாம் சேரி,
சிவநடனத் திருவழுவூர், திருமயானம், குத்தாலம்,
சிவமகனாய்க் குடிகொண்ட ,
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
14.
புள்ளிருக்கு வேளூர் , புள்மயிலா டுதுறை,
பேளுக்குரிச் சி, சிக்கல்,
உள்நிறை செங்கோடு , உடையாப் பட்டி,
உத்தரகோ சமங்கை,
திருப்புன வாசல்முதல் விராலிமலை, இராமேச்சரம்,
திருப்பத்தூர், குன்றக்குடி ,
திருவாடா னை,இரும்பறை , கோடியக்கா, வட்டத்துறை,
தில்லைத் தானப்பதி ,
திருநூற்றிரு பதில் ,கிரியார் போற்றிய திருப்புகழ்த்
திருத்தலங்கள் குடிகொண்டு,
திருக்கோவை மாவட்டத் திருத்தலங்கள் அருள்தொடங்கி,
மருதூர், மாதப்பூர்,
சிவச்சின்ன வேடம்பட்டி, செஞ்சேரி, சென்னாமலை ,
சரவணம் பட்டிகொண்ட
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
இந்த நான்கு பாடல்களிலும் அருணகிரிநாதர் பாடிப் புகழ்ந்த
முருகன் வீற்றிருக்கும் நூற்றிருபது தலங்கள் வரிசைப்படுத்தப் பட்டன.
இனி மாவட்ட வாரியாக முருகன் வீற்றிருக்கும் தலங்களைப் பார்ப்போம்.
முதலில் கோயம்புத்தூர் மாவட்ட முருகன் கோயில்கள் ......
15.
கோத்தகிரி குனியமுத்தூர், கோட்டுபுள்ளாம் பாளையம்,
குமரன்குன் றோதிமலை,
போத்தனூர் சாலையூர் , இரும்பறை , வேல்கோட்டம்,
மருதமலை, குழந்தைமலை,
ஊதியூர், அன்னூர், உயர்ந்த நீலகிரியில்
குன்னூர், எல்க் மலை.
தீதிலாத் திருப்பூரில், சிவன்மலை, வட்டமலை,
ஆதிவாழ் பாப்பன்குளம்.
பச்சைமலை, பவளமலை , உதயகிரி, கொடுமடுவு,
பவானி, கொடுமுடி,
மலையப்ப பாளையம், கோபிநாயக்கன் பாளையம்,
தண்டல்மலை ஈரோடு .
சிவசேலம் சென்னிமலை, குமரகிரி, கஞ்சமலை.
வடசென்னி மலைவாழ்க .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
16.
காட்டினாயன் பள்ளி,அகரம், கிருஷ்ணகிரி; தருமபுரி
குமாரசாமிப் பேட்டை.
காங்கேய நல்லூர், இரத்தினகிரி, வேலூர்;
காஞ்சிபுரம் செய்யூரொடு ,
திருப்போரூர், குன்றத்தூர், வல்லகோட்டை , உத்ரமேரூர்,
இளையனார் வேலூர்,
திருக்கழுக் குன்றம் பெருமை மிக்கன ;
திருவள்ளூர் வானகரம்,
திருத்தணிகை, சிறுவாபுரி, ஆண்டார் குப்பம்,
திருவொற்றியூர், அரும்பதிகள்.
திருக்குமரன் குன்றம், கந்தகோட்டம், வடபழனி,
அருஞ்சென்னைத் திருப்பதிகள்.
தவமயிலம் , திருநாவலூர், திருக்கோவலூர், கிருஷ்ணாபுரம்,
திருவெண்ணெய் நல்லூர்வளர்
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் ஆகிய
மாவட்டங்களின் முருகன்வாழ் நலப்பதிகள் போற்றப்பட்டன.
17.
திருக்கச்சூர், பெரும்பேற்றுக் கண்டிகை,யச் சிறுபாக்கம்,
திருச்செஙகை . தலப்பதிகள் .
விருத்தாசலம், வில்லுடையான் பட்டும், வேட்களமும் ,
மணவாள நல்லூரும்,
திருப்பாதிரிப் புலியூர், சிமானம் பட்டியும்,
இருங்கடலூர் முருகனூர்.
திருவண்ணா மலை,செங்கம் குரங்கணில் முட்டம் ,
அரிதாரி மங்கலம் .
அரியலூர் திருமழபாடி. பெரம்பலூர் செட்டிகுளம்.
அளவாய்ப்பட் டி, மோகனூர்,
திருச்செங் கோட்டுமலை, கபிலர்மலை, பேள்குறிச்சி,
திருப்பதிகள் நாமக்கல்.
சிவக்கரூர் பாலமலை, கதித்தமலை , வெண்ணெய்மலை,
வேலாயுதம் பாளையமாம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர்,
நாமக்கல், கரூர், மாவட்டங்களின் முருகன் வீற்றிருக்கும் தலங்கள்
முறையே கூறப்பட்டன.
18.
திருமயி லாடி,கை விளாஞ்சேரி, சீர்காழி,
திருவிடைக்கழி, கொண்டல்,
திருவெண்காடு, தலைஞாயிறு, வைத்தீஸ்வரன் கோயில்.
திருமருகல், திருப்புகலூர்,
எட்டுக்குடி, எண்கண் , சிக்கல், பொறச்சேரி
அட்டநாகப் பட்டினமாம் .
தேவர்கண்ட நல்லூர் , திருவாரூர் திகழ்ந்துநிற்க,
தஞ்சாவூர் , கும்பகோணம்,
சுவாமிமலை, வலஞ்சுழி, கருகாவூர், புறம்பியம்
சுத்திருப் பழனம்,
சிவகயிலைத் திருவையா று, சீரான பதிகள்.
சிவமணக்கால் , ஆனைக்கா ,
சிவகுமார வயலூர், விராலிமலை , சூழ்ந்த
சிராப்பள்ளி சிற்றம்பலம் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி , ஆகிய மாவட்டங்களின்
முருகன் அமர்ந்தாட்சி புரியும் கோயில்கள் கூறப்பட்டன.
19.
திண்டுக்கல், தாண்டிக்குடி, பூம்பாறை, ஐவர்மலை,
சின்னாளப பட்டி,பழனி.
குண்டுக்கரை, பெருவயல் , மேலக்கொடு மலூரென
பண்பதி, ரா மநாதபுரம்.
திருப்பரங் குன்றம், எழுமலை , பேரையூர் ,
திருவேடகம், சோலைமலை,
திரு.புத்தூர் திருஆலவாய் திருமுருகன் திருப்பதிகள்.
திருச்செந்தூர், கழுகுமலை,
திருஆறு முகநயினார் கோயில், வைகுண்டம்
தூத்துக்குடி மூத்தபதி.
திருநெல் வேலி யோடு தோரணமலை, பண்பொழி,
திருக்கொழுந்து மாமலை,
சிவகிரி ஆய்க்குடி தென்காசி, குற்றாலம்,
சிவக்குமர ! சீர்பதியாம் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
திண்டுக்கல் ,இராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி திருநெல்வேலி
ஆகிய மாவட்டங்களில் அமைந்த குமரப்பதிகள் கூறப்பட்டன.
20.
கன்னியா குமரியின் தோவாளை, தக்கலை ,
நன்னாகர் கோயில்;
அன்புறு கேரளம், ஆந்திரம், கன்னாடகா,
அரும்வட மாநிலங்கள்
குடிகொண்ட குமரன் கோயில்கள் எல்லாமும்
குணமுற்ற குருநாதா!
அடிதோறும் ஆன்றபல ஆதர்ச ஆய்வுகள்
அளித்துயர்ந்த பாடல்வழி
நில்லாமல், நித்திலனின் நீளருள் நெடும்பதி
நித்தில முத்தெடுத்தேன்;
கல்லால மரத்தானின் சொல்புகழ் நல்குருவின்
கழல்பதி கவின்பதியே .
சிவானந்த சாயுஜ்யம் சிவபோக சாமீப்யம்
சுவாமிநாத தரிசனமே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
கன்னியாகுமரியில் தோவாளை, நாகர்கோயிலில் தக்கலை ; மற்றும்
கேரளம்,ஆந்திரம், கன்னாடகா விலும் , பிற வடமாநிலங்களிலும்
கோயில்கொண்ட குருநாதா!
சதக நூலிலே அடிதோறும் மிகவுயர்ந்த தத்துவங்களை, கருத்துக்களை,
உயர்ந்த கவிஞர்கள் படைத்தனர்;அடியேனோ முருகன் வீற்றருளும்
பதிகளின் திருநாமத்தை ஆய்ந்தெடுத்து, அணி முதாகப் பதிந்துள்ளேன்.
கல்லால மரத்தடி அமர்ந்து சிவஞானம் உபதேசிக்கும் சிவனுக்கே
நல்லுபதேசம் செய்த ஞான குருநாதன் வாழ் பதிகள் எல்லாம்
ஞானப்படிகளே ஆகும்.
சிவானந்தம்,சிவசாயுஜ்யம் பெற்றிட வழி வகுப்பது சுவாமிநாத
தரிசனமே ஆகும்.
3. அடியவர்களுக்கு அருள் வழங்கிய ஆசானே!
1. நக்கீரர்.
பாடல்--21.
தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவர், தமிழ்காக்கத்
தழல்கண் திறப்பினும்
தமிழ்க்குறையைத் தாங்காது, தமிழ்ச்சொக்கன் தன்னோடே
தமிழ்ப்போர் புரிந்தவர்;
அமிழ்தமாம் ஆற்றுப்படை அருமுருகன் அருளாற்றலை
அகம்நிறைந்து பாடியவர்;
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்" என
ஆறுமுகன் போற்றியவர்;
ஆறெழுத்து வடக்கிய அருமறை ஆன்றஞானம்
ஆசான் ஈசனுக்கென,
கார்முகக் கருணையைப் பாரறியப் பாடியவர்;
சீர்குறத்தி சிரிப்புணர்த்தி ,
தார்விண்ணோன் தண்மகள் தழுவுகாதல் தான்பாடி
ஊருணியில் அருள்பெற்றவர்;
சிவசாபம் விலகிடவும், தவசீலம் அடைந்திடவும்,
சிவகுமரனுன் அடியுற்றார்.
சிவஞான பரமோன நவயோகத் த்வத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
1. நக்கீரருக்கு அருள்பாலிப்பு .
மதுரை; சங்கம் கொண்டு தமிழ் வளர்த்த பாண்டியமன்னர்கள்;
அப்பேரவையிலே தலைமைப் புலவராக சிவபெருமானே வீற்றிருந்த
அச்சங்கத்தின் தலைமைப் புலவராக அமர்ந்து தமிழ் வளர்த்தவர்
மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரர் என்னும் பெருமகன் ஆவார்.
தருமி என்ற ஏழைப் புலவனின் திருமணநாட்செலவுத் தொகைக்காகப்
பாண்டியனது ஐயம் போக்கும் கவிதையைச் சிவபெருமானே எழுதி,
அதைத் தருமியிடம் கொடுத்துப் பரிசினைப் பெற வழிகாட்டினார்
மதுரை ஆலவாய்க்கடவுள்.
பாடலைப் பாடி,மன்னனும் மகிழ.அப்பரிசை அவ்வேழைப் புலவன்
பெறு ம் சமயம் அப்பாடலில் குறை உள்ளதாகக் கூறிவிளக்கம் கேட்டார்
தலைமைப்புலவர் நக்கீரர். தடுமாறி விடை சொல்ல இயலாது தருமி
தவிக்கையில் அவையில் தானே அப்பாடல் எழுதிக்கொடுத்த புலவன்
என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஆலவாய்க்கடவுளான
புலவரிடம் நக்கீரர் வாதிட்டார்; அவரோடு வாதிட்ட சிவபெருமான்,
அப்பாடலின் பொருட்குற்றத்தை ஏற்காது,சினந்து, நக்கீரனை நோக்கித்
தன் நெற்றிக்கண்ணைக் காட்டித் தன்னையே எதிர்க்கிறாயோ? என
அச்சுறுத்த நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " என நக்கீரர்
அஞ்சாது நிற்க, அப்புலவனுக்குச் சாபம் கொடுத்து மறைந்து விடுகிறார்.
அசரீரியாய் தருமிக்குப் பரிசளிக்கவும், முருகனால் நக்கீரன்
சாபவிமோசனம் பெறுவான்" எனவும் கூறித் தமிழைப் போற்றிட
வந்தருளினார் சொக்கநாதப்பெருமான்.
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் வந்து வீழ்ந்த நக்கீரர்
சிவபெருமானையும், சிவகுமாரன் சண்முகனையும் விடாது
போற்றியபடியே சரவணத்திலேயே தவம் கிடந்தார். தனது கர்வநிலை
மாறிடவும், முன்போல் இறைவனைத் துதிக்கவும், வழி அருளுமாறு
வேண்டிய நக்கீரர் முருகனைத் துதிக்கும் நிலையில் ஆற்றுப்படை
என்னும் காப்பியத்தை முருகன் புகழ் பாடிப்பாடினார். முருகன்
வீற்றிருக்கும் ஆறு படை வீடுகளையும் விளக்கிப்பாட்டினார்.
முருகனைக் காணவிரும்பும் அடியவருக்கு அவன் பெருமை கூறி,
அவனை வணங்கினால் கிடைக்கும் அருள் கூறி, அவனை, அவனது
பதியை அடையும் வழிகூறிப் பாடினர். வேலின்புகழ் சூரவதை ,
அரக்கரழிப்பு, வள்ளியின் காதல் விளையாட்டு, தேவசேனாவின்
திருமணம், போன்றவற்றை அழகுத் தமிழில் " திரு முருகாற்றுப்படை"
என்னும் நூலை இயற்றிட ,முருகனே நேரில் வந்தருளி, அவரது
சாபத்தை நீக்கினான். பிரணவ உபதேசமும் அருளினான்.
சுவாமிமலையில் வீற்றுள்ள சுவாமிநாதக்கடவுளின்
பெருமைகளை, விளக்கிய நக்கீரர் தந்தையாகிய சிவனுக்கே
ஆசானாக விளங்கிய சுவாமி நாதத் தத்துவத்தை புகழ்ந்து
பாடினர். அப்படிப்பட்ட சிவஞானமாய் விளங்குபவனே!
மௌனத்தால் முன்னிற்பவனே!ஒன்பதுவகையான யோகத்திலும்,
உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய் விளங்குபவனே!
தந்தைக்கும் உபதேசித்த ஞானகுருவே! சுவாமிமலையில் வீற்று
அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே ! உன்னடி பணிந்து
போற்றுகிறேன்.
3.கச்சியப்பசிவாசார்யார்.
பாடல். 23.
கந்தவேளின் குமரக் கோட்டம் காஞ்சிநகரைக்
காத்திடும் கோட்டம்.
கந்தனின் வழிவழி கருணையின் தொழுதெழு
பந்தமாப் பரம்பரை;
கச்சியப்ப சிவாசார்யார் கந்தகோட்ட பந்தத்தினால்
அச்சிவன்மகன் அருளுற்றார்.
கச்சியப்பர் கனவதனில் கந்தனாணை காப்பியமே .
காத்திருபகல்; காத்தருளிரா;
முதலடி திகடசக்கரம் முற்றுணர்வோர் முன்வந்தே
மூதுரைத்த முருகனருள்;
முதலான முத்தமிழின் மூவுலகுப் புகழெல்லாம்
முதுபணியின் முருகன்தான்.
சிவகுமரன் சீர்கதையைச் சிவமாக்கிய சிவாசார்யன்
சிவகதிக்கும் சுவாமி நீயே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
3.கச்சியப்ப சிவாசார்யர் .
தொண்டை நாட்டின் காஞ்சிபுரம் கலைகளின் தாயகம்; சிவபெருமான்,
காமாட்சி அம்மை, கந்தவேள் குடிகொண்ட விண்ணுலகம் அது; அங்கே
முருகப்பெருமான் குமரக்கோட்டத்தில் அமர்ந்து காஞ்சிமாநகரையே
காத்துவந்தார்.
குமரக்கோட்டத்து மாமுருகனை வழிவழியாக அர்ச்சிக்கும் தொண்டு
புரிந்துவந்த பரம்பரையில் தோன்றினார் கச்சியப்பர்.
காளத்தியப்பசிவாசார்யாருக்கு மகனாகத் தோன்றிய கச்சியப்பர் முருகன்
மீது நிறைந்த பக்தி கொண்டு அபிஷேக ஆராதனைகளைச்
செய்துவந்தார். அவரின் கனவிலே வந்தருளிய முருகப்பெருமான் தனது
வரலாற்றை எழுதுமாறு கூறி, அப்புராணத்தின் முதலடியாக "திடசக்கர"
என்ற முதற்சொல்லையும் அருளாகக்கூறி ஆசி வழங்கினார்.
