ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

நூன்முகம்

                                                    கன்னியாகுடிக்
                                               கந்த புராண வெண்பா
                                                         நூன்முகம்
     
                                அருட்பெரும் சோதி;தனிப் பெரும் கருணை
                             
                                          முனைவர்,கவிஞர்,வித்துவான்..
                                  .திரு.வீ.சேது ராமலிங்கம் .எம்.ஏ .பி.ஹெச்.டி
                                               தமிழ்ப் பேராசிரியர்,
                                        சேதுபதி,அரசு,கலைக்கல்லூரி
                                                      இராம நாத புரம்
                                                             944468025
========================================================================                              எல்லாம் செயல் கூடும் எண்ணான அம்பலத்தே
                             எல்லாம் வல்லான் துணையே ஏத்து ------வள்ளலார்.
                    கச்சியப்பர் கால்முளை சுப்ரமணி நற்சான்றோர்
                    இச்சையுடன் வெண்பாவாம் ஒர்யாப்பில் ----விச்சைமிகு
                    கந்தபு   ராணவெண்பா  மாலையைச் சூட்டினார்;
                    செந்தமிழ்  வேலனுக்குத் தான்.

            கச்சியப்பர் விருத்தப் பாவில் யாத்த கந்தபுராணத்தைச் சுப்பிர
மணியனார்,வெண்பா யாப்பில் மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.
குமரகுருதாச சுவாமிகள்,கந்தபுராணத்தை,''முத்துக்குமார சாமீயமாக
மீட்டுருவாக்கம் செய்தார்.பெருந்தேவனார் ''வியாசர் பாரதத்தை
''பாரத வெண்பா''வாக மீட்டுருவாக்கம் செய்தார்.பாரதக் கிளைக்
கதையாகிய  நளன் கதையைப் புகழேந்தி''நள வெண்பாவாக''
மீட்டுருவாக்கம் செய்தார்.பாரதியார் வியாச பாரதத்தைப்
''பாஞ்சாலி சபதமாக ''மீட்டுருவாக்கம் செய்தார்.
உறுதிப் பொருளை எந்த யாப்பிலும் செய்யலாம்'என்பது,தொல்காப்பியர்
காட்டும் இலக்கண நெறி.
முருகன் திருப்புகழை நக்கீரர்,குமரகுருதாச சுவாமிகள்,பாலறாவாயர்,
அருணகிரிநாதர் போன்ற எண்ணற்ற அருளாளர்கள் பாடியுள்ளனர்.
       மண்ணகத்து வள்ளியையும்,விண்ணகத்துத் தெய்வயானையையும்
முறையே,களவிலும்,கற்பிலும் மணந்து,விண்ணும்,மண்ணும் காக்கும்,
முருகப் பெருமான் திருப்புகழ் கூறும் நூல் கன்னியாகுடிக் கந்த புராண
வெண்பா.
        குமரகுருதாச சுவாமிகள் 6666பாக்கள் முருகப் பெருமான் மீது பல
வண்ணப் பாக்களில் யாத்துள்ளார்;நக்கீரரின் திருமுருகாற்றுப்படை'
''பத்துப்பாட்டின்'' கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது.கந்தபுராண வெண்பா,
''வாழ்த்துப்படலம் முதலாக,''வள்ளியம்மை திருமணப்படலம் ஈறாகப்
பதினான்குபடலங்களைக் கொண்டது.
     ''ஐங்கரனே  ஆனைமுகத்து  அழகோனே''  
என்ற ஓங்கார விநாயகர் வாழ்த்து,ஓங்காரப் பிரணவ மறைமொழியுடன்,
நூல் தொடங்கும்.''அகாரம்''---படைத்தல்.''உகாரம்''--காத்தல்   ''மகாரம்--ஒடுக்கம்
   தாமாக இயங்கும் உயிரெழுத்துக்களையும்,தாமாக இயங்கும் மெய்
எழுத்துக்களையும்,ஒலிக்க,அங்காத்தலாகிய அகரம் முதன்மை;
இரு திணைப் பொருள்களின் இயக்கத்திற்கு,ஆதியைப் பாகமாகக்கொண்ட
இறைவன் முதன்மை.
                 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
                 பகவன் முதற்றே உலகு           (குறள் ..1)
குறள் ''அகரமுதல''எனவும்,கம்பர்,''உலகம் யாவையும்''எனவும்,சேக்கிழார்,
''உலகெலாம் உணர்ந்து''எனவும்,நக்கீரர்,உலகம் உவப்ப''எனவும்
,தொல்காப்பியர்,''அகர முதல் னகர இறுவாய் ''எனவும்,ஓங்காரத்தில்
நூலைத் தொடங்குவர்.