ஆறுமுகன் ஆணையைத் தலைமேற்கொண்ட இவரும் நாள்
ஒன்றுக்கு நூறு பாடல் இயற்றுவார்; இரவு அதை முருகன் திருவடியில்
வைத்துவிடுவார்; காலையில் அப்பாடல்கள் திருத்தப்பட்டு முருகன்
பார்த்தருளிய அடையாளத்தோடு காணப்படும்.
இவ்வாறே ஆறு காண்டங்கள். பாடல்களில் அப்புராணத்தை
முருகன் அருளால் முடித்தார். குமரக்கோட்டத்து ஒருமண்டபத்தே அமர்ந்து
எழுதும் பணியைச் செய்த அதே மண்டபத்திலேயே நூல் அரங்கேற்றமும்
செய்தார். முதற்பாட்டிலேயே அறிஞர்கள் குறை கூறியதும் , இவர் அந்த
அடியை அருளியது எம்பெருமான் முருகன் எனக்கூறியும் அவையோர்
இலக்கணப் புணர்ச்சி விதியைக் கேட்க, அதற்கும் முருகனே அருள்
புரிந்தார். அந்த அவையிலே ஒருபுலவராக வந்து, வீரசோழிய நூலில்
கூறப்பட்ட புணர்ச்சி விதியை விளக்கி அச்சொல்லின் பயன்பாட்டை
ஏற்கச்செய்தவர் அப்படியே மறைந்துவிட்டார். அவையினரின்
பாராட்டுதலோடு கந்தபுராணத்தைக் கச்சியப்பர் முருகன் துணையோடு
அரங்கேற்றினார்.
இரவும் பகலும் அவரோடே இருந்து நூல் அரங்கேற. உலகெலாம்
புகழ் பெற வழிகாட்டியவர் முருகனே ஆவார்.
சிவகுமாரனின் சீரிய வரலாற்றை உலகறிந்து உவக்கச்செய்த
கச்சியப்பர் சிவசாயுஜ்யம் பெறவும், வழிவகை செய்தவர் முருகனே;
இவ்வாறு பேரருள்புரிந்து கச்சியப்பரை உன்னடிமை ஆக்கிய
சுவாமி நாதக்கடவுளே!
4.குமரகுருபரர் .
பாடல்.24.
ஐந்துமுகத் தண்ணலின் ஆறுமுகத் தரும்புகழை,
ஐந்துவயது நைங்குழவி
மந்தமாருதத் தமிழினிலே கந்தமாமலை அருளினால்
சந்தமாகச் சாற்றியதோ!
சிவகாமி சண்முகக் கவிராயன் உவந்தெடுத்த
சிவனடிமைத் தவக்குழந்தை,
அவமாய் ஊமையாய் சிவச்செந்தூர் சேரருளால்
அவமகல்கலி வெண்பாவாம்.
பொருநை பாய்ந்தது; புதுவெள்ளம் வைகையில்;
காவிரியில், கங்கையிலும்.
அருமுத்து, பிள்ளைத்தமிழ், உருதுமொழிச் சீயபவனி
திருமுருகன் அருள்வண்ணம்.
தவமுனிச் சிவமாகி நவமடம் நற்பெருமை
சுவாமிநாத! நின்னருளே.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
4. குமரகுருபரர்
ஐந்துமுகத்தோடு அதோமுகம் சேர்த்துத் தோற்றுவித்தார் சிவனார்,
ஆறுமுகக்கடவுளை. அப்பெருமானை ஐந்துவயதுக் குழந்தை
பிறந்ததுமுதல் பேசாத நைந்து ,துயரினில் தவித்த குழந்தை ; குமரன்
அருளால் மழலை வாய்மொழியே பாடலாக, வெண்பாவாக,
கலிவெண்பாவாக, அதுவும் கந்தர்கலிவெண்பாவாக ஞானமொழி
பாடிற்று என்றால் அது ஆறுமுகக் கடவுளின் அருளல்லவா!
திருவைகுண்டம் என்னும் பத்தியில் சண்முகக் கவிராயருக்கும்,
சிவகாமி அம்மைக்கும் சிவனருளால் மகனாகத் தோன்றிய குழந்தை
ஐந்து வயது வரை பேசா ஊமையாய் விளங்கிக் கந்தவேள் அருள்புரியும்
திருச்செந்தூர் சென்றடைந்து, நாழிக்கிணற்றில் குளித்து, அலைவாய்
நீராடி ஆறுமுகன் வணங்கும் காலை, முருகனருள் முன்வரத் தனது
ஊமை வாயைத் திறந்து பூமேவு செங்கமலப் புத்தேளும் எனத்தொடங்கி,
வேலவனின் புகழைக் கலிவெண்பாவில் பாடியதைக் கண்டு உலகே
அதிசயித்தது. அவம் அகன்றது; புவனம் போற்றியது. புனிதன்
அருளல்லவா!
அருமுருகன் அருளாலே, தாமிரபரணிக் கரையிலே தோன்றிய
கலிவெண்பா, வகைக்கரையில் மதுரையில் மீனாட்சி அம்மை பிள்ளைத்
தமிழாக மலர்ந்தது. காவிரிக்கரையிலோ முத்துக்குமாரசாமி பிள்ளைத்
தமிழாகப் புள்ளிருக்குவேளூரிலே அழகூட்டியது.கங்கைக் கரையிலோ
இஸ்லாமிய மன்னன் பேரவையில் உருது பேசும் கவிஞனாய்ச் சிங்கத்தின்
மேலேறி அரசவை அடைந்து மாப்புகழைப் பெற்றது. காசிக்கலம்பகம்
பாடியது; மடம் அமைத்தது. அமைத்துக் கொடுத்தவனோ முகம்மதியப்
பேரரசன். பதினாறு இலக்கிய பக்தி நூல்களை இறைவன் திருவடியில்
சாற்றியது;
தவமுனியாகித் தருமபுறமடத்திலே துறவறம் பெற்றுத் திருப்பனந்தாள்
என்னும்பதியிலே திருமடம் அமைத்துச்சைவம் வளர்த்தது. எல்லாம் முருகன்
பேரருள் அன்றோ.சுவாமிநாதக்கடவுளே உனது பேரருள் குமரகுருபரனை
செந்தமிழ்ப்புலவனாக்கியது .
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே! ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே!
தவத்திற்கே தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
5.அருணகிரிநாதர் .
பாடல்.25.
முத்தித்திரு வண்ணாமலை நித்தியத்திருப் பதிதோன்றி ,
சத்தியப்புனல் விதிவாழ்வு,
புத்தியைத்தொலை கத்திகண்ணவர் நித்தியச்சுவை நீறாக்க ,
பத்தியமிலாப் பாழ்நோய்சுடு ,
தத்தித்தவழ் அத்திறன்தனைக் குத்துவேல்நுனி முத்துமொழியால்
புத்தியளி தத்துவத்தால்
எத்திறம்புகழ் அத்திஆல்மகன் முத்திறம்தோய் நற்றமிழ்ப்பா
முத்திமுத்தியென் றோதியவன் ;
கத்துகடல் சத்தனுபூதி , கடல்முத்தாம் அலங்காரம்,
வித்தாக்கினான் சிதானந்தம் .
வித்தியாக்கலை வாரணத்தை, வித்துவியனாள் விந்துவள்ளியை ,
உத்தியான வனத்தளித்தான் .
சிவவித்து, சிவாமுத்து , சிவமுருகன் தவக்கவிஞன்
நவாருணகிரி சிவாம்சமே .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா.
பொருள்
5.அருணகிரிநாதர் .
நினைத்த அளவிலேயே முத்தியை அளிக்கின்ற
திருவண்ணாமலையில் அவதரித்த அருணகிரியார் செல்வ வளக்
குடியிலே வாழ்வின் வகைச்சுழலிலே உழன்று நதிநீர் போகும் வழியில்
சென்றார். அவரைச் சிற்றின்பப்பிசாசுகள் பற்றிக்கொண்டன ; காமத்தின்
வழியை விடாது பற்றிய அவர் செல்வம், மானம், குடும்பம் ஆகிய
எல்லாவற்றையும் இழந்தார். அவரது ஆசை அவருக்குப் பெரிய
பெரும் நோயையும் தந்தது;
இறைபக்தியைத் துறந்து மங்கையின்பின்னே சிற்றின்பம் தேடி
ஓடியவரைப் பலதுன்பங்கள் சூழ்ந்துகொண்டன ; முடிவிலாப்
பெருநோயும் தொற்றிக்கொள்ள. அவர் நொந்துபோனார். அந்நோயின்
தாக்குதலால் வலுவிழந்து சாலைகளில் தவழ்ந்து தவழ்ந்து சென்ற
அவரின் மீது இறைவன் முருகன் பேரருள் பட்டது.
நல்ல உடலும், நல்லபேச்சும், நல்ல பழக்கமும் வழங்கிய மாமுருகன்
அவர் நாவிலே தமது வேல்நுனியால் பிரணவத்தை எழுதினார் ; அவ்வருள்
தன்னை மீட்டெடுத்த முருகன் மீது கவிதையாகப் பாடிட வைத்தது.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய சிவக்குமாரனை ,ஆலிலை மரத்தடி
அமர்ந்த ஆசான் செல்வனை நலத்தமிழில் நாளெல்லாம் பாடினார் .
ஆக்கள்,அழித்தல்,காத்தல் என்னும் முத் தொழிலையும் கொண்ட
குமரனது, தாள்களைப் போற்றி, முத்தியும், முத்தி தரும் விதத்தையும்
பாடினார் .
கடலொளிபோன்ற அனுபூதியையும், கடல்முத்துபோன்ற
கந்தரலங்காரத்தையும் சச்சிதானந்தப் பேரொளியையும் பாடினார் .
இந்திரன் மகளான வித்யாதாரணியாகிய தேவசேனாவையும்,
இலக்குமியின் மகளாகி மானின் வயிற்றில் அவதரித்த வள்ளியையும்,
மணந்துகொண்டு, தன்னோடு அருள்பாலிப்பிலே இணைத்துக்
கொண்டதைப் போற்றிப்பாடினார்.
சிவபெருமானின் நெற்றிக்கண் வித்தாய் அவதரித்தவர்; பார்வதி
தேவியாரின் அன்புமுத்து, மாமுருகனையே எப்பொழுதும் எண்ணி,
எண்ணிக் கவிபாடும் தவக்கவிஞன், புதிய பிறவி எடுத்த அருணகிரி
சைவ வழியில் வந்த சிவக்கவிஞன் ஆவார். குகக்கவிஞன் ஆவார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்தவனே !
தவத்திற்கே தவமாய் நிற்பவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
6. பகழிக்கூத்தர் .
சமரமுக ரணவீரப் பரசமயத் திமிராரி "
சமயநிலை மாறிட்டோன்
அமரசுகம் தமிழதனில் அமிழ்தமாக அளித்தகாலை ,
குமரனணி செம்பதக்கம்,
அமரபதம் அடைந்தாற்போல் விமலசுகம் பெற்றவரோ !
தமர்துயர்நோய் தரியாரோ!
உமிழொளிநிலா அமிழ்குளிர்சுகம் தமிழ்முகமதின் குமிழ்முறுவலே
அமைத்தார்கவி அருங்கூத்தர்.
சன்னாசி தர்ப்பசயனர் முன்வழியாம்; பொன்னிரவில்
தன்னடிமை மன்னனுக்கே.
செந்நாவால் செந்தூரைச் செந்தமிழால் சீரிசைத்துச்
செம்பகழிக் கூத்தரானார் .
சிவசீவக சிந்தாமணிச் செவ்வமுது செல்வனாக்கிச்
சிவம்காத்தது செஞ்சீரருள்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
6.பகழிக்கூத்தர் .
பாடல்.26.
போர்முனையில் பகைவராம் அரக்கர்களை அழிப்பதிலே
நிகரில்லாத வீரனாகத் திகழ்ந்தவன்; மாறுபட்ட சமயங்களை
அழித்தும், சைவசமயத்தைப் பாதுகாக்கவும் அவதரித்த
திருஞானசம்பந்தராகக் காட்சியளித்தவன்" என்று திருச்செந்தூர்
மாமுருகனைப் போற்றிய பகழிக்கூத்தர் வைணவ சமயம் சார்ந்தவர்.
கனவிலே வந்து தடுத்தாட்கொண்ட முருகனின் கழல்களைப் பற்றிக்
கொண்டவர்.
அமரர்களின் இன்பங்களை மீட்டளித்தவன்; அவன்மீது அமுதமாகிய
தமிழ்ப்பாடல் "பிள்ளைத்தமிழ் " பாடித் தனது நோய் நீங்கப்பெற்றவர்;
அவ்விலக்கியம் அவன் முன்னர் அரங்கேற்றியபொழுது ஊரார்,
பெருமக்கள்,செல்வந்தர்கள் பாடிய புலவனைப் போற்றாதபொழுது,
அன்றிரவு அப்புலவன் பகழிக்கூத்தன் கழுத்திலே தானணிந்துள்ள
நவரத்தினப் பதக்கத்தை அணிவித்துச் சென்றார் முருகன்.
பாடிய புலவனுக்கோ தேவசிங்காதனம் பெற்றதைப் போன்ற மகிழ்ச்சி.
தனது நோயாகிய நீண்டநாள் தீராத வயிற்று வலி அறவே நீங்கிவிட்ட
மகிழ்ச்சி; அதனால்.
திருச்செந்தூர் முருகனை, அவ்விறைவனின் புன்சிரிப்பு,
வானவீதியில் ஒளிநிலாவை அமிழ்தமாய் வீசும் நிலவென்றும் ,
குளிரமுதம் அளிக்கும் உள்ளம்கவர் சுகமென்றும், தமிழவேள்
முருகனது முகமுறுவல் ஒளி,அழகு,வெண்மை, குளிர்ச்சி, கருணை
நிறைந்து விளங்குகிறது" எனப்போற்றினார்.
இராமநாதபுரம் சமஸ்தானத்தில் "சன்னாசி" என்றகிராமத்தில்
தர்ப்பசயனர்" என்பாரின் மகனாகத் தோன்றியவர் . ஒரே இரவில்
கனவுதந்த அருள், கந்தன் காட்டிய கருணை "தர்ப்பசயனர் என்னும்
திருமாலின் அடியவரான கூத்தர் சைவசமயம் சார்ந்தார்; முருகன்
அடிமை ஆனார்; அய்யனார் அருளின் வண்ணம் அவரது திருப்பெயரான
"பகழிக்கூத்தர்" என்னும் பெயரும் பெற்றார்.
தனது சீர்மைமிகு சொல்லால், செந்தூரானைப் பாடிப்போற்றிய
அவரோ புகழ் மிக்க புகழ்க்கூத்தரானார்.
சீவகசிந்தாமணியை விளக்கமுற்பட்டு, 300 பாடல்கள் இயற்றிப்
புகழுற்ற புலவர், அச்சிந்தாமணிசெல்வனாக முருகனை, முன்னிறுத்தி,
சிவசைவம் போற்றும் புலவர் ஆனார்.செம்மைத்தமிழ் செந்தூரவழி
நின்று உயர்ந்தது. அதெல்லாம் சுவாமிநாதக்கடவுளே நின்னருளன்றோ!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்தவனே !
தவத்திற்கே தவமாய் நிற்பவனே! தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
7. திருப்போரூர்ச் சிதம்பரமுனிவர் .
பாடல்.27.
போரூர் மேவிய புண்ணியா! போற்றிய
கார்மேகக் கனித் தமிழ்முனி
வேறூர் மாமதுரை; வேடசெந்தூர் வழிகாட்டி.
வீரசைவக் குமாரதேவர் ;
தாரன்னைத் தமிழ்மீனாள் தண்கருணைப் பேராணை
திருப்போரூர் தேடல்பணி;
வாரணத்தான் வனமூர்த்தி, வடிவுற்ற வளக்கோயில் ,
வரமுயல்வு வகைகண்டார்.
பூரணத்தான் பொலிகோயில் பூமழையே போரூரில்;
சீரணியே; செம்பணியே ;
பூரணமாய்ச் செயலாற்றிப் போரூரின் சந்நிதிமுறைப்
பூரணமும் பெற்றுய்ந்தார்.
சிவகாரணம் தவப்பூரணம் உவத்திருப்பணி அவம்தவிர்த்துச்
சிவமுருகன் செவ்வடியருள் ,
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
7. திருப்போரூர்ச் சிதம்பரமுனிவர் .
திருப்போரூர் என்னும் முருகன் பதிக்கு , அன்னை மீனாட்சி ஆணையால்
வந்து, கோயிலையும், மூர்த்தத்தையும் கண்டுபிடித்தும்,ம் அம்முருகன்மீது
திருப்போரூர்ச் சந்நிதி முறை" என்னும் முருகன் போற்றும் தமிழ் பாடி.
முருகனருள் பெற்ற சிதம்பர சுவாமிகள், என்னும் மாமுனிவர்
கருமேகம்போல் இனிமைக்கவிதை பாடும் புலவர் ஆவார்.
தென்பாண்டி மதுரையில் தோன்றிய புலவர் மீனாட்சி அம்மை மீது
கலிவெண்பா பாடிப்போற்றியவர் ஆவார். பிறந்த ஊர் மதுரை. வேடனாம்
மாமுருகன் அருள் கூடியமையால் பற்பலத் தலங்களுக்குச் சென்றவர்,
குமாரதேவர்" என்னும் வீரசைவஞானியைச் சந்திக்கிறார்; அதேகாலை
அன்னை மீனாட்சி அம்மையும் திருப்போரூர் சென்று, முருகனைக்
கோயில்கொள்ளச்செய்து முருகன் புகழ் பாட்டு! என ஆணையிட்டதாலும்,
பயணம் தொடங்குகிறார்.
பலப்பல பதிகள் தாண்டிப் பலப்பல பணிகள் ஆற்றியவர்,
போரூரை அடைந்து, அங்கு கோயிலைத் தேடுகிறார். வேப்பமரத்தடியில்
அமர்ந்துள்ள விநாயகரைத் தவிர எத்தெய்வமும் குடிகொள்ளாத
வனப்பகுதி அது; அங்கேயே தங்கி, பலநாட்கள், பல திங்கள் கோயிலைத்
தேடி அலைந்தவருக்கு அங்குள்ள ஒரு பொய்கையில் முருகன் சிலை
கிடைக்கிறது. தான் தங்குவதற்காக அமைத்திருந்த குடிலில் அவரையும்
வைத்துப் பூசனை செய்து வரும் நாளில் அவரது கனவில் குமாரதேவர்
போல் வடிவமெடுத்து முருகன் தோன்றித் தனது கோயில் நீர் நிலையில்
மூழ்கியிருப்பதை உணர்த்துகிறான். வனத்துக் குளத்தருகே
வனமூர்த்தியாகிய முருகன் கோயிலின் சிதைந்த பகுதிகளைக் கண்டு
அளவில்லா மகிழ்வு அடைந்தவர், வழிகாட்டிய குமாரதேவர் முருகனே,
எனவும் உணர்ந்தார். அன்றுமுதல் அக்கோயிலைப் புதுப்பிக்கும் பணி ;,
புதிதாக அமைக்கும் பணியை முருகன் அருளோடு மேற்கொண்டார்.
நிறைந்த ஞானக்கடவுளாகிய முருகன் கோயிலை அமைக்கும்
பணியில் ஊர்மக்களையும் சேர்த்துக்கொண்டு, சேமித்து வைத்த
செல்வத்தைத் திருடவந்த கொள்ளையனையும் சேர்த்துக்கொண்டு,
அழகுமிக்க கோயிலைக் கட்டிமுடித்தார். கும்பாபிடேகமும் செய்வித்தார்.
எம்பெருமான் புகழை உலகோர் அறியும்வண்ணம் "திருப்போரூர்ச்
சந்நிதிமுறை " என்ற பாராயண நூலையும் முருகன் சேவடியில்
சாற்றினார்.
சிவம் போற்றும் சைவம் காரணமாகவும் ,தவவழியின் நிறைவுற்ற
ஆசான் முருகன் போற்றவும்,தமது அவப்பிறவி அகன்றே அருஞ்சேவடி
அடைந்திடவும், மகிழ்வோடு திருப்பணி செய்து முடித்தவர் முருகன்
சேவடியிலேயே ஜீவ சமாதியுற்றார். இவ்வாறு பேரருள்புரிந்த
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தால் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே!
தவத்திற்கே தவமாய் விளங்குபவனே தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!சுவாமிமலையில்து வீற்று அருள் புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
8. தேவராயர் .
பாடல்.28.
சான்றோரருள் தொண்டை மண்டலம் வல்லூரில்
சஷ்டிகவசத் தேவராயர் ,
ஊனுருகிடும் உபாதைகள் உயிர்சார்தலை உத்தமன்புகழ்
உணர்ந்துரைத்த முருகனடிமை.
வியன்வீரா சாமிமகன், மயல்காணா மறைப்புலவன்;
வயிற்றுவலி பயிற்றுபாழ்
நயத்துநாடிய நற்செந்தூர் சயத்துபாடிய சட்டிகவசம் .
பயந்ததுசுகம்; பலித்ததுதமிழ்.
காக்ககாக்க கனகவேலே; காக்கவந்தது கனகவேளே .
காக்குமுருகு ; காக்குகவசம் ;
நோக்கநோக்க நீளறுபடை நீக்கவந்திடும் பூக்கமழ்தாள்;
பார்க்கபார்க்கப் பொடிபடுமவம்.
சிவ,குக, வெனத் தவம்புரிமன, அவம்தொலைகுணப் புவனத்தோர்
இகபரசுகம் குகனடிதரும் .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
8. தேவராயர்
சான்றோருடைத்து" என்ப்போற்றப்படும் தொண்டை மண்டலத்தில்
வல்லூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர் ; நாமெல்லாம் அன்றாடம்
பாராயணம் செய்யும் கந்தர்சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராயர்
என்ற முருகபக்தர்.
நமது உடலை வாட்டிடும் நோய்கள் உடலோடு,உயிரும் சார்ந்து
நிற்பவை; அதனைப் போக்கவேண்டுமென்றால் நம்மை ஆட்கொள்ளும்
கருணையாளன் புகழ் பாடவேண்டும்; அதுவே அந்நோய்களை நீக்கும்
மருந்து, என்று கூறி,முருகனின் புகழ் பாடிய மாப்புலவர் அவர்.
வீராசாமி என்பாருக்கு மகனாய்ப் பிறந்த இவர் மாயைகளின்
மயக்கம் தவிர்த்தவர்; மறையாய்த் தமிழ்போற்றிப் பாடல்கள் பாடியவர்;
ஒருபோது வயிற்றுவலியால் தவித்தகாலை, திருச்செந்தூர் சென்று,
முருகனை வணங்கிச் சஷ்டி விரதம் இருந்து, " சஷ்டிகவசம் " பாடினர்.
நோய் தீர்ந்தது; சுகம் கிடைத்தது; புலவரின் தமிழ் மருந்தாக்கிப்
பலித்தது.
காக்க" காக்க" கனகவேல் காக்க" என்று அவர்பாடிய பாடல் இன்று
உலகம் முழுவதும் கனகவேலின் அருள்வேண்டிப்பாடப்படுகிறது. கனக
வேல் தாங்கிய மாமுருகன் உலகைக் காக்கிறான்; அவனைப்போற்றிய
சஷ்டிகவசமும் நாளும் நம்மைக் காக்கிறது.
முருகனது சேவடிகளை மனத்துள் நிறுத்திக் கண்டு,களித்துப்
போற்றுவோர், துன்பமும்,துயரும் நீங்கிட நீண்ட புகழுடைய வேலாயுதம்
நம்முன் வந்துநிற்கும். மலர்போல் மனம் வீசும் அவனது தாள்களைப்
பார்த்துக்கொண்டே இருந்தால், போற்றிக்கொண்டே இருந்தால் நமது
பாவங்கள் அகலும்; புண்ணியம் கூடும்; முருகனருள் சித்திக்கும்.
சிவ,சிவ எனத் தியானம் செய்பவர்கள், குக ,குக என முருகனை
மனமுழுவதும் நினைப்பவர்கள் ,பாவங்களைத் தொலைத்து, நல்வழி
அடைவர்; அம்முருகனது சேவடி அன்பர்களுக்கு இக வாழ்வில் நல்ல
சுகமும், பிறவியில்லாப் பேரின்பத்தை மறுவாழ்விலும் அருளும். என்று
போற்றிய தேவராயருக்கு நல்லருள் புரிந்த வனே !
சிவ ஞாவனமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பவகையான யோகத்திலும் உயர்ந்தவனே!
தவத்திற்கே தவமாய் விளங்குபவனே!தந்தைக்கும் உபதேசித்த ஞான
குருவே!சுவாமலையில் வீற்று அருள் புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
9.பாம்பன் குமாரகுரு தாசர்.
பாடல். 29.
பாம்பணிசிவன் தாம்பணிமகன் ஒம்நினைபவன் தேம்கடல்நகர்
பாம்பனின் அப்பாவு;
ஓம்கார குரு தரிசனம் ஒருபதின் மூன்றினிலே;
ஒருநூறு ஒளித்தமிழ்க்கவி ;
காவிநாட்டம் தேவித்திருக்கரம்; பாவிப்பிறவி மேவியசிறார் ;
ஆவியானளி மேவுகாட்சி .
மேவிடாத ஆவினன்குடி; ஆறுமுகக் காப்புகவசம் ;
சேவித்திடாக் குமரகோட்டம் ;
பீரப்பன் வலசையிலே ஊரப்பன் உபதேசம்;
கார்க்குழிக்குள் வேல்காண்தவம் ;
சேர்சென்னை சீரறுகால் சேரருள் பேரதிசயம்;
சேவணவிழா வான்மியூரில்;
சிவகுருவே குமாரகுரு தாசனென நவப்பெயருறு
சிவக்கவிஞன் உவந்தருளிய
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
9. பாம்பன் குமாரகுருதாசர் .
பாம்புகளைத் தனது அணிகலன்களாகக் கொண்ட சிவனார்
பணிந்து போற்றும் ஞான மா மகன் முருகப்பெருமானின் ஓம்கார
ஒலியை ,உருவை, மனம்,வாக்கு, காயங்களால் போற்றுபவன், கடலால்
சூழப்பட்ட இராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள ,பாம்பன் என்னும்
கிராமத்தில் அவதரித்தவன் "அப்பாவு" என்ற பெயர் கொண்ட பாம்பன்
குமாரகுரு தாசன் என்ற முருகபக்தர் ஆவார்.
1850 ஆம் ஆண்டு தோன்றிய அவரது பதின்மூன்றாம் அகவையில்
கடலலைகட்கிடையே ஒளியாகக் காட்சி தந்தார் முருகன். அன்றே
முருகன் மீது கவிதைகள் பாடத்தொடங்கிய அப்பாவு,விடாமல் தொடர்ந்து
நூறு கவிதைகளைப் பாடினர்.
துறவறத்தை விரும்பிய அவருக்குப் பெற்றோர் திருமணம் செய்து
வைத்தனர்; பிறவி என்னும் பிணி அவரைப்பற்றிக் கொண்டது; அதன்
வாயிலாகக் குழந்தைகளும் பிறந்தன; ஆயினும் தனது உயிருக்கு மேலான
முருகப்பற்றினால் அவனையே நினைந்துவாழ, அம்முருகனும் அவருக்கு
அருள்காட்சி வழங்கினார்.
ஒருமுறை முருகனிடம் உத்திரவு பெறாமல் பழனிமலை சென்று
வழிபடும் காலை, அவரைத் தடுத்து, என்னிடம் சொல்லாமல் இங்கு ஏன்
வந்தாய்? உடனே திரும்பிப்போ ! என முருகன் ஆணையிட்டதும் பழனி
ஆண்டவரைப் போற்றாமல் ஊர் திரும்பினார். இறுதிவரை அவர்
பழனியை வணங்'கவேயில்லை; உலக உயிர்கள் உறுநோயால் அவதியுற
அதனைப்போக்க, ஷண்முக கவசம்" என்னும் ஆறுமுகக்கவசத்தை இயற்றி,
மக்களை நோயிலிருந்து காத்தார். ஒருமுறை அவர் காஞ்சிமாநகர்
அனைத்து ஆலயத்தையும் தரிசித்தவர் குமரக்கோட்டத்தைப் போற்றாமல்
வந்துவிட்டார்; வழியில் அவரைத் தடுத்த முருகன், அவரை அழைத்துக்
கொண்டுபோய் கோயில், கச்சியப்பர் மண்டபம் போன்றவற்றைக் காத்திப்
பின்னரே ஊர் செல்ல வழிவிட்டார்.
இராமநாதபுரம் அருகே அமைந்துள்ள " பீரப்பன் வலசை" என்ற
ஊரிலே ,முருகனிடம் நல்லுபதேசம் பெற்றார். அங்கு நீரும், மணலும்
கலந்த ஒரு பள்ளத்தில் 28 நாட்கள் உண்ணாமல்,உறங்காமல் கடும்
தவம் புரிந்தார்; ஊராரெல்லாம் அவரை வெளியே வர அழைத்தனர்;
ஆனால் முருகன் வந்து அழைத்தாலே வருவேன்" என்றிருந்த அவரை
முருகன் வேல் வந்து கூட்டிச்சென்றது.
சென்னைப்பதிக்குச்செல்! என்ற முருகனின் ஆணைக்கிணங்க
சென்னை வந்தவர், முருகனது சொல் கனவில் கேட்டுப் பங்காரு அம்மாள்
அவரை வரவேற்று உணவு,இருப்பிடம் போன்றவைகளைச்
செய்துகொடுத்தார். ஒருநாள் நடந்து செல்கையில் ஜட்கா வண்டி இடித்துத்
தள்ளிட அவரது இடதுகால் எலும்பு முறிந்திட அரசங்க மருந்தகத்தில்
சேர்க்கப்பட்டார் . மேனாட்டு மருத்துவர் காலையே எடுக்கவேண்டும்.
என்றார். கேள்விப்பட்ட அவரது அன்பர்கள் ஷண்முக கவசத்தை விடாது
பாராயணம் செய்தார்கள்; விபூதியைப் பூசியவண்ணம் செய்த பாராயணம்
அவர் காலை நன்கு குணப்படுத்திவிட்டது. வியந்த டாக்டர் அவரது
படத்தை அந்த அறையில் மாட்டிவைக்க ஆணையிட்டார். சென்னை
திருவான்மியூரில் தங்கியிருந்தபொழுது கடலலை மீது மயில்கள் பறந்து
வரும் காட்சியைக் கண்டார். அதனை "மயூர வாஹன சேவன விழா"
என்று கொண்டாடினார் . இன்றும் அவ்விழா அன்பர்களால் நடத்தப
பெறுகிறது.
இளம்வயதில் வடமொழி ஆசிரியர் அப்பாவுக்கு, குமாரகுருதாசன்
என்ற பெயரைச் சூட்டினார். அதுவே அவருக்கு நிலைத்தது. இப்பெயரும்
முருகனருளாலே கிடைத்தது என மகிழ்ந்தார் அவர். இவ்வாறு
ஆட்கொண்ட பாம்பன் சுவாமிகளின் புகழை வளரவித்தவன் நீயே
அல்லவா!
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே!
தவத்திற்கே தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் உபதேசித்த
ஞான குருவே! சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்
கடவுளே! உன்னடி போற்றி வணங்குகிறேன்.
10. காவடிச்சிந்து அண்ணாமலையார் .
பாடல். 30.
பூமிமெச்சிடும் அண்ணாமலை பூமிவாழக் காவடிக்கே
ஓம் ஓம் எனச் சிந்துபாடியோன்;
சேமிசெந்தமிழ்ச் சென்னிகுளப் பூமியுழுத விவசாயி;
சென்னவனார் சீர்மகன்;
சாமிமுருகன் சார்வழியைக் காட்டிடவே , சாமிமீதே
சிந்துபாடிய செவ்விளைஞன்;
கந்தவேளை நினைந்திட்டால் வந்துறாது பங்கமெனச்
சந்தமாகவி பந்தமான
விந்தைக்கோன் ஊற்றுமலை விரைந்தேற்க, கழுகுமலைக்
கந்தவேளைச் சொந்தமாக்கினான்;
அந்தமில்லா ஆண்டவனின் ஆட்டநடை ஆன்றகவி
அன்னை,மால் ஆசுகவி;
சிவன்மனமகிழ் உபதேசன் முருகேசன் எனப்போற்றிய
சிவசேவடி சாரிளமை .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
10. காவடிச்சிந்து அண்ணாமலையார்.
நிலவுலகு பாராட்டிப்போற்றும்படி என்னைப் படைத்தான் முருகன்,
எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அண்ணாமலை ரெட்டியார்
ஓம் ஓம் என முழங்கும் முருகனின் காவடி ஆட்டத்திற்குச் சிந்து பாடிய
ஆவார்.
செந்தமிழ் நிலமாகிய நெல்வேலி அருகே, தென்காசிப் பகுதி,
சென்னிகுளம் என்றகிராமத்தில் விவசாயியான சென்னப்பக் கவுண்டருக்கு
மகனாகப் பிறந்தவர் அண்ணாமலை.
குலதெய்வமாகிய முருகனின் பேரருள் இளம்வயதிலேயே கிட்டியதால்
சாமி முருகன் மீது சிந்துக்கவி பாடியவர்.
கந்தவேளைப் போற்றி வாழ்ந்தால் வாழ்வில் துன்பமே வராது. என்று
சந்தக்கவிதைகள் பலப்பல பாடினர். இவரைப் பற்றிநின்றார் ஒருவர்.
"ஊற்றுமலை' குறுநிலத்தின் மன்னர் இவரை, இவரது தமிழை அறிந்து
தமது பேரவைப்புலவனாக்கினார். அங்கிருந்த படியே கழுகுமலை
முருகனைப் பாடிப்புகழ்ந்தார் .
முதலும் முடிவுமற்ற முருகப்பெருமானின் நடன ஆட்ட அசைவுகளுக்கு
ஏற்பச் சிந்து பாடிய கவிஞர், அன்னை கோமதியம்மன் மீதும், அரசனின்
குலதெய்வம் கண்ணன் மீதும் பலப்பல பாடல்கள் பாடினர்.
சிவபெருமானின் மனம் குளிருமாறு, அவருக்கு உபதேசம் செய்த
முருகனைப் போற்றிய அண்ணாமலைக்கவிஞன் இளம் வயதிலேயே
சிவன் சேவடியைப் பற்றினார். அவரை ஆட்கொண்ட
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய்க் காட்சி அளிப்பவனே ! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள் புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி வணங்கிப் போற்றுகிறேன்.
2. சங்கப்புலவர்கள் ,
பாடல்.22.
உருத்திர சன்மனாய் அருந்தமிழ் விருத்தன் ;
முருகாற்றுப் படையாய்வான் ;
வருந்திநோன்பு வகைபல விளக்கிடும்நூல் ஆற்றுப்படை;
அருந்தியருள் அகத்தியரும்,
குறிஞ்சிநிலக் கபிலரும், குணம்மிக்க பரணரும்,
கடியலூர்க் கண்ணனாரும்,
நிறம்கொடிமொழி அறம்கொடைஅருள் மறம்திறன்புகழ் மாமுருகனே
புறம் அகம் பாட்டில் போற்றினரே .
வரலாற்றுக் குறிப்பெல்லாம் சிரம்தாழ்த்தும் தொன்மைக்கே;
உவமைகளில் உயர்ந்திருப்பான்;
வரம்வேண்டா அவ்வையும் வளப்பாட்டில் வழிபட்டாள் ;
கரைகண்டன காவியங்கள்;
சிவபுராணத் தேவாரம் சிவமகனைச் சேர்ந்திசைத்தன;
சிவனாண்ட பிள்ளையாம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
2. சங்கப்புலவர்கள் .
திருமுருகாற்றுப்படை நாயகனாகிய முருகன், "உருத்திரசன்மன்"
என்ற பெயரோடு, தமிழ்ச்சங்கத்திற்கு வந்து, இறையனார் அருளிய
களவியல் நூலுக்கு, நக்கீரர் எழுதிய உரையே சாலச்சிறந்தது என்று
உரைத்துத் தானும் ஒரு தமிழ்ப்புலவனாய் அங்கு அமர்ந்தான்.
நோன்பிருந்து வருந்தித் தவம் இருந்தே முருகனைக் காண இயலும்"
என்றுரைத்தது திருமுருகாற்றுப்படை. அதனை இயற்றிய நக்கீரரும்,
தமிழமுதம் அருந்தி இறையருள் பெற்ற அகத்தியரும் முருகனைப்
போற்றியவருள் உயர்ந்த சங்க மாமுனிவர்.
முருகனின் நிலமாகிய குறிஞ்சியைப் பாடிய கபிலரும், நல்லறம்
பாடிய பரணரும், கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் , சங்கப்புலவர்
பலரும், தாம்பாடிய அகப்பாட்டிலும், புறப்பாட்டிலும், தனித்தனிப்
பாடல்களிலும், முருகனுடைய, வண்ணமேனியைப் பாராட்டினர் ;
கோழிக்கொடியைப் பாராட்டினர் ; செவ்வாய் மொழியைப் போற்றினர்;
அடியவர் மீது பொழியும் அருளைப்பாராட்டினர்; அறவழி நிற்றலை,
மறவழி வீரம் உவத்தலை, போர்த்திறனை, கொடை உள்ளத்தை ,
பெரும்புகழை விரிவாகப் போற்றிப்பாராட்டினர்.
பழமை மிகுந்த வரலாறு கொண்ட குறிப்போடு, முருகனைப்போற்றினார்
சங்கப்புலவர். உவமைகளில் முருகனை, அவனது வீரமிக்க செயல்களை
விரிவாகப் பாராட்டினார்.
அவ்வைப்பிராட்டியும் தனது முதிய காலத்திலே முருகன் புகழ்
பாடினர். பிற்காலம் தோன்றிய காப்பியங்களும் முருகனை வெகுவாகப்
போற்றிமகிழ்ந்தன.
சிவன் மீது பாடப்பட்ட தேவார, திருவாசகங்கள் தந்தையோடு
மகனையும் இசைத்துப் போற்றின; தேவாரம் பாடிய திருஞானசம்பந்தரும்
முருகனாகவே போற்றப்பட்டார். இப்படிப் போற்றிய சான்றோர்க்கு
அருள்புரிந்த ,
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தின் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் சிறந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னைப்
போற்றி வணங்குகிறேன்.
4. படைவீடுகள் .
1.முதற்படைவீடு . திருப்பரங்குன்றம் .
பாடல். 31.
தேவர்சிறை மீட்டெடுத்தான்; பாவரக்கர் மீட்டெடுத்தான்;
படைவீடு பரங்குன்றம்.
தேவமகள் தேவசேனா திருமுருகன் திருமணம்தான்
திருக்கோலம் கொண்டமலை.
சேவல்மயில் ஊர்தியாமே; சேர்ந்தனவே ஆடுயானை;
சேவற்கொடி சேர்ந்திசைக்கும்.
பாவமாயை செந்தூரில்; ஆயகன்மம் பரங்கிரியில்;
ஆணவமோ போரூரில்.
ஐந்துகுகை அமரகுகன், சத்யகிரீசர் , துர்க்கை,
ஐங்கரத்தான் பைங்கண்ணான் .
ஐந்தெழுத்தான் விந்தியமாய் அருங்காட்சித் திருமலை;
முந்துவினை மாற்றுமலை.
சிவச்செல்வர் தவமூவர் நவப்பதிகம் உவந்தளிமலை;
சிவகுகனார் சேர்ந்தொளிர்மலை .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
1. முதற்படைவீடு. திருப்பரங்குன்றம்.
சூரபன்மனை வீழ்த்தி, அவனது சிறையில் கட்டுண்ட தேவர்களை
விடுவித்தவன்; பாவநிலையிலிருந்து அரக்கர்களை விடுவித்தவன் ;
மாமுருகக்கடவுள் வீற்றிருக்கும் முதற்படைவீடு திருப்பரங்குன்றம் ஆகும்.
தேவர்களின் படைத்தலைவன் ஆகி, அவர்களைக் காக்கவே ,
போரிட்டு, வென்றவனாகிய சுப்பிரமணியக்கடவுளுக்குப் போர்ப்பரிசாகத்
தன்மகள் தெய்வயானையைத் திருமணம் செய்துவைக்க விரும்பினான்
தேவேந்திரன்; அத்திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம் ஆகும்.
இங்கு திருமணக்கோலத்தில் முருகன் எழுந்தருளியுள்ளார்.
மயிலை மட்டுமே ஊர்தியாகக் கொண்ட முருகனுக்கு, இத்தலத்திலே
மயில்,சேவல், ஆடு, யானை என்ற நான்கும் ஊர்திகளாக,(வாகனமாக)
அமைந்திருத்தல் சிறப்பாகும். அத்துடன் சேவலும் கொடியாகப்பறக்கும்.
திருச்செந்தூரில் "மாயை" என்னும் மலத்தை அழித்தும்,
திருப்பரங்குன்றத்தில் "கன்மம்" என்னும் மலத்தை அழித்தும்,
திருப்போரூரில் " ஆணவம்" என்னும் மலத்தை அழித்தும் வெற்றி
கண்டவன்; முறையே தாரகன், சிங்கமுகன், சூரபதுமன் ஆகியோரை
வெற்றி கொண்ட முருகன் வீற்றுள்ள தலம் இது.
குடவரைக் கோயிலான இங்கு இறைவன் சன்னதிகள் ஐந்து
குகைகளாக அமைந்துள்ளன; நுழைந்தவுடன் முதற்சன்னதி
திருமணக்கோலத்து முருகனுடையது; அடுத்தது அன்னை துர்க்கை
அம்மனுடையது; அடுத்தது கற்பக விநாயகப் பெருமானுடையது;
பக்கவாட்டில் இடதுபுறம் பவளக்கனிவாய்ப்பெருமாளுடையது;
வலதுபுறம் சாத்யகிரீசர். சிவபெருமானுடையது ஆகும்.
இம்மலையே சிவபெருமானாகக் காட்சி அளிக்கிறது; அதனால்
இதற்குப் "பரங்கிரி" என்ற பெயரும் உண்டு.மலையையே மகேசனாக
வணங்குவர் மக்கள்.வணங்கும் மக்களின் பிறவிப்பிணியைப் போக்கி
வீடுபேற்றை வழங்குவார் சிவனார்.
தேவாரம் பாடிய அப்பர்,,சம்பந்தர் ஆகிய மூவரும் இத்தலத்தைப்
போற்றிப்பாடியுள்ளனர்; தந்தையோடு மகனாகிய முருகக் கடவுளும்
இங்கு வீற்று அருள்புரிகின்றனர். ஆயினும் இம்மலை முருகனுக்கே
உரித்தான முதற் படைவீடாக அமைந்துள்ளது.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பான் யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக் கடவுளே!
உன்னடி பணிந்து போற்றுகிறேன்.
பாடல். 32.
முதற்படைவீடு. திருப்பரங்குன்றம் .
அன்றாடம் திருப்பூசை; அபிடேகம் ஏற்காமல்,
அருவேலே தானானவன்;
நின்றருளும் கோலத்தே நீள்படையகம் நிலைத்திருக்கக்
குன்றவனோ அமர்ந்தகோலம்.
வென்றிட்ட சூரனவன் சம்ஹாரம் சட்டியிலே
ஒன்றிடுமே உலகெல்லாம்;
குன்றத்தில் குணசட்டி , குளிர்தெப்பம், குனித்திருநாள்
ஒன்றிரண்டு மூன்றாகும்.
குன்றுயரம் ஓராயிரத் தைம்பதடிகள்; குன்றின்மேல்
மன்றலாடிக் கோயிலுண்டு.
வென்றானே வீணசூரன் வியன்நிலத்தே. வென்றவெற்றித்
தென்றலதை ஒன்றிநின்றான்.
சிவன்,சேய் ,தாய், சன்னதிகள், சீர்பொய்கைச் சரவணம்
தவக்குன்றைப் பணிந்திடுவோம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் .
முதற்படைவீடு. திருப்பரங்குன்றம்.
இக்கோயிலில் நடுநாயகமாக அமர்ந்து அருள்புரியும் முருகக்
கடவுளுக்கு ஆகம முறைப்படி அன்றாடம் பூசைகள் நடைபெறும்; ஆனால்
சுவாமிக்கு அபிடேகம் நடைபெறுவதில்லை; அபிடேகம் அவர் கையில்
தாங்கியுள்ள வேலுக்கே அபிடேகம் நடைபெறும்; அன்பர்கள் அளிக்கும்
பாலை வேலுக்கே அபிடேகம் செய்வார்கள். அவ்வேலே ஆண்டவனாகக்
காட்சியளிக்கும்.
ஏனைய ஐந்து படைவீடுகளிலும், நின்றபடி அருட்கோலம் கொண்டு
விளங்கும் முருகக் கடவுள் இங்கு அமர்ந்த கோலத்தில் அருளாட்சி
புரிகிறார். அதுவும் தெய்வயானையை மணந்த கோலம்; அழகும், அருளும்
நிறைந்த கோலம்.
ஐப்பசித் திங்களில் வரும் வளர்பிறைச் சட்டியிலே தான் உலகெங்கும்
உள்ள திருமுருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா கந்த சஷ்டி எனக்
கொண்டாடப்பெறும்; ஆனால் இங்கோ ஆண்டுதோறும் மூன்று
சூரசம்ஹாரங்கள் நடைபெறுகின்றன; இயல்பாக கந்தசஷ்டி விழா,
தெப்பத்திருவிழா நடைபெறும் திங்களிலும், பங்குனி உத்திரத்
திருவிழாவின் போதும் சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பானதாக
விளங்குகிறது.
திருப்பரங்குன்றத்து மலையின் உயரம் கடல்மட்டத்திலிருந்து
ஆயிரத்தம்பது அடிகள்; உயர்ந்த மலையின் உச்சியிலே சிவனார்
குடிகொண்ட கோயில் ஒன்றும் அன்பர்களுக்கு அருளைப் பொழிகிறது.
ஆணவச்சூரனை நிலத்திலே போரிட்டு வென்ற முருகன் வீற்றிருக்கும்
பதி திருப்பரங்குன்றம். வெற்றிப்பரிசாக இந்திரன் தனது மகள்
தெய்வயானையை முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்த தலம் இவ்வூர்.
குடவரைக் கோயிலாய் விளங்கும் இங்கு சத்யகிரீசர் ,என்ற பெயரில்
சிவபெருமானும், கற்பகவிநாயகரும், பவளக்கனிவாய்ப்பெருமாளும்,
துர்க்கையம்மனும், கல்யாணக்கோலத்தில் சுப்பிரமணியக் கடவுளும்
அருள்புரிகிறார்கள் ;இப்படிப்பட்ட பெருமையைத் தவம் செய்து பெற்று,
விளங்கும் மாமலையை வணங்கி அருள் பெறுவோம்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது யோகத்திலும் உயர்ந்தோங்கியவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே ஆசானாய் விளங்கும் ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி பணிந்து
போற்றி வணங்குகிறேன்.
பாடல். 33.
இரண்டாம் படைவீடு; திருச்செந்தூர்.
படைவீடு கொண்டசெந்தூர், பரவியது ஆறுபதி ;
படையெடுத்த பழம்பெரும்பதி ;
படைவீடுகள் ஐந்தும் பசுநிலங்கள்; பதிசெந்தூர்
படரிடர்களை கடலலைவாய் .
கடலருகே கனிநீராம் நாழிகைக் கிணற்றின்
நலநிலநீர் சரவணமே.
கடலதையே கங்கையாய்க் கனிச்சோறுடன் கவின்மலரிடும்
கதிர்ப்பூசை காணுநல்லூர்;
சட்டிநாள் விழா ஆறென்பர் ; ஈராறுநாள் சிந்துபுரம்
சண்முகனின் சாத்திரத்தில்.
மட்டில்லா மாவிழாக்கள் மாசியாவணி மாதங்களில்;
பட்டுவெள்ளைப் பிரும்மனாவான்;
நெற்றிக்கண் நீள்சிவப்பு; கரும்பச்சை கரியமால் ;
வெற்றிகுகன் உற்றமூவர்.
நவக்கோல நலவிடங்கர் , தவக்கோலச் சயந்திநாதர் ,
அலைவாய்ப் பெருமாளெனும் ,
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
இரண்டாம் படைவீடு. திருச்செந்தூர் .
சூரபன்மன் மீது படையெடுக்கப் போர்தொடுக்கப் புறப்பட்ட நகர்
திருச்செந்தூர் ஆகும்; முருகன் புறப்பட்ட படைவீடு என்ற பெருமை
ஏனைய ஐந்து பதி களுக்கும் சென்றடைந்து, அவைகளும் படைவீடு
என்ற பெருமை பெற்றன; இதனைப் பாடிய நக்கீரர் பெருமானும்
ஆறுபடை என்பதை ஆற்றுப்படை என்னும் புலவன் ஆற்றுப் படுத்தும்
நிலையோடு இணைத்து, திருமுருகாற்றுப்படை என்றே போற்றிப்பாடினார்.
ஏனைய படைவீடுகள் ஐந்தும் குறிஞ்சி நிலங்களாகும்; திருச்செந்தூர்
மட்டுமே நெய்தல் நிலமாகக் கடலலை மோதும் திருச்சீரலைவாய்
ஆயிற்று. அடியவர்களின் துயரக்கடலை நீக்கி அருளும் தலம் ஆயிற்று.
செய்திப்பதியின் பல சிறப்புகளிலே நாழிக்கிணறும் ஒன்றாகும்.
கடலுக்கு அருகே அமைந்த இக்கிணற்றின் நீரோ கனிபோல் இனிக்கும்.
சரவணப்பொய்கை போல் தூய்மையும், இனிமையும் கலந்த புண்ணிய
நீரூற்று நாழிக்கிணறு .
நாள்தோறும் இங்கு நடக்கின்ற பூசையில் கடல் தாயைக்
கங்கையாகப் பாவித்து, அதற்கு, பால்,சோறு, மலர்கள் இவைகளால்
அர்ச்சித்துப் பூசை செய்து வழிபடுவது அன்றாடப் பூசை முறையாகும்.
உலகெங்கும் முருகனுக்கு ஐப்பசித் திங்களில் கந்த சட்டி விழா எடுப்பர்.
ஆறுநாட்கள் நடைபெறும் விழா அனைத்து முருகன் கோயில்களிலும்
சிறப்பாக நடைபெறும். ஆனால் இங்கு, அவ்விழா பன்னிரண்டு நாட்கள்
கொண்டாடப்படுகின்றன. முதல் ஆறு நாட்கள் விரத நாட்கள் ஆகும்;
ஏழாம் நாள் சூரசம்ஹாரம்; 8,9,10,11,12, ஆகிய ஐந்து நாட்களும்
திருக்கல்யாண நாட்கள் ஆகும்; இது இத்தலச்சிறப்பு ஆகும்.
ஆவணி, மாசி ஆகிய இரு திங்களிலும் முருகனுக்குத் திருவிழா
நடைபெறும். இத்திருவிழாக்களில் ஏழாம் நாளில் சிவப்புப் பட்டு
ஆடை அணிந்து,முருகன் சிவனாகக் காட்சி தருவார். எட்டாம் நாள்
காலையில் வெள்ளைப்பட்டு அணிந்து, பிரும்மதேவனாகக் காட்சி
தருவார்; மாலையில் கரும்பச்சைப்பட்டு அணிந்துகொண்டு,
திருமாலாகக் காட்சி தருவார்; மும்மூர்த்திகளும் முருகனுக்குள்
ஒன்றியவர்கள், என்பதை இக்காட்சிகள் விளக்கும்.
சண்முகர் ஆகிய முருகன்,குமாரவிடங்கர், ஜயந்திநாதர் , அலைவாய்ப்
பெருமாள் என்ற பெயர்களோடு உற்சவ மூர்த்தியாக இங்கு காட்சி
தருகிறார். இப்படிப் பெருமை கொண்டவனே!
சிவ ஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கும் ஆசானாய் விளங்கும் ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி
பணிந்து போற்றுகிறேன்.
பாடல்..34.
இரண்டாம் படைவீடு. திருச்செந்தூர்.
விண்ணாளும் வியன்கோபுரம் எந்நாளும் நடைமூடிடத்
தண்கடலாம் தன்முன்பயில் ;
பண்பாடும் மணநாளின் பின்னிரவில் கணநேரம்
பொன்வாயில் திறந்தருள்வர்;
சங்கார நாள்முடிவில் சதாசிவச் சன்னதியில்
சாயாபி ஷேகம்காண்.
மங்காத புகழுடைய மானின்மகள் மலைவள்ளி
மணிக்குகையில் தனித்திருப்பாள்;
கந்தமாதனச் சந்தனமலை முந்தைய செந்தூராம் ;
விந்தைக்கலி விழுங்கிட்டதோ!
கந்தர்கலி வெண்பாவும், ஆற்றுப்படை, திருப்புகழும்,
செந்திப்பதிச் சிறப்புரைப்பன.
சிவகுருவே சண்முகர்; சிவலிங்கம் நவகுகனே;
சிவஸ்வரூபம் புவனமெங்கும்.1
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
இரண்டாம் படைவீடு; திருச்செந்தூர்.
திருச்செந்தூர் கோயிலின் கோபுரம் முருகன் சன்னதி முன்னே
அமையவில்லை; அங்கு பரந்துபட்ட கடல் காட்சியளிக்கும். சுவாமியின்
பின்பகுதியில் மேற்கில் அமைந்துள்ளது இராஜகோபுரம். அக்கோபுர
வாயிலும் எந்நாளும் திறக்கப்படுவதில்லை;
ஒவ்வொரு ஆண்டும் முருகனது கல்யாணவைபவம் முடிந்த அன்று
நள்ளிரவு அக்கோபுர வாயிலைத் திறப்பர் ; அதுவும் மிகக்குறைந்த நேரமே
கதவு திறந்திருக்கும்; சுவாமி பூஜைக்குத் தொடர்பானவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள்; பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை; உடனே
அக்கதவு மூடப்படும்.
சூரசங்காரம் முடிந்தபின் கோயில் பிரகாரம் வழியாக உள்ளே
எழுந்தருளும், சண்முகருக்கு, பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னதியில்
சாயாபிஷேகம்" நடைபெறும். சுவாமிக்கு முன் மிகப்பெரிய
நிலைக்கண்ணாடி நிறுத்தப்படும்; அக்கண்ணாடியில் முருகனது பிம்பம்
நன்கு தெரியும்; அந்நிழலுக்கு, அபிஷேகம் செய்வர் ; சாயை என்றால்
நிழல் என்பது பொருள்; காண்போரின் கண் திருஷ்டி கழிவதற்காக
அவ்வபிஷேகம் செய்யப்படுகிறது. இப்பதியில் இவ்வபிஷேகம் சிறந்த
ஒன்றாகக் கருதப்படுகிறது.
செந்தூரின் போற்றவேண்டிய பகுதிகளில் "வள்ளிக்குகையும் "
ஒன்றாகும். தனியே நின்று,அமர்ந்து காட்சி தரும் அம்மையைக் காணக்
கண்கோடி வேண்டும். மான் வயிற்றில் மகவாய்த்தோன்றிய வள்ளி.
மால் பெற்ற மகள் அங்கே காட்சி தருகிறாள்.
கடல் தலமாய் விளங்கும் திருச்செந்தூர் ஒரு காலத்தில்
கற்பகோடி வருடங்களுக்கு முன்பு மலையாகவே விளங்கிற்று.
கந்தமாதனமலை " என்பது அதன்பெயர்; சந்தன மலை என
அழைப்பர். காலங்களில் அது சிதைந்து, குறுகி, நிலப்பகுதியாகவும்,
நீர்ப்பகுதியாகவும் மாறிற்று; அதன் சுவடுகளை ஆலயத்தில் ஆங்காங்கு
காணலாம்; வள்ளிகுகை பிரகாரம் ஆகிய இடங்களில் நிலம் சற்றே
உயர்ந்து காணப்படும்.
நக்கீரர் பாடிய "திருமுருகாற்றுப்படையும்" திருப்புகழும்,"
"கந்தகலிவெண்பாவும்" இத்திருப்பதியை வெகுவாகப் புகழ்ந்து
போற்றுகின்றன.
இங்கு வீற்றிருக்கும் ஆலமரக்கடவுள் தக்ஷிணாமூர்த்தி
ஞானஸ்கந்தர்" என்றே அழைக்கப்படுகிறார்; இங்குள்ள சிவலிங்கங்கள்
குகஸ்வரூபமாகவே போற்றப்படுகிறது. எல்லாம் சிவம் என்பதுபோல்
இங்கு எல்லாம் குகமயமாகவே காட்சி நல்கும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்தில் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஞானகுருவாய் விளங்குபவனே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி போற்றி
வணங்குகிறேன்.
பாடல்..35.
மூன்றாம் படைவீடு . திரு ஆவினன்குடி . பழனி .
போகமாமுனி புலிப்பாண்டி யோகமாமயம் ஆகமாம்பணி
தேகமாம்உடல் தெய்வச்சிலை;
வேகவேலவன் வீறுடல்தணி தாகசாந்தி ஏகநாளெலாம்
மோகமுறுவல் அபிஷேகமே .
பற்றற்றான் பற்றுவைக்கப் பற்றற்ற ஆண்டியாகி
உற்றகோலம் நிற்குதம்மா.
உற்றசிறகின் உறுகுழந்தை ; உணர்மணத்தான் ; நற்றவாண்டி ;
முற்றமூன்று கோலமிங்கு .
திருமகளும், ஒருபசுவும் , சூரியனும், அருள்பூமியும்
பெரும்பூசை ஆற்றியதால்
திருவாவினன் குடியாகும்; அருங்கனிச் சினத்தமர்ந்த
முருகன்புகழ் பழனியாகும்.
சிவன்போலவே சீரன்ன அபிஷேகம் ஆனிமாதம்
சிவமுருகன் சிறந்திடுவான்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
மூன்றாம் படைவீடு . திருஆவினன் குடி ;பழனி.
போகர் என்ற மாமுனிவராகிய சித்தரும் , அவரது சீடர் புலிப்பாண்டி
என்னும் சித்தரும் தமது யோகமுறை தழுவியும், சைவாகம விதிமுறை
தழுவியும், நவ பாஷாணங்களைக் கொண்டு பழனி மாமுருகனின்
உருவத்தைச் சிலை வடிவில் ஆக்கினார்கள்.
வீர்யமும் ,வேகமும் காந்தியும் கொண்ட அம்முருகனது சிலையின்
வெப்பத்தைக் குறைக்கவும், சாந்தமும் அமைதியும் திகழவும் அவருக்கு
நாளெல்லாம் நாள்முழுவதும் பால்,பன்னீர் , வாசனைத் திரவியங்கள்
கொண்டு அபிஷேகம் செய்வார். இன்றும் அவ்வபிஷேகம் விடாது
நடக்கின்றது.
உலகிலே பிறவி எடுத்துப் பின்னர் அதில் ஆசை,பற்று பாசம்,
கொண்டு உழன்று,தவிக்கும் ஆன்மாக்களைத் தடுத்து,நிறுத்தி,
அவர்களது பந்தபாசத்தை அறுத்து, சிவன்சேவடி அடைய வழி காட்டும்
நிலையில் மாமுருகன் தானே ஆண்டிக்கோலம் கொண்டு, பற்றற்ற
பரதேசியாய்க் கோவணத்துடன் காட்சி அளிக்கிறார். அவரைக்கண்ட
வணங்கும் பக்தர்களும் ஆசையை அறவே அழித்திட இக்கோலத்தில்
ஆசி வழங்குகிறார்.
மலைமீது ஆண்டியாக நின்றாலும், பெரியநாயகி அம்மன்
கோயிலிலே மயில் மீது தவழும் குழந்தையாகவும், திரு ஆவினன்குடிப்
பெரிய கோயிலில் வள்ளி,தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர்
ஆகவும், மலைமீதோ ஆண்டியாகவும் நின்று முக்கோலத்தில்
அருளாட்சி புரிகிறார்,
இலக்குமியும், காமதேனுவும், சூரியனும் பூமித்தாயும் இங்கு
முருகனைப் போற்றிவணங்கி அருள்பெற்றதால் இப்பதி
திரு+ ஆ+ இனன் + கு எனப்பிரித்துப் பொருள் கொள்க.
திரு=இலக்குமி. ஆ=காமதேனு. இனன் =சூரியன். கு=பூமி .
இப்பதியில் தரவேண்டிய வெற்றிக்கனியைத் தந்தை தனக்குத்
தராத காரணத்தால் சினந்த முருகன் இம்மலைமீது ஆண்டிக்
கோலத்துடன் நிற்க, அன்னையும், சிவனும் முருகா! நீயே பழம்;
பழம் நீ. என அழைத்து விளையாடியதால் இம்மலை பழனி
எனப்பெயர் பெற்றது.
சிவபிரானுக்கே உரியது அன்னாபிஷேகம். தந்தையைப்
போலவே,முருகனும் இங்கு ஆனித்திங்கள் கேட்டை நாளன்று
அன்னாபிஷேகம் காண்கிறார். இது இப்பதியின் பெரும் சிறப்புகளில்
மிகச்சிறந்த ஒன்றாகும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே! தந்தைக்கே ஆசானாய் நின்ற ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமி நாதக்கடவுளே!
உன்னடி பணிந்து போற்றுகிறேன்.
பாடல்.. 36.
மூன்றாம் படைவீடு..திருஆவினன்குடி ,,பழனி .
சக்திகிரி சிவகிரிக் காவடிகொள் இடும்பமலை
சார்ந்துபோற்று முக்திமாமலை;
பக்திமேலிடப் பக்தர்செல் படிகளோ ஐந்தொளிநிறை
சக்தியேழு நூறாகும்.
பக்கத்து வையாபுரி, பதிசரவணப் பொய்கையும்
பசுநெல்லியும் பதிபுண்ணியம்.
தக்கதொரு துணையாக்கித் தக்கவரெலாம் தொழிலாக்கம்
மக்கள்பயில் மகிழ்மாமலை.
சம்பந்தான் சதியாலே கிளியாக நின்றிட்டுச்
சார் தண்டம் சேரருணர்.
கம்புகாவடி சிம்புசேவடி பம்புபாவடி தும்புநோகடி
துன்புபோம்வழி துள்ளலாகுமே.
சிவமூலம் சாயரக்ஷை; சிவாராடம் ஆவுடையார்
சிவானன வபிஷேகம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
மூன்றாம் படைவீடு . திருஆவினன்குடி . பழனி.
அகத்திய மாமுனி ஆணையின்வண்ணம் சிவகிரி,சக்திகிரி என்ற
இரண்டு மலைகளைக் காவடிபோல் தூக்கிக்கொண்டு, முனிவரின்
சொற்படி, ஆவினன்குடி வந்த இடும்பன் அம்மலைகளைக் கீழே வைக்க,
அதன்மீது முருகன் ஏறிநின்று விளையாட, யாரென அறியாமல் அவரைக்
கீழே இறங்குமாறு வலியுறுத்த, அதனால் இருவரும் போர் புரிந்து
தோற்றுப்போன இடும்பன்முன் முனிவர் தோன்றி, முருகன் பெருமையைக்
கூற, இடும்பனும் முருகனின் அடிமை ஆகிறான். அவர் ஏறிநின்ற மலை
சிவகிரி பழனி மலையாகவும், அதனருகே சக்திகிரி இடும்பன் 9
மலையாகவும் , முருகனின் பாதுகாப்பாக இன்றும் விளங்குகிறது.
பழனி மலையின்மீது பக்திகொண்ட அடியவர்கள் ஏறிச்சென்று
முருகனைப் போற்றுவார்கள். அந்த மலைப்படிகள் அறுநூற்றுத்
தொண்ணூற்று ஐந்து படிகளாகும். ஐந்து என்னும் நமசிவய என்பதைத்
தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் சக்தியாம் ஏழு கன்னியர்;
எழுநூற்றில் ஐந்து குறைந்தது என்பது பொருள்.)
திரு ஆவினன்குடியாம் பழனியில் வையாபுரி" ஏரியும் , சரவணப்
பொய்கையும், தலவிருட்சமாகிய நெல்லி மரமும், பதியாகிய முருகனைப்
போற்றும் புண்ணிய வழிகாட்டும் அமைப்புகள் ஆகும்.
கொங்கு நாட்டில் பெரும்தொழில் புரிந்து செல்வத்தைச் சேர்க்கும்
பெருந்தனக்காரர்கள், தொழிலதிபர்கள், இவர்கள் எல்லாம் பழனி
மாக்கடவுளான மாமுருகனைத் தம்மோடு, தொழிலில், வியாபாரத்தில்
பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டு செயலாற்றுவர். வரும் இலாபத்தில்
முருகனுக்கும் பங்கு கொடுப்பர். காலம் காலமாய் நடக்கும் செயல் இது.
மக்களோடு கலந்து மகிழும் மாமலை பழனி.
அருணகிரி நாதர் மீது பொறாமை கொண்ட சம்பந்தானந்தன் என்னும்
புலவன், தேவராயன் என்ற குறுநில மன்னனோடு சேர்ந்து, பாரிஜாத
மலரைத் தேவலோகத்தில் இருந்து ஒருநோய் தீரக் கொண்டுவர
ஆணையிட்டான்; கூடுவிட்டுக் கூடு பாயும் அற்புதக்கலையை முருகன்
அருளால் பெற்றிருந்த அருணகிரி, ஒரு கிளியின் உடலில் புகுந்து, தன்
உடலை மதுரைக் கோபுரத்தில் மறைத்துவைத்துவிட்டுச் சென்று, மலரோடு
திரும்பிவந்தார். ஆனால் புலவன் சதியாக அவர் உடலை எரித்து
விடுகிறான்; தன்னுடல் காணாது தவித்து, அங்கும்,இங்கும் பரந்த
அருணகிரிக் கிளியை , முருகன் தன்கையில் உள்ள தண்டத்தின் மீது
அமரச்செய்தார்.முருகனது பேரருள் பெற்ற அருணகிரி இன்றும் பழனி
ஆண்டவர் கையில் விளங்கும் தண்டத்தின்மீது அமர்ந்துள்ளார்.
என்னே இறையருள்!
பழனி என்றாலே பால்காவடி,பன்னீர்க்காவடி, பளபளக்க காவடிகள்
நினைவிற்கு வரும்; கம்பைக் கையால் சுற்றிச்சிலம்பம் ஆட்டியபடி
ஆடும் காவடியாட்டம்; சிலம்பினைக் காலில் கட்டிக்கொண்டு ஆடும்
காவடியாட்டம்; பம்பை ,பரட்டை, போன்ற தாளத்திற்கேற்பப் பாடியபடி
ஆடும் ஆட்டம், கட்டிய கயிறை அறுத்தபடி,மிரண்டு ஓடும் காளையின்
கதியில் ஆடும் ஆட்டம், தமக்கும், தமது குடும்பத்திற்கும் துன்பம்
வராமல் காக்க வேண்டி ஆடும் ஆட்டம், இடும்பன் சன்னதிமுன்
துவங்கும் பேட்டைத் துள்ளல் ஆட்டம் எனப் பல்லோரும் பக்தி
கொண்டு ஆடுகின்ற ஆட்டத்தை இன்றும் காணலாம்.
ஐப்பசித்திங்கள் அனைத்துச்சிவாலயங்களிலும் நடைபெறும்
அன்னாபிஷேகம் போன்று மலைமீதுள்ள முருகனுக்கு அன்னாபிஷேகம்
நடைபெறும்; அதேபோல பெரியநாயகி அம்மன்கோயிலிலும், ஆவுடையார்
கோயில் சிவனுக்கும், மூலநட்சத்திரத்து அன்றும், பூராடம், உத்திராடம்
ஆகிய நாட்களிலும் ஆவணி,ஆணி மாதங்களில் அன்னாபிஷேகம்
நடைபெறும். இது பழனிக்கோர் சிறப்பாகும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் விற்று,அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே!
உன்னடி போற்றி வணங்குகிறேன்.
பாடல்..37.
நான்காம் படைவீடு. திருத்தணிகை.
குன்றுதோறா டலென்றுயர் குன்றமே திருத்தணிகை;
மன்றல்மணம் தென்றல்குகன் ;
குன்றத்துக் குணப்படிகள் குறிக்கும்நாள் தமிழாண்டு;
குளிராடி படிபூஜை;
தணிசினம், தணியச்சம், தணிமயக்கம், தணிதுன்பம்.
தணிவிக்கும் தணிகைமலை;
தனிவீரம், தனிஞானம், தனிஆசான் தனிமூர்த்தி
அணிமுருகன் மணிமலையிது.
அருள்வேலைப் பற்றாது, வச்சிரவேல் திருக்கரத்தில்;
அருள் பெறுபவன் தேவேந்திரன்;
இருள்சூர சங்காரம் இனிமைமலை இங்கில்1லை;
குறவள்ளி குதூகலமே .
தவமேலோன் அகத்தியனும் தான்கற்றான் தனித்தமிழை;
தமிழ்க்குகனின் உபதேசம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
நான்காம் படைவீடு. திருத்தணிகை .
"குன்றுதோறாடல்" என்னும் பெயர் பெற்ற தலமே திருத்தணி என்று
அழைக்கப்படுகிறது. வள்ளிப்பிராட்டியை மணம் புரிந்து, கொண்டு,
அக்குறமனையாளுடன் ஆடிப்பாடிய மலை இம்மலையாகும்.
இம்மலைமீது ஏறி முருகனைத் தரிசிக்கச் செல்லும் படிகளின்
எண்ணிக்கை 365 ஆகும். தமிழ் வருடத்தின் நாட்களின் எண்ணிக்கை 365.
ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு நன்மையே நடக்கவேண்டும் என
எண்ணி, அப்படிகளுக்கு ஆடிக்கிருத்திகை நாளன்று படி பூஜை செய்து
போற்றுவது இங்கு வழக்கமாக உள்ளது.
சூரன் மீது போர் தொடுத்த காலை அவன் மீது தோன்றிய சினம்,
அவன் சேவலாக, மயிலாக மாறியபின்னும் மனத்தக்கதே முருகனுக்கு
மாறாதிருந்தது; அதனைத் தணிக்கவே தணிகை மலை வந்தார்;
சூரபன்மாதி அரக்கர்களால் அஞ்சிநடுங்கிய தேவர்கள், தங்களது
அச்சம் நீங்கிட முருகனையே துணையாகக் கொண்டனர்; அவ்வச்சம்
நீக்கிய மலை இது.
அரக்கர்களின் அடாத செயல்களினால் மனம் வெதும்பிய முனிவர்கள்
முருகன் அவர்களை அழித்தபின் அமைதியும் ஆனந்தமும் பெற்றனர்;
முனிவர்கள்தம் மயக்கமெல்லாம் இன்று மறைந்தது.
மானிடப்பிறவி எடுத்த மக்கள் எல்லாம் நோய்.இல்லாமை, வறுமை
போன்ற துன்பங்களால் வாடினர்; அவர்தம் வாட்டத்தை இம்மலைக்கு
எழுந்தருளிய முருகன் போக்கியதால் மானிட்டதுன்பமெல்லாம் தணிந்தது.
முருகன், இம்மலையில் வீரமூர்த்தி, ஞானமூர்த்தி, ஆசார்யமூர்த்தி என
மூன்று தனமையில் எழுந்தருளி உலகைக் காக்கின்றான்; அவனது
ஆளுகைக்கு உட்பட்ட இம்மலை ஆன்மாக்களை நன்கு காக்கிறது.
ஏனைய முருகன் திருத்தலங்களில் எல்லாம் வேலவன் அன்னை
அளித்த ஞானவேலை க் கையில் ஏற்றிருப்பான்; ஆனால் இங்கோ முருகன்
தனது கரத்தில் வச்சிரவேல்" என்னும் கூர்மை மிக்க ஆயுதத்தைத் தாங்கி
இந்திரனை நினைவு கூரும் வகையில் முனிவரின் முதுகெலும்பான
வச்சிரத்தை ஏற்றுள்ளான்.
குதூகலம் மிக்க வள்ளிக்கல்யாணம் நடந்த தலம் ஆகையால் இங்கு
சூரசங்காரம் நடைபெறுவது இல்லை;
தமிழ்முனிவராகிய அகத்தியரும் இங்கு முருகனை வணங்கிப்போற்றித்
தமிழ் உபதேசம் பெற்றார்; தமிழ்முனி ஆனார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே@ தந்தைக்கே ஞானகுருவாய் உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக் கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..38.
நான்காம் படைவீடு. திருத்தணிகை.
தாரகனிடம் தானிழந்த வீறுசக்கரம் விரும்பியமால்
தணிகையிலே தயைபெற்றான் ;
வாரணமாம் ஐராவதம் வளப்பரிசாய் அளித்தபின்னர்,
சோர்வுற்றான் தீர்வாகத்
தார்முருகன் தரமுனைந்தும், தன்திசைகாண் பார்வையினால்,
சீருற்றான்; பேறுறவே
கார்குளிர்ச்சுனை கருங்குவளை நீலமலர் கைநிறையச்
சேர்மனத்துடன் சேவடிதொழும் .
எழுமுனிவர் எழுசுனையில் எழுகன்னியர் விழுநீரும்,
தொழுசரவணப் பொய்கையும்,
பொழில்தெப்பமும், புண்ணியன் செழிப்புமலைச் சீர்களாகும்;
செழுவள்ளிச் சீதனமோ!
சிவநெற்றிச் செஞ்சுடரின் செம்போரின் சீற்றமெல்லாம்
தவத்தாலே தணித்தமலை
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
நான்காம் படைவீடு. திருத்தணிகை
தாரகனிடம் போர் தொடுத்துத் தனது சக்கரப்படையை இழந்த
திருமால். முருகன் அரக்கர் மூவரையும் வென்றபிறகு, திருத்தணிக்கு
வந்து தாரகனிடம் தானிழந்த சக்கரப்படையை
வேண்டி,விரும்பிப்பெற்றார்.
முருகன் மீது கொண்ட அன்பினால் தனது ஐராவதம் என்ற
வெள்ளையானையைப் பரிசாக அளித்தான் தேவேந்திரன்; அதன்பின்
ஐராவதத்தைப் பிரிந்ததால் மிகுந்த துயருற்றான் இந்திரன்;
இதனையறிந்த முருகனும் அப்பரிசை மீண்டும் இந்திரனுக்கே தர
எண்ணினார்;ஆனால் இந்திரன் அளித்த பரிசைத் திரும்பப் பெற
விரும்பவில்லை; அதற்குப்பதிலாக அந்த யானையை எப்பொழுதும்
தன்பக்கமே பார்வை செலுத்துதல்போலக் கிழக்கு நோக்கியே நிற்க
முருகனிடம் வேண்டினார்; அவரும் அதை ஏற்றுக்கொண்டார்; அதன்படி
அதன்பார்வை இந்திரன் திசையில் அமைய அவனும் நன்னிலை
பெற்றான்; இன்றும் கூட இக்கோயிலில் உள்ள அணைத்து
யானைச்சிலைகளும் கிழக்கு நோக்கியே பார்க்கும் வண்ணம்
அமைந்துள்ளன.
அதனாலும், முருகன் மீது கொண்ட பக்கதியாலும் ஏழு சுனை
அமைத்து அதில் நீலோத்பலமாம் கருங்குவளை மலர்க்கொடியைத்
தோற்றுவித்து. அம்மலர்களை நாள்தோறும் முருகன் சேவடியில்
அர்ப்பணம் செய்து பூசனை செய்து வருவது இந்திரனின் பழக்கம்
ஆக மாறிவிட்டது.
ஏழுமுனிவர்கள் உண்டாக்கிய சுனையும் இங்கு உண்டு; அவர்களோடு.
எழுகன்னியர்களும் இங்கு வந்து சுனையி நீராடி முருகனை வணங்குவர்.
அச்சுனை இன்று புனித நீர்ச்சுனையாகப் போற்றப்படுகிறது.
சரவணப்பொய்கையையும் இங்கு தூய்மை நன்னீராக விளங்குகிறது;
அப்பொய்கையிலே தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இவைகள்
எல்லாம் திருத்தணி மலையின் பெருமை பேசும் அமைப்புகளோ!
அல்லது வள்ளிப்பிராட்டிக்கு விண்ணவர் கொடுத்த சீதனமோ! என்று
நினைக்கத்தோன்றுகிறது.
சிவபிரானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய செஞ்சுடர் ,
அவராணைப்படி அரக்கர்களை அழித்த செம்போரின் சீற்றத்தால்
அமைதி வேண்டித் தவம் இருந்த மலையோ ! முருகனது சீற்றம்
தவிர்த்து, அவரின் ஆசி பெற்ற மலையோ ! தண்மை வாய்ந்த மலை
திருத்தணிகை மலையாகும்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே/! தவத்திற்கே
தவமாக விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..39.
ஐந்தாம் படைவீடு; சுவாமிமலை; திரு ஏரகம் .
பொன்கொழிக்கும் பொன்னிதழுவ, மன்னவன்மலை மின்னுதம்மா!
இன்னலறு கன்னலவன் ;
மண்ணார்ந்த தென்னவர்கள் பொன்வேய்ந்த கட்டுமலை;
பண்ணார்ந்த பைந்தமிழ்மலை ;
பிறவியறு பதுபடிகள் ; உறவுதமிழ் ஆண்டாகும்;
நிறைமுக்தி முறைப்படியே.
கறைக்கண்டன் தரையிலமர் கரம்குவித்து, வாய்பொத்திட ,
மறையுணர்த்திய நிறையாசான்;
சிறைநான்முகன் செவிகுளிர்ந்திட நிறைமாமுனி நிலையுணர்ந்திட
அரைஞாண்ஒலி மறைபுகட்டிடும்.
தரைப்பீடம் ஆவுடையார், இறைகுகனோ உறுபாணம்;
சிறப்பான சிவகுகத்வம் .
அவதியுறும் ஆன்மாக்கள் அமைதிபெற அருள்காட்டும்
சிவகுருவும் சேர்ந்தீரே!
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
ஐந்தாம் படைவீடு.. சுவாமிமலை; திரு ஏரகம் .
காவிரி பாயும் சோழநாட்டில் காவிரிக்கரையில் வளம் மிகுந்த
வயல்களுக்கு நடுவே உலகமக்கள் துயரைப்போக்குகின்ற பரம்பொருள்
சுவாமிநாதக்கடவுளின் சுவாமிமலை ஒளிப்புகழால் மின்னுகிறது.
சோழநாட்டை ஆண்டவர்களும், பெருந்தனக்காரர்களும் மனமொன்றிக்
கட்டிய மாமலை, சுவாமிமலை. தேவாரத்திருமுறைகள் போற்றிப்பாராட்டும்
மலை இம்மலையாகும்.
முருகன் திருவடி வணங்க மலைமீது ஏறிடச் சான்றோர்கள்
அமைத்துள்ள படிகள் கூட நமக்குப் பெரும் இன்பத்தையும்,
பண்பாட்டையும் அளிக்கின்றன. அறுபது படிகள்; தமிழாண்டின் நலப்
பெயர்கள்; பிரபவ" எனத்தொடங்கும் வருடங்களின் பெயரை
அப்படிகளுக்குச் சூட்டி, அதன்வழியே நமது வினைகளைப், பாவங்களை
நீக்கி,நமக்கு முத்தி அளிக்கும் மகத்துவத்தை ஆன்றோர்கள்
ஆண்டவனிடம் வேண்டிப்பணிந்து அமைத்துள்ளனர்.
மூவருக்கும் மூத்தவனான பரம்பொருள் சிவபெருமான் தனது
மகனையே ஆசானாகக் கொண்டு, பிரணவத்தின் பொருளை மகன்
உபதேசிக்க, வாய்பொத்தி, நிலத்தில் அமர்ந்து, ஞானக்கல்வியைக்
கேட்டார்; தந்தைக்கே குருவான கடவுள் வீற்றிருக்கும் மலை
சுவாமி மலை ஆயிற்று; முருகனும் சுவாமிநாதன் ஆனார்.
பிரணவப்பொருள் தெரியாத நான்முகனைத் தலையிலே குட்டி,
அவனைச்சிறையிலும் அடைந்தவர் முருகன். தந்தை சொல்லக்கேட்டு
அவனை விடுவித்தார்; அந்த நான்முகனும் முருகனை வணங்கி
வேண்டிடப் பிராணவப்பொருளை அவனுக்கும் உபதேசித்தார் .
ஞானமாமுனி அகத்தியரும் வேண்டிட அவருக்கும் ஓங்காரப் பொருளை
உபதேசித்தார். இடுப்பில் கட்டிய அரைஞாண் கழல் ஓலி சிணுங்க
விளையாடும் ஞானக்குழந்தை இவர்களுக்கு உபதேசம் செய்தது.
சுவாமிமலைச் சன்னதியில் நெடியோனாய் நின்றிருக்கும்
சுவாமிநாதக் கடவுளைப் பணிந்து பார்த்தோமானால் அவர்
நின்றிருக்கும் பீடம் லிங்கத்தின் ஆவுடையார்போல் காட்சியளிக்கும்;
நிற்கின்ற முருகனோ சிவலிங்கம் போலவே காட்சியளிப்பார்.
சிவனும்,குகனும் ஒன்று என்னும் சிவகுகத் தத்துவத்தை இது
வெளிப்படுத்துகிறது.
நிலவுலகத்திலே தோன்றிப் பிறவிப்பிணியால் அவதிப்படும்
ஆன்மாக்களின் துன்பத்தைப் போக்கிடவே, தந்தையான சிவனும்,
மகனான குகனும் ஒன்றுபட்டு, குருசீடனாகி ஆன்மாக்களைக்
காப்பவர்களே உங்களது திருவடிக்கு வணக்கங்கள்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்துநிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஆசானாய் விளங்குபவனே!
உன்னடி பணிந்து போற்றி வணங்குகிறேன்.
பாடல்..40.
ஆறாம் படைவீடு. பழமுதிர்சோலை .
சோலைமலை சீலவள்ளி மாலன்மகள் சேர்ந்திசைந்த
கோலமுருகன் வேலமலை;
நீலமாங்கனி கூலநாவல், சூலிலந்தை, செங்கொய்யா,
நீணிலமெலாம் நல்லுதிர்மலை;
சுடாதபழம் கேட்டபாட்டி சுட்டதுபோல் ஊதிநிற்க,
விடாதருளிய விளையாடல் ;
இடாதுநின்று இருடிதானும் இட்டபின்னர் இடிமழை
அடாதுபெய்த அருமுனிமலை ;
தடாதகையின் திருமணம் தண்மதுரை தானடையத்
தவறவிட்ட திருமால்மலை ;
விடாதபற்றுடன் வேலவனை, வியன்மகளாம் இருவரையும்,
விரும்பியணை அழகர்மலை;
சிவக்கனியோ நவக்கனியோ தவக்கனியோ புவனக்கனி.
உவந்துநாம் தாள்பணிவோம்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
ஆறாம் படைவீடு . பழமுதிர்சோலை.
சோலைமலை என்ற பெயரைத் தாங்கிய பழமுதிர்சோலை
வள்ளிப்பிராட்டியாரும், தெய்வயானைத் திருமகளும் தன்னருகில் நிற்க,
மாமுருகன் அருள்புரியும் மலையாகும். இங்கு முருகனின் சாட்சியாக
வேல் நிற்கும்; வேல் கிடைத்த இடமே கோயிலாக விளங்குகிறது.
இம்மமலையில் மரங்களில் இருந்து கனிகள் தாமாகவே உதிர்ந்து
விழுவதால் பழமுதிர் சோலை என்ற பெயர் வந்தது என்பர். மாங்கனி,
நாவல்பழம், இலந்தைப்பழம், கொய்யா ஆகிய கனிகள் காயத்துக்குலுங்கும்;
மலர்களும், இலைகளும், காய்களும், கனிகளும் இம்மலையெல்லாம்
தரை முழுதும் உதிர்ந்து விழுந்து காணப்படும்.
அவ்வைப்பாட்டியுடன் வேலன் திருவிளையாடல் புரிந்த மலை
இம்மலை என்பர். நாவல் மரக்கிளையில் அமர்ந்திருந்த மாட்டுக்காரவேலன்
மரத்தடியில் அமர்ந்திருந்த அவ்வைப் பாட்டியைப் பார்த்து,
" பாட்டி! உனக்கு நாவல்பழம் பறித்துப்போடவா? என்று கேட்டான்;
பாட்டி1யும் சரி என்றாள்; சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?
பாட்டி என்றதும் பழத்தில் சுட்டது,சுடாதது என்றெல்லாம் இருக்கிறதா?
எனக்கு சுடாத பழமே போடு! என்றாள் . அச்சிறுவன் மரத்தை
உலுக்கினான்; பழங்கள் கீழே விழுந்தன; பாட்டியும் அவைகளைப்
பொறுக்கினாள் . கீழே விழுந்தவை மண் ஒட்டியபடி விளங்கின;
அவைகளை வாயால் ஊதி ,ஊதி வாயில் போட்டுக் கொள்ள முனைந்தாள்
பாட்டி. என்ன! பாட்டி! பழம் சுடுகிறதா ! எனக்கேட்டுச்சிரித்தான் வேலன் .
ஞானம் கைவரப்பெற்ற அவ்வை அப்பா! நீ யார்! ஒரு நொடியில் என்னைத்
திகைக்க வைத்துவிட்டாயே! என்றாள் . முருகனும் அவ்வைப்பிராட்டிக்குக்
காட்சி கொடுத்து ஆசிகள் வழங்கினான். இவ்வரலாறு இம்மலையில்
நடந்ததென்பர்.
பாண்டிய நாடு வற்கடத்தால் மழையின்றிப் பஞ்சத்தாலும்
பட்டினியாலும் தவித்த காலத்தில், இம்மலையில் தவம்புரிந்த ஒருமுனிவர்
பட்டினியால் வாடி, உணவு தேடி மலையெல்லாம் அலைந்தார்; பசியின்
கோரப்பிடியில் சிக்கியிருந்த அவர்கண்முன் ஒரு புலையன் தனது
கொட்டகையில் இறந்துபோன ஒரு நாயைத் தொங்கவிட்டிருந்தான்; அது
அழுகி ,அதிலிருந்து நிணநீர் சொட்டிக்கொண்டிருந்தது. அங்கு சென்ற
அம்முனிவரது மனதில் பசி ஒன்று மட்டுமே மேலோங்கி நின்றது;
தீய நாற்றம், அழுகல் எதுவும் புலப்படவில்லை; அதை அவர் அப்படியே
உண்ண நினைத்தார்; அதை இறக்கினார்; அதனருகே அமர்ந்தார்;
தான் சாப்பிடும்முன் இறைவனுக்கு பலி அளிப்பதை வழக்கமாகக்
கொண்ட அவர் அதை அளிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தார்;
பசி அவரை வாட்ட ,அளிப்பது என முடிவுசெய்து ஒரு கைப்பிடி
அதிலிருந்து எடுத்து, அதனை இறைவனுக்குப் படைத்தார்; தானும்
அதைத் தின்னத் தொடங்குவதற்குள் மழை கொட்டத்துவங்கியது;
பஞ்சம் பறந்தது;நாட்டில் பட்டினி பறந்தது; முனிவரின் இறைப்பற்று
உலகையே காத்து.. அம்முனிவன் தவம்புரிந்த மலை இது என்கின்றன
புராண நூல்கள்.
மதுரை மங்கையர்க்கரசி திருமணம் நடத்திக் கொடுக்கப்
புறப்பட்ட இம்மலையழகர் பெருமான், பெண்ணின் அண்ணன் காலத்தில்
செல்லாமல் காலம் தாழ்த்திச் சென்றதால் திருமணநிகழ்வில் கலந்து
கொள்ள இயலாமல் போய்விட்டது; சென்றவர் வைகையைத் தாண்டிச்
செல்லாமல் வந்துவிட்டார்; அந்த திருமால் வசிக்கும் மலை இது.
தனது தங்கையின் மைந்தன் என்பதால் பற்றுக்கொண்டு,
வேலவனையும், அவன் மணந்த தனது இருமகள்களையும் அரவணைத்து
நல்மனமுடன் கொண்டாடி வருகிறார்.அந்த மலையே அழகர் மலையாகும்.
சிவபெருமானின் இளையமகன்;ஞானக்கனி; புத்தம்புதிய போரினால்
உலகம் காத்த நற்கனி; எப்பொழுதும் தந்தையைப்போலவே தவமாற்றும்
தவக்கனி; இந்த புவனத்தின் ஆருயிர்களைக் காக்கும் கந்தன் என்னும் கனி.
அம்முருகன் தாள்களைப் போற்றுவோம்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே! ஒன்பது
வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே தவமாய்
விளங்குபவனே ! தந்தைக்கே ஆசானாய் விளங்கும் ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
5. திருக்கோயில் ...மூர்த்தங்கள் .
பாடல் ..41.
1. இராஜகோபுரம், பிரகாரங்கள் .
வழிந்தோடும் விழிபக்தி அழிவில்லா நீரோட்டச்
சுழிக்காவிரிப் புனல் நோக்கி
மழைமேகம் மலர்தூவ செழிப்படைந்த கலசங்கள்
பொழிகின்ற அருள்விழிகள்
விண்தொட்டு, மண்தொட்டு தென்திசை பார்க்கின்ற
பொற்கோயில் கோபுரமே.
கண்தொட்டக் கலைநயங்கள் கந்தவேளின் வரலாறுகள்
எண்ணற்றச் சிற்பங்களாம்.
கீழ்க்கோயில் மேற்கோயில் சூழ்ந்துற்ற பிரகாரம்,
மேல்மலை முதல்சுற்றும்,
ஏழேழு உலகையும் ஏற்றாளும் எழில்நாதன்
வாழ்பவன வளச்சுற்றும் ,
சிவமுருகன் சந்நிதானச் செழுமைமிகு சுற்றுக்களாம்.
சேர்ந்துபணிவோம் சேவடிதொழ.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
அடுத்து, நாம் கோயிலின் கோபுரங்கள், பிரகாரங்கள், மலைப்படிகள்
மூர்த்திகள் பற்றிப்பார்ப்போம். சுவாமிமலையின் இராஜகோபுரம் தெற்கு
நோக்கி, கம்பீரமாக வான் நோக்கி எழுந்துநிற்கும். தனக்கு முன்னாள்
ஓடிக்கொண்டிருக்கும் காவிரியாற்றை, அதன் அழகை, நீரோட்டத்தை,
நேராகக் கண்டபடி நிற்பது கோபுரம்.
அக்கோபுரத்திலே அழகிய வண்ண வண்ணச் சிற்பங்கள் முருகன்
வரலாற்றைத் தழுவி அமைந்திருக்கும். ஐந்து நிலை மாடமாக விளங்கும்.
பொற்கலசங்கள் பதுப்பிக்கப்பட்ட கோபுரம் வானளாவி எழும்பி நிற்பது.
கீழே தரைப்பகுதியில் அமைந்துள்ள கீழ்க்கோயில்; அதிலிருந்து
மேலே எழும்பிய கட்டுமலைக் கோயில் மேற்கோயில் எனப்படும்.
அங்கு செல்லப் படிக்கட்டுகள் உள்ளன; இக்கோயில்கள் புராணப்படி
கார்த்தவீர்யன் என்ற மன்னனால் கட்டப்பட்டது; பிற்காலச்சோழர்கள்
ஆலயத்தை மிக நேர்த்தியாக அமைத்தனர்.
அடுத்து அவ்விரு கோயில்களையும் சுற்றிவரப் பிரகாரம் உள்ளது.
அடுத்து, மலைமீது ஏறியவுடன் மலைக்கோயிலைச் சுற்றிவர ஒரு
வெளிப்பிரகாரம் உள்ளது.
அகிலஉலகையும் கட்டி ஆளும் சுவாமிநாதக்கடவுள் வீற்றிருக்கும்
மூலஸ்தானத்தைச் சுற்றிவர உட்பிரகாரம் ஒன்றும் உள்ளது.
செழுமை மிக்க இக்கோயிலின் மூன்று பிரகாரங்கள் இறைவனைச்
சுற்றிவந்து தொழுது, பணிந்து போற்றிட நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான ஆசானே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
வணங்குகிறேன்.
பாடல்...42.
5.2. கீழ்க்கோயில் ..மூர்த்தங்கள் .
கட்டுமலை மருதநிலச் சோழநாட்டின் காட்சிமலை;
குறிஞ்சிமுருகன் கோயில்மலை;
மட்டில்லா மகிழ்வோடு, மீனாட்சி சுந்தரேசர்
பட்டுப்பரி வாரங்களுடன்
நர்த்தன கணபதி, நன்ஞான குருமூர்த்தி,
நல்விநாயகர் உற்சவராய்,
உமாகாந்தர் உடன்குகன், அருந்துணையுடன் திருமுருகன்,
காசிநாதர் கருணைத்தாய்,
நற்பண் நால்வர், நலவள்ளி சேனாபதி,
நற்சண்டி, நலதுர்க்கை ,
நவக்கிரகம், நந்தி,பலி பீடம்,தவக் கிணறும்
சிவம்சார் திருமூர்த்தம்.
புவனிநெல்லி புனிதமரம்; தவக்கோலத் தண்டபாணி,
புவனக்கா புண்ணியர்களே .
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே!
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
மருதநிலமான திருவேரகத்தில் குறிஞ்சிநில முருகனாய் எழுந்தருளி
இருக்கும் சுவாமிநாதக்கடவுளின் திருக்கோயில், கட்டுமலையாக
அமைந்துள்ளது. தரைப்பகுதியில் சிவபிரானுக்கான கோயிலும், மேலே
மலையெழுப்பிக் கட்டி, அதனை மேற்கோயில் என அழைத்தும், அங்கே
மாமுருகன் சுவாமிநாதனாக எழுந்தருளியிருப்பதும் இக்கோயிலின்
சிறப்பாகும்.
கீழ்க்கோயிலிலே சிவபெருமான் சுந்தரேஸ்வரர் என்ற பெயருடன்
மீனாட்சி உடன்காட்சியளிக்க, எழுந்தருளியுள்ளார். மற்றும் பரிவாகணங்கள்
புடைசூழக்காட்சி தருகிறார். கோபுரனுழை வாயிலில் அன்னை மீனாட்சி
கிழக்குமுகம் நோக்கி சுந்தரேஸ்வரர், உட்பிரகாரத்தில் நர்த்தனகணபதி ,
தட்க்ஷிணாமூர்த்தி விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளிதேவசேனா சமேத
சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, நால்வர், மூலவர் முருகன்,
வள்ளி.தெய்வயானை, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகம், சுவாமி
சன்னதிமுன் நந்திகேஸ்வரர், பலிபீடம் அமைந்துள்ள நிலையில் "வச்சிர
தீர்த்தம் என்னும் கிணறும் இங்கேயே அமைந்துள்ளது.
அடுத்து வசந்த மண்டபத்தில் உற்சவர் தண்டாயுத பாணியும், கீழே
சற்று இறங்கினால் அங்கு பூமித்தாயாகிய நெல்லிமரமும், தலமரமாகக்
காணலாம். உலகைக்காக்கின்ற புண்ணியக்கடவுளர்கள் இங்கு
எழுந்தருளி நம்மைக்காக்கிறார்கள்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றி வணங்குகிறேன்.
பாடல்..43.
5.3. மேல் மலைக்கோயில் ..மூர்த்தங்கள்.
வலதுபுற மலைப்படிகள் இருபத்தெட்டு, பிரகாரம்
நிலையாக, முப்பத்து
நலவிரண்டு நற்படிகள் படிநாயகர், தலைவணங்கி.
நற்கொடிமரம் நேத்ரநாயகர்,
உட்ப்ரகாரம் ஓங்கிடும்பன், உயர் ஊர்தி ஐராவதம்,
உயிரோவியம் உளம்கவரும்;
சட்டிநாயகன் சன்னதி சீடனாகிய சிவதாரகன்;
சிற்றம்பலப் பாகுலேயன்;
வெளிச்சுற்றில் உத்சவகுகன் சந்த்ரசேகர சத்குகன்,
ஒளிக்காசி சிவபார்வதி,
களிச்சந்த அருணகிரி, கஜலட்சுமி, சண்டிகேசர்,
குலப்பயண உற்சவர்கள்,
சிவசண்முகச் சீர்திருமணச் சத்தியர் இருவரும்,
சிவகுகத்வம் சுவாமிமலை.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்
கோபுரவாயில் வாயிலாகச் சென்று,இருகோயில்களையும்
இணைக்கும் பெரியப்பிரகார வழியே சென்றால் ,யாகசாலை,வரும்.
அதையும் தாண்டிச்சென்றால் கிழக்குக்கோபுரவாயிலில் வல்லபகணபதி
அவரையும் வணங்கியபின் வந்தால் வசந்தமண்டபத்தின் பக்கவாட்டில்
மலைக்கோயில் படிக்கட்டுகள் அருள்பாலிக்கும். தமிழ வருடங்களின்
பெயர்களைக் கொண்ட அறுபது படிகள்; முதல் இருபத்திரண்டு படிகள்
தாண்டிட மலைக்கோயில் பிரகாரம் காணப்படும்; அங்கு மேலும் செல்ல,
முப்பத்திரண்டு படிகள் அமைந்திருக்கும். படிகளுக்கிடையே
"படிவிநாயகரையும் தரிசிக்கலாம்.
கடைசிப்படியில் நின்றபடியே கொடிமரத்தையும்,
நேத்திரவிநாயகரையும் தரிசிக்கலாம். மோகன முருகன் சன்னதி; இடது
புறத்தில் நிறைந்த முருக பக்தியைக் கொண்ட இடுமப மூர்த்தியைத்
தரிசிக்கலாம். அருகே முருகனின் ஊர்தியாக இந்திரனால் வழங்கப்பட்ட
ஐராவத யானையைக் காணலாம். நேரே உள் சென்றால் உலகைக்
காக்கும் கடவுள் கந்தப்பெருமான் உயர்ந்தோங்கிய தோற்றத்தில்
சிவனைப்போலவே அருள்பொழியும் முகத்துடன் காட்சி தருவார்.
சஷ்டி என்னும் நாளிற்குத் தானே தலைவனாய் விளங்கும்
சுவாமிநாதனைத் தரிசித்தபின், எம்பெருமானது சீடனான தாரகப்
பரமேஸ்வரன் லிங்கவடிவில் உபதேசம் பெற்றதில் மகிழ்ந்து அருள்வார்.
அவர்முன்பு பாகுலேய சுப்பிரமணியர் நடராஜ வடிவம் தாங்கி "நானும்
என்மகனும் ஒன்றே" என்பதை விளக்குவார். திருவாதிரை போன்ற
சிவநிகழ்வுகள் இவராலேயே நடத்தப்பெறும்.
உட்பிரகாரத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் உத்சவ முருகன்.
அடுத்து சந்திரசேகரராய் விளங்கும் முருகன் அமர்ந்திருப்பார். உற்சவர்
குகனார், நிற்க, எடுத்துக் காசிவிசுவநாதர்,விசாலாட்சி காட்சி தருவார்.
மூலவர் சுப்பிரமணியர் வள்ளி,தேவசேனா , கஜலக்குமி,சண்டிகேசர்
காணலாம். அடுத்து ஆலயத்தின் அனைத்து விழாக்களிலும் எழுந்தருளும்
விழா மூர்த்திகள் காணப்படுவர்.
சிவகுகத்வத்தை விளக்கும் இக்கோயிலில் சிவசண்முகர் வள்ளி,
தேவசேனாவுடன் கல்யாண மூர்த்தியாக க் காட்சி தருவார்.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன்னிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்துவிளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே குருவான ஞானகுருவே!
சுவாமிமலையில் வீற்றருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
வணங்குகிறேன்.
பாடல்..44.
5..4..போற்றற்கரிய தலப்பெயர்கள் .
திருவேரகம் திருக்காவிரி வளச்சோலை நலமரங்கள்,
கருங்கனிகள், நறும்பூக்கள் ,
அருந்தளிர்கள், மருந்திலைகள் , இருங்குயில்கள், சிறகாடிகள்,
நிறைமருதம் முறையழகு.
குருமாமலை குருவுக்கே குருவாகி ஒருசொல்லைத்
திருவாய் மலர்ந்ததால்.
குறிஞ்சிக்கோ பெருமலைகள்; குணமருதக் குமரனுக்கோ
குறிஞ்சிபோல் கட்டுமலை.
தாத்ரிகிரி தவமாற்றிய நிலமகள்தான் தான்போகாத்
தாத்ரிமரமாய்த் தலநெல்லி .
நேத்திரச்சுடர் ஏத்துநற்பணி சூத்திரப்பொருள் மூத்தமுதல்
கூத்தனுக்களி சுவாமிமலை.
சிவகிரி, சிரகிரி, சுந்தராசலம் சிவோபதேசம்
சிவகுகனே புரிந்ததால்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
இத்தலத்தின் பெருமைமிகு பெயர்கள் பலப்பல உள்ளன; அவைகள்
எல்லாம் பொருள் பொதிந்தவை; ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.திருவேரகம்.... அழகுமிகுந்த தலம் ; காவிரி பாய்வதால் நல்ல வளம்
கொண்ட மணல்பகுதி; அங்கே மருதநிலப்பயிர்கள் செழித்து
வளர்கின்றன; இளந்தளிர்கள் , பச்சிலைகள் , மலர்கள், காய்,கனிகள்
விளைந்து அழகூட்டுகின்றன; குயில்களும்,மயில்களும் கூடிக் குலவும்
சோலைகளைக் கொண்டது இவ்வூர்; இவைகளால் அழகு நிறைந்து
விளங்கும் பதியாக , நலத்தலமாக விளங்குவதால் இதனை ஏர் +அகம்
அழகுமிகுந்த தலம் என்று போற்றினர்.
குருமலை. குருகிரி ...... தந்தையாகிய சிவனையே சீடனாகக்
கொண்டு, அச்சீடனுக்குப் பிரணவப்பொருளை உபதேசித்தார் முருகன்.
தானறியாத ஓங்காரப்பொருளை நன்கறிந்த சிவபெருமான் தரையில்
அமர்ந்து, முருகனைத் தோளில் சுமந்து ஞான உபதேசம் கேட்டார்.
அதனால் இம்மலை ஆசானாகிய முருகனது மலை என்று,
குருவாக விளங்கியதால் குருமுருகன் வீற்றிருக்கும் மலை"
குருமலை, குருகிரி எனவும் அழைக்கப்படுகிறது.
கட்டுமலை ..... குன்று நிற்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும்
இடமாகும். குறிஞ்சிக் கடவுள் அல்லவா! இவ்வூரோ மருதநிலப்பகுதி.
எங்கு நோக்கினும் வயல்களும், ஆறும், சோலைகளும் காட்சி தரும்;
மலையில்லை ; கார்த்தவீரியன் என்ற மன்னன் பார்த்தான், முருகன்
வீற்றிருக்க அழகிய மலையையே கட்டுவித்தான்; கட்டி எழும்பிய மலை
கட்டுமலை" என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது.
தாத்ரிகிரி ..... பூமித்தாய் இப்பதிக்கு வந்து முருகனைக்குறித்துத்
தவம் இயற்றினாள் ; அவளது வினைகள் அகல, இத்தலத்தை விட்டு
அகலும் நாளும் வந்தது; ஆனால் அவளோ தன என்றும் இப்பதியிலேயே
இருக்கவேண்டும் என விரும்பி, ஆசான் அருள் பெற்று, "நெல்லிமரமாக"
உருவெடுத்து எப்பொழுதும் முருகனை வணங்கும் நோக்கில் நின்றாள்.
பிரகாரத்தில் இன்றும் நெல்லிமரமாக விளங்கும் நிலமகளைக் காணலாம்.
அதன் தொடர்ச்சியாக இப்பகுதி முழுவதும் நெல்லிமரக்காடாக
விளங்கியது என்பர். தாத்ரி= வடமொழியில் நெல்லிமரம் என்பது பொருள்.
சுவாமிமலை....... அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காத்திட,
எம்பெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து சுடர்ப்பொறியை
வெளியிட்டார். அப்பொறி, அனலாய்.க் கனலாய், யாராலும் ஏற்கமுடியாமல்
தகித்தது. இறைவன் ஆணைப்படி, அச்சுடரைத் தாங்கிய
காற்று,அக்கினிததேவர்கள் கங்கையை நாடியும் பலனற்றுப்போக முடிவில்
சரவணப்பொய்கையை அடைந்து, விட , அப்பொய்கையிலே
ஆறுகுழந்தைகள் மலர்ந்தன; சிறுவயது ஆடல் பாடல்களில் ஈடுபட்ட
குகன், தந்தையைக்காண வந்த நான்முகன் வணங்காது, கர்வத்துடன்
சென்றகாலை அவரை அழைத்து, என்ன தொழில் செய்கிறீர்கள்?
எனக்கேட்க, அவரும் சிறப்புமிக்க படைப்புத் தொழில் என் தொழில்
என்கிறார். ஆணவம் மிக்க அவரது பதிலில் உள்ள கர்வத்தை உணர்ந்த
முருகன் " நான்மறை அறிவீர்களா? என்றதும் அறிவேனே , என்றபடி
ஓம்" எனத்தொடங்கினார். இடைமறித்த முருகன் அந்த ஓம்காரத்திற்குப்
பொருள் கூறுங்கள் !என்றதும், அவர் விழித்தார்; பொருள் அறிந்திருந்தும்
ஆணவத்தால் மதி இழந்தார். பிராணவப்பொருள் தெரியாத நீவிர்
எத்தொழிலும் ஆற்ற இயலாதவர்; நீர் இருக்கவேண்டிய இடம்
சிறைச்சாலையை என,நான்முகனைத் தலையில் குட்டிச் சிறைதள்ளினார்.
பிரமனை விடுவிக்க வந்த சிவபெருமான், அப்பொருளை நீ அறிவாயோ?
எனக்கேட்க,முருகனும் அறிவேன்; தாங்கள் அறியாவிடின் சீடனாக வந்து
முறைப்படிப்பணிந்து கேளுங்கள்; நான் அப்பொருளை உங்களுக்கு
உபதேசிக்கிறேன் " என்றதும் சிவனும், சீடனாக மாறி, உபதேசம் கேட்டார்;
சுவாமி ஆகிய தந்தைக்கே குருவாகி, நாதன் ஆகி நல்லுபதேசம்
அருளியதால் இம்மலை சுவாமி மலை" எனப்போற்றப்படுகிறது.
சிரகிரி, சிவகிரி , சுந்தராசலம்...... இம்மூன்று திருநாமங்களும்
தந்தையாகிய சிவனார், மகனாகிய முருகனிடம் பணிந்து,உபதேசம்
கேட்டதையே விளக்குகின்றன.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்திலும் உயர்ந்துவிளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஆசானாகி உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்று அருள்புரியும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றிப் பணிந்து வணங்குகிறேன்.
பாடல்..45.
5..5..தூய்மை, புனிதத் தீர்த்தங்கள் ..
வச்சிர தீர்த்தம் வச்சிரவேல் செஞ்சிவன்
உச்சிவெயில் குளிர்ச்சி;
பச்சைநிற மீனாட்சி இச்சைஎதிர் இயங்குவது;
துச்சசாபப் புனிதமானது.
குமாரதாரை குமரனருள் கங்கைநதி சங்கமமாய் க்
காவிரியுடன் இணைந்தோடும் ;
சரவணக்குளம் சரவணன் சிறுபிள்ளை சாபகுரு
சாபங்களை வெட்டுகுளம்.
நேத்திர புஷ்கரணி காணக் கூடாததைக்
கண்டகண் கழுவாயாய்,
நேத்திரம் பெற்றபெண் கார்த்திகைத் தீர்த்தவாரி
கந்தனருளால் கண்டுய்ந்தாள்.
சிவனருளுறு பிரமப்பிழை போக்கிடவே பிரமதீர்த்தம்
படைத்தபின் பெற்றுய்ந்தான்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள் ..
வச்சிரதீர்த்தம் ;- உலக ஆன்மாக்களைக் காப்பதில் வல்லவரான சிவனார்,
சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இங்கு கோயில் கொண்டவர், பிறவிப்
பிணி அறுத்துச் சிவகதியில் மக்களை ஈடுபடுத்த ஆணவமாதி மலங்கள்
பற்றாமல் மனத்தில் உடலில் குளிர்ச்சி பெறத் தன் சன்னதியில் தமது
சூலாயுதத்தால் நிலத்திலிருந்து நன்னீரை வரவழைத்தார். அதுவே வச்சிர
தீர்த்தம் ஆகும். அன்னை மீனாட்சி சன்னதி முன் இக்கிணறு அமைந்தது;
அதனால் வழிபடுவோரின் தீய பாவங்களைப் போக்கவல்லது;
வணிகப்பெண் ஒருத்தியின் கணவன் காட்டுக்குளத்தில் குளித்ததால்
பெண் உரு பெற்றான்; சான்றோர் சொல் கேட்டு இவ்வூர் வந்த அப்பெண்
இக்கிணற்று நீரைத் தனது கணவன் தலையில் ஊற்றிக்
குளிக்கச்செய்தாள்; அவனும் உருமாறி,அவளது கணவனாகத்
தோன்றினான்; மிகப்புனிதமான கிணறாகக் கருதப்படுகிறது.
குமாரதாரை ;- தனது பாவங்களைப் போக்கிக்கொள்ளக் கங்கை ஆறு
இப்பதி வந்து, குமாரப்பெருமானை வணங்கினாள் ; மற்றவர்களிடம்
இருந்து அவள் ஏற்ற பாவவினைகள் முருகன் அருளால் நீங்கிற்று.
கங்கையோ தன நாடு திரும்ப மனமின்றி, முருகனை வணங்கியபடியே
இருக்கவேண்டும்" என விரும்பிக் காவிரி ஆற்றோடு ஒன்றாகக் கலந்து
ஓடத்தொடங்கினாள்; அன்றுமுதல் காவிரி ஆற்றிற்குக் "குமாரதாரை "
என்ற பெயர் வழங்கலாயிற்று. முருகனுக்காகக் கங்கை ஆறு காவிரியுடன்
ஒன்றி, நீர்தாரையாய்ப் பொழிந்து ஓடுவதால் குமாரதாரை என்ற பெயர்.
சரவண தீர்த்தம் ;- முனிவரது சாபத்தால் கரடியாக மாறிவிட்ட தனது
தந்தையின் உரு மாற்றம் வேண்டி, முருகனை வழிபட்டு , இக்குளத்தை
ஒரு சிறுவன் வெட்டி உருவாக்கினான்; அதில் நீராடி நாள்தோறும்
முருகனை வழிபட்டுச் சாபநீக்கம் பெற்றான் அத்தந்தை; அதனால்
இக்குளம் சரவண தீர்த்தம் என வழங்கப்படுகிறது.
நேத்திரபுஷ்கரணி ;-கந்தனது வேலாயுதத்தால் உண்டாக்கப்பட்ட து
இக்குளம். சோதிடநூல்களில் குறிக்கப்பட்டுள்ள இக்குளம், காணக்
கூடாததைக் கண்டால் கண்பார்வை போகும்" என்ற நிலையில் ஒருபெண்
அவ்வாறு கண்டுவிட்டுக் கண்ணிழந்து தவிக்கையில் பரத்துவாஜ
முனிவரது அறிவுரைப்படி, இங்கு வந்து இந்த புஷ்கரணியில் நீராடி,
முருகனை வழிப'"டக் கண் வரப்பெற்றாள் . அதனால் இக்குளம்
"நேத்ர புஷ்கரணி" என வழங்கப்படுகிறது. கார்த்திகைத் திங்களில்
இங்கு தீர்த்தவாரி நடைபெறும்.
பிரமதீர்த்தம் ;- பிரணவப்பொருள் தெரியாத பிரமனைச் சிறையில்
அடைத்தார் முருகன். தந்தையின் சொல் கேட்டு அவனை விடுவித்தார்.
தனது தவறை உணர்ந்த நான்முகன் பெரிய குளத்தை உருவாக்கினான்.
அதில் மூழ்கி,அன்றாடம் தவறாமல் முருகனைப் பூசித்து வந்தான்;
அதன்பயனாய் முருகனிடம் ஓங்காரப்பொருளை உபதேசம் பெற்றான்.
பிரம்மதீர்த்தம் இன்று "பெரமாட்டான் குளம்" என்று வழங்கப்படுகிறது.
சிவஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பது வகையான யோகத்திலும் உயர்ந்து நிற்பவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே ஞானகுருவாய் உபதேசித்த ஞான
குருவே! சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
பணிந்து போற்றுகிறேன்.
பாடல்...46.
5..6. ஆலய அமைப்பு ..
தென்னவன்குரு தெற்குநோக்கித் திகழ்ராஜ கோபுரமே.
நன்முருகன் நலச்சிற்பம் .
தென்னவன்மகள் மீனாட்சி சுந்தரேசர் பொன்கோயில்
விண்தொடும் மண்கோயில்.
இருகோயில் நடுவாக இணைத்துசுற்றும் பிரகாரம்
இருடியாக சாலைகாண் .
திருவருடப் பெயருடனே படிகளேறின் மேற்கோயில் ;
அருஞ்சுற்று அழகுசிற்பம்,
இடும்பனோடு எழில்ப்ரகாரம் இணையற்ற தெய்வங்கள்;
குடும்பமாய்க் குருஷண்முகன்.
உடுநாட்டுப் பெருயானை ஊர்தியாக நடுநாயகம்
கருவறையொளிர் கந்தசாமி.
சிவகுகத்வம் சிவகுருத்வம் சிவநினைவுடை சிவமகனவன்
சித்சத்தாய் ஒளிர்ந்திடுவான்.
சிவஞான பரமோன நவயோகத் தவத்தோனே !
சுவாமிமலைக் குருநாதா!
பொருள்.
தெற்குநோக்கிப் பார்வை கொண்ட தக்ஷிணாமூர்த்தி போல ஞான
குருவான தகப்பனுக்கே சாமியான சுவாமிநாதன் கோயில் கோபுரம்
தெற்குநோக்கியே பார்த்தபடி அமைந்துள்ளது. ஐந்துநிலை மாதங்கள்
கொண்ட அந்த அழகுமிகு இராஜகோபுரத்தில் முருகனது வரலாறுகள்
சுதைவடிவில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
நுழைந்தவுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பிரகார தேவதை
-களுடன் அமைந்துள்ளது. விண் தொடும் விமானங்கள் கொண்ட அந்தப்
பொற்கோயில் தரைக்கோயில்,எனவும், கீழ்க்கோயில் எனவும் அழைக்கப்
படுகிறது.
தரைக்கோயிலையும், மலைக்கோயிலையும் உள்ளடக்கிய பெரும்
பிரகாரம் , பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் உத்சவ யாகசாலை
அமைந்துள்ளது.
தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி , அறுபது படிகள் மேல்
மலைக்கோயில் செல்ல அமைந்துள்ளது. முதல் 22 படிகள் ஏறியதும்
மலைக்கோயில் வெளிப்பிரகாரம் அமைந்துள்ளது. கானைச்சுற்றி வந்தால்
கீழக்கோபுரவாயிலருகே அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சுவாமிநாத
வரலாற்றைக் காணலாம்.
மூலவரின் சன்னதிக்குள் நுழைந்தால் முதலில்
இடுமபனைத்தரிசிக்கலாம். உட்பிரகாரத்தில் உத்சவ சுப்பிரமணியர்
தொடங்கி, சண்முகர் வரை, பரிவார தேவதைகளைக் காணலாம்.
வள்ளி,தேவசேனாவுடன் சண்முகர் காட்சி தருவார்.
சன்னதிமுன் தேவேந்திரனால் காணிக்கையாக்கப்பட்ட ஐராவத
யானையை ஊர்தியாக நிற்பதைக் காணலாம். இவ்வூர்ச்சிறப்புகளில்
இதுவும் ஒன்று. கோயிலின் நடுநாயகமாகக் கருவறையில் கம்பீரமாய்
ஆண்டிக்கோலத்தில் சுவாமிநாதர் சிவனாய், முருகனாய்க் காட்சி
தருவார்.
கருவறைக்குள் சுவாமிநாதக்கடவுள் சிவகுகனாய் விளங்குவார்;
சிவனது குருவாய் விளங்குவார்; சிவத்தையே நினைந்துநிற்கும்
சிவமகனாய் விளங்குவார். சித் எனப்போற்றப்படும் சிற்றம்பலமாய்.
சத்" எனப்போற்றப்படும் சதாசிவமாய் சச்சிதானந்தமாய் விளங்கும்
ஜோதி வடிவத்தைக் காணலாம்.
சிவ ஞானமாய் விளங்குபவனே! மௌனத்தில் முன் நிற்பவனே!
ஒன்பதுவகையான யோகத்தில் உயர்ந்து விளங்குபவனே! தவத்திற்கே
தவமாய் விளங்குபவனே! தந்தைக்கே உபதேசித்த ஞான குருவே!
சுவாமிமலையில் வீற்றிருக்கும் சுவாமிநாதக்கடவுளே! உன்னடி
போற்றிவணங்குகிறேன்.
பாடல்..47.
5..7. ஆறுமுக அழகு.
.
1