காப்பிய அமைப்பு
=================
காண்டம்,படலம் என்னும் பிரிவுகள் போலத் தலைப்புகள் அமைந்துள்ளன.
காப்பியத்தில் வாழ்த்து,வணக்கம்,வருபொருள்,சுருக்கமாக அமைந்துள்ளன.
மாதொருபாகன் தவநிலை,மாதொருபாகன் திருமணம்,முருகன் அவதாரம்,
மன்மதன் தண்டனை பெறல்,இரதி புலம்பல்,அசுரர்கள் தோற்றம்,முருகன்
அசுரரை வெல்லுதல்,வள்ளி திருமணம்,தெய்வயானை திருமணம்,வீரவாகு தூது,போர்நிகழ்வுகள் போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் விளக்கம் பெறும்.
   மடற்கூற்று மடல் விலக்கு ,தலைவன்,தலைவி காண்டல்,
போன்ற அகப்பொருள் செய்திகள் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.
நல்லன மாந்தும் நல்ல மாந்தரும்,தீயன மாந்தும் தீயமாந்தரும்,காப்பியப்
பாத்திரங்களாக விளங்குவர்.'சிவன்,உமா,முருகன்,வள்ளி,தெய்வயானை,
நான்முகன்,நாமகள்,திருமால்,திருமகள்,சூரபத்மன்,இந்திரன்,சயந்தன்,
இந்திராணி,மாயை,காசிபர்,அசமுகி,துர்வாசர்,சிங்கமுகன்,தாரகன்,பதும
கோமளை ,அசுரேந்திரன்,வீரவாகு,வீரகேசரி,பானுகோபன்,போன்ற
எண்ணற்ற பாத்திரப் பண்பு நலன்கள்,பாவலர் பாத்திரப் படைப்பால்
சிறப்புற்று விளங்கும்.
காப்பிய நலம்.
=============
கணபதி வாழ்த்தில் தொடங்கி,ஆறுமுகன் வாழ்த்தில் காப்பியத்தை நிறைவு
செய்துள்ளார்.சொல் நயம்,பொருள் நயம்,நடை நயம்,தொடை நயம்.மெய்ப்
பொருள் நயம்,ஆகிய நயங்கள் அனைத்தும் காப்பியம் பெற்றுள்ளது.
விரிவு அஞ்சி விடுத்தனம்.
    மெய்,சிவ சிவ ,சரவணபவ,ஓம் நமோ நாராயணாய,அருட்பெரும் சோதி,
தனிப்பெரும் கருணை,புத்தம் சரணம் கச்சாமி,அல்லா அல்லா,
ஏசு ஏசு,என்ற மறைமொழிகளைக் கூறும்போது,உயிர்க்காற்று உட்சென்று,
உடல்,உயிர் வளர்த்தளால் மரணமில்லாப் பெருவாழ்வு வரும்''என்ற
மெய்ப்பொருள் உண்மைகளைப் பாவலர் ஆங்காங்கு விளக்குகிறார்.
       '''நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்''...........--தொல்காப்பியம்.
  ஒரு விகற்ப வெண்பா யாப்பும்,இருவிகற்ப நேரிசை வெண்பா யாப்பும்,கந்தபுராண வெண்பா நூலில் அமைந்துள்ளன.
   மரபுக் கவிதை அருகி வரும் இந்நாளில் வெண்மையான வெண்பா யாப்பில் முருகப்பெருமானின்  அருள் வரலாற்றைப் படைத்த சுப்பிரமணியனார்
அவர்கட்கு,எல்லா வளமும்,நலமும்,கிடைத்துச் சீரும் சிறப்புமாக வாழ
எல்லாம் வல்ல அருட்பெரும்சோதி ஆடவல்லான் திருவடிகளை
வாழ்த்தி வணங்குகிறேன்.
     முருகப் பெருமானின் வரலாறு அடங்கிய இந்நூற்கு,நூன்முகமாகிய
அணிந்துரை வழங்கும் பேறு ,திருத்தணி முருகன் பிள்ளைத்தமிழ் படைத்து
வரும் எளியேற்குக் கிடைத்தது முருகன் அருட்பேறு .

          வாழ்க  சுப்பிரமணியர்
           வாழ்க வையக வளமெலாம்
           வாழ்க ஐம்பூத நலன்கள்
            வாழ்க ஐம்பொறி,புலன் நலன் வாழ்க.

                                                                                                                           அன்புடன்
                                                                                                                       வீ.சேதுராமலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